என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா அரசியல் செய்கிறது என்று கேரளா காங்கிரஸ் தலைவர் சென்னிதாலா நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #Sabarimala #SabarimalaTemple

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோயில் மற்றும் சங்கர மடத்திற்கு கேரள காங்கிரஸ் கட்சியின் தலைவர் சென்னிதாலா வந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு 99 சதவீத மக்களிடையே ஆதரவு இல்லை, இதற்காக உச்சநீதி மன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவற்றினை பரிசீலிக்கும் போது தற்போதைய நிலவரத்தினை உச்சநீதிமன்றம் கணக்கில் கொண்டுதான் ஆக வேண்டும்.

    அதன்படி உச்சநீதி மன்றத்தில் பக்தர்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கின்றோம்.


    இந்த வழக்கினை வாதாட மூத்த வழக்கறிஞரும், காங்கிரஸ் கட்சி தலைவருமான அபிஷேக் சிங்வியை கேரள மாநில காங்கிரஸ் கமிட்டி நியமித்துள்ளது. ஜாதி மத பேதமின்றி அனைவரும் சபரிமலைக்கு செல்கின்றனர். பா.ஜ.க.மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சபரிமலை விவகாரத்தில் அரசியல் செய்கின்றது.

    சபரிமலை விவகாரத்தினை கையாள்வதில் கேரள கம்யூனிஸ்ட் அரசு தோல்வியினை தழுவியுள்ளது. கோடிக்கணக்கான பக்தர்கள் வரும் இடத்தினில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வகையினில் நிலையை கையாள அரசு தவறி விட்டது.

    கம்யூனிஸ்ட் அரசின் இச்செயலால் பக்தர்கள் மிகுந்த மன வருத்தத்திற்கு ஆளாக்கி உள்ளனர். கேரள அரசு தனது நடவடிக்கைகளால் சபரிமலை புனித யாத்திரையின் முக்கியத்துவத்தினை குறைத்து விட்டது. இது தவறான செயலாகும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Sabarimala #SabarimalaTemple

    செங்கல்பட்டு அருகே விபத்தில் கண்டக்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்கல்பட்டு:

    திருச்சியில் இருந்து சென்னை நோக்கி நேற்று இரவு அரசு விரைவு பஸ் புறப்பட்டது. டிரைவர் கஜேந்திரன் பஸ்சை ஓட்டினார்.

    காஞ்சீபுரத்தை அடுத்த அரையம்பாக்கத்தை சேர்ந்த சுதாகர் (வயது 38) கண்டக்டராக இருந்தார். சுமார் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பஸ்சில் பயணம் செய்தனர்.

    இன்று அதிகாலை 3 மணியளவில் அரசு பஸ் செங்கல்பட்டு அருகே உள்ள ராஜாகுளிபேட்டை பகுதியில் வந்து கொண்டு இருந்தது.

    அப்போது முன்னாள் சென்ற டேங்கர் லாரி மீது திடீரென பஸ் மோதியது. இதில் பஸ்சின் முன்பக்க சீட்டில் இருந்த கண்டக்டர் சுதாகர் படுகாயம் அடைந்தார்.

    அவரை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே சுதாகர் பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்தில் பஸ்சில் இருந்த மேலும் 6 பயணிகளுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. விபத்து காரணமாக அப்பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து செங்கல்பட்டு தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காஞ்சீபுரம் புத்தேரி தெருவை சேர்ந்த கங்காதரன், மகேஷ்வரன், முருகவேல், உமா, நிர்மலா தேவி ஆகியோர் ஒரு காரில் திருச்செந்தூர் சென்றனர்.

    நேற்று அங்கிருந்து 5 பேரும் அதே காரில் காஞ்சீபுரம் திரும்பினார்கள் முருகவேல் காரை ஓட்டினார். இன்று காலை 7 மணியளவில் காஞ்சீபுரம்- வந்தவாசி சாலையில் வந்து கொண்டிருந்தது. மானாம்பதி கூட்டு சாலையில் வந்த போது, அங்கு நின்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன் பகுதி லாரியின் கீழே சிக்கிக் கொண்டது.

    இந்த விபத்தில் கார் பலத்த சேதம் அடைந்தது. காரில் வந்த முருகவேல், கங்காதரன், மகேஷ்வரன், உமா, நிர்மலாதேவி ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இது குறித்து பெருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தீபாவளி பண்டிகைக்காக வெளியூர் சென்றிருந்தவர்கள் இன்று காலை சென்னை திரும்பியதால் பெருங்களத்தூர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
    தாம்பரம்:

    தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் வசிக்கும் தென் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றிருந்தனர்.

    தீபாவளி தொடர் விடுமுறை முடிந்து இன்று காலை அவர்கள் சென்னை திரும்பினர். ஒரே நேரத்தில் ஏராளமான கார்களிலும், பஸ்களிலும் அவர்கள் வந்ததால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை பெருங்களத்தூருக்கு அனைத்து வாகனங்களும் ஒரே நேரத்தில் வந்தன. இதனால் பஸ் நிலையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வண்டலூரில் இருந்து பெருங்களத்தூர் வரை அதிகாலை முதல் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    நெரிசலை சமாளிக்க போக்குவரத்து போலீசாரும், போக்குவரத்து அதிகாரிகளும் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர். அரசு பஸ்கள், தனியார்கள் பஸ்கள் நிறுத்த தனித்தனி இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.

    காலை சுமார் 10 மணிக்கு பின்னரே போக்குவரத்து சீரானது. நெரிசல் காரணமாக காலையில் பள்ளி, கல்லூரிக்கு சென்ற மாணவ-மாணவிகளும், வேலைக்கு செல்வோரும் பாதிக்கப்பட்டனர். வண்டலூரில் இருந்து பெருங்களத்தூர் வரை சாலையை அகலப்படுத்தும் பணி முடிந்துள்ளது. இதனால் வாகன நெரிசல் குறைந்து இருந்தது.
    காஞ்சீபுரம் ரெயில் நிலையத்தில் ஒருசில இடங்களில் டெங்கு கொசு உற்பத்தியாகும் சூழல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் ரெயில்வே நிர்வாகத்துக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணியை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தி உள்ளது.

    மாவட்ட கலெக்டர் பொன்னையா குடியிருப்புகள், தொழிற்சாலைகள் மற்றும் அரசு இடங்களில் ஆய்வு செய்து வருகிறார்.

    இந்த நிலையில் காஞ்சீபுரம் பழைய ரெயில் நிலையம் பகுதியில் கலெக்டர் பொன்னையா மற்றும் அதிகாரிகள் டெங்கு கொசு ஒழிப்பு ஆய்வில் ஈடுபட்டனர்.

    அப்போது ரெயில் நிலையத்தில் ஒருசில இடங்களில் டெங்கு கொசு உற்பத்தியாகும் சூழல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து ரெயில்வே நிர்வாகத்துக்கு ரூ. 20 ஆயிரம் அபராதத்தை கலெக்டர் பொன்னையா விதித்தார். மேலும் அப்பகுதியில் இருந்த பொருட்களை உடனடியாக அகற்றவும் உத்தரவிட்டார்.

    இதேபோல் ரெயில்வே குடியிருப்பு பகுதியை பார்வையிட்டார். இதில் ஒரு வீட்டின் தொட்டியில் கொசு உற்பத்தியாகும் ஆதாரம் காணப்பட்டது. அந்த வீட்டின் உரிமையாளருக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டது.
    பள்ளிக்கரணை அருகே பட்டாசு வெடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்டது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    பள்ளிக்கரணை:

    பள்ளிக்கரணை அருகே உள்ள நூக்கம்பாளையம், எழில் நகரில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் சேட்டு. இவரது மகன் சந்தீப்குமார் (வயது 20), மயிலாப்பூரில் உறவினருடன் சேர்ந்து தண்ணீர் கேன் சப்ளை செய்யும் வேலை பார்த்து வந்தார்.

    தீபாவளியையொட்டி குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு பகுதியில் நேற்று இரவு ஏராளமானோர் பட்டாசு வெடித்தனர். இதில் சந்தீப்குமாருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஒரு வாலிபரை சந்தீப்குமார் தாக்கியதாக தெரிகிறது. உடனே அங்கிருந்தவர்கள் மோதலில் ஈடுபட்டவர்களிடம் சமாதானம் பேசி கலைந்து போகச் செய்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு சந்தீப்குமார் அதே பகுதியில் தனியாக நின்று கொண்டு இருந்தார். அப்போது 34 பேர் கும்பல், கத்தி, அரிவாளுடன் அங்கு வந்தனர்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சந்தீப்குமார் அவர்களிடம் இருந்து தப்பிக்க ஓட்டம் பிடித்தார். ஆனால் விரட்டிச் சென்ற கும்பல் அருகில் உள்ள காலி மைதானத்தில் சந்தீப்குமாரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர்.

    கழுத்து, மார்பில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். உடனே கொலை கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் பள்ளிக்கரணை போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சந்தீப்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்து இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    ஸ்ரீபெரும்புதூர் அருகே காதல் தோல்வியால் மனவேதனை அடைந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வெங்கவேடு ஊராட்சி துலுக்காத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கீர்த்திகா (22). இவர் அதே பகுதியை சேர்ந்த வாலிபரை காதலித்தார். அவருக்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய பெற்றோர் ஏற்பாடு செய்தனர். இதனை அறிந்த கீர்த்திகா காதலன் வீட்டுக்கு சென்று கேட்டார்.

    அப்போது கீர்த்திகாவை திருமணம் செய்ய முடியாது என்று காதலன் கூறியதாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த கீர்த்திகா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுராந்தகம் அருகே தடுப்பு சுவரை தாண்டி வந்து மோட்டார்சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தீபாவளிக்கு சொந்த ஊருக்கு சென்ற 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.
    சென்னை:

    விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த வி.புத்தூரைச் சேர்ந்தவர் ரங்கநாதன். இவருடைய மகன் சந்தோஷ்குமார்(வயது 25). அதே ஊரைச்சேர்ந்த முருகன் என்பவருடைய மகன் அஜித்குமார்(23).

    உறவினர்களான இவர்கள் இருவரும், சென்னையை அடுத்த ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக இருவரும் நேற்று முன்தினம் இரவு ஒரே மோட்டார்சைக்கிளில் தங்கள் சொந்த ஊருக்கு சென்றனர்.

    சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் அடுத்த அத்திமானம் என்ற இடத்தில் இவர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது, எதிரே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வந்த கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரை தாண்டி வந்து, இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

    இருவரும் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த சந்தோஷ்குமார், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அஜித்குமார், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    விபத்து குறித்து தகவல் அறிந்துவந்த மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் உள்ளிட்ட போலீசார் பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்குஅனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்து காரணமாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    செங்கல்பட்டில் நடந்த டெங்கு கொசு ஒழிப்பு ஆய்வில் போலீஸ் நிலையம், பழைய தாலுக்கா அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகத்துக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
    செங்கல்பட்டு:

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் டெங்கு, பன்றிக்காய்ச்சலை தடுக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மாவட்ட கலெக்டர் பொன்னையா மாவட்டம் முழுவதும் டெங்கு கொசு ஒழிப்பு குறித்து ஆய்வு செய்து வருகிறார்.

    இந்த நிலையில் இன்று காலை மாவட்ட கலெக்டர் பொன்னையா செங்கல்பட்டு பகுதியில் அதிரடி ஆய்வு செய்தார்.

    முதலில் செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட அரசு பொது மருத்துவமனையை பார்வையிட்டு வளாகத்தை சுற்றிப்பார்த்தார்.

    அப்போது அங்கு குப்பைகள், மருத்துவ கழிவுகள் குவிந்து கிடந்தது. இதையடுத்து அரசு மருத்துவமனைக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தார்.

    இதைத்தொடர்ந்து செங்கல்பட்டு தாலுக்கா போலீஸ் நிலையம், போலீஸ் குடியிருப்பு, தாலுக்கா அலுவலகம், பொதுப் பணித்துறை அலுவலகம் உள்ளிட்ட இடங்களை கலெக்டர் பொன்னையா ஆய்வு செய்தார்.

    இதில் குப்பைகள் தேங்கி சுகாதாரமின்றி காணப்பட்ட செவிலியர் குடியிருப்புக்கு ரூ.5 ஆயிரம், போலீஸ் குடியிருப்புக்கு ரூ.10 ஆயிரம், தாலுக்கா போலீஸ் நிலையம், பழைய தாலுக்கா அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகத்துக்கு தலா ரூ.10 ஆயிரம், வட்டார போக்குவரத்துறை அலுவலகத்திற்கு ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.80 ஆயிரம் விதித்தார்.

    இந்த அபராத தொகையை சொந்த பணத்தில் ஒவ்வொரு அரசு துறையும் கட்ட வேண்டும் என்று கலெக்டர் கூறினார்.

    தண்ணீர் தேங்காமலும், குப்பைகள் சேராமலும், பிளாஸ்டிக், ரப்பர்,தேங்காய் ஓடுகள் போன்றவற்றை தேக்கி வைக்காமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

    மேலும் தாலுக்கா போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குற்ற வழக்கில் சிக்கிய பழைய வாகனங்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று கலெக்டர் பொன்னையா உத்தரவிட்டார். இந்த ஆய்வின் கோட்டாட்சியர் முத்து வடிவேலு, தாசில்தார் பாக்கியலட்சுமி, கமி‌ஷனர் மாரிச்செல்வி, சுகாதாரத்துறை அதிகாரி, சித்ரா சேனா மற்றும் நகராட்சி ஊழியர்கள் வருவாய்துறை ஊழியர்கள் உடன் சென்றனர்.
    மதுராந்தகம் அருகே தீபாவளி சீட்டு நடத்தி ரூ.2 கோடி மோசடி செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காஞ்சீபுரம்:

    மதுராந்தகம் செல்லியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் சங்கர். இவர் மனைவி மலர், மகன் ஜெயக்குமார்.

    இவர்கள் 3 பேரும் கடந்த 4 ஆண்டுகளாக “கந்த சுவாமி” என்ற பெயரில் தீபாவளி சீட்டு நடத்தினர்.

    350, 500 மற்றும் 750 என மூன்று வகையான மாதாந்திர சீட்டு நடத்தி 12 மாதங்களுக்கு பிறகு தீபாவளிக்கு முன்பு தங்க நகை, வெள்ளி மற்றும் மளிகை பொருட்கள், பட்டாசு, இனிப்பு கொடுப்பதாக தெரிவித்து இருந்தனர்.

    அவர்களிடம் மதுராந்தகம், திண்டிவனம், அச்சிறு பாக்கம், சித்தாமூர் என பல்வேறு பகுதிகளில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தீபாவளி சீட்டு பணம் கட்டி வந்தனர்.

    இந்த சீட்டுகள் அனைத்தும் கடந்த செப்டம்பர் மாதம் முடிவடைந்தது. 2 மாதத்திற்குள் தங்க நகை, வெள்ளி மற்றும் மளிகை பொருட்கள் வழங்க வேண்டும்.

    ஆனால் இதுநாள் வரை வாடிக்கையாளர்களுக்கு எந்தவித பொருட்களும் வழங்கப்படவில்லை. இதுபற்றி வாடிக்கையாளர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது சங்கர் குடும்பத்தினர் உரிய பதில் அளிக்கவில்லை.

    மேலும் அவர்கள் வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாகி விட்டது தெரிந்தது. இதனை அறிந்த சீட்டு கட்டி ஏமாந்தவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று நள்ளிரவு மதுராந்தகத்தில் உள்ள சங்கர் வீட்டை முற்றுகையிட்டு கோ‌ஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் மதுராந்தகம் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். தீபாவளி சீட்டு மோசடி குறித்து புகார் அளித்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    சங்கர் குடும்பத்தினரிடம் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தீபாவளி சீட்டு கட்டி இருந்தனர். எனவே சுமார் ரூ.2 கோடிக்கும் மேல் மோசடி நடந்து இருக்கும் என்று தெரிகிறது.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பஸ் மற்றும் ரெயில்களில் இடம் கிடைக்காததாலும் போக்குவரத்து நேரம் குறைவு, சொகுசு பயணம் என்பதாலும் விமான பயணத்தை ஏராளமான பயணிகள் தேர்வு செய்து இருக்கிறார்கள்.
    ஆலந்தூர்:

    தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில் தங்கி இருக்கும் தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்து வருகிறார்கள்.

    ரெயில்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் ஏற்கனவே முடிந்து விட்டதால் பஸ்களை பொதுமக்கள் நாடி வருகிறார்கள். இதனால் அரசு சிறப்பு பஸ்கள், ஆம்னி பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. ரெயில்களில் முன்பதிவு செய்யாத பெட்டிகளில் நின்று கொண்டே பயணம் செய்யும் நிலையும் உள்ளது.

    கூட்ட நெரிசலை பயன்படுத்தி சில ஆம்னி பஸ்களில் ரூ.2 ஆயிரத்துக்கும் மேல் டிக்கெட் வசூலிக்கப்படுகிறது. இதனால் ஏராளமான பயணிகள் விமான பயணத்துக்கு மாறி உள்ளனர். போக்குவரத்து நேரம் குறைவு, சொகுசு பயணம் என்பதால் விமான பயணத்தை ஏராளமானோர் தேர்வு செய்து இருக்கிறார்கள்.

    சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, தூத்துக்குடி, கோவை, சேலத்துக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் தூத்துக்குடிக்கு 5 முறையும் மதுரை-10, திருச்சி-6, கோவை-14, சேலம்-2 முறையும் விமானங்கள் இயக்கப்படுகின்றன.

    தற்போது இந்த விமானங்கள் அனைத்திலும் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டன. தென் மாவட்டங்களுக்கு செல்லும் எந்த விமானங்களிலும் டிக்கெட்டுகள் இல்லை.

    சில விமானத்தில் மட்டும் உயர் வகுப்பு டிக்கெட்டுகள் உள்ளன. அவை ரூ.19 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. இதிலும் சிலர் பயணம் செய்கிறார்கள்.

    எனவே வரும் பண்டிகை காலங்களில் பஸ், ரெயிலில் செல்வதை விட விமான பயணத்தை பெரும்பாலானோர் தேர்வு செய்வார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
    மதுராந்தகம் அருகே விபத்தில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்கல்பட்டு:

    சென்னையில் வசிப்பவர்கள் தீபாவளியை கொண்டாடுவதற்காக, சொந்த ஊர் செல்கிறார்கள்.

    விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த வி.புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் சந்தோஷ்குமார் (25), அஜித்குமார் (23). இவர்கள் சென்னையில் வேலை பார்த்து வந்தனர்.

    தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக 2 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் நேற்று இரவு ஊருக்கு புறப்பட்டனர்.

    சென்னை-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் அருகே உள்ள அத்திமனம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது எதிரே உள்ள சாலையில் வேகமாக வந்து கொண்டிருந்த கார், ரோட்டின் தடுப்பு சுவரை தாண்டி வந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சந்தோஷ்குமார் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

    படுகாயம் அடைந்த அஜித் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், வழியிலேயே அவர் பரிதாபமாக உயிர் இழந்தார். விபத்து குறித்து மதுராந்தகம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தாம்பரத்தில் சாலையோரம் கிடந்த அம்மன் சிலையை மீட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Ammanstatue
    தாம்பரம்:

    தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையோரம் சுமார் 1 அடி உயரம் உள்ள அம்மன் சிலை கிடந்தது. அந்த பகுதியில் குப்பை மற்றும் பிளாஸ்டிக் சேகரிப்பவர் இதை பார்த்து தாம்பரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சிலையை மீட்டு தாம்பரம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

    அந்த சிலை சுமார் 5 கிலோ எடையில் இருந்தது. இந்த சிலை கோவில்களில் இருந்து திருடப்பட்டதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தாம்பரம் பகுதியில் பாதுகாப்புக்காக அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    இதனால் சிலையை திருடி வந்த மர்ம நபர்கள், போலீசாருக்கு பயந்து அதனை சாலையோரம் வீசி சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது. அந்த சிலையை வீசிச்சென்றது யார்? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  #Ammanstatue

    ×