search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெங்கு கொசு ஒழிப்பு ஆய்வு: போலீஸ் நிலையம்- தாலுக்கா, பொதுப்பணித்துறை அலுவலகத்துக்கு அபராதம்
    X

    டெங்கு கொசு ஒழிப்பு ஆய்வு: போலீஸ் நிலையம்- தாலுக்கா, பொதுப்பணித்துறை அலுவலகத்துக்கு அபராதம்

    செங்கல்பட்டில் நடந்த டெங்கு கொசு ஒழிப்பு ஆய்வில் போலீஸ் நிலையம், பழைய தாலுக்கா அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகத்துக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
    செங்கல்பட்டு:

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் டெங்கு, பன்றிக்காய்ச்சலை தடுக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மாவட்ட கலெக்டர் பொன்னையா மாவட்டம் முழுவதும் டெங்கு கொசு ஒழிப்பு குறித்து ஆய்வு செய்து வருகிறார்.

    இந்த நிலையில் இன்று காலை மாவட்ட கலெக்டர் பொன்னையா செங்கல்பட்டு பகுதியில் அதிரடி ஆய்வு செய்தார்.

    முதலில் செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட அரசு பொது மருத்துவமனையை பார்வையிட்டு வளாகத்தை சுற்றிப்பார்த்தார்.

    அப்போது அங்கு குப்பைகள், மருத்துவ கழிவுகள் குவிந்து கிடந்தது. இதையடுத்து அரசு மருத்துவமனைக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தார்.

    இதைத்தொடர்ந்து செங்கல்பட்டு தாலுக்கா போலீஸ் நிலையம், போலீஸ் குடியிருப்பு, தாலுக்கா அலுவலகம், பொதுப் பணித்துறை அலுவலகம் உள்ளிட்ட இடங்களை கலெக்டர் பொன்னையா ஆய்வு செய்தார்.

    இதில் குப்பைகள் தேங்கி சுகாதாரமின்றி காணப்பட்ட செவிலியர் குடியிருப்புக்கு ரூ.5 ஆயிரம், போலீஸ் குடியிருப்புக்கு ரூ.10 ஆயிரம், தாலுக்கா போலீஸ் நிலையம், பழைய தாலுக்கா அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகத்துக்கு தலா ரூ.10 ஆயிரம், வட்டார போக்குவரத்துறை அலுவலகத்திற்கு ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.80 ஆயிரம் விதித்தார்.

    இந்த அபராத தொகையை சொந்த பணத்தில் ஒவ்வொரு அரசு துறையும் கட்ட வேண்டும் என்று கலெக்டர் கூறினார்.

    தண்ணீர் தேங்காமலும், குப்பைகள் சேராமலும், பிளாஸ்டிக், ரப்பர்,தேங்காய் ஓடுகள் போன்றவற்றை தேக்கி வைக்காமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

    மேலும் தாலுக்கா போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குற்ற வழக்கில் சிக்கிய பழைய வாகனங்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று கலெக்டர் பொன்னையா உத்தரவிட்டார். இந்த ஆய்வின் கோட்டாட்சியர் முத்து வடிவேலு, தாசில்தார் பாக்கியலட்சுமி, கமி‌ஷனர் மாரிச்செல்வி, சுகாதாரத்துறை அதிகாரி, சித்ரா சேனா மற்றும் நகராட்சி ஊழியர்கள் வருவாய்துறை ஊழியர்கள் உடன் சென்றனர்.
    Next Story
    ×