என் மலர்
மதுரை
- ரூ.20 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய ஹாக்கி மைதானம்.
- 14வது ஜூனியர் உலகக்கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டிகள் தொடங்குகிறது.
மதுரையில் புதிதாக கட்டப்பட்ட சர்வதேச ஹாக்கி மைதானத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மதுரை ரேஸ்கோர்ஸ் விளையாட்டு மைதானத்தில் ரூ.20 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய ஹாக்கி மைதானம் திறக்கப்பட்டுள்ளது.
புதிதாக திறக்கப்பட்ட ஹாக்கி மைதானத்தில் வரும் 28ம் தேதி 14வது ஜூனியர் உலகக்கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டிகள் தொடங்குகிறது.
- மத்திய அரசு வேண்டும் என்றே தமிழகத்தை வஞ்சிப்பதாகவும் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
- மத்திய அரசை கண்டித்தும், மதுரைக்கு மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.
மதுரை:
சென்னைக்கு அடுத்தபடியாக கோவில் நகரம் என அழைக்கப்படும் மதுரை மற்றும் கோவையில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்த தமிழக அரசு ஒப்புதல் அளித்தது.
அதன்படி மதுரை திருமங்கலத்தில் இருந்து ஒத்தக்கடை வரை 32 கி.மீட்டருக்கு மெட்ரோ வழித்தடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் திருமங்கலம் முதல் வசந்த நகர் வரை உயர்நிலை பாலமும், வசந்த நகர் முதல் தல்லாகுளம் பெருமாள் வரை 10 மீட்டர் ஆழத்தில் பூமிக்கடியிலும், அதன்பின் ஒத்தக்கடை வரை உயர்நிலை பாலம் கொண்ட வழித்தடம் அமைக்க திட்டமிடப்பட்டது.
இதையடுத்து மெட்ரோ திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்த முதற்கட்டமாக சென்னை மெட்ரோ நிர்வாகம் நிதி ஒதுக்கி, பணிகள் நடைபெற்று வந்தன. மேலும் இந்த திட்டத்திற்கு நிதியுதவி செய்ய விருப்பம் தெரிவித்து ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் அதிகாரிகள் மதுரை மற்றும் கோவையில் ஆய்வும் மேற்கொண்டனர்.
இந்த நிலையில் மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரெயில் திட்டங்களை மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் நிராகரித்து விட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதற்கிடையே கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்தை நிராகரித்ததற்கான காரணம் குறித்து மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
அதில், மதுரை, கோவை நகரங்களில் மக்கள் தொகை முதன்மையான காரணமாக கூறப்பட்டுள்ளது. மதுரையில் தற்போதைய பயண தேவையை ஆய்வு செய்ததில் அதிவிரைவு பேருந்து போக்குவரத்து போன்ற குறைந்த அளவிலான திட்டங்கள் மட்டுமே பொருத்தமானது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. கோவையை பொறுத்தவரை போக்குவரத்து பயண நேரம், மெட்ரோ ரெயிலில் பயண நேரத்தை விட குறைவாக உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு விளக்கம் அளித்தாலும், இதை விட மக்கள் தொகை குறைந்த நகரங்களில் மெட்ரோ ரெயில் திட்டங்கள் செயல்பாட்டில் இருப்பதாகவும், மத்திய அரசு வேண்டும் என்றே தமிழகத்தை வஞ்சிப்பதாகவும் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
இந்த நிலையில் தமிழ்நாட்டுக்கான ஜி.எஸ்.டி. நிதி பகிர்வில் பாரபட்சம், மாணவர்களின் கல்வி நிதியை ஒதுக்க மறுப்பது, கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்தை புறக்கணித்தது என தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் தொடர்ந்து புறக்கணித்து வரும் பா.ஜ.க. அரசை கண்டித்து நேற்று கோவையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மதுரையில் இன்று தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பழங்காநத்தத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் தளபதி எம்.எல்.ஏ. (மதுரை மாநகர்), மணிமாறன் (மதுரை தெற்கு) மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்திய அரசை கண்டித்தும், மதுரைக்கு மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.
- சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மஜாம் அலியை கைது செய்தனர்.
- வாழ்நாள் முழுவதும் (அதாவது சாகும் வரை) சிறை தண்டனை விதித்து கடந்த 2022-ம் ஆண்டில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
மதுரை:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமி, கடந்த 20.1.2020 அன்று பள்ளிக்கூடத்தில் இருந்து வீட்டுக்கு வந்தார். மாலை 4.30 மணி அளவில் வீட்டின் அருகே இயற்கை உபாதை கழிக்க சென்றார். அப்போது அந்தப் பகுதியில் செல்போனில் ஆபாச படம் பார்த்துக் கொண்டிருந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மஜாம் அலி (வயது 20) என்பவர் அந்த சிறுமியை பின் தொடர்ந்து சென்றுள்ளான்.
அவர் முட்புதற்களுக்குள் சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். பின்னர் சிறுமி அணிந்திருந்த உடையில் இணைக்கப்பட்டிருந்த கயிற்றின் மூலமாக அவரது கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தப்பிவிட்டார். சிறுமியை காணாமல் அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது அதே பகுதியில் புதருக்குள் பிணமாக சிறுமி கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மஜாம் அலியை கைது செய்தனர். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. மு வில் மஜாம் அலி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு வாழ்நாள் முழுவதும் (அதாவது சாகும் வரை) சிறை தண்டனை விதித்து கடந்த 2022-ம் ஆண்டில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்புக்கு எதிராக மஜாம் அலி மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் வேல்முருகன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் குற்றவியல் அரசு வக்கீல் பா.நம்பி செல்வன் ஆஜராகி, சிறுமி கொலை வழக்கில் நேரடி சாட்சியங்கள் கிடையாது. சூழ்நிலை சாட்சிகள் மற்றும் விஞ்ஞானபூர்வமான சாட்சிகளின் அடிப்படையில் கீழ் கோர்ட்டு மேல்முறையீட்டாளருக்கு தண்டனை விதித்து உள்ளது.
இறந்த சிறுமியின் உடலில் மேல்முறையீட்டாளர் முடி இருந்தது. இது அவருடையது தான் என்பது விஞ்ஞானபூர்வமான பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. எனவே மனுதாரர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளது. மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதாடினார்.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த மேல்முறையீட்டாளருக்கு கீழ் கோர்ட்டு விதித்த சாகும் வரை தண்டனையை உறுதி செய்தும், அவருடைய மேல்முறையீட்டு மனுவை தள்ளு படி செய்தும் உத்தரவிட்டனர்.
- கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆஜராகி இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் பதில் அளிக்க அவகாசம் அளிக்க வேண்டும் என கூறினார்.
- நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை டிசம்பர் மாதம் 10-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
மதுரை:
மதுரை மேல அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த பரமசிவம், மதுரை ஐகோர்ட் டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
சமீபத்தில் தமிழகத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகள், தெருக்கள், சாலைகள், நீர்நிலைகள் மற்றும் பிற பொது நிறுவனங்களின் பெயர்களில் உள்ள சாதி பெயர்களை நீக்குவது தொடர்பாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே 1978-ம் ஆண்டிலேயே அர சாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது என கூறுகிறார்கள்.
இத்தனை ஆண்டுகளாக தெருக்கள் சாலைகளில் சாதி பெயர்கள் இருப்பதால் பிரச்சனை ஏற்பட்டதாக இதுவரை எந்த புகாரும் அளிக்கப்படவில்லை. வருகிற சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து தற்போதைய ஆளுங்கட்சி மக்களிடையே பகைமையை ஊக்குவிப்பது, பிளவுபடுத்துவதன் நோக்கமாக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இதன் மூலம் ஆளுங்கட்சி தலைவர்கள் மற்றும் தங்களுக்கு விருப்பமானவர்களின் பெயர்களை வைக்க விரும்புகிறார்கள். இவ்வாறு தெருக்கள், சாலைகளின் பெயர்களை மாற்றுவதால் அப்பகுதியில் வசிப்பவர்கள் இருப்பிட சான்றுகளில் முகவரியை பயன்படுத்துவதில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தும்.
இந்த அரசாணையை அமல்படுத்துவது தொடர்பாக பொதுமக்களிடம் எந்த கருத்துகளையும் கேட்டு நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே குடியிருப்பு பகுதி, சாலைகள், தெருக்களின் பெயர்களில் உள்ள சாதி பெயர்களை நீக்குவதற்கு வழிவகை செய்யும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
ஏற்கனவே இது தொடர்பான விசாரணை நடந்தபோது, இந்த வழக்கில் இறுதி முடிவு எடுக்கும் வரை பழைய பெயர்களை நீக்குவது, புதிய பெயர்களை அமல்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கக்கூடாது எனவும், இந்த வழக்கு குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆஜராகி இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் பதில் அளிக்க அவகாசம் அளிக்க வேண்டும் என கூறினார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை டிசம்பர் மாதம் 10-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
இதன்மூலம் தெருக்களுக்கு வைக்கப்பட்டுள்ள சாதி பெயர்களை நீக்குவற்கு ஏற்கனவே ஐகோர்ட்டு விதித்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- 15 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது முதல் முறையாக பிரசாத பொருட்களுக்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது.
- 7 பிரசாத ஸ்டால்கள் கோவில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
மதுரை:
உலகப் புகழ்பெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் உள்நாட்டில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் வந்து செல்கின்றனர். தற்போது கார்த்திகை மாதம் என்பதால் தென் மாநிலங்களைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் கோவிலுக்கு அதிகளவில் வருகை தருகின்றனர்.
இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வரும் சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, வடை, அப்பம், முறுக்கு, லட்டு, அதிரசம் ஆகியவற்றின் விலை கடந்த 2011-ம் வருடத்தில் இருந்து ரூ.10லிருந்து ரூ.15 ஆக விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது முதல் முறையாக பிரசாத பொருட்களுக்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது. கோவில் நிர்வாகம் சார்பாக எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் செய்யப்பட்ட இந்த விலையேற்றம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக 175 கிராம் சர்க்கரை பொங்கல், 150 கிராம் புளியோதரை, 140 கிராம் வடை, 50 கிராம் அப்பம், 40 கிராம் தேன்குழல் முறுக்கு, 60 கிராம் லட்டு இவை யாவும் தற்போது 15 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2011 முதல் 15 ஆண்டுகளாக 10 ரூபாய்க்கு மட்டுமே விற்கப்பட்டு வந்த இந்த பிரசாதங்கள் தற்போது 50 சதவீதம் விலை ஏற்றம் கண்டுள்ளது. மூலப்பொருட்களின் விலை ஏற்றம் காரணமாக இந்த விலையேற்றம் உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 8 கிராம் குங்குமம் 3 ரூபாய்க்கும், 40 கிராம் குங்குமம் 15 ரூபாய்க்கும், 100 கிராம் குங்குமம் 35 ரூபாய்க்கும் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கோவில் வளாகத்திற்குள் பொற்றாமரை குளம் பகுதியில் 2 பிரசாத கடைகளும், அம்மன் சன்னதி, முக்குறுணி விநாயகர் ஆலயம், கொடிமரம் அருகே என மொத்தம் 6 பிரசாத ஸ்டால்கள் உள்ளன. கோவிலுக்கு வெளியே கிழக்கு கோபுரம் அருகில் ஒரு பிரசாத ஸ்டால் என 7 பிரசாத ஸ்டால்கள் கோவில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
பக்தர்களுக்கு விற்பனை செய்யக்கூடிய இந்த பிரசாதங்களின் விலை ஏற்றம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மஞ்சள் பை 21 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் அது மட்டும் ரூபாய் 15 ஆக விலை குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- தமிழ்நாட்டில் உள்ள எல்லா கட்சிகளும் எங்களுக்கு தோழமை கட்சிகள்தான்.
- மாநாடு நடைபெறும்போது கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை வரும். அப்போது உறுதி செய்யப்படும்.
மதுரையில் இன்று நடைபெற்ற பூத் கமிட்டி கூட்டத்தில் தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
* தே.மு.தி.க.வான நாங்கள் எங்களுடைய நிலைப்பாட்டில் மிகவும் தெளிவாக இருக்கிறோம்.
* எங்களுக்கான பூத் கமிட்டி அமைப்பது, தேர்தல் பணிகளை செய்வது, கேப்டனின் குரு பூஜை, மாநாடு ஆகியவைதான் எங்களுடைய ஒரே கவனம்.
* ரத யாத்திரை மற்றும் எங்களுடைய கட்சி வளர்ச்சி ஆகியவற்றை பற்றி மட்டுமே கவனம் செலுத்துகிறோம்.
* தமிழ்நாட்டில் உள்ள எல்லா கட்சிகளும் எங்களுக்கு தோழமை கட்சிகள்தான். யாரும் தோழமை இல்லை எனச் சொல்ல முடியாது.
* தே.மு.தி.க. அதிகாரப்பூர்வமாக யாருடனும் கூட்டணி பற்றி பேசவில்லை.
* மாநாடு நடைபெறும்போது கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை வரும். அப்போது உறுதி செய்யப்படும்.
இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
தே.மு.தி.க. சார்பில் உள்ளம் தேடி, இல்லம் நாடி மூன்றாம் கட்ட சுற்றுப்பயணத்தை மதுரையிலிருந்து தொடங்குகிறோம். வருகிற டிசம்பர் 2-ந்தேதி ஈரோட்டில் நிறைவு பெறும் என அறிவித்தார்.
- சிலரையும் சட்ட விரோதமாக அறங்காவலர் பதவிக்கு நியமிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
- விதிமுறைகளின் படி எங்கள் குடும்பத்தை சேர்ந்த ஒருவரை அறங்காவலராக இந்த ஆண்டில் நியமிக்க உத்தரவிட வேண்டும்
மதுரை:
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ள கற்பக விநாயகர் கோவில் பிரசித்தி பெற்றது. 1,300 ஆண்டுகள் பழமையான இந்தக் கோவில் செட்டிநாடு நகரத்தார் சமூகத்தை சேர்ந்த 20 குடும்பத்தினரால் பாரம்பரியமாக சுழற்சி முறையில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
1978-ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை அங்கீகரித்த திட்டப்படி, மேற்கண்ட 20 குடும்பத்தில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 2 குடும்பத்தை சேர்ந்தவர்கள் கற்பக விநாயகர் கோவிலின் அறங்காவலர்களாக நியமிக்கப்பட வேண்டும். எங்கள் குடும்பத்தில் ஏற்கனவே அறங்காவலர்களாக பதவி வகித்து உள்ளனர்.
இந்தநிலையில் 2025-2026 ஆம் ஆண்டில் எங்களது குடும்பத்தினர் அறங்காவலர்களாக பதவி வகிக்க வேண்டும். ஏற்கனவே பதவியில் இருந்த கண்டவராயன்பட்டி சொக்கலிங்கத்தை அறநிலையத்துறை இணை கமிஷனர் தகுதிநீக்கம் செய்தார். அவருக்கு வேண்டிய நபரை அறங்காவலராக நியமித்து கோவில் ஆலோசனை கூட்டத்தின்போது பல்வேறு இடையூறுகளை செய்து வருகின்றனர்.
மேலும் சிலரையும் சட்ட விரோதமாக அறங்காவலர் பதவிக்கு நியமிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அறங்காவலர் தேர்வு செய்வதற்கான நடவடிக்கையில் ஐகோர்ட்டின் தீர்ப்பின்படி எந்த முடிவும் செய்யவில்லை. அதற்குள் அறங்காவலர்களை தேர்வு செய்ய தேர்தல் நடத்த வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர். இது சட்டத்துக்கு புறம்பானது.
எனவே விதிமுறைகளின் படி எங்கள் குடும்பத்தை சேர்ந்த ஒருவரை அறங்காவலராக இந்த ஆண்டில் நியமிக்க உத்தரவிட வேண்டும். அதுவரை வேறு நபர்களை அறங்காவலர் பதவிக்கு நியமிக்க அறநிலையத்துறைக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பிள்ளையார் பட்டி கோவில் நிர்வாகம் சார்பில் ஆஜரான வக்கீல், அறங்காவலர் நியமனத்தில் சட்டவிதிமுறைகள் மீறப்படவில்லை என்றார். அப்போது நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தமிழகத்திலேயே இந்த ஒரு கோவிலில் தான் நியாயமான நிர்வாகம் நடப்பதாக நினைத்து இருந்தேன். ஆனால் இங்கும் இத்தனை பிரச்சனைகளா? என்று அதிருப்தி தெரிவித்தார்.
விசாரணை முடிவில், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் அறங்காவலர் நியமன விவகாரத்தில் வருகிற 18-ந்தேதி வரை எந்த முடிவும் எடுக்கக் கூடாது என உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தார்.
- மதுரை கோரிப்பாளையத்தில் ரூ.190 கோடியில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.
- இந்தியாவில் உள்ள ஜனநாயக ரீதியான அரசியல் கட்சிகள் எஸ்.ஐ.ஆர்.ஐ எதிர்க்கிறது.
மதுரையில் இன்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது:-
10 ஆண்டு காலம் அ.தி.மு.க. ஆட்சியில் தென் தமிழகம் புறக்கணிக்கப்பட்டது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் தென் தமிழகத்திற்கு முதலமைச்சர் முக்கியத்துவம் அளித்துள்ளார். ரூ.150 கோடி மதிப்பிட்டீல் மதுரை மேலமடையில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.
மக்களின் நீண்ட கோரிக்கையையடுத்து மதுரை கோரிப்பாளையத்தில் ரூ.190 கோடியில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.
டிசம்பர் 7-ம் தேதி மதுரை மேலமடையில் கட்டப்பட்ட உயர்மட்ட மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். மதுரை கோரிப்பாளையத்தில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பாலப் பணிகள் ஜனவரியில் முடிக்கப்படும்.
அ.தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்ட மேம்பாலங்களில் விதிமுறைகள் பின்பற்றப்படாததால் விபத்துகள் நடைபெற்றது. தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலங்களில் பாதுகாப்பு அம்சங்கள் முழுமையாக கடைபிடிக்கப்படுகிறது.
தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்ட மேம்பாலங்களில் உள்ள வளைவுகளில் அமெரிக்கா தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படுகிறது. பாலங்களின் வளைவுகளால் மட்டுமே விபத்துகள் நடைபெறுகிறது.
மதுரை தெற்குவாசல்- வில்லாபுரம் இடையே உயர்மட்ட மேம்பாலம் கட்டுவதற்கு சாத்திய கூறுகள் உள்ளதா? என ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆய்வு முடிவுகளின் படி திட்ட மதிப்பீடு தயார் செய்யப்படும்.
பொதுப்பணித்துறையில் லஞ்சம் பெற்றதாக உறுதி செய்யப்படாத குற்றச்சாட்டுகளுக்கு நான் எப்படி பொறுப்பேற்க முடியும். குற்றச்சாட்டுக்கள் உறுதியானதால் பல்வேறு நபர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளேன். ஆதாரப்பூர்வமாக புகார்கள் வந்தால் நிச்சயமாக நடவடிக்கை எடுப்பேன்.
இந்தியாவில் உள்ள ஜனநாயக ரீதியான அரசியல் கட்சிகள் எஸ்.ஐ.ஆர்.ஐ எதிர்க்கிறது. தமிழகத்தில் ஏற்கனவே 8 முறை நடைபெற்றுள்ளதால் எஸ்.ஐ.ஆர்.ஐ தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கவில்லை.
எஸ்.ஐ.ஆர்.ஐ மேற்கொள்ள காலமும் நேரமும் போதாது என்பதைத்தான் கூறுகிறோம். வடகிழக்கு பருவமழை, பொங்கல் விழா, தேர்தல் தேதி அறிவிப்பு இருப்பதால் தற்போது எஸ்.ஐ.ஆர். மேற்கொள்ளக் கூடாது என கூறுகிறோம்.
கொளத்தூரில் கள்ள ஓட்டுக்கள் இருக்கிறது என்பதை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வீடு, வீடாக சென்று ஆய்வு நடத்தினாரா? அரசியலில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதற்காக எடப்பாடி பழனிசாமி ஏதாவது ஒன்றை பேசி வருகிறார்.
நாங்கள் எதை சொன்னாலும் அதற்கு எடப்பாடி பழனிசாமி எதிர் கருத்துதான் கூறுவார். இந்தியாவில் உள்ள அனைவரும் எஸ்.ஐ.ஆர்.ஐ எதிர்த்து கருத்து சொல்லும்போது எடப்பாடி பழனிசாமி மட்டும் ஆதரித்து கருத்து சொல்வது ஏதற்காக?
பா.ஜ.க.வோடு அ.தி.மு.க. கூட்டணி வைத்துள்ளதால் அதன் செயல்பாடுகளுக்கு ஒத்து ஊதுகிறது. தமிழ்நாட்டில் மூன்று முறை முதலமைச்சராக ஓ.பி.எஸ். பதவி வகித்துள்ளார்.
மனோஜ் பாண்டியனுக்கு புரியாமலா தி.மு.க.விற்கு வந்திருப்பார். தமிழக அரசியலில் அண்ணா, பெரி யார் வகுத்துக் கொடுத்த திராவிட கொள்கையை கலைஞர் நிறைவேற்றினார்.
அதனையே மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார். திராவிட கொள்கையை தி.மு.க. மட்டும் தான் கடைப்பிடிப்பதால் பிற கட்சிகளில் இருந்து தி.மு.க.விற்கு வருகிறார்கள்.
எடப்பாடி பழனிச்சாமி சங்கி கொள்கையை தாங்கி பிடிக்கிறார். அதனால்தான் அ.தி.மு.க.விலிருந்து, தி.மு.க.விற்கு வருகிறோம் என செல்கிறார்கள். தி.மு.க.விற்கு வருபவர்கள் அதன் கொள்கையை ஏற்றுக் கொண்டு வருகி றார்கள்.
திராவிட மாடல் ஆட்சி யில் ஏழை, எளிய மக்க ளுக்காக முதலமைச்சர் திட்டங்களை தீட்டி செயல்ப டுத்துவதால் தி.மு.க.வில் இணைகிறார்கள். தி.மு.க. விற்கு நீண்ட காலமாக உழைப்பவர்களுக்கு பதவி கள் வழங்கப்பட்டுள்ளது.
துரைமுருகன், கே.என்.நேரு, தங்கம் தென்னரசு என தி.மு.க.விற்கு உழைத்த வர்களுக்கு பதவி வழங்கப் பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க.வில் திறமை உள்ளவர்களை பயன்படுத்திக் கொள்வார். திறமை உள்ளவர்கள் தி.மு. க.வில் உள்ளவர்களா? அ.தி.மு.க.வில் இருந்து வந்தவர்களா? என பார்க்க மாட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மின்சார திருட்டு முறைகேட்டை தடுக்க மின்வாரிய மற்றும் உயர் அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
- சிறைத்துறை மற்றும் மின்வாரிய துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்கப்பட்டது.
மதுரை:
தூத்துக்குடியைச் சேர்ந்த சேகர் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் உள்ள மத்திய சிறைச்சாலைகளில் சிறையை கண்காணிக்க தமிழ்நாடு சிறைத்துறை தலைவர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். மாவட்ட, மத்திய சிறைச்சாலை கண்காணிப்பாளர்கள் மூலம் சிறைகள் நிர்வாகம் செய்யப்பட்டு வருகின்றன.
சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு மத்திய சிறைச்சாலையை ஒட்டியுள்ள பகுதிகளில் குடியிருப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதிகாரிகள் குடியிருப்பில் உள்ள மின் இணைப்பில் முறைகேடு செய்து வருகின்றனர்.
மதுரை மத்திய சிறை, கோவை மத்திய சிறையில் உள்ள அதிகாரிகள் இது போன்று மின் திருட்டில் ஈடுபட்டு உள்ளனர். சிறைச் சாலைகளில் உள்ள பல அதிகாரிகள் வீட்டில் மின் இணைப்பு இல்லை. இருந்த போதும் அதிகளவில் மின்சாதனங்களை வைத்து பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் மின்கட்டணம் இல்லை.
குறிப்பாக மதுரை சரக கூடுதல் இயக்குனர் டி.ஐ.ஜி. பழனி, கோயம்புத்தூர் சரகம் டி.ஐ.ஜி. சண்முக சுந்தரம், மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளராக பணியாற்றிய ஊர்மிளா ஆகியோர் இந்த முறைகேட்டில் சம்பந்தப்பட்டு உள்ளனர்.
எனவே மத்திய சிறையில் நடைபெறும் மின்சார திருட்டு முறைகேட்டை தடுக்க மின்வாரிய மற்றும் உயர் அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்தி முறைகேட்டில் ஈடுபட்ட உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சிறைத்துறை மற்றும் மின்வாரிய துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள் கடந்த 2023-ம் ஆண்டு முதல் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
தொடர்ந்து எதிர்மனுதாரர் தரப்பில் பதில் அளிக்காமல் கால அவகாசம் கேட்பது ஏற்கத்தக்கது அல்ல. மனுதாரரின் குற்றச்சாட்டு தீவிரமானது. எனவே இந்த வழக்கை டிசம்பர் 3-ந் தேதி மீண்டும் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும். அதற்கு முன்னதாக சிறைத்துறை மற்றும் மின்வாரிய துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் அபராதம் விதிக்க நேரிடும் என உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கு விசாரணையை டிசம்பர் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
- எங்கள் மீது சட்டத்துக்கு புறம்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
- அரசுக்கு எதிரான அதிருப்தியை வெளிப்படுத்த ஒன்று கூடுவதை குற்றமாக கருதி வழக்கு பதிவு செய்ய அனுமதிக்க முடியாது.
மதுரை:
தஞ்சாவூர் மாவட்டம் அதிராமபட்டினம் பகுதியைச் சேர்ந்த அகமது காஜா, பஷீர் அகமது, அகமது அஸ்லாம், முகமது புகாரி, முகமது ரஷீத் உள்பட 19 பேர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது :-
கடந்த 2022-ம் ஆண்டில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை மத்திய அரசு தடை செய்து உத்தர விட்டது. மேலும் சம்பந்தப்பட்ட தலைவர்கள் வீட்டில் நள்ளிரவில் புகுந்து சோதனை செய்வது போன்ற நடவடிக்கைகள் எதிர்த்து 28.9.2022 அன்று அதிராமபட்டினம் பஸ் நிலையம் முன்பாக மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம்.
நாங்கள் எந்தவித முன் அனுமதியும் பெறாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தாக கூறி அதிராமபட்டினம் போலீசார் எங்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 143, 341, 188, 290 மற்றும் 291 ஆகியவற்றின்கீழ் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.
காவல்துறை சட்டத்தின் பிரிவு 30(2)-ன் படி அதிராமபட்டினம் போலீசார் அரசியலமைப்பின் வரம்பிற்குள் மட்டுமே செயல்பட முடியும். இது ஒரு குடிமகனுக்கு பேச்சு சுதந்திரத்தையும் நியாயமான கட்டுப்பாடுகளுடன் வெளிப்பாடுகளையும் வழங்குகிறது.
அந்த வகையில் எங்கள் மீது சட்டத்துக்கு புறம்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். எனவே இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் வக்கீல் கலந்த ஆசிக் அகமது ஆஜராகி, மனுதாரர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதற்கு முன்பாக போலீசார் இது தொடர்பான புகார் குறித்து முதல்கட்ட விசாரணையை நடத்தாமல் நேரடியாக வழக்கு பதிவு செய்தது ஏற்புடையதல்ல என வாதாடினார்.
விசாரணை முடிவில், போராடியதற்காக வழக்கு பதிந்தால் எந்த ஒரு குடிமகனும் ஜனநாயக முறையில் அதிருப்தியை வெளிப்படுத்த முடியாது. அரசுக்கு எதிரான அதிருப்தியை வெளிப்படுத்த ஒன்று கூடுவதை குற்றமாக கருதி வழக்கு பதிவு செய்ய அனுமதிக்க முடியாது. அந்த வகையில் போராட்டத்தில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் மீது போலீசார் பதிவு செய்த வழக்கு ரத்து செய்யப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டார்.
- நீ என்னப்பா பைத்தியம் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்பதை போல் டிடிவி தினகரன் பேசி வருகிறார்.
- டிடிவி தினகரனை நம்பி சென்றவர்கள் நிலை பற்றி அவர் யோசித்தது உண்டா?
மதுரையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேசியதற்கு உதயகுமார் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் உதயகுமார் மேலும் கூறியதாவது:-
ஜெயலலிதா 10 ஆண்டுகள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதால் டிடிவி தினகரனின் மனநிலை பாதிக்கப்பட்டுவிட்டது.
நீ என்னப்பா பைத்தியம் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்பதை போல் டிடிவி தினகரன் பேசி வருகிறார்.
டிடிவி தினகரனை நம்பி சென்றவர்கள் நிலை பற்றி அவர் யோசித்தது உண்டா?
டிடிவி தினகரனுடன் இருந்த தங்கத்தமிழ் செல்வன், செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் திமுக சென்றபோது ஏன் கவலைப்படவில்லை?
பொதுவெளியில் டிடிவி தினகரன் எதை வேண்டுமானாலும் பேசிவிடலாமா?
இவ்வாறு அவர் கூறினார்.
- மக்களை பாதுகாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் இருக்கிறது.
- பேச வேண்டியவர்கள் பேசினால்தான் அனைத்தும் நடக்கும்.
மதுரையில் த.வெ.க. கூட்டணி குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பதில் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு சட்டமன்றத்தில் அதிமுக பிரதான எதிர்க்கட்சி. சட்டப்பூர்வமான பிரதான எதிர்க்கட்சி.
முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி இருந்தார். 43 தொகுதிகளில் 1,92,000 வாக்குகள் தான் பின்னடைவு. இப்படி தான் ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததே தவிர,
ஐந்தரை கோடி வாக்காளர்களில் ஒரு லட்சத்து 92 ஆயிரம் வாக்காளர்கள் அதிமுக கூட்டணிக்கு கிடைத்திருந்தால், எந்த உள்குத்தும், வெளிகுத்தும், ஊமைகுத்தும் இல்லாமல் இருந்திருந்தால், நாங்கள் எல்லோரும் ஜெயிச்சிருப்போம்.
உள்குத்து, ஊமைக்குத்து என்றால் என்ன என்று கேட்காதீர்கள். அது வாங்கியவர்களுக்கு மட்டும்தான் தெரியும்.
இது ஒரு பருவமழை காலம். மக்களை பாதுகாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் இருக்கிறது. பிப்ரவரி, மார்ச் மாதத்திற்கு பிறகு கூட்டம் குறித்து கேள்வி கேளுங்கள். அப்போது சொல்கிறோம்.
நான் சொல்லியோ.. நீங்கள் சொல்லியோ ஒன்றும் நடக்காது. பேச வேண்டியவர்கள் பேசினால்தான் அனைத்தும் நடக்கும். நல்லதே நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.






