search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்தில் சிக்கிய காரில் மீட்பு பணியில் ஈடுபட்ட போலீசார்.
    X
    விபத்தில் சிக்கிய காரில் மீட்பு பணியில் ஈடுபட்ட போலீசார்.

    மாமல்லபுரம் அருகே பஸ்-கார் மோதல்: சென்னையைச் சேர்ந்த 5 பேர் பலி

    மாமல்லபுரம் அருகே பஸ், கார் மோதிய விபத்தில் சென்னையைச் சேர்ந்த 5 பேர் பலியாகினர். திருமண கோஷ்டியினர் 16 பேர் படுகாயம் அடைந்தனர். #Accident
    மாமல்லபுரம்:

    சென்னை தண்டையார் பேட்டையைச் சேர்ந்த கார்த்திக் (வயது23). இவர் சென்னை தரமணியில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார்.

    இவர் தனது பள்ளிக் கூட நண்பர்களான புதுக்கோட்டை மாவட்டம் அதிராம்பட்டனத்தைச் சேர்ந்த முகமது தகீம் அப்சுரா (22), பெரம்பூரைச் சேர்ந்த சாய்சதீஷ் (22) மற்றும் 2 பேருடன் நேற்று காலை காரில் சென்னையில் இருந்து புதுவைக்கு சென்றார்.

    அங்கு நண்பர் ஒருவரை பார்த்து விட்டு நேற்று மாலை மீண்டும் காரில் சென்னை திரும்பிக் கொண்டிருந்தனர். காரை கார்த்திக் ஓட்டியதாக தெரிகிறது.

    நேற்று இரவு மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது எண்ணூரில் இருந்து திருமண கோஷ்டியினர் 50 பேர் ஒரு பஸ்சில் கடலூர் துறைமுக பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    முன்னாள் சென்ற அரசு பஸ்சை திருமண கோஷ்டியினர் சென்ற பஸ் முந்த முயன்றது. அப்போது எதிரே வந்த கார் நிலைதடுமாறி ஓடி திருமண கோஷ்டியினர் சென்ற பஸ் மீது பயங்கரமாக மோதியது. இதில் கார் சுக்கு நூறாக நொறுங்கியது.

    இதில் காரில் இருந்த கார்த்திக், முகமது தகீம், சாய்சதீஷ் உள்பட 5 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். 5 பேரின் உடல்களும் காருக்குள் சிக்கிக் கொண்டது.

    தகவல் அறிந்ததும் மாமல்லபுரம் போலீசார் மற்றும் திருக்கழுக்குன்றம் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் 2 மணி நேரத்துக்கும் மேலாக போராடி காருக்குள் இருந்த 5 பேரின் உடல்களையும் எடுத்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்தில் திருமண கோஷ்டியைச் சேர்ந்த பெண்கள் உள்பட 16 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த விபத்து தொடர்பாக திருமண கோஷ்டி சென்ற பஸ் டிரைவர் ராகவனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  #Accident



    Next Story
    ×