என் மலர்tooltip icon

    மதுரை

    • காவல்துறை தரப்பில் கேட்கப்படும் கேள்விகளுக்கு முறையாக பதில் அளிக்க வேண்டும்.
    • காவல்துறை மனுவை பரிசீலனை செய்யும் வரை முன்னேற்பாடுகள் செய்யலாம். பூஜை செய்யக் கூடாது

    இந்து முன்னணி சார்பில் வருகிற 22ஆம் தேதி மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற இருக்கிறது. மாநாட்டிற்கு முன்னதாக சில நாட்கள் அறுபடை வீடுகள் அமைத்து வழிபாடு செய்ய அனுமதி கோரி முத்துக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.

    இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் கேட்கப்படும் கேள்விகளுக்கு முறையாக பதில் அளிக்க வேண்டும். காவல்துறை மனுவை பரிசீலனை செய்யும் வரை முன்னேற்பாடுகள் செய்யலாம். பூஜை செய்யக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், காவல்துறை சார்பில் அரசியலமைப்பு மற்றும் சட்டப்படி உரிய முடிவு எடுக்கப்பட வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

    விசாரணையின்போது பெங்களூரு ஸ்டேடியம் நிலச்சரிவு போன்ற அசம்பாவிதம் நடைபெற்றால் என்ன செய்வது என காவல்துறை சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

    தமிழக இந்து முன்னணி மாநிலச் செயலாளர் முத்துக்குமார், உயர் நீதிமன்றம் மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: இந்து முன்னணி சார்பில் மதுரையில் ஜூன் 22-ம் தேதி முருக பக்தர்களின் ஆன்மிக மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டு வளாகத்தில் முருகனின் அறுபடை வீடுகளின் தற்காலிக மாதிரி கோவில்கள் அமைக்கப்படுகின்றன.

    அவற்றில் வரும் 10 முதல் 22-ம் தேதி வரை காலை 10 முதல் நண்பகல் 12 மணி வரையும், மாலையில் 5 முதல் 7 மணி வரையும் பூஜைகள் நடத்தி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கவும், 22-ம் தேதி ஒரே நேரத்தில் கந்தசஷ்டி கவசம் மற்றும் திருப்புகழ் பாடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மதுரை அம்மா திடல் தனியார் பட்டா நிலம். அங்கு மாநாடு நடத்த சம்பந்தப்பட்டவரிடம் முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளது. அங்கு பல்வேறு கட்சியினருக்கு மாநாடு மற்றும் விழாக்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, முருக பக்தர்கள் மாநாட்டில் அறுபடை வீடுகள் அமைத்து வழிபாடு நடத்தவும், ஒலிபெருக்கியை பயன்படுத்தவும் அனுமதி கோரி, மதுரை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.

    ஆனால், அறுபடை வீடுகள் மாதிரி அமைத்து வழிபாடு நடத்தவும், ஒலிபெருக்கி பயன்படுத்தவும் அனுமதி மறுத்து காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை ரத்து செய்து, முருக பக்தர்கள் மாநாட்டு வளாகத்தில் அறுபடை வீடுகள் அமைத்து வழிபாடு நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் முத்துக்குமார் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

    • ஆயிரம் ஆண்டு பழமையான திருப்பரங்குன்றம் மலை” என்கிறார் அமித்ஷா.
    • பரங்குன்றம் என்பது மூவாயிரம் ஆண்டு பழமையான தமிழ் சொல்.

    மதுரைக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அங்கு நடைபெற்ற பாஜக கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

    அப்போது பேசிய அவர், "முருகனின் திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என திமுக அரசு சொல்கிறது. பிரிவினைவாதத்தை தூண்டுவதிலேயே திமுக அரசு முனைப்பாக இருக்கிறது. . ஜூன் 22-ல் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு கலந்து கொண்டு நமது வலிமையை காட்ட வேண்டும்" என்று விமர்சனம் செய்திருந்தார்.

    அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு மதுரை சு.வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.

    இது தொடர்பான அவரது பதிவில், "ஆயிரம் ஆண்டு பழமையான திருப்பரங்குன்றம் மலை" என்கிறார் அமித்ஷா.

    பரங்குன்றம் என்பது மூவாயிரம் ஆண்டு பழமையான தமிழ் சொல். அதனை ஆயிரம் ஆண்டு என சுருக்குவதில் தான் சனாதனத்தின் சதி இருக்கிறது.

    சமஸ்கிருதத்தை பல்லாயிரம் ஆண்டு என்று சொல்லிக்கொண்டே தமிழை ஆயிரம் ஆண்டுக்குள் அடக்குவது தான் கீழடி துவங்கி திருப்பரங்குன்றம் வரை அவர்கள் நடத்திக்கொண்டிருக்கும் அரசியல்.

    • தமிழ்நாட்டில் நடைபெறும் திமுக அரசு 100க்கு 100 சதவீதம் தோல்வி அடைந்த அரசு.
    • தமிழகத்தின் பெருமை கூறும் செங்கோலை நாடாளுமன்றத்தில் வைத்த மோடியை பாராட்டதது ஏன்?

    பெண்களுக்கு எதிரான குற்றங்களால் தமிழ்நாடு மலிந்து காணப்படுகிறது. தமிழ்நாட்டு முதல்வருக்கு இதைப் பற்றி எந்த அக்கறையோ, கவலையோ கிடையாது.

    2024-ல் பிரதமராக மீண்டும் மோடி பொறுப்பேற்றார். ஒடிசா, ஹரியானாவிலும் வென்றோம். மஹாராஷ்டிராவிலும் இதுவரை இல்லாத அளவுக்கு பாஜக வெற்றியை பதிவு செய்திருக்கிறது.

    2025ல் டெல்லி கெஜ்ரிவால் ஆட்சி முடிவுக்கு வந்து, 27 ஆண்டுக்குப் பிறகு பாஜக ஆட்சி. டெல்லி போல 2026ல் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி கண்டிப்பாக மலரும்.

    திமுக ஆட்சியில் எந்த துறையை எடுத்துக் கொண்டாலும் ஊழல் மயமாகிவிட்டது. மோடி தலைமையிலான மத்திய அரசு கொடுக்கும் பணத்தை திமுக அரசு மக்களுக்கு கிடைக்காமல் செய்கிறது.

    தமிழ்நாட்டில் நடைபெறும் திமுக அரசு 100க்கு 100 சதவீதம் தோல்வி அடைந்த அரசு.

    தேர்தல் வாக்குறுதியில் 10 சதவீதத்தை கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை. தென் தமிழகத்திற்கு எதையுமே செய்யாமல் திமுக அரசு துரோகம் செய்கிறது.

    முருகனின் திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என திமுக அரசு சொல்கிறது. பிரிவினைவாதத்தை தூண்டுவதிலேயே திமுக அரசு முனைப்பாக இருக்கிறது.

    தமிழ், தமிழ் எனக்கூறும் திமுக அரசு உயர்கல்வியை தமிழ் வழியில் கொண்டு சேர்க்காதது ஏன்?

    தமிழகத்தின் பெருமை கூறும் செங்கோலை நாடாளுமன்றத்தில் வைத்த மோடியை பாராட்டதது ஏன்?

    திமுக ஆட்சியை எப்படி அகற்றப்போகிறோம் என்ற சிந்தனையிலேயே இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்

    • தமிழ்நாட்டிற்கு வந்து உங்களிடம் தமிழ் மொழியில் பேச முடியவில்லையே என்பதில் வருத்தம்.
    • வரும் 2026 தமிழக சட்டமன்ற தேர்தல் பாஜகவுக்கு மிக முக்கியமான ஒன்று.

    மதுரையில் நடைபெறும் பாஜக கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றி வருகிறார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    மதுரை மண்ணில் மீனாட்சி அம்மனை வணங்கி எனது உரையை தொடங்குகிறேன்.

    ஜூன் 22ம் தேதி நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டை சிறப்பாக நடத்தி தர வேண்டும்.

    தமிழ்நாட்டிற்கு வந்து உங்களிடம் தமிழ் மொழியில் பேச முடியவில்லையே என்பதில் வருத்தம்.

    அமித் ஷாவால் எங்களை தோற்கடிக்க முடியாது என முதலமைச்சர் சொல்கிறார். ஆனால், தமிழக மக்கள் அவர்களை தோற்கடிப்பர்.

    2026ம் ஆண்டு தமிழகத்தில் அதிமுக- பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி ஆட்சி அமைக்கும். வரும் தேர்தலில் திமுக தலைமையிலான ஆட்சியை மக்கள் தூக்கி எறிவார்கள்.

    ஆபரேஷன் சிந்தூருக்கு தமிழகத்திலிருந்து வந்த ஆதரவு குரல் என்றும் மறக்க முடியாதது.

    பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை அவர்கள் நாட்டிற்குள்ளேயே புகுந்து அழித்தோம். பாகிஸ்தானுக்குள் 100 கி.மீ சென்று பயங்கரவாதிகளை தாக்கி அழித்தது நமது ராணுவம். பிரதமர் மோடியின் ஆட்சியில் ராணுவத்தில் தன்னிறைவான நிலை ஏற்பட்டு உள்ளது.

    வரும் 2026 தமிழக சட்டமன்ற தேர்தல் பாஜகவுக்கு மிக முக்கியமான ஒன்று. மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக அமோக வெற்றி பெற்றது.

    டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியை வீழத்தியது போல் திமுக ஆட்சியையும் வீழ்த்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புதிய திட்டங்களுடன் கூடிய தேர்தல் வியூகத்தை அமித்ஷா தயார் செய்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
    • அமித்ஷா இன்று மாலை ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் ஆகியோரை சந்திக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    மதுரை:

    2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

    கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது தனித்து போட்டியிட்ட அ.தி.மு.க. எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. அதே சமயம் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 10 இடங்களில் அ.தி.மு.க.வை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தை பிடித்தது. இதுதொடர்பாக அ.தி.மு.க. தலைமை தீவிர கள ஆய்வு மேற்கொண்டது.

    இதையடுத்து தமிழ்நாட்டில் 2026-ல் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து போட்டியிட வேண்டும் என்று நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை விருப்பம் தெரிவித்தனர். அதன்பேரில் பலகட்ட ஆலோசனை நடத்திய அ.தி.மு.க.பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் டெல்லி சென்றபோது மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார்.

    அதன் எதிரொலியாக தமிழ்நாட்டில் மீண்டும் அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணி உருவாக வாய்ப்பு உள்ளதாக கருதப்பட்டது. இதையடுத்து ஏப்ரல் மாதம் 11-ந்தேதி தமிழகம் வந்த அமித்ஷா அந்த கூட்டணியை உறுதிப்படுத்தினார். மேலும் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு சென்ற அமித்ஷா, அவர் அளித்த விருந்திலும் கலந்துகொண் டார். அதனை வரவேற்ற அ.தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்தனர்.

    இந்தநிலையில் சட்டமன்ற தேர்தலில் தென் மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும், அதில் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை குறிவைத்தும் மதுரையை மையப்படுத்தி மாநில கட்சிகள் முதல் தேசிய கட்சிகள் வரை காய் நகர்த்தி வருகிறது. அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை மதுரையில் தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது பா.ஜ.க.வுக்கு எதிரானது உள்பட 22 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    அவர்களுக்கு பதிலடி கொடுக்க திட்டமிட்ட பா.ஜ.க., சட்டமன்ற தேர்தலுக்கு தாங்களும் ஆயத்தமாகி விட்டதை அறிவிக்கும் வகையில் பிரமாண்ட நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்தது. அதன் தொடர்ச்சியாக இன்று மதுரையில் பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பிரமாண்டமாக நடக்கிறது. ஒத்தக்கடை வேலம்மாள் திடலில் இன்று மாலை நடைபெறும் அந்த கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு தமிழ்நாட்டில் 2026-ல் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகம் குறித்து ஆலோசனை வழங்குகிறார்.

    முன்னதாக இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று இரவு 10.30 மணியளவில் அமித்ஷா மதுரை வருகை தந்தார். விமான நிலையத்தில் அவரை மாநில பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய மந்திரி எல்.முருகன், முன்னாள் அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்திர ராஜன், வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் ராம.சீனிவாசன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

    இதையடுத்து மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இரவில் தங்கி ஓய்வெடுத்த அமித்ஷா, இன்று  உலகப்புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். பின்னர் மீண்டும் ஓட்டலுக்கு திரும்பிய அவர் பா.ஜ.க. மையக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டார்.



    வழக்கமாக மையக்குழு கூட்டம் என்பது ஒருநாள் முழுவதும் நடைபெறும். ஆனால் குறுகிய காலத்தில் அமித்ஷா வந்துள்ளதால் குறைந்த நேரத்தில் கூட்டம் நடைபெறுகிறது. இதில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய மந்திரி எல்.முருகன், மேலிட பார்வையாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், முன் னாள் மாநில தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., மாநில பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன், தமிழிசை சவுந்தரராஜன்,கே.பி.ராம லிங்கம், கரு.நாகராஜன், கருப்பு முருகானந்தம், கார்த்தியாயினி, பொன் பாலகணபதி, ஏ.பி.முருகானந்தம், கனகசபாபதி, வி.பி.துரைசாமி, எச்.ராஜா உள்ளிட்ட 22 பேர் பங்கேற்றுள்ளனர்.

    அப்போது தமிழகத்தில் அமைப்பு ரீதியாக பா.ஜ. க.வை பலப்படுத்துதல், அரசியல் ரீதியாக அதிரடியான சட்டமன்ற தேர்தல் வியூகம் வகுத்தல், அதற்கேற்றவாறு எந்தமாதிரியான முன்னெடுப்புகளை பா.ஜ.க. மேற்கொள்ள வேண்டும், அ.தி.மு.க.- பா.ஜ.க கூட்டணி அமைத்த பிறகு தற்போதைய அரசியல் சூழல் குறித்து மத்திய மந்திரி அமித்ஷா கேட்டு அறிந்தார்.

    2026 சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதற்கான ஆலோசனைகளை மையக்குழு உறுப்பினர்களுக்கு வழங்குகிறார்.

    மேலும் தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள், தென் மாவட்டங்களில் பா.ஜ.க. நல்ல வளர்ச்சி கண்டுள்ளதால் அங்கு கூடுதல் தொகுதிகளில் போட்டியிடுதல், இதுவரை மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகள் மூலம் அங்குள்ள வாக்காளர்களின் தி.மு.க. வுக்கு எதிரான மனநிலையை பா.ஜ.க.வுக்கு ஆதரவான வாக்குகளாக மாற்றுவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

    பின்னர் மாலை 4 மணியளவில் ஒத்தக்கடை வேலம்மாள் திடலில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பந்தலில் நடைபெறும் பா.ஜ.க. நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் அமித்ஷா கலந்துகொண்டு பேச உள்ளார். மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் வெற்றி வியூகம் வகுத்து அதன் மூலம் ஆட்சியை பிடிக்க காரணமாக இருந்த அமித்ஷாவின் தமிழகம் வருகையும் நிச்சயம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பா.ஜ.க.வினர் நம்பிக்கையுடன் கூறி வருகிறார்கள்.

    அதற்கேற்ப 2026 மிஷன் என்ற இலக்கை நிர்ணயித்து, தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வகையில் புதிய திட்டங்களுடன் கூடிய தேர்தல் வியூகத்தை அமித்ஷா தயார் செய்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி பாராளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய அளவில் இரண்டாம் இடத்தை 10 தொகுதிகளில் பெற்றதுடன், அதில் அடங்கியுள்ள சட்டமன்ற தொகுதிகளை கட்டாயம் வென்றாக வேண்டும், தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய கட்சியாக பா.ஜ.க. காலூன்ற வேண்டும் என்பதற்காக அமித்ஷா நேரடியாக களம் இறங்குகிறார்.

    மேலும் இன்று மாலை நடைபெறும் கூட்டத்தில் தி.மு.க. அரசை வீட்டுக்கு அனுப்ப பா.ஜ.க. நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்தும் வியூகம் வகுத்து அவர் பேச உள்ளார். தற்போது கூட்டணியில் உள்ள அ.தி.மு.க., அ.ம.மு.க., ஓ.பி.எஸ்.சின் அ.தி.மு.க. உரிமை மீட்புக்குழு ஆகியவற்றுடன் பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளையும் ஒருங்கிணைக்க அமித்ஷா திட்டமிட்டு உள்ளார்.

    மேலும் அமித்ஷாவின் இந்த மதுரை பயணத்தின்போது பா.ஜ.க. மாநில நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து தேர்தலுக்கான வேலைகள் குறித்து ஆலோசனைகள் வழங்க உள்ளார். கட்சியின் கூட்டணி நிலைப்பாடுகள் குறித்தும் இந்த கூட்டங்களில் விவாதிக்கப்படுகிறது.



    மதுரை வருகை தந்துள்ள அமித்ஷா இன்று மாலை ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் ஆகியோரை சந்திக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன் மூலம் தென்மாவட்டங்கள் உள்பட தமிழகம் முழுவதும் அவர்களுக்கான ஓட்டு வங்கியை அப்படியே அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணிக்கு கொண்டு வரவும் திட்டமிட்டு அதற்கான வழிமுறைகளையும் அமித்ஷா இன்று மாலை நடைபெறும் கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்த இருக்கிறார்.

    மதுரையில் இன்று அமித்ஷா பங்கேற்கும் பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் 2026 சட்ட மன்ற தேர்தலுக்கான பிரசாரத்தின் தொடக்கம் என்றும், கட்சியினருக்கு புதிய ஊக்கம் கொடுப்பதாக அமையும் என்றும் கட்சியினர் தெரிவித்தனர்.

    அமித்ஷா வருகையை முன்னிட்டு மதுரை விமான நிலையம், விரகனூர் ரிங் ரோடு, மீனாட்சி அம்மன் கோவில், ஒத்தக்கடை மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் வேலம்மாள் திடல் ஆகிய பகுதிகளில் மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் ஆகியோர் தலைமையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    • பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் செல்ல காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது.
    • மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    மதுரை:

    மதுரை ஒத்தக்கடை பகுதியில் இன்று மாலை நடைபெறும் பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை மந்திரி நேற்று இரவு மதுரை வருகை தந்தார். இதையடுத்து இன்று காலை 11.15 மணியளவில் அவர் உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

    இதற்காக  சிந்தாமணி பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் இருந்து பலத்த பாதுகாப்புடன் காரில் புறப்பட்ட மத்திய மந்திரி அமித்ஷா மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக கிழக்கு கோபுரம் வழியாக கோவிலுக்கு வந்த அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து கோவிலில் நடைபெற்ற மத்திய கால பூஜையில் கலந்து கொண்டு அமித்ஷா மனமுருகி சுவாமி தரிசனம் செய்தார். அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி, பொற்றாமரை குளம், ஆயிரங்கால் மண்டபம் உள்ளிட்ட இடங்களுக்கு அவர் சென்றார். இதையொட்டி மற்ற கோபுரங்கள் வழியாக பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் செல்ல காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது.

    மேலும் மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அத்துடன் மாசி வீதிகள் தொடங்கி சித்திரை வீதிகள் வரையிலும் காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். கோவில் அருகே உள்ள உயரமான கட்டிடங்களில் போலீசார் ஏறி நின்று பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

    அதேபோல் கோவிலை சுற்றிலும் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சோதனை நடத்தினர். கோவில் வளாகத்தில் அமித்ஷா ஓய்வெடுப்பதற்காக தற்காலிக ஓய்வறையும், தீயணைப்பு நிலைய வாகனங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

    • நயினார் நாகேந்திரன், அண்ணாமலை ஆதரவாளர்கள் தொடர்ந்து கருத்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • அ.தி.மு.க.வுடனான கூட்டணிக்கு பிறகான களநிலவரம் குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.

    மதுரையில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ள மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார்.

    தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரனை தொடர்ந்து அண்ணாமலையும் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அண்ணாமலை ஆதரவாளர்கள் அ.தி.மு.க. கூட்டணிக்கு எதிராக கருத்து கூறி வரும் நிலையில் அமித்ஷாவுடன இச்சந்திப்பானது நடைபெற்றது.

    சமூக வலைளத்தளத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை ஆதரவாளர்கள் தொடர்ந்து கருத்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும், அ.தி.மு.க.வுடனான கூட்டணிக்கு பிறகான களநிலவரம் குறித்தும் ஆலோசனை நடைபெற்றது. 

    • உண்மையான தி.மு.க. வினருக்கு பக்தி இருக்கிறது.
    • 2026-ல் தமிழக மக்களுக்கு நியாயம் கிடைக்கும்.

    மதுரை:

    மதுரை வந்த தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை சவுந்தரராஜன் மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

    மதுரை சங்கம் வைத்து தமிழை வளர்த்த இடம். அதனால் எங்களை சங்கிகள் என்கின்றனர். அது குறித்து கவலைப்படவில்லை. சங்கம் வைத்த இடத்தில் சங்கிகளின் சக்தி அதிகமாகிறது. மதுரையில் இன்று (ஜூன் 8) பா.ஜ.க, நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது. இதில் மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்பது உற்சாகம் அளிக்கிறது. அவர் புது நிர்வாகிகளுக்கு புது ரத்தம் பாய்ச்ச உள்ளார். அவரது வருகை தி.மு.க., கூட்டணிக்கு பதட்டத்தை தருகிறது.

    உண்மையான தி.மு.க. வினருக்கு பக்தி இருக்கிறது. அமைச்சர் துரைமுருகன் என அனைவருமே கடவுளை ரகசியமாக வழிபடுகின்றனர். தமிழகத்தில் 3000 கோவில்களில் நடந்த கும்பாபிஷேகங்களில் ஒன்றிலாவது முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றாரா. கோவிலில் உள்ள தீபத்திற்கும் 'ஸ்டிக்கர்' ஒட்டுகிறீர்கள். இதை கடவுள்கூட மன்னிக்க மாட்டார்.

    திருநெல்வேலி மாவட்ட காங்., தலைவர் ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டு 2 ஆண்டுகள் ஆகிறது. இவ்வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை. தி.மு.க., கூட்டணியில் இருந்து கொண்டு தமிழக காங்., தலைவர் செல்வபெருந்தகையால் எந்த ஒரு கண்டன போஸ்டரும் ஒட்ட முடியவில்லை. கண்ணகியால் நீதி கிடைத்த மண் மதுரை. 2026-ல் தமிழக மக்களுக்கு நியாயம் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் பங்கேற்கவுள்ளனர்.
    • அமித்ஷா வருகையையொட்டி, மதுரையில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

    மதுரை:

    மதுரையில் நேற்றிரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தங்கியிருந்த ஓட்டல் பகுதியில் திடீரென டிரோன் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை ஓத்தக்கடை பகுதியில் இன்று மாலை பா.ஜ.க. தென் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது. இதில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் பங்கேற்கவுள்ளனர். இதற்காக பிரமாண்ட முறையில் மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வருகிற சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதால், இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    இதில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்றிரவு விமானம் மூலம் மதுரை வந்தார். விமான நிலையம் அருகேயுள்ள சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் அவர் தங்கியிருந்தார். அமித்ஷா வருகையையொட்டி, மதுரையில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் தடையை மீறி டிரோன் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் போலீசாரும், பாதுகாப்பு படையினரும் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

    • பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம் மதுரையில் நடைபெற உள்ளது.
    • இதில் உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொள்கிறார்.

    மதுரை:

    பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம் மதுரையில் நடைபெற உள்ளது. இதில் கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், முன்னாள் மாவட்ட தலைவர்கள், பார்வையாளர்கள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், மண்டல நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் உள்பட 15 ஆயிரம் பேர் வரை கலந்துகொள்வார்கள் என கூறப்படுகிறது.

    இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு நள்ளிரவில் மதுரை வந்தடைந்தார். அவரை மத்திய மந்திரி எல்.முருகன் வரவேற்றார். அப்போது தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    மேலும், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு உள்ளிட்ட பலரும் வரவேற்றனர்.

    இன்று பகல் 11 மணி அளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். பிற்பகல் 3 மணி அளவில் பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

    அமித்ஷா வருகையையொட்டி மதுரையில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

    • மதுரை தி.மு.க. பொதுக்குழுவில் மன்னராட்சிக்கு வழி வகுக்க உதயநிதிக்கு துணை நிற்போம் என்று தீர்மானம் போட்டார்கள்.
    • தமிழகத்தில் மன்னராட்சியை ஒழித்து எடப்பாடியார் தலைமையில் மக்களாட்சி வளர செய்வோம்.

    மதுரை:

    தமிழக சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகம் இதுவரை கண்டிராத வகையில் மிகவும் அநியாயமான ஊழல் நிறைந்த குடும்ப ஆட்சியை வழிநடத்தும் பொம்மை முதல்வர் ஸ்டாலின், நியாயமான தொகுதி மறுவரை குறித்து பேசுகிறார். தி.மு.க. அரசின் தோல்விகளையும், மோசடிகளையும் மறைப்பதற்காக இதுபோன்ற கவனத்தை சிதறடித்து விஷயங்களை பயன்படுத்துவதை ஸ்டாலின் நிறுத்த வேண்டும்.

    தொகுதி மறுசீரமைப்பு எப்போது நடந்தாலும் அது தமிழகத்தின் உரிமைகள் பாதிக்கப்படக்கூடாது என்பதை, மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் எடப்பாடியார் தெரிவித்து உள்ளார். தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறையும் நிலை வந்தால் அதை எதிர்க்கும் முதல் குரல் என்னுடையதாக தான் இருக்கும் என்று எடப்பாடியார் ஆணித்தரமாக சொல்லி இருக்கிறார். அதே போல அடிமை அமைச்சர் ரகுபதி தொடர்ந்து வார்த்தைகளால் வாந்தி எடுத்து வைத்ததையெல்லாம் மக்கள் பொருட்படுத்த தயாராக இல்லை.

    மதுரை தி.மு.க. பொதுக்குழுவில் மன்னராட்சிக்கு வழி வகுக்க உதயநிதிக்கு துணை நிற்போம் என்று தீர்மானம் போட்டார்கள். அதில் திருப்தி அடையாத உதயநிதி ஸ்டாலின், தனக்கு துணைபொதுச்செயலாளர் பதவியை கேட்டு அழுத்தம் கொடுத்ததாக பத்திரிகையில் செய்தி வருகிறது. இதையெல்லாம் மடைமாற்றம் செய்வதற்காகத்தான் இல்லாத பிரச்சனையை பூதாகரமாக்கி கானல் நீர் போல் காட்சிப்படுத்த நினைக்கிறார். நம்மை சூழ்ந்து இருக்கின்ற இந்த ஆபத்தை மீட்டு எடுக்கக்கூடிய ஒரே சக்தி எடப்பாடியார் தான். தமிழகத்தில் மன்னராட்சியை ஒழித்து எடப்பாடியார் தலைமையில் மக்களாட்சி வளர செய்வோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் பா.ஜ.க. வருகிற சட்டமன்ற தேர்தலில் முக்கிய பங்காற்ற வேண்டும் என்ற அடிப்படையில் காய்களை நகர்த்தி வருகிறது.
    • ஒத்தக்கடையில் நடைபெறும் பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொண்டு பேசுகிறார்.

    மதுரை:

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற துடிப்போடு தி.மு.க.வும், எடப்பாடி தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும் என்று அ.தி.மு.க.வும் தற்போது இருந்தே தேர்தல் கூட்டணி, பூத் கமிட்டி செயல்பாடுகள், பிரசாரம் உள்ளிட்டவற்றில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

    மேலும் இதர கட்சிகளான பா.ஜ.க., காங்கிரஸ், தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளும் தேர்தல் பணிகளை முன்னெடுத்துள்ளது.

    இந்த நிலையில் தமிழகத்தில் பா.ஜ.க. வருகிற சட்டமன்ற தேர்தலில் முக்கிய பங்காற்ற வேண்டும் என்ற அடிப்படையில் காய்களை நகர்த்தி வருகிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் கணிசமான ஓட்டுகளை பெற்ற பா.ஜ.க. இந்த முறை அ.தி.மு.க.வுடனான தனது கூட்டணியை உறுதி செய்துள்ளது. இந்த கூட்டணியில் அதிக தொகுதிகளை கேட்டு பெற்று போட்டியிட வேண்டும் என பா.ஜ.க. தலைவர்கள் முடிவு செய்து உள்ளனர்.

    இந்த நிலையில் தேர்தல் பணிகள் குறித்து நிர்வா கிகளிடம் ஆலோசிக்க பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா 2 நாள் பயணமாக இன்று மதுரை வருகிறார். டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் இன்று இரவு அமித்ஷா மதுரை வருகிறார். அங்கு மாவட்ட கலெக்டர், கட்சியினர் வரவேற்கின்றனர்.

    தொடர்ந்து அவர் சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்குகிறார். நாளை (8-ந் தேதி) காலை 11 மணியளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அமித்ஷா செல்கிறார்.

    அங்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்ப டுகிறது. தொடர்ந்து கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் 3 மணியளவில் ஒத்தக்கடையில் நடைபெறும் பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொண்டு பேசுகிறார்.

    இதில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மண்டல நிர்வாகிகள் என 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.

    இந்த கூட்டத்தில் தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணி, தொகுதிகளின் கள நிலவரம், வெற்றி வாய்ப்பு, சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க.வின் சாதக பாதகங்கள் குறித்து நிர்வாகிகளிடம் அமித்ஷா கலந்துரையாடுகிறார்.

    அமித்ஷா வருகையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார். அதன்படி விமான நிலையம், அமித்ஷா தங்கும் தனியார் ஓட்டல் மற்றும் மீனாட்சி அம்மன் கோவில் போன்ற இடங்களில் பாது காப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. கோவில், பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்துக்கு செல்லும் வழித்தடங்கள் முழுவதும் கண்கா ணிக்கப்பட்டு வருகிறது. மீனாட்சி அம்மன் கோவிலில் வழக்கத்தை விட போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    குறிப்பாக விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் விமான நிலையம் செல்லும் சாலை மற்றும் மாவட்ட எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் விமான நிலையம் மற்றும் மீனாட்சி அம்மன் கோவிலில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மாநகர் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    விமான நிலையம் செல்லும் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    ×