என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    திருப்போரூர் தொகுதியை கைப்பற்ற அ.தி.மு.க., தி.மு.க., டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றன. #DMK #ADMK

    திருப்போரூர்:

    டி.டி.வி. தினகரனின் ஆதரவாளர்களான தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களில் திருப்போரூர் தொகுதியை சேர்ந்த கோதண்டபானியும் ஒருவர். எனவே திருப்போரூர் தொகுதிக்கும் விரைவில் இடைத்தேர்தல் வருகிறது.

    திருப்போரூர் தொகுதியை கைப்பற்ற அ.தி.மு.க., தி.மு.க., டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றன.

    இடைத்தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே அரசியல் கட்சியினர் களத்தில் இறங்கி விட்டனர். அவர்கள் திருப்போரூர் தொகுதியில் முகாமிட்டு ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

    திருப்போரூர் தொகுதிக்கு அ.தி.மு.க.சார்பில் அமைச்சர் சி.வி.சண்முகம் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்த தொகுதியை மீண்டும் தக்கவைக்க அவர் நிர்வாகிகளுடன் ஆலோசனைகளை நடத்தி வருகிறார். கடந்த வாரம் கட்சி பொறுப்பாளர்களை அழைத்து அவர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் பல்வேறு வியூகங்களையும், ஆலோசனைகளையும் வழங்கியதாக தெரிகிறது.

    இந்த நிலையில் திருப்போரூரில் உள்ள தனியார் மண்டபத்தில் அ.தி.மு.க. பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு அனைத்து பூத்துக்கும் பொறுப்பாளர்களை நியமித்து தொகுதியை தக்கவைக்க பல்வேறு ஆலாசனைகளை வழங்கினார்.

    இதில் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, காஞ்சி எம்.பி மரகதம்குமரவேல் மாவட்ட செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் குமரவேல் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர் நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில் காலையில் அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடைபெற்றதை போல் மாலையில் வேறொரு தனியார் மண்டபத்தில் தி.மு.க. சார்பில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடை பெற்றது.

    இதில் கடந்த தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவியதை நினைவு படுத்தினார். இடைத் தேர்தலில் திருப்போரூர் தொகுதியை திமுக கைப்பற்ற வேண்டும் என கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    இதில் பூத் பொறுப்பாளர்கள் மற்றும் வார்டு பொறுப்பாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

    இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன், காஞ்சீபுரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள் வைதியலிங்கம், கே.பி.பி.சாமி எம்.எல்.ஏ., தாயகம் கவி எம்.எல்.ஏ. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ராஜா, இ.கருணாநிதி, எஸ்.அரவிந்த் ரமேஷ், ஒன்றிய செயலாளர்கள் இதயவர்மன், சேகர், கலந்து கொண்டனர்.

    இதற்கிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு தினகரன் ஆதரவாளரும் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ கோதண்டபாணி தலைமையில் அவருடைய இல்லத்தில் இடைத்தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றியசெயலாளர் முனுசாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன்பே அரசியல் கட்சியினர் திருப்போரூர் தொகுதியை தக்கவைத்துக் கொள்ள இப்போதே போட்டி போட்டு இறங்கிவிட்டதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. #DMK #ADMK

    விருகம்பாக்கம் அருகே சொத்து தகராறில் இளம்பெண் தீக்குளித்து பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    போரூர்:

    விருகம்பாக்கம் கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குருதாஸ். இவரது மனைவி ‌ஷகானா (28). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. 5 வீடுகளில் இருந்து வரும் வாடகை வருமானத்தில் குடும்பம் நடத்தி வந்தனர், குருதாஸ் மதுவிற்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருகிறார்.

    ‌ஷகானாவின் அக்கா கவிதாவிற்கும் குருதாசிற்கும் சொத்து தொடர்பாக தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று மீண்டும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மன வேதனை அடைந்த ‌ஷகானா வீட்டிற்குள் சென்று தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் படுகாயமடைந்த ‌ஷகானாவை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ‌ஷகானா பரிதாபமாக உயிரிழந்தார்.

    மாமல்லபுரம் சுற்றுலா தலத்தில் கேபிள் பதிக்கும் பணி தொடங்கிய நிலையில் 6 மாதத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    மாமல்லபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களில் அதிக வருவாய் தரக்கூடியது மாமல்லபுரம். இங்கு சிறு மழைக்கும், காற்றுக்கும் மின்சாரத்தை நிறுத்தி விடுவது வழக்கம். இரவுநேர மின்வெட்டால் கடற்கரை பகுதியில் திருட்டு பயம் உள்ளது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் திருடிய சம்பவங்களும் நடந்தது

    இதை உள்நாடு, வெளிநாடு சமூக ஆர்வலர்கள் பலர் பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் போன்ற சமூக வலை தளங்களில் பதிவிட்டு வந்த நிலையில் மத்திய அரசு கடலோர பகுதி சுற்றுலா தளங்களை மேம்படுத்த பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது.

    இதில் முதல் கட்டமாக மாமல்லபுரத்தில் உள்ள சாலை, வீதி, தெரு, என சுமார் 86 கிலோ மீட்டர் தூரத்துக்கு தரைவழி மின்சார கேபிள்கள் பதித்து மின்சார வயர் தெரியாமல் அழகான பசுமை நகரமாக மாற்றி தடையில்லா மின்சாரம் வழங்க உள்ளனர். அதற்கான முதல் கட்ட பணிகளை மின் வாரியம் துவங்கி விட்டது.

    இந்த பணிக்காக விழுப்புரத்தில் இருந்து 20-க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். 200 மீட்டர் நீளம் கொண்ட 100-க்கும் மேற்பட்ட கேபிள் உருளைகள் மாமல்லபுரம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த பணிகள் முடிய 6 மாதம் ஆகும் என மின்சார வாரிய ஊழியர்கள் தெரிவித்தனர்.

    பணி முடிந்து தரைவழி மின்சாரம் வழங்கப்பட்டதும் மாமல்லபுரம் சென்னை பெருநகர் போன்று காட்சியளிக்கும். #tamilnews
    காஞ்சீபுரத்தில் அகத்திய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட அகத்தீஸ்வரர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    காஞ்சீபுரம் அடுத்த பாலுச்செட்டிசத்திரம் கிளார் கிராமத்தில் அகத்திய முனிவரால் பிரதிஷ்டை செய்து வழிபட்ட அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் கண்ட ராதித்ய சோழன் தளபதி வீரசேனன் வழிபட்டதாக வரலாறு உள்ளது.

    பழமை வாய்ந்த இக்கோவிலை புனரமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் பணிகள் நிறைவடைந்து கும்பாபிஷேகம் நடந்தது.

    இதையொட்டி கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், கோ பூஜை சிறப்பு யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

    கும்பாபிஷேக விழாவில் காஞ்சீபுரம் பாலுச்செட்டிசத்திரம் மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
    சென்னை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் புக் செய்ததால் வாடகை கார் கிடைக்காமல் பயணிகள் அவதியுற்றனர். #ChennaiAirport
    ஆலந்தூர்:

    சென்னைக்கு டெல்லி, மும்பை, கோவா, அந்தமான் உள்ளிட்ட நகரங்களில் இருந்து காலையில் 10-க்கும் மேற்பட்ட விமானங்கள் வந்தன.

    அதில் வந்த பயணிகளில் சிலர் ‘ஓலா’ கால்டாக்சியை செயலி மூலம் புக் செய்தனர்.

    விமானத்தை விட்டு இறங்கி வருவதற்குள் புக் செய்து வருகைப்பதிவு 2-வது நுழைவு வாசலில் உள்ள அதன் கவுண்டர் அருகில் காத்து நின்றனர்.

    காருக்காக நீண்ட நேரமாக காத்திருந்தனர். ஆனால் ஒரு மணி நேரத்துக்கு மேலாக ‘ஓலா’ கார் வராததால் 120 பயணிகள் வீடு திரும்ப முடியாமல் தவித்தனர்.

    அவர்கள் அந்த நிறுவன கவுண்டரில் சென்று கேட்டனர். ஒரே நேரத்தில் அதிக பேர் புக் செய்ததால் கார் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்றனர்.

    விமானப் பயணிகள் தங்களது பயணத்தை திட்டமிட்டு செய்வதால் காருக்காக புக் செய்து நீண்ட நேரமாக கார் வராததால் குறித்த நேரத்திற்குள் வீடு திரும்ப முடியாமல் அவதிப்பட்டனர்.

    பின்னர் ஒவ்வொரு காராக வரத்தொடங்கியதும் அவர்கள் பயணத்தை தொடர்ந்தனர். #ChennaiAirport
    மறைமலைநகரில் வரும் 14-ந்தேதி நடைபெற உள்ள அ.தி.மு.க. பிரமுகர் இல்ல திருமண விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்கிறார்.
    செங்கல்பட்டு:

    காஞ்சீபுரம் மத்திய மாவட்ட முன்னாள் செயலாளர் சி.வி.என். குமாரசாமியின் தம்பியான செங்கல்பட்டு வீடுகட்டும் கூட்டுறவு சங்க தலைவரும், செங்கல்பட்டு அய்யப்பா சேவா சங்க அறக்கட்டளை தலைவருமான சி.வி.என். பரமசிவம்-பி.சாந்தி தம்பதியின் மகள் மகாலட்சுமி- ராஜேந்திரன் ஆகியோரது திருமணம் வருகிற 14-ந்தேதி (புதன்கிழமை) மறைமலை நகரில் உள்ள ஆழ்வார் பேலசில் நடைபெறுகிறது.

    முன்னதாக நாளை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதில் துணை முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார்.

    மேலும் திருமண விழாவில் கலந்து கொள்பவர்கள் வருமாறு:-

    அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான மைத்ரேயன், அமைப்பு செயலாளர் வி.சோம சுந்தரம், காஞ்சி மத்திய மாவட்ட செயலாளர் எஸ்.ஆறுமுகம், ஆலந்தூர் பகுதி செயலாளர் வி.என்.டி. வெங்கட்ராமன், அவைத் தலைவர் மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திய லிங்கம், அமைப்பு செயலாளர் சி.பொன்னையன், அமைச்சர்கள் தங்கமணி, பென்ஜமின், மா.பா.பாண்டியராஜன், அமைப்பு செயலாளர் மனோஜ் பாண்டியன், சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜெ.சி.டி. பிரபாகரன், மைதிலி திருநாவுக்கரசு, பாராளுமன்ற உறுப்பினர்கள் கே.என்.ராமச்சந்திரன் கே.மரகதம் குமரவேல்.

    முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, அம்மா பேரவை மாநில துணை செயலாளர் பாலகுமார், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய செயலாளர் எஸ்.கவுஸ்பாஷா, மறைமலை நகர செயலாளர் டி.எஸ்.ரவிக்குமார்.

    ஒன்றிய குழு முன்னாள் தலைவர் இ.சம்பத் குமார், மாவட்ட இளைஞர் அணி அவை தலைவர் எம்.ஜி.கே. கோபி கண்ணன், செங்கல்பட்டு நகர செயலாளர் வி.ஆர்.செந்தில்குமார், பேரூர் செயலாளர் டி.சீனு வாசன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் ஹரி கிருஷ்ணன், கே.எஸ். சாந்திராஜ், ஏ.மோகன், செ.து.வ. சண்முக சுந்தரம் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார்கள்.
    தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் மின்சார ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டது. #ChennaiTrain
    தாம்பரம்:

    தாம்பரம்-தாம்பரம் சானட்டோரியம் இடையே உள்ள தண்டவாள பகுதிகளை இன்று காலை 8.20 மணியளவில் ரெயில்வே ஊழியர்கள் ஆய்வு செய்தனர்.

    அப்போது தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு இருப்பதை கண்டுபிடித்தனர். இதுபற்றி உடனடியாக தாம்பரத்தில் உள்ள ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அந்த நேரத்தில் விரிசல் ஏற்பட்ட தண்டவாளத்தில் கடற்கரை நோக்கி மின்சார ரெயில் வந்துகொண்டிருந்தது. உடனடியாக ரெயில் என்ஜின் டிரைவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நடுவழியில் மின்சார ரெயில் நிறுத்தப்பட்டது.

    இதையடுத்து தாம்பரம் செங்கல்பட்டில் இருந்து ரெயில்வே ஊழியர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் விரிசல் ஏற்பட்ட தண்டவாளத்தை சரிசெய்தனர். இந்த பணியால் தாம்பரம்-சென்னை கடற்கரை ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. தாம்பரத்தில் இருந்து 3,4-வது நடைமேடையில் உள்ள எக்ஸ்பிரஸ் ரெயில் பாதையில் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டன.

    வழக்கமாக 10 நிமிடத்துக்கு ஒரு மின்சார ரெயில் இயக்கப்படும். தண்டவாள விரிசல் காரணமாக 20 நிமிடத்துக்கு ஒரு மின்சார ரெயில் இயக்கப்பட்டது.

    இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். மின்சார ரெயில்களில் கூட்டம் அலைமோதியது.

    காலை 9.30-க்கு பின்னர் மின்சார ரெயில் சேவை சீரானது. தண்டவாள விரிசல் ஏற்பட்ட பகுதியில் மெதுவாக ரெயில்கள் இயக்கப்பட்டன. #ChennaiTrain
    டெங்கு கொசுக்கள் உற்பத்தி ஆகும் வகையில் சுகாதாரமின்றி செயல்பட்டு வந்த 2 அரிசி ஆலைகளுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து காஞ்சீபுரம் கலெக்டர் உத்தரவிட்டார். #Dengu
    காஞ்சீபுரம்:

    தமிழகம் முழுவதும் டெங்கு-பன்றிக் காய்ச்சல் நோய் பரவி உயிர் பலி ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் கலெக்டர் பொன்னையா உத்தரவுப்படி நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கலெக்டர் பொன்னையா மாவட்டம் முழுவதும் டெங்கு கொசு ஒழிப்பு ஆய்வில் ஈடுபட்டு வருகிறார். அப்போது சுகாதார கேடாக இருக்கும் நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் காஞ்சீபுரம் நகராட்சிக்குட்பட்ட பல்லவர்மேடு, தாயண்குளம், பகுதிகளில் உள்ள அரிசி ஆலைகளில் கலெக்டர் பொன்னையா திடீர் ஆய்வு செய்தார்.

    அப்போது டெங்கு கொசுக்கள் உற்பத்தி ஆகும் வகையில் சுகாதாரமின்றி 2 அரிசி ஆலைகள் செயல்பட்டு வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து கலெக்டர் பொன்னையா அந்த 2 அரிசி ஆலைகளுக்கு தலா 12 ஆயிரத்து 500 வீதம் மொத்தம் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தார்.

    இந்த ஆய்வின் போது நகராட்சி பொறியாளர் மகேந்திரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். #Dengu
    கிழக்கு கடற்கரை சாலையில் கார் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் என்ஜினீயர் பலியானார். இது குறித்து அடையாறு போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். #Accident
    சோழிங்கநல்லூர்:

    பாலவாக்கம் பாரதிநகரை சேர்ந்தவர் சுவாமிநாதன் (வயது 23) என்ஜினீயரிங் முடித்து உள்ளார். இவர் இரவு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தியேட்டரில் படம் பார்த்து விட்டு மோட்டார் சைக்கிளில் பாலவாக்கம் நோக்கி திரும்பி வந்தார்.

    அப்போது கார் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சுவாமிநாதன் பலியானார். இது குறித்து அடையாறு போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். #Accident

    ரவுடியை கொலைக்கு பழிக்குப்பழியாக வாலிபரை தீர்த்துக்கட்டிய வழக்கில் போலீசார் ஐந்து பேரை வலைவீசி தேடிவருகின்றனர். #Murder
    ஸ்ரீபெரும்புதூர், நவ. 11-

    குன்றத்தூரை அடுத்த பழந்தண்டலம் திருவள்ளூர் தெருவை சேர்ந்தவர் விஜய் (வயது 25). நேற்று மாலை அவர் எருமையூரில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கும்பல் விஜயை வழிமறித்து சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே விஜய் பலியானார்.

    இதுகுறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலையாளிகளை பிடிக்க கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணா மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பாலாஜி, சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் ஆகியோர் கொண்ட 2 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

    கடந்த பிப்ரவரி மாதம் பழந்தண்டலம் பகுதியை சேர்ந்த ரவுடி நவரசன் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் விஜய் கைது செய்யப்பட்டு இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்புதான் விஜய் ஜாமீனில் வெளியே வந்தார். தற்போது அவரை மர்ம கும்பல் தீர்த்துக்கட்டி விட்டனர்.

    எனவே ரவுடி நவரசன் கொலைக்கு பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இது தொடர்பாக எருமையூர், பம்மல் பகுதியை சேர்ந்த ரவுடிகள் 5 பேரை தேடி வருகின்றனர். அவர்கள் சிக்கினாலதான் கொலைக்கான காரணம் என்ன? என்பது தெரியவரும்.
    சந்திரபாபு நாயுடு-மு.க.ஸ்டாலின் சந்திப்பால் அரசியலில் எந்த மாற்றமும் ஏற்படாது, பிரதமர் மோடியை தோற்கடிக்க முடியாது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். #TamilisaiSoundararajan #BJP
    ஆலந்தூர்:

    சென்னை வேளச்சேரியில் தமிழக பா.ஜனதா கட்சி சார்பில், ‘பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால் நாடு அடைந்த நன்மைகள்’ என்ற தலைப்பில் விளக்க கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கை தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கிவைத்தார்.

    அப்போது அவர் பேசிய தாவது:-

    இந்தியாவில் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட புரட்சிகர செயல், பணமதிப்பு இழப்பு ஆகும். தூய்மை இந்தியாவை படைக்க பொருளாதார புரட்சியை மோடி செய்தார். இதன் மூலம் கருப்பு பணம், வரை முறையில்லாத பணம், கணக்கு காட்டாத பணம் வெளியில் வந்து உள்ளது.

    பணமதிப்பு இழப்பை எதிர்க்கட்சிகள், போலி நிறுவனங்கள், கள்ளப்பணத்தை தீய சக்திகளுக்கு பயன்படுத்து பவர்கள்தான் தவறாக சித்தரிக்கின்றனர். நாட்டில் கணக்கு காட்டவேண்டும். வரி கட்ட வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்கு வந்து உள்ளது. சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளாக 3 கோடி பேர்தான் வரி கட்டி வந்தனர். ஆனால் இந்த நான்கரை ஆண்டுகளில் கூடுதலாக 3 கோடி பேர் வரி செலுத்துகின்றனர்.

    மக்களுக்கு ஒரு ரூபாய் செலவு செய்தால் அதில் 15 பைசாதான் போய்ச்சேருகிறது என்று ராஜீவ்காந்தி கூறினார். ஆனால் இந்த காலகட்டத்தில் மக்களின் பணம் மக்களுக்கே என்ற நிலை உருவாகி உள்ளது. சந்திரபாபு நாயுடு தன் மக்களையும், தொண்டர்களையும் ஏமாற்றி ஸ்டாலினை சந்தித்து பேசுகிறார். எத்தனை ஆயிரம் ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு இணைந்தாலும் மோடியை தோற்கடிக்க முடியாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில், பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால் அடைந்த நன்மைகள் குறித்து பொருளாதார நிபுணர்கள் சேகர், வெங்கட்ராமன், பா.ஜனதாவை சேர்ந்த நாராயணன் ஆகியோர் பேசினார்கள்.

    பின்னர், தமிழிசை சவுந்திரராஜன் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறிய தாவது:-

    சந்திரபாபு நாயுடு-ஸ்டாலின் சந்திப்பினால் மிகப் பெரிய கூட்டணி உருவானது போல் சொல்கிறார்கள். சந்திரபாபு நாயுடு பார்ப்பவர்கள் எல்லாம் ஏற்கனவே மோடிக்கு எதிரான கூட்டணியில் இருப்பவர்கள்தான். புதிதாக கூட்டணி ஏற்படுத்துவது போல் ஒரு மாய தோற்றத்தை ஏற் படுத்துகின்றனர்.

    சந்திரபாபு நாயுடு-ஸ்டாலின் சந்திப்பு இந்திய அரசியலிலும், தமிழக அரசியலிலும் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்த போவதில்லை. மோடியால் தமிழக மக்களுக்கு என்ன பயன் என்று கேட்ட சந்திரபாபு நாயுடு, மன்மோகன்சிங், சிதம்பரம் போன்றவர்கள் மக்களுக்கு என்ன செய்தார்கள் என்று ஸ்டாலினிடம் கேட்டு இருக்கலாமே?.

    இது கார்பரேட் கம்பெனிகளுக்கான அரசு அல்ல. காமன் (பொது) மக்களுக்கான அரசு. இலங்கையில் தமிழர்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும். தமிழர்களின் பாதுகாப்பை வலியுறுத்துவோம். மோடியை விட ஸ்டாலின் பெரிய தலைவர் என்று சந்திரபாபு நாயுடு கூறுவதற்கு சிரிப்பதை தவிர ஒன்றும் சொல்வதற்கில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.  #TamilisaiSoundararajan #BJP

    ஸ்ரீபெரும்புதூர் அருகே 2 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி கண்டறியப்பட்டதை அடுத்து அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #DenguFever

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் பிளைப்பாக்கம் ஊராட்சி பஜனை கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் ரகுமான் (வயது 27). இவருக்கு கடந்த 4-ந் தேதி கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு பரிசோதனை செய்ததில் டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவரை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    அதே பகுதியை சேர்ந்த ஜோசப்(37) என்பவருக்கும் டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. அவர் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    பிள்ளைப் பாக்கத்தில் மேலும் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் மருத்துவ முகாம் அமைத்து வீடு வீடாக சென்ற பரிசோதனை செய்து வருகின்றனர். டெங்கு கொசு புழு உற்பத்தி உள்ளனவா என கண்டறிந்து அதை அழித்தல், ஊராட்சி முழுவதும் பிளிச்சிங் பவுடர் தெளித்து தொற்று நோய் பரவாமல் தடுத்தல், புகை மருந்து அடித்து கொசுவை அழித்தல், அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கி காய்ச்சலை தடுக்க துரித நடவடிக்கை மேற்கொண்டார்.

    மாவட்ட உதவி திட்ட அலுவலர் முரளி, வட்டார வளர்ச்சி அலுவலர் சீதா சீனிவாசன் ஆகியோர் பிள்ளைப்பாக்கம் ஊராட்சியில் ஆய்வு மேற்கொண்டு டெங்கு கொசு உற்பத்தி நிலைகண்டறிந்து 3 வீடுகளுக்கு தலா ரூ.500 அபராதம் விதித்தனர். #DenguFever

    ×