என் மலர்
செய்திகள்

பெருங்குடி அருகே அடகு கடையை உடைத்த வடமாநில கொள்ளையர்கள்
சோழிங்கநல்லூர்:
பெருங்குடியை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் கல்லுக்குட்டை பகுதியில் ‘ஜெகதாம்பாள்’ என்ற பெயரில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு அவர் வழக்கம்போல் கடையை மூடிச் சென்றார்.
நள்ளிரவில் 3 வாலிபர்கள் அடகுகடையின் ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். இதற்குள் சத்தம் கேட்டு எழுந்த அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர்.
அவர்கள் அடகு கடைக்குள் கொள்ளையர்கள் நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர் உடனே கொள்ளையர்கள் 3 பேரும் அங்கு தயாராக நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டனர்.
கொள்ளையர்களின் திட்டம் நிறைவேறாததால் அடகு கடையில் இருந்த சுமார் ரூ. 8 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் வெள்ளிப் பொருட்கள் தப்பின.
அடகு கடையில் இருந்த கண்காணிப்பு கேமிரா ‘ஆப்’ செய்யப்பட்டு இருந்ததால் கொள்ளையர்களின் உருவும் அதில் பதிவாகவில்லை.
தப்பி ஓடிய 3 பேரும் வடமாநில வாலிபர்கள் தோற்றத்தில் இருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். எனவே இதில் ஈடுபட்டது வடமாநில கொள்ளையர்களாக இருக்கலாம் என்று தெரிகிறது.
இதற்கிடையே பொது மக்கள் திரண்டதும் கொள்ளையர்கள்கள் 3 பேரும் துப்பாக்கி மற்றும் கத்தியை காட்டி மிரட்டி தப்பி சென்றதாக சிலர் தெரிவித்தனர். மேலும் பிடிக்க முயன்ற சிலரை கொள்ளையர்களை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதுபற்றி போலீசாரிடம் கேட்டபோது கொள்ளையர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டவில்லை என்று மறுத்தனர். இது குறித்து துப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெருங்குடி மற்றும் ஒ.எம்.ஆர். சாலையில் நடைபெறும் கட்டுமானப் பணிகளில் ஏராளமான வடமாநில வாலிபர்கள் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள்.
கொள்ளையர்கள் 3 பேரும் ஒ.எம்.ஆர். சாலையில் சென்றதாக தெரிகிறது. இதையடுத்து அப்பகுதியில் தங்கி உள்ள வடமாநில வாலிபர்கள் யார்-யார்? என்ற விபரத்தை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.
அடகு கடையில் வடமாநில கொள்ளையர்கள் புகுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






