என் மலர்
காஞ்சிபுரம்
காஞ்சீபுரம்:
சென்னை தியாகராய நகரை சேர்ந்தவர் பத்ரி நாத், நெல் வியாபாரி. இவர் நெல்லை பரிசோதனை செய்ய காரில் காஞ்சீபுரம் சென்றார்.
பஞ்சுபேட்டை பகுதியில் உள்ள வேளாண்துறை அலுவலகத்தில் நெல் பரிசோதனை முடிவை வாங்கிக் கொண்டு சென்னை வந்தார்.
காஞ்சீபுரம் பஸ்நிலையம் அருகே அன்னை இந்திரா காந்தி சாலையில் உள்ள ஓட்டலில் சாப்பிடுவதற்காக காரை நிறுத்தி சென்றார்.
திரும்பி வந்து பார்த்த போது காரின் இடது பக்க கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது. காரில் இருந்த லேப்டாப், ரூ. 7 ஆயிரம் கொள்ளை போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
காரில் பணம் இருப்பதை அறிந்து மர்ம நபர்கள் பின்தொடர்ந்து துணிகர செயலில் ஈடுபட்டு உள்ளனர். இது குறித்து சிவகாஞ்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. கைரேகை நிபுணர் கொள்ளை நடைபெற்ற இடத்தில் விசாரணை நடத்தினர். அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருக்கும் கண்காணிப்பு கேமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
காஞ்சீபுரத்தின் முக்கிய பகுதியான பஸ்நிலையம் அருகில் கார் கண்ணாடியை உடைத்து பணம் மற்றும் லேப்டாப்பை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் அருகே மேல் ஒட்டிவாக்கம் ஊராட்சியில் அரசினர் ஆதி திராவிடர் நல உயர்நிலைப்பள்ளி செயல் பட்டு வருகிறது.
இங்கு ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இப்பள்ளி கடந்த 2015-ம் தரம் உயர்த்தப்பட்டது.
இந்த நிலையில் பள்ளியில் போதிய கழிவறை மற்றும் அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறி மாவட்ட நிர்வாகத்திற்கும், கல்வி அதிகாரிகளுக்கும் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்து இருந்தனர். ஆனால் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் இன்று காலை மாணவர்களின் பெற்றோர், கிராம மக்கள் பள்ளிக்கு திரண்டு வந்தனர். பள்ளியின் நுழைவு வாயில் கதவில் பூட்டு போட்டு பூட்டி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்யும் வரை பள்ளியை திறக்க விட மாட்டோம் என்று கூறினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர்.
சோழிங்கநல்லூர்:
பெருங்குடியை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் கல்லுக்குட்டை பகுதியில் ‘ஜெகதாம்பாள்’ என்ற பெயரில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு அவர் வழக்கம்போல் கடையை மூடிச் சென்றார்.
நள்ளிரவில் 3 வாலிபர்கள் அடகுகடையின் ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். இதற்குள் சத்தம் கேட்டு எழுந்த அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர்.
அவர்கள் அடகு கடைக்குள் கொள்ளையர்கள் நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர் உடனே கொள்ளையர்கள் 3 பேரும் அங்கு தயாராக நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டனர்.
கொள்ளையர்களின் திட்டம் நிறைவேறாததால் அடகு கடையில் இருந்த சுமார் ரூ. 8 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் வெள்ளிப் பொருட்கள் தப்பின.
அடகு கடையில் இருந்த கண்காணிப்பு கேமிரா ‘ஆப்’ செய்யப்பட்டு இருந்ததால் கொள்ளையர்களின் உருவும் அதில் பதிவாகவில்லை.
தப்பி ஓடிய 3 பேரும் வடமாநில வாலிபர்கள் தோற்றத்தில் இருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். எனவே இதில் ஈடுபட்டது வடமாநில கொள்ளையர்களாக இருக்கலாம் என்று தெரிகிறது.
இதற்கிடையே பொது மக்கள் திரண்டதும் கொள்ளையர்கள்கள் 3 பேரும் துப்பாக்கி மற்றும் கத்தியை காட்டி மிரட்டி தப்பி சென்றதாக சிலர் தெரிவித்தனர். மேலும் பிடிக்க முயன்ற சிலரை கொள்ளையர்களை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதுபற்றி போலீசாரிடம் கேட்டபோது கொள்ளையர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டவில்லை என்று மறுத்தனர். இது குறித்து துப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெருங்குடி மற்றும் ஒ.எம்.ஆர். சாலையில் நடைபெறும் கட்டுமானப் பணிகளில் ஏராளமான வடமாநில வாலிபர்கள் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள்.
கொள்ளையர்கள் 3 பேரும் ஒ.எம்.ஆர். சாலையில் சென்றதாக தெரிகிறது. இதையடுத்து அப்பகுதியில் தங்கி உள்ள வடமாநில வாலிபர்கள் யார்-யார்? என்ற விபரத்தை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.
அடகு கடையில் வடமாநில கொள்ளையர்கள் புகுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குன்றத்தூர் சம்பந்தம் நகர் ஸ்ரீராம் சாலையில் வசித்து வருபவர் தஷ்வந்த். கடந்த 2-ந்தேதி செலவுக்கு பணம் தராத ஆத்திரத்தில் தாய் சரளாவை கொலை செய்தான். பின்னர் தாயார் அணிந்திருந்த 25 பவுன் மற்றும் வீட்டில் இருந்த ரொக்கம் ரூ. 20 ஆயிரத்துடன் தப்பிச் சென்றுவிட்டான்.
தஷ்வந்த் ஏற்கனவே மவுலிவாக்கம் மாதாநகர் பகுதியில் வசித்த போது பக்கத்து வீட்டில் வசித்து வந்த 6 வயது சிறுமியை கற்பழித்து கொலை செய்து உடலை எரித்து இருந்தான். இந்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த தஷ்வந்த் தாயையும் கொலை செய்து இருந்தான்.
இதையடுத்து தஷ்வந்தை பிடிக்க உதவி கமிஷனர் கண்ணன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சார்லஸ் மற்றும் போலீசார் கொண்ட 3 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் மும்பையில் பதுங்கி இருந்த தஷ்வந்தை கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனிப்படை போலீசார் பிடித்தனர். அவனை மும்பை கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு சென்னைக்கு கொண்டு வர விமான நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
அப்போது ஓட்டலில் சாப்பிட்ட போது போலீசாரை தாக்கிவிட்டு தஷ்வந்த் தப்பி ஓடிவிட்டான். அவனை பிடிக்க மும்பை போலீஸ் உதவியுடன் தனிப்படை போலீசார் தீவிர வேட்டை நடத்தினர். மும்பை அந்தேரி பகுதியில் பதுங்கி இருந்த தஷ்வந்தை மீண்டும போலீசார் கைது செய்தனர். அவனை மும்பை பாந்த்ரா மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தினர்.
பின்னர் 9-ம் தேதி தஷ்வந்தை போலீசார் சென்னை அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது, பணம் தராததால் தாயை அடித்து கொன்றதாக அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில், இன்று அவர் செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.
நீதிமன்ற வளாகத்தில் போலீசார் அவரை அழைத்து வரும் போதே, அங்கிருந்த பொதுமக்கள் அவரை கடுமையாக தாக்கினர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து, நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், தான் எந்த தவறும் செய்யவில்லை என நீதிபதியிடம் கூறினார்.
தஷ்வந்தை வரும் 18-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
காஞ்சீபுரத்தை அடுத்த தாயார்குளம், ஒத்தவாடை பகுதியை சேர்ந்த பிளஸ்-1 மாணவி அருகில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார். அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
பின்னர் அது காதலாக மாறியது. ஆட்டோ டிரைவர் மாணவியின் வீட்டுக்கு குடிநீர் கேன் சப்ளை செய்த போது நெருங்கி பழகியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மாலையில் வீட்டில் இருந்து வெளியே சென்ற மாணவி மாயமானார். அவரை பெற்றோர் தேடி வந்தனர். இது குறித்து சிவகாஞ்சி போலீசில் புகார் செய்யப்பட்டது.
இதற்கிடையே காஞ்சீபுரத்தை அடுத்த ஆறுபாக்கம் ரெட்டேரி பிள்ளையார் கோவில் அருகே மாயமான மாணவியுடன் ஆட்டோ டிரைவர் மற்றும் அவரது நண்பர்கள் திருமண கோலத்தில் நின்றனர்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் மாகரல் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வருவதை கண்டதும் ஆட்டோ டிரைவருடன் நின்ற நண்பர்கள் தப்பி ஓடிவிட்டனர். அங்கிருந்த மாணவியை மீட்டனர்.
மேலும் ஆட்டோ டிரைவரிடம் விசாரணை நடந்து வருகிறது. ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்தி திருமணம் செய்ய முயன்றதாக மாணவியின் பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.
ஆனால் மாணவி தனக்கு 18 வயது நிறைவடைந்து விட்டதாகவும், காதலனுடன் செல்வதாகவும் கூறி வருகிறார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ‘தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சிறப்பு சுருக்கமுறை திருத்தம்-2018 தொடர்பான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த அக்டோபர் 3-ந் தேதி வெளியிடப்பட்டது.
அதனை தொடர்ந்து தற்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல், நீக்கல் செய்தல் தொடர்பான மனுக்கள் பெறும் தேதி டிசம்பர் 15-ந்தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வரும் ஜனவரி 10-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது’ என்று கூறியுள்ளார்.
திருவான்மியூர்:
பெசன்ட்நகர் கடற்கரையில் நேற்று திருவான்மியூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும் நிலையில் நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர்.
அவர்களது பெயர் அருண் (25), பாலமுருகன் (28) என தெரியவந்தது. இவர்கள் திருவான்மியூரை சேர்ந்தவர்கள் மற்றொருவர் நேபாளத்தை சேர்ந்த நிம்பகதூர் கட்ரி (24). இவர் வேப்பேரியில் ஒரு அலுவலகத்தில் பணிபுரிகிறார்.
அருண், பாலமுருகன் இருவரும் துரைப்பாக்கத்தில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். அக்கம்பெனி மூலம் திருவான்மியூரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ஆதார் கார்டு தயாரித்து வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் இவர்கள் இருவரும் நேபாளத்தை சேர்ந்த நிம்பகதூர் கட்ரி மூலம் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு போலி ஆதார் கார்டு தயாரித்து கொடுத்து பணம் சம்பாதித்து வந்தனர்.
கடந்த ஒருவருடமாக இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து அருண், பால முருகன், நிம்பகதூர் கட்ரி ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
சோழிங்கநல்லூர்:
பெருங்குடி சி.பி.ஐ. காலனியில் வசித்து வருபவர் தவபழனி. இவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சாரதா.
நேற்று காலை தவபழனி மருத்துவமனைக்கு சென்று விட்டார். அவரது மனைவி சாரதா திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வெளியூர் சென்றார்.
இரவு சாரதா மட்டும் திரும்பி வந்தார். அப்போது வீட்டில் பின்பக்க கதவு உடைந்து கிடந்தது. மிளகாய் பொடியும் தூவப்பட்டு கிடந்தது.
பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 25 பவுன் நகை, ரூ. 8 லட்சம் மதிப்புள்ள வைர நகைகளை காணவில்லை. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம கும்பல் நகைகளை அள்ளி சென்றிருப்பது தெரிந்தது.
மேலும் போலீசில் சிக்காமல் இருக்க சினிமா பாணியில் மிளகாய் பொடியும் தூவி சென்றுள்ளனர். இது குறித்து துரைப்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் அங்கு பதிந்திருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.
அப்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமிராவில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என்று போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
கன்னியாகுமரி கடலில் ‘ஒக்கி’ புயல் காரணமாக மாயமான மீனவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.
44 மீனவ கிராமங்களிலும் ஒரு குழு அமைக்கப்பட்டு அரசு சார்பாக ஒரு வழிகாட்டுதல் கொடுக்கப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் மீனவர்களை தேடும் பணி நடக்கிறது.
புயல் காற்று காரணமாக அண்டை மாநிலம், தீவுகளில் மீனவர் தஞ்சம் அடைந்து இருக்கலாம். அவர்களை மீட்க கடற்படை, காவல்படை, விமானப்படை போர்க்கால அடிப்படையில் தேடுதலில் ஈடுபட்டு வருகிறது. கடைசி மீனவரை மீட்கும் வரை தேடுதல் வேட்டை நடைபெறும்.

எந்த நாட்டிக்கல் மைல் தூரத்தில் மீனவர்கள் இருந்தாலும் நவீன கப்பல், விமானம் மூலம் அவர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாயமான மீனவர்கள் பாதுகாப்பாகத்தான் இருப்பார்கள். பத்திரமாக திரும்பி வருவார்கள்.
கடலில் கண்டு பிடிக்கப்பட்ட மீனவர்களின் உடல்களை குடும்ப உறுப்பினர் தான் அடையாளம் காட்ட வேண்டும். இல்லையெனில் டி.என்.ஏ. பரிசோதனை செய்ய வேண்டும். அடையாளம் காட்டப்பட்ட மரணம் அடைந்த மீனவர்களின் எண்ணிக்கையைத்தான் நாங்கள் கூறி உள்ளோம்.
முதல்-அமைச்சர் ஏற்கனவே புயல் சேதம் குறித்தும், மீனவர்கள் பற்றியும் 4-க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடத்தி ஆய்வு செய்து பல உத்தரவுகளை அதிகாரிகளுக்கு பிறப்பித்து உள்ளார்.
ஒக்கி புயலை தேசிய பேரிடராக அறிவிக்க கோரியும் மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளோம். இதற்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு டவுன் களத்துமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் விக்ரம் (வயது 16). தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான்.
அதே பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் முருகன் (30). தொழிலாளி. நேற்று இரவு 2 பேரும் மோட்டார்சைக்கிளில் வில்லியம்பாக்கத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி வந்து கொண்டு இருந்தனர்.
திம்மாவரம் அருகே பஸ்சை முந்தி செல்ல முயன்றனர். அப்போது வாகன சோதனைக்காக போடப்பட்டு இருந்த தடுப்பு கம்பியில் மோட்டார்சைக்கிள் வேகமாக மோதியது.
இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த விக்ரம், முருகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்து செங்கல்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாமல்லபுரம்:
கல்பாக்கத்தை அடுத்த புதுப்பட்டினம் ரகுமத் நகரை சேர்ந்தவர் சயிராபீவி (வயது 50). இவரது உறவினர் பாத்திமா (25). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் உறவினர் வீட்டுக்கு புறப்பட்டனர்.
அவர்களின் மோட்டார் சைக்கிள் கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர்கள் குடியிருப்பில் உள்ள கல்பாக்கம் அணுமின் நிலைய மருத்துவமனை அருகே சாலையில் சென்று கொண்டிருந்தது.
சாலையின் வளைவில் அவர்கள் திரும்ப முயன்றனர். அப்போது கான்கிரீட் மிக்சர் லாரி ஒன்று அவர்களை முந்திச் செல்ல முயன்றது. திடீரென்று லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்த சயிராபீவி, பாத்திமா இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இது தொடர்பாக கல்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






