என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    விமான நிலையம் அருகே பெண் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    ராயப்பேட்டை பீட்டர் சாலையில் குடியிருப்பவர் சுரேஷ். ரெயில்வே ஊழியர். இவருடைய மனைவி தேவி புவனேஸ்வரி. டி.ஜி.பி. அலுவலக அதிகாரி.

    நேற்று சுரேஷ்-தேவி புவனேஸ்வரி இருவரும் பொழிச்சலூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். அங்கு உறவினர்களை சந்தித்துவிட்டு இரவு வீடு திரும்பினார்கள்.

    இரவு 11.45 மணியளவில் மோட்டார் சைக்கிள் மீனம்பாக்கம் மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தது. சுரேஷ் மோட்டார் சைக்கிளை ஓட்டினார். தேவி புவனேஸ்வரி பின்னால் உட்கார்ந்து இருந்தார்.

    அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்த 2 பேர் வந்தனர். திடீர் என்று தேவி புவனேஸ்வரியை கீழே தள்ளி அவர் கழுத்தில் கிடந்த 9 பவுன் நகையை பறித்து சென்றனர்.

    நிலை தடுமாறி மோட்டார் சைக்கிள் கீழே விழுந்தது. இதில் கணவன்-மனைவி இருவரும் பலத்த காயம் அடைந்தனர். மீனம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து வழிப்பறி கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.


    ஓரகடம் அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூரை அடுத்த ஓரகடம் - ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் மாத்தூர் அருகே சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். ஓரகடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் விசாரணை செய்தார்.

    இதில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதால் அந்த வாலிபர் இறந்தது தெரிய வந்தது. போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    மலேசியாவில் இருந்து வந்த விமானத்தில் காலணியில் மறைத்து கடத்திய ரூ.4½ லட்சம் தங்கத்தை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    மலேசியாவில் இருந்து சென்னைக்கு நேற்று நள்ளிரவு பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    அப்போது சென்னையை சேர்ந்த அஷ்ரப் என்பவர் போதிய ஆவணங்கள் இன்றி 8 லேப்-டாப் கொண்டு வந்திருப்பது தெரிய வந்தது.

    மேலும் நடவடிக்கையிலும் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அஷ்ரப்பை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனையிட்டனர்.

    இதில் அவர் அணிந்து இருந்த காலணியில் மறைத்து வைத்து தங்க கட்டிகள் கடத்தி வந்திருப்பது தெரிந்தது.

    மொத்தம் அதில் 150 கிராம் தங்கம் இருந்தது. இதன் மதிப்பு ரூ.4½ லட்சம் ஆகும். தங்க கட்டிகளையும், லேப்-டாப்பையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக அஷ்ரப்பிடம் விசாரணை நடந்து வருகிறது.

    ஆதம்பாக்கத்தில் காலி சிலிண்டரை வாங்கி 50 பேரிடம் மோசடி செய்த வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #gascylinder

    ஆலந்தூர்:

    ஆதம்பாக்கம் என்.ஜி.ஓ. காலனி, நியூ காலனி போன்ற பகுதியிலிருந்து வீடுகளில் சமையல் கியாஸ் போடுபவர் கியாஸ் சிலிண்டரை வாங்கிக் கொண்டு திருப்பி தரவில்லை என்று ஆதம்பாக்கம் போலீசாருக்கு புகார்கள் வந்தன.

    இதையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் வீடுகளில் சிலிண்டர் போடுபவர்களை பிடித்து விசாரணை நடத்தினார்கள். வெங்கடேசன் (40) பிடித்து விசாரணை செய்யும்போது அவர் வழக்கமாக போடும் வீடுகளில் சென்று காலியான சிலிண்டர் வாங்கிக் கொண்டு புது சிலிண்டர் தருவதாக கூறி ஏமாற்றியது தெரியவந்தது.

    அவர் சுமார் 50 சிலிண்டருக்கு மேல் திருடி இருக்கிறார். இதுகுறித்து அவர் வேலை செய்யும் கியாஸ் ஏஜென்சியில் விசாரித்த போது வெங்கடேசன் கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்பாகவே வேலையை விட்டு நின்று விட்டார் என்று கூறினர்.

    ஆனால் போலீசார் சிலிண்டரை கொடுத்த வீடுகளில் விசாரித்தபோது வெங்கடேசன் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக சிலிண்டர் போடுவதாகவும் பழக்கத்தின் பேரில் காலி சிலிண்டரை கொடுத்ததாகவும் கூறுகின்றனர். ஆனால் வெங்கடேசன் பில் வைத்துதான் சிலிண்டர் விநியோகித்து வந்தார் என்று தெரிய வந்திருக்கிறது.

    கியாஸ் ஏஜென்சியோ ஒன்றரை வருடத்திற்கு முன்பே வேலை விட்டு நின்று விட்டார் என்று கூறுகிறார்கள். ஒரு வருடத்திற்கு முன்பாக வேலையை விட்டு நின்ற அவருக்கு எப்படி ஒரிஜினல் பில் கிடைக்கும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #gascylinder

    புயல் பாதித்த இடங்களை ஆய்வு செய்ய மத்திய குழுவை அனுப்ப வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். #Thirunavukkarasar #Gajastorm

    ஆலந்தூர்:

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை இன்றும், நாளையும் பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூற இருக்கிறோம்.

    புயலின் தாக்கத்தால் 50-க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்து இருக்கிறார்கள். தமிழக அரசின் முன் எச்சரிக்கை நடவடிக்கையால் பெரிய உயிர் இழப்பு தவிர்க்கப்பட்டு உள்ளது.

    பாதிக்கப்பட்ட இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருக்கிறது. மக்கள் குடிநீர் கூட இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


    புயலால் பல குடிசைகள் இடிந்துள்ளன. மீனவர்களின் படகுகளை சரி செய்ய உடனடியாக நிதி உதவி அளிக்க வேண்டும். உயிர் இழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி போதாது. இதனை ரூ.25 லட்சமாக உயர்த்தி அறிவிக்க வேண்டும்.

    தமிழக அரசு குழு அமைத்து மாவட்டம் வாரியாக சென்று உயிர் இழப்பு மற்றும் உடமைகளை இழந்தவர்களின் பட்டியலை தயாரித்து அவர்களுக்கு வேண்டிய நிதி உதவி அளிக்க வேண்டும்.

    இதற்கு மாதக்கணக்கு எடுத்துக் கொள்ளாமல் போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும். புயல் பாதித்த இடங்களில் அடிப்படை தேவைகள் கிடைக்கவில்லை என்பதால்தான் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

    உடனடியாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புயல் பாதித்த இடங்களை பார்வையிட வேண்டும். வழக்கம்போல மத்திய அரசு மெத்தனமாகவே இருக்கிறது. தமிழ்நாடு ஒரு தனிநாடா என்று தெரியவில்லை.

    மத்திய அரசு உடனடியாக நிவாரண உதவிக்கு ஒரு கணிசமான தொகையை வழங்க வேண்டும். மேலும் ஒரு குழு அமைத்து புயல் பாதித்த இடங்களை ஆய்வு செய்ய வேண்டும்.

    முதலில் பாதிக்கப்பட்ட இடங்களை முதல்- அமைச்சர் சென்று பார்க்கப்படும். பின்னர் மத்திய அமைச்சர்கள் பார்க்கட்டும். அதன் பின்னர் ராகுல்காந்தி வருவதை பற்றி பேசலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Thirunavukkarasar #Gajastorm

    பம்மலில் அக்காள் திருமணமாகி கணவர் வீட்டுக்கு சென்றதால் மனமுடைந்த தம்பி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தாம்பரம்:

    பம்மல் அம்பேத்கார் தெருவை சேர்ந்தவர் ராஜா. டிப்ளமோ படித்துள்ளார். இவர் தனது அக்கா மீது மிகவும் பாசத்துடன் இருந்து வந்தார். இந்த நிலையில் அவரது அக்காவிற்கு கடந்த 14-ந்தேதி திருமணம் நடந்து கணவர் வீட்டிற்கு சென்றார். இதனால் ராஜா மிக மனவேதனையில் காணப்பட்டார்.

    இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த சங்கர் நகர் போலீசார் ராஜா உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கல்பாக்கம் அருகே 10-ம் வகுப்பு மட்டு படித்துவிட்டு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வந்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
    மாமல்லபுரம்:

    கல்பாக்கத்தை அடுத்த சதுரங்கப்பட்டினம் பொய்கைகரை பகுதியில் சுப்ரதா தாஸ் என்பவர் அலோபதி டாக்டர் என அடையாளப்படுத்திக் கொண்டு கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பணிபுரியும் வடமாநில ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சையளித்து வந்தார்.

    சந்தேகம் அடைந்த நோயாளி ஒருவர் காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரபணி இணை இயக்குனர் ஜீவா பார்வைக்கு கொண்டு சென்றார்.

    இதையடுத்து மருத்துவக் குழுவினர் அந்த கிளினிக் சென்று சோதணையிட்டு விசாரித்த போது சுப்ரதா தாஸ் 10-ம் வகுப்பு மட்டுமே படித்திருப்பதும் அனுமதி இல்லாத மருந்துகளை பதுக்கி வைத்திருப்பதும் தெரிய வந்தது.

    அவரை சதுரங்கப்பட்டினம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து மருந்துகளை பறிமுதல் செய்தனர்.

    இவர் கல்பாக்கம் பகுதி வடமாநில நபர்களுக்கு போதை ஊசி மருந்துகள் ஏதேனும் கொடுத்துள்ளாரா? கல்பாக்கத்திற்கு எப்படி வந்து தங்கினார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மலேசியாவில் இருந்து வந்த விமானத்தில் டி.வி.-சார்ஜரில் மறைத்து கடத்திய ரூ.18 லட்சம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். #chennaiairport #goldseized

    ஆலந்தூர்:

    மலேசியாவில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளிடம் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது சென்னையை சேர்ந்த 2 வாலிபர்களின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை தனி அறைக்கு அழைத்துசென்று, அவர்கள் கொண்டு வந்திருந்த பொருட்களை ஆய்வு செய்தனர்.

    இதில் எல்.இ.டி. டி.வி மற்றும் சார்ஜரில் மறைத்து வைத்து 600 கிராம் தங்க கட்டி கடத்தி வந்திருப்பது தெரிந்தது. இதன் மதிப்பு ரூ. 18 லட்சம் ஆகும்.

    இதையடுத்து தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தங்கம் கடத்தலில் பின்னணியில் உள்ளவர் குறித்து பிடிபட்ட 2 வாலிபர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது.

    கஜா புயல் காரணமாக காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.

    காஞ்சீபுரம்:

    ‘கஜா’ புயல் காரணமாக காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று மதியம் முதல் விட்டு விட்டு கனமழை பெய்தது.

    இதேபோல் செங்கல்பட்டு, திருப்போரூர், மதுராந்தகம், கேளம்பாக்கம், மாமல்லபுரம், கோவளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை கொட்டியது.

    காஞ்சீபுரத்தில் முறையான வடிகால் வசதி இல்லாததாலும், போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தாலும் நகரின் பல பகுதிகளில் மழை நீர் தேங்கியது.

    மேட்டுத்தெரு, விளக்கடி கோவில் தெரு பகுதிகளில் நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகளும், பொது மக்களும் அவதி அடைந்தனர்.

    பஸ் நிலையம், கங்கை கொண்டான் மண்டபம், பூக்கடை சத்திரம் உள்ளிட்ட இடங்களிலும் தண்ணீர் தேங்கியது. பல இடங்களில் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து காணப்படுகிறது.இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட் டுள்ளது.

    மழை நீரை வெளியேற்ற அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று காலை முதல் இரவு வரை மிதமான மழை விட்டுவிட்டு பெய்தது. திருவள்ளூரில் அதிகபட்சமாக 39 மி.மீட்டர் மழை பதிவானது.

    இன்று காலை மழை இல்லை. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    மாவட்டத்தில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:- ஆர்.கே.பேட்டை - 5

    பொன்னேரி அரசு ஆஸ்பத் திரி முன்பு பாய்ந்த மழைநீர் வெளியேறாமல் மருத்துவமனை வளாகத்திலேயே தேங்கி நின்றது. இதனால் நோயாளிகள் பெரும் சிரமம் அடைந்தனர்.

    புறநோயாளிகள் மழை நீருக்குள் நின்று கொண்டு மருந்து சீட்டு வாங்கும் நிலை ஏற்பட்டது. அவசர சிகிச்சைக்கு நோயாளியை கொண்டு செல்ல முடியாத நிலையும் உருவானது. சில நோயாளிகள் தண்ணீருக்குள் வழுக்கி விழுந்தனர்.

    இதுகுறித்து நோயாளிகள் கூறும் போது, ‘‘கடந்த மாதம் பெய்த மழையில் தண்ணீர் தேங்கி நின்றது மருத்துவ மனை நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் சீர் செய்யபடவில்லை. நேற்று பெய்த மழையில் ஆஸ்பத்திரிக்குள் செல்ல முடியாத படி தண்ணீர் தேங்கிவிட்டது. இதனால் வயதானவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

    ஆஸ்பத்திரி முன்பு மழை நீர் தேங்காதபடி பேருராட்சி மற்றும் சுகாதார துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

    மாமல்லபுரம் அருகே பஸ், கார் மோதிய விபத்தில் சென்னையைச் சேர்ந்த 5 பேர் பலியாகினர். திருமண கோஷ்டியினர் 16 பேர் படுகாயம் அடைந்தனர். #Accident
    மாமல்லபுரம்:

    சென்னை தண்டையார் பேட்டையைச் சேர்ந்த கார்த்திக் (வயது23). இவர் சென்னை தரமணியில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார்.

    இவர் தனது பள்ளிக் கூட நண்பர்களான புதுக்கோட்டை மாவட்டம் அதிராம்பட்டனத்தைச் சேர்ந்த முகமது தகீம் அப்சுரா (22), பெரம்பூரைச் சேர்ந்த சாய்சதீஷ் (22) மற்றும் 2 பேருடன் நேற்று காலை காரில் சென்னையில் இருந்து புதுவைக்கு சென்றார்.

    அங்கு நண்பர் ஒருவரை பார்த்து விட்டு நேற்று மாலை மீண்டும் காரில் சென்னை திரும்பிக் கொண்டிருந்தனர். காரை கார்த்திக் ஓட்டியதாக தெரிகிறது.

    நேற்று இரவு மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது எண்ணூரில் இருந்து திருமண கோஷ்டியினர் 50 பேர் ஒரு பஸ்சில் கடலூர் துறைமுக பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    முன்னாள் சென்ற அரசு பஸ்சை திருமண கோஷ்டியினர் சென்ற பஸ் முந்த முயன்றது. அப்போது எதிரே வந்த கார் நிலைதடுமாறி ஓடி திருமண கோஷ்டியினர் சென்ற பஸ் மீது பயங்கரமாக மோதியது. இதில் கார் சுக்கு நூறாக நொறுங்கியது.

    இதில் காரில் இருந்த கார்த்திக், முகமது தகீம், சாய்சதீஷ் உள்பட 5 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். 5 பேரின் உடல்களும் காருக்குள் சிக்கிக் கொண்டது.

    தகவல் அறிந்ததும் மாமல்லபுரம் போலீசார் மற்றும் திருக்கழுக்குன்றம் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் 2 மணி நேரத்துக்கும் மேலாக போராடி காருக்குள் இருந்த 5 பேரின் உடல்களையும் எடுத்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்தில் திருமண கோஷ்டியைச் சேர்ந்த பெண்கள் உள்பட 16 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த விபத்து தொடர்பாக திருமண கோஷ்டி சென்ற பஸ் டிரைவர் ராகவனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  #Accident



    குழந்தைகள் தினவிழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் இருந்து அரசு பள்ளி மாணவ-மாணவிகள் 48 பேர் இலவச விமான பயணம் மேற்கொண்டனர். #JawaharlalNehru #ChildrensDay

    ஆலந்தூர்:

    மறைந்த முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14-ந் தேதி குழந்தைகள் தின விழாவாக கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி சென்னை விமான நிலையம் இன்று இண்டிகோ ஏர்லைன்ஸ் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரே‌ஷன் ஆகியவற்றுடன் இணைந்து அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கனவு பயணம் என்ற இலவச விமான பயணத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது.

    இதற்காக விமான நிலையம் அருகே உள்ள அரசு பள்ளிகளில் இருந்து சுமார் 48 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் சென்னை விமான நிலையத்திற்கு காலை அழைத்துவரப்பட்டனர்.

     


    சென்னையில் இருந்து திருச்சி வரை செல்லும் விமானத்தில் அவர்கள் சுமார் 45 நிமிடம் பயணம் செய்தனர். காலை 9.45 மணிக்கு புறப்பட்டு சென்ற அவர்கள் மீண்டும் 10.30 மணிக்கு சென்னை திரும்பினர்.

    இதில் மாணவர்கள் உற்சாகத்துடனும் ஆச்சரியத்துடனும் பயணம் செய்தனர். #JawaharlalNehru #ChildrensDay

    இலங்கை, மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கம், செல்போன்கள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், பெண் உள்பட 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் விமான நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பாத்திமா (வயது 23) என்பவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லை. இதையடுத்து அவரை தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது உள்ளாடைக்குள் 2 தங்க சங்கிலிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.

    பின்னர் அவரிடம் இருந்த ரூ.6½ லட்சம் மதிப்புள்ள 200 கிராம் தங்க சங்கிலிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல், மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து விமானத்தில் வந்த முகமது நிசாம் (44) என்பவரது உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில், 10 விலை உயர்ந்த செல்போன்கள், 17 விலை உயர்ந்த கைக்கெடிகாரங்கள், 6 கேமரா லென்ஸ்கள், கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் மற்றும் 40 கிராம் தங்க கட்டி ஆகியவை கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து ரூ.14½ லட்சம் மதிப்புள்ள பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட 2 பேரிடமும் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    ×