என் மலர்tooltip icon

    மதுரை

    • கீழடி அகழாய்வில் ஈடுபட்ட தொல்லியல் துறை ஊழியர்களை இடமாற்றம் செய்தது கண்டிக்கத்தக்கது.
    • அ.தி.மு.க. ஆட்சியில் நிறுத்தப்பட்ட கீழடி அகழாய்வை தி.மு.க. அரசு ஆட்சி பொறுப்பேற்றதும் நிறைவேற்றி வருகிறது.

    மதுரை:

    இந்திய வரலாற்றை கீழடியில் இருந்து தொடங்கவேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்திருந்த நிலையில், கீழடியில் தமிழர்களின் தொன்மை மற்றும் வரலாற்றை மறைக்கின்ற வகையில் மத்திய அரசு செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    மத்திய அரசு தமிழர்களின் பெருமையை சொல்லுகின்ற வகையில் கீழடி அகழாய்வில் தமிழர்களின் தொன்மை, தமிழர்களின் வரலாறு, தமிழர்களின் எழுத்து வடிவம் போன்றவைகளை முதல் மூன்று கட்ட ஆய்வில் கண்டுபிடித்தது. ஆனால் மத்திய தொல்லியல் துறை இன்னும் அதனை வெளியிடாமல் வைத்திருக்கிறது.

    நீதிமன்றத்தில் தமிழகம் வழக்கு தொடுத்தபோது, ஆறு வார காலத்துக்குள் வெளியிடுகிறோம் என்று உறுதி அளித்து 16 மாதங்கள் கடந்தும் வெளியிடாமல் இருக்கிறது. கீழடி ஆய்வில் முதல் அறிவியல் கண்டு பிடிப்பாம் இரும்பின் தொன்மையை கீழடி அடைந்திருக்கிறது. அதன் மூலம் இரும்பு கால ஆய்வு கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஆய்வினை முறைப்படி அங்கீகரிக்க வேண்டிய மத்திய அரசு அங்கீகரிக்க மறுத்து காலம் தாழ்த்தி வருகிறது.

    இதனை கண்டித்து தி.மு.க. மாணவரணி சார்பில் மதுரை விரகனூர் சுற்றுச்சா லையில் நாளை (18-ந்தேதி) 10 ஆயிரம் மாணவர்கள் பங்கு பெறுகின்ற வகையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    மேலும் இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், எத்தனை எத்தனை தடைகள் நம் தமிழினத்துக்கு? அத்தனையையும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக எதிர்த்து போராடி அறிவியல் துணை கொண்டு நம் இனத்தின் தொன்மையை நிறுவி வருகிறோம். இருந்தும் ஏற்க மறுக்கின்றன சில மனங்கள். திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல, சில உள்ளங்களை. மதுரை விரகனூரில் தி.மு.க. மாணவரணி சார்பில் நடத்தவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக கூடி மத்திய அரசுக்கு நமது தமிழ்நாட்டின் உணர்வை வெளிப்படுத்துவோம். அவர்களை திருத்துவோம் என்று கூறியிருந்தார்.

    அதன்படி மதுரையில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு காலை முதலே ஆயிரக்கணக்கான தி.மு.க.வினர் விரகனூர் ரிங் ரோட்டில் திரண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாநில மாணவரணி அமைப்பாளர் ராஜீவ் காந்தி தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. பாராளுமன்ற குழு தலைவரும், துணைப் பொதுச் செயலாளருமான திருச்சி சிவா, தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தளபதி, தமிழரசி, மாவட்டச் செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் தி.மு.க. சார்பு அணியான இளைஞரணி, மகளிரணி என அனைத்து அணி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

    அப்போது அவர்கள் பேசுகையில், கீழடி அகழாய்வில் ஈடுபட்ட தொல்லியல் துறை ஊழியர்களை இடமாற்றம் செய்தது கண்டிக்கத்தக்கது. ஒன்று முதல் பலகட்ட ஆய்வுகள் அடிப்படையில் பல்வேறு பொருட்கள் கண்டறியப்பட்டு அது காட்சிப்படுத்தப்பட்டதுடன், அருங்காட்சியகத்தையும் தி.மு.க. அரசு அமைத்துள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் நிறுத்தப்பட்ட கீழடி அகழாய்வை தி.மு.க. அரசு ஆட்சி பொறுப்பேற்றதும் நிறைவேற்றி வருகிறது. கீழடி அகழாய்வின் மூலம் தமிழர்கள்தான் பூர்வகுடிகள் என்பதும் நிரூபிக்கப்பட்டு உள்ளது என்றனர்.

    இதில் பங்கேற்ற தி.மு.க. தொண்டர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போன்று முகக்கவசங்களை அணிந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். 

    • தி.மு.க. தான் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில், மன்னராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது.
    • இனி ஒரு நாளும் உதயநிதி குடும்பம் தமிழகத்தை ஆளப்போவது கிடையாது.

    மதுரை:

    சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சிவகங்கை மாவட்டத்தில் பங்கேற்ற விழாவில் அ.தி.மு.க. வரலாறு தெரியாமல் பேசி உள்ளார். அ.தி.மு.க. என்பது ஒரு மாபெரும் மக்கள் இயக்கம். இந்த இயக்கத்தில் தாய்ப்பால் குடித்து, முகவரி பெற்றவர்கள், செல்வாக்கு பெற்றவர்கள் இந்த இயக்கத்தை விட்டு சென்ற பிறகும் இந்த இயக்கம் வலிமையாக உள்ளது. மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று அ.தி.மு.க. தொண்டர்கள் தொடர்ந்து உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

    இன்றைக்கு, 2 கோடி தொண்டர்கள் மனம்புண்படும் படி உதயநிதி பேசியுள்ளார். அ.தி.மு.க. யார் கட்டுப்பாட்டில் உள்ளது? என்று அரைவேக்காடு தனமாக பேசியுள்ளார். அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி தலைமையில், தமிழக மக்கள் கட்டுப்பாட்டில், மக்கள் இதயங்களில் உள்ளது, அதில் உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம்.

    தி.மு.க. தான் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில், மன்னராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது. இன்றைக்கு கருணாநிதியின் கொள்ளு பேரன், ஸ்டாலின் பேரன், உங்கள் மகன் இன்பநிதி இன்றைக்கு எந்த உழைப்பும் இல்லாமல் வந்துள்ளார். ஆகவே தி.மு.க. தான் ஒரு குடும்ப கட்டுப்பாட்டில் உள்ளது. தி.மு.க.வை தங்கள் குடும்ப கட்டுப்பாட்டில் வைத்தது போல தமிழகத்தையும் உங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர நினைத்தால், அது நடக்காது.

    இனி ஒரு நாளும் உதயநிதி குடும்பம் தமிழகத்தை ஆளப்போவது கிடையாது. தமிழகத்தை இனி ஆளப் போவது எடப்பாடி பழனிசாமி தான் என மக்கள் தீர்ப்பு வழங்க உள்ளார்கள். உங்கள் பேச்சை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மதுரையில் வருகிற 22-ந் தேதி இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடக்கிறது.
    • முறையான ஆவணங்களை சமர்ப்பித்து உரிய வாகன அனுமதி சீட்டினை பெற்று கலந்து கொள்ளலாம்.

    மதுரை:

    மதுரையில் நடக்கும், முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வாகனங்களில் வருபவர்களுக்கு மாநகர போலீசார் சார்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    இதுகுறித்து மதுரை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரையில் வருகிற 22-ந் தேதி இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடக்கிறது. இந்த மாநாடு நடத்துவதற்கு மதுரை ஐகோர்ட்டு பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. மாநகர் வண்டியூர் சுங்கச்சாவடி அருகே இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற இருக்கிறது.

    அதன்படி, வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களை அடையாளம் காணும் பொருட்டு ஒவ்வொரு மண்டலத்தில் இருந்து வரும் வாகனத்திற்கும், தனித்தனி வண்ணங்களில் வாகன அனுமதி சீட்டு, அந்தந்த மாவட்ட, மாநகர போலீசார் மூலம் வழங்கப்பட உள்ளது. முறையான ஆவணங்களை சமர்ப்பித்து உரிய வாகன அனுமதி சீட்டினை பெற்று கலந்து கொள்ளலாம்.

    மாநாட்டில் பங்கேற்பவர்கள் அந்தந்த துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களில் விண்ணப்பித்து, வாகன அனுமதி சீட்டை பெறவேண்டும். தெற்கு மாவட்டங்களான மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு பச்சை நிற அனுமதி சீட்டும், வடக்கு மாவட்டங்களான திருவண்ணாமலை, வேலூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ஆவடி, தாம்பரம், சென்னையிலிருந்து வரும் வாகனங்களுக்கு வெள்ளை நிற அனுமதி சீட்டும் வழங்கப்பட உள்ளன.

    மத்திய மாவட்டங்களான திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சியில் இருந்து வரும் வாகனங்களுக்கு நீல நிற அனுமதி சீட்டும், மேற்கு மாவட்டங்களான கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோவை, சேலம், திருப்பூரில் இருந்து வரும் வாகனங்களுக்கு மஞ்சள் நிற அனுமதி சீட்டும், பிற மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு சிவப்பு நிற அனுமதி சீட்டும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அனுமதி சீட்டு உள்ள வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

    மேலும், வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வரும் வாகனங்கள் அனைத்தும் அனுமதிக்கப்பட்ட வழியாகவே மாநாடு நடைபெறும் இடத்திற்கு வந்து, மாநாடு முடிந்த பிறகு அதே வழியிலேயே திரும்பிச்செல்ல வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வேல் மற்றும் முருகன் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
    • பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு அமைக்கப்பட்டிருந்த பிரகாரம் வழியாக வலம் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    மதுரை:

    மதுரையில் வருகிற 22-ந்தேதி பா.ஜ.க., இந்து முன்னணி மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் முருக பக்தர்கள் மாநாடு பாண்டி கோவில் வண்டியூர் சுற்றுச்சாலையில் அமைந்துள்ள அம்மா திடலில் நடைபெறுகிறது. அன்று பிற்பகல் 3 மணிக்கு மாநாடு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறும் இந்த மாநாட்டில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மாநாட்டையொட்டி அங்குள்ள திடலில் அறுபடை முருகனின் மாதிரி கண்காட்சி பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. அந்த கோவில்களின் கோபுரங்களுடன் முகப்பு தோற்றமும், உள்ளே சென்றால் பிரகாரமும், தனி அறை மூலவர் சன்னதியாகவும் தத்ரூபமாக வடிவமைத்து அங்கு வழிபாடு செய்யப்பட்ட வேல் மற்றும் முருகன் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

    இன்று முதல் பொதுமக்கள் வந்து பார்வையிடும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முன்னதாக இந்த கண்காட்சியை புதுக்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இதையடுத்து அறுபடை வீடுகள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த முருகன் சிலைகளுக்கு வேதமந்திரங்கள் முழங்க பூஜைகள் செய்து தீபாராதனை காண்பித்து வழிபாடுகள் நடைபெற்றன. அப்போது கண்காட்சியை காண திரண்டு வந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு அமைக்கப்பட்டிருந்த பிரகாரம் வழியாக வலம் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    பின்னர் அவர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த கண்காட்சியானது மாநாடு நடைபெறும் 22-ந்தேதி வரை இருக்கும் என்றும், இதனை காண வரும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் முறையாக செய்து தரப்பட்டுள்ளதாகவும் முருக பக்தர்கள் மாநாட்டு குழுவினர் தெரிவித்தனர். 

    • முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
    • மதுரை மாவட்ட குடிநீர் தேவைக்காக 69 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

    ஆண்டிபட்டி:

    கேரளாவில் தென்மேற்கு பருவ மழை வழக்கத்துக்கு மாறாக இந்த ஆண்டு முன்னதாகவே தொடங்கியது. இதனால் மேற்கு தொடர்ச்சிமலை பகுதியில் அமைந்துள்ள மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. இதனால் தேனி மாவட்டத்திலும் ஜூன் முதல் வாரத்தில் கனமழை பெய்த நிலையில் அதன் பிறகு சற்று ஓய்ந்தது. தற்போது மீண்டும் கேரளாவில் கனமழை பெய்து வருகிறது.

    குறிப்பாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 1190 கன அடி தண்ணீர் வருகிறது. நேற்று வரை 1200 கன அடி தண்ணீர் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயத்துக்கு திறக்கப்பட்ட நிலையில் தற்போது 1622 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 128.20 அடியாக உள்ளது. நீர் இருப்பு 4309 மி.கன அடியாக உள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதாலும் மாவட்டத்தில் பரவலாக பெய்த மழை காரணமாகவும் வைகை அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது. 71 அடி உயரமுள்ள அணையில் இன்று காலை நிலவரப்படி 60.73 அடி நீர்மட்டம் உள்ளது. நீர் வரத்து 929 கன அடி. மதுரை மாவட்ட குடிநீர் தேவைக்காக 69 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 3744 மி.கன அடியாக உள்ளது.

    முல்லைப்பெரியாறு பிரதான கால்வாய் பாசன பகுதியில் உள்ள மதுரை மாவட்டத்தின் குறுவை நெல் சாகுபடிக்கு ஆண்டுதோறும் ஜூன் 1-ந் தேதி வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் போதுமான நீர் இருப்பு இல்லாததால் தொடர்ந்து 3-வது ஆண்டாக இந்த ஆண்டிலும் ஜூன் முதல் தேதி தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனிடையே முல்லைப்பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை பெய்து வருவதாலும் வைகை அணையின் நீர்மட்டம் 60 அடிக்கு மேல் நீடிப்பதாலும் தண்ணீர் திறக்க விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.

    இதனையடுத்து பெரியாறு பிரதான கால்வாய் பாசன பகுதியின் கீழ் உள்ள இரு போக பாசன நிலங்களின் முதல் போக நெல் சாகுபடிக்காக வைகை அணையில் இருந்து நாளை (15-ந் தேதி) முதல் அக்டோபர் 12-ந் தேதி வரை தண்ணீர் திறக்க நீர்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. தண்ணீர் இருப்பு, நீர் வரத்தை பொறுத்து முதல் போக நெல் சாகுபடி பகுதிகளுக்கு வினாடிக்கு 900 கன அடி நீர் 45 நாட்களுக்கு முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறை வைத்தும் தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    வைவை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதன் மூலம் மதுரை மாவட்டத்தில் வாடிப்பட்டி வட்டம், வடக்கு வட்டம், திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள 45,041 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

    பெரியாறு அணை 41, தேக்கடி 16.4, சோத்துப்பாறை மற்றும் வைகை அணை தலா 2, வீரபாண்டி 5.2, சண்முகா நதி அணை 1.4 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    • முக்கிய குற்றவாளியான பிரபாகரன் வீட்டுக்கு போலீசார் சோதனை செய்ய சென்றனர்.
    • ஆர்.பி.உதயகுமார் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவிற்கு உட்பட்ட வே.சத்திரப்பட்டியில் போலீஸ் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு நேற்று இரவு பால்பாண்டி என்பவர் இரவு பணியில் இருந்தார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாலிபர் ஒருவர் அதே பகுதியில் உள்ள கண்மாய் கரையில் மர்மமான முறையில் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பிரபாகரன் வீட்டுக்கு போலீசார் சோதனை செய்ய சென்றனர்.

    அப்போது வீட்டில் அவர் இல்லாததால் அவரது தந்தையை போலீசார் விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இதனை அறிந்த பிரபாகரன் ஆத்திரம் அடைந்தார்.

    தான் வீட்டில் இல்லாதபோது போலீசார் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து தனது தந்தையை மிரட்டி அழைத்து சென்றதாக கூறி பிரபாகரன் தனது கூட்டாளியுடன் நேற்று இரவு மது போதையில் வே.சத்திரப்பட்டி போலீஸ் நிலையத்திற்குச் சென்றுள்ளார். பின்னர் அங்கு பணியில் இருந்த போலீஸ்காரர் பால்பாண்டியை மிரட்டியுள்ளார். பின்னர் அந்த போலீஸ்காரர் தனி அறைக்கு தப்பிச்சென்று உட்புறமாக பூட்டிக் கொண்டார்.

    இதனால் ஆத்திரமடைந்த பிரபாகரன் தனது கூட்டாளியுடன் சேர்ந்து போலீஸ் நிலையத்தில் உள்ள பொருட்கள் அனைத்தையும் அழித்தும், உடைத்தும் சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பினார்.

    சம்பவம் குறித்து தகவலறிந்த முன்னாள் அமைச்சர் ஆர். பி.உதயக்குமார் காவல் நிலையத்திற்கு செல்ல முயன்றபோது போலீசார் அவரை முத்துலிங்காபுரத்தில் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து ஆர்.பி.உதயகுமார் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் போராட்டத்தை கைவிட மறுத்ததால் போலீசார் முன்னாள் அமைச்சர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் அவரது ஆதரவாளர்களை கைது செய்தனர்.

    சம்பவம் குறித்து அறிந்து தென் மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்கா மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்த உள்ளனர்.

    • நாட்டு மீன்களான ஜிலேபி,கட்லா,கெளுத்தி, குறவை, விரா மீன்கள் சிறிய, நடுத்தர மீன்கள் முதல் பெரிய மீன்கள் வரை பிடித்தனர்.
    • சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கிலோ கணக்கில் மீன்களை அள்ளிச்சென்றனர்.

    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது திருவாதவூர். இங்கு திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோவில் அருகே உள்ளது பெரிய கண்மாய் என்று அழைக்கப்படும் சோழப்பேரரி கண்மாய் ஆகும்.

    மேலூர் பகுதி கண்மாய்களில் இது ஒரு பெரிய கண்மாயாகும். இங்கு பெரியார் பாசன நீர் தேக்கி வைக்கப்பட்டு திருவாதவூர் மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதிகளுக்கு 500க்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்களுக்கு தண்ணீர் விவசாயத்திற்கு பயன்படுகிறது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் விவசாய பணிகள் முடிவடைந்த பின்பு இங்கு மீன்பிடித் திருவிழா நடத்துவது வழக்கமாய் உள்ளது.

    அதேபோல் இந்த ஆண்டும் மீன்பிடி திருவிழா கடந்த சில தினங்களுக்கு முன்பு இன்று (14-ந்தேதி) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து திருவாதவூர், மேலூர் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் மட்டுமல்லாது புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வேன்கள், பைக்குகள் ஆகியவற்றில் பெண்கள், சிறியவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று நள்ளிரவு முதலில் கூடினர்.

    இன்று அதிகாலை 4 மணி அளவில் கிராம முக்கியஸ்தர்கள் இங்குள்ள திரவுபதி அம்மன் கோவில் முன்பு சாமி கும்பிட்டு தாரை, தப்பட்டை, வான வெடிகள் முழங்க பெரிய கண்மாய்க்கு ஊர்வலமாய் வந்தனர். அங்கு கண்மாயில் வந்து வெள்ளை துண்டு வீசினர். அப்போது சுற்றி இருந்த மக்கள் போட்டி போட்டு கண்மாய்க்குள் இறங்கி தாங்கள் கொண்டு வந்திருந்த வலை, கச்சா, குத்தா, கூடை போன்ற மீன் பிடி சாதனைகளை பயன்படுத்தி ஏராளமான மீன்களை பிடித்தனர்.

    இதில் நாட்டு மீன்களான ஜிலேபி,கட்லா,கெளுத்தி, குறவை, விரா மீன்கள் சிறிய, நடுத்தர மீன்கள் முதல் பெரிய மீன்கள் வரை பிடித்தனர். ஒவ்வொருவரும் சுமார் 5 கிலோவிற்கு அதிக மான மீன்களை பிடித்ததால் அவர்கள் உற்சாகம் அடைந்தனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கிலோ கணக்கில் மீன்களை அள்ளிச்சென்றனர்.

    இந்த மீன்பிடித் திருவிழா சமத்துவ மீன் பிடித்து விழாவாக ஜாதி மத பேதமின்றி நடைபெற்று வருகிறது. இங்கு பிடித்த மீன்களை இப்பகுதி மக்கள் விலைக்கு விற்பனை செய்யாமல் தங்கள் வீடுகளில் கொண்டு சென்று சமைத்து சாமி கும்பிட்டு தங்கள் உறவினர்களுக்கும் வழங்கி சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதன் மூலம் வரும் ஆண்டுகளில் நல்ல மழை பெய்து இப்பகுதியில் விவசாயம் செழிக்கும் என்பது மக்களின் நம்பிக்கையாய் உள்ளது. 

    • நாகராஜன், துரை தயாநிதி உள்பட பலர் மீது மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் 5,191 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிக்கையை 2018-ல் தாக்கல் செய்தனர்.
    • துரை தயாநிதியின் சிகிச்சை குறித்தான முழுமையான மருத்துவ ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு நீதிபதி கூறினார்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் மேலூர் கீழவளவு பகுதியில் அரசுக்குச் சொந்தமான இடத்தில் சட்ட விரோதமாக கிரானைட் கற்கள் வெட்டி எடுத்து அரசுக்கு ரூ.259 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக பரபரப்பு புகார் எழுந்தது.

    இதில் தொடர்புடைய ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனம் மற்றும் அதன் பங்குதாரர்களான எஸ்.நாகராஜன் மற்றும் முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் மற்றும் வெடிபொருள் சட்டத்தின் கீழ் 2012-ல் கீழவளவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

    இந்த வழக்கில் நாகராஜன், துரை தயாநிதி உள்பட பலர் மீது மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் 5,191 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிக்கையை 2018-ல் தாக்கல் செய்தனர். இந்த முறைகேடு தொடர்பாக சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் துரை தயாநிதி உள்ளிட்டோர் மீது அமலாக்கப் பிரிவு தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தது.

    பின்னர் துரை தயாநிதிக்கு சொந்தமான மதுரை, சென்னையில் உள்ள 25 நிலங்கள், கட்டிடங்கள், வங்கியில் உள்ள நிரந்தர வைப்புத் தொகை என மொத்தம் ரூ.40.34 கோடி மதிப்பிலான சொத்துகளைத் தற்காலிகமாக முடக்கி அமலாக்கத்துறை உத்தரவிட்டது. இந்நிலையில் இது தொடர்பான வழக்கு இன்று மதுரை மாவட்ட சி.பி.ஐ. கோர்ட்டில் விசாரணைக்கு வரவுள்ளது.

    இந்த வழக்கில் இருந்து மன ரீதியான உடல்நல பிரச்சனை காரணமாக தன்னை விடுவிக்க கோரி துரை தயாநிதி தரப்பில் சி.பி.ஐ. கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் துரை தயாநிதியை நேரில் ஆஜர்படுத்தி அவரது மனநிலை குறித்து உறுதி செய்ய வேண்டுமென நீதிபதியிடம் முறையிட்டனர்.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, துரை தயாநிதியின் சிகிச்சை குறித்தான முழுமையான மருத்துவ ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கூறி வழக்கு விசாரணையை வருகிற 16-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

    • தமிழக மக்கள் முதல்வரின் பேச்சை கடுமையாக கண்டித்து இருக்கிறார்கள்.
    • எடப்பாடி மீது நாளுக்கு நாள் புகழும், செல்வாக்கும் அதிகரிப்பதால் முதல்வர் ஸ்டாலின் இதுபோன்று பேசி வருகிறார்.

    மதுரை:

    மதுரையில் இன்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

    குஜராத் அகமதாபாத்தில் விமான விபத்து நடந்ததற்கு அனைவரும் வேதனையில் உள்ளோம். 241 பேர் பலியான சம்பவத்தில் அதிர்ச்சியில் உறைந்துள்ளோம். இறந்தவர்களின் குடும்பத்திற்கு எங்களது ஆழ்ந்த வருத்தத்தையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

    பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி குறித்த கேள்விகளை எங்களது பொதுச்செயலாளரிடம் கேளுங்கள். கூட்டணிஆட்சியா? அ.தி.மு.க. ஆட்சியா? என்பது குறித்து எங்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம். இது தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவிடம் பேசியதும், தேர்தல் கூட்டணி குறித்தும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெளிவாக கூறியுள்ளார்.

    ஒரு முன்னாள் முதலமைச்சரை தரக்குறைவாகவும், அதனை கேட்பவரின் காதுகள் கூசும் அளவிற்கு முதல்வர் பேசியிருக்கிறார். முதல்வர் ஸ்டாலின் மீது மக்களிடத்தில் மதிப்பு மரியாதை இல்லை. இந்த ஆட்சியில் மக்கள் பயந்து போய் உள்ளார்கள். பொது விழாவில் ஒரு முதல்வர் தகுதியற்ற முறையில் பேசியது வன்மையாக கண்டிக்கக்கூடியது.

    தமிழக மக்கள் முதல்வரின் பேச்சை கடுமையாக கண்டித்து இருக்கிறார்கள். இந்த போக்கை அவர் மாற்றிக் கொள்ள வேண்டும். எடப்பாடி மீது நாளுக்கு நாள் புகழும், செல்வாக்கும் அதிகரிப்பதால் முதல்வர் ஸ்டாலின் இதுபோன்று பேசி வருகிறார். மதுரையே அழகாக காட்சியளிக்க காரணம் அ.தி.மு.க. ஆட்சியின் பல்வேறு திட்டங்களும், 8000 கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கீடு செய்ததால் தான். அரசர் காலத்திற்குப் பிறகு அம்மாவின் ஆட்சியில் தான் எடப்பாடி பழனிசாமி குடிமராமத்து திட்டத்தை கொண்டு வந்தார்.

    அமைச்சர் மூர்த்தி மேற்கு தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள், வளர்ச்சி திட்டம் தொடர்பான பணிகள் செய்வது குறித்து நாங்கள் கவலைப்படுவதே இல்லை. அ.தி.மு.க. ஆட்சியில் நாங்கள் என்ன செய்தோம் என்பது மக்களுக்கு தெரியும். மேலும், மத்திய அரசின் திட்டங்களுக்கு தான் தி.மு.க. அரசு தனது ஸ்டிக்கரை ஒட்டுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • "சாப்பிட்டுவிட்டு பேருந்தை ஓட்டலாமே?" என்று பயணி கேட்டார்.
    • "நேரமில்லை, இது எனக்குப் பழக்கம்" என்று பதிலளித்துள்ளார்.

    மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து சென்னைக்கு 40 பயணிகளுடன் புறப்பட்ட ஆம்னி பேருந்தின் ஓட்டுநர், பேருந்தை ஓட்டிக்கொண்டே உணவருந்தும் அதிர்ச்சிகரமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

    ஓட்டுநர் ஸ்டியரிங்கின் நடுவில் உணவு பார்சலை வைத்துக்கொண்டு சாப்பிட்டபடி பேருந்தை இயக்கியுள்ளார்.

    இதைக் கண்ட பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஒரு பயணி, "சாப்பிட்டுவிட்டு பேருந்தை ஓட்டலாமே?" என்று கேட்டதற்கு, ஓட்டுநர், "நேரமில்லை, இது எனக்குப் பழக்கம்" என்று பதிலளித்துள்ளார்.

    இந்தப் பொறுப்பற்ற செயலுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    • எத்தனை குழப்பங்கள் ஏற்படுத்தினாலும், எத்தனை எத்தனை திசை திருப்பினாலும் மக்களும் தெளிவாக இருக்கிறார்கள்.
    • எடப்பாடியார் தலைமையில் மிகப்பெரிய கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை வழங்குவதற்கு தமிழ்நாட்டு மக்கள் தயாராகி விட்டார்கள்.

    மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என்ற அமித்ஷாவின் பேச்சு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது:

    தி.மு.க. அரசு வீட்டுக்கு போகும். எடப்பாடியார் தலைமையில் மிகப்பெரிய கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை வழங்குவதற்கு தமிழ்நாட்டு மக்கள் தயாராகி விட்டார்கள்.

    எத்தனை குழப்பங்கள் ஏற்படுத்தினாலும், எத்தனை எத்தனை திசை திருப்பினாலும் மக்களும் தெளிவாக இருக்கிறார்கள். எங்கள் பொதுச்செயலாளரும் தெளிவாக இருக்கிறார். நாங்களும் தெளிவாக இருக்கிறோம். நீங்களும் தெளிவாக இருக்கிறீர்கள்.

    ஆனால் யாருடைய அழுத்தத்தாலோ தெளிவு இல்லாதது போல கேள்வி கேட்கிறீர்கள். கேள்வி கேட்பதும், கேட்க சொல்பவர்களும், அழுத்தம் கொடுப்பவர்களும் வேண்டுமானால் தெளிவில்லாமல் இருக்கலாம். மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.

    2026-ல் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வர வேண்டும். இப்போது உள்ள முதலமைச்சர் வீட்டுக்கு போக வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக இருப்பார்கள்.

    மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று அவர் கூறினார்.

    தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்ற அமித்ஷாவின் பேச்சுக்கு மறுப்பேதும் தெரிவிக்காமல் ஆர்.பி. உதயகுமார் சென்றார்.

    • அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அன்னதானம் வழங்கினார்.
    • முருகன் படத்திற்கு அதிமுக தொட்டினார்கள் பூஜை செய்தனர்.

    தமிழ்நாட்டின் பல்வேறு முருகன் கோவில்களில் வைகாசி விசாகத் திருவிழா விமர்சையாக நடைபெற்றது.

    இதனையொட்டி மதுரையில் பொதுமக்களுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அன்னதானம் வழங்கினார்.

    அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த முருகன் படத்திற்கு அதிமுக தொட்டினார்கள் பூஜை செய்தனர். பூஜையின்போது முருகனுக்கு அரோகரா என தொண்டர்கள் கோஷம் எழுப்பினர். அப்போது செல்லூர் ராஜுவுக்கு அரோகரா என தொண்டர் ஒருவர் கோஷம் எழுப்பவே சட்டெனெ செல்லூர் ராஜு கோவம் அடைந்து இப்படி எல்லாம் கோஷமிட கூடாது என்று தொண்டரை கடிந்து கொண்டார்.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    ×