என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    மாமல்லபுரம், கோவளம் கடலில் குளிக்க நாளை முதல் 17-ந் தேதி வரை போலீசார் தடை விதித்துள்ளனர்.
    மாமல்லபுரம்:

    பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. 17-ந் தேதி காணும் பொங்கலையொட்டி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களிலும் பயணிகளின் கூட்டம் குவியும் முக்கியமாக கோவளம், திருவிடந்தை, வடநெம்மேலி, பட்டிபுலம், தேவநேரி, மாமல்லபுரம் கடற்கரையில் குவியும் பயணிகள் கடலில் குளிப்பார்கள்.

    கடந்த ஆண்டுகளில் இப்பகுதியில் ராட்சத அலை, புதைமணல்களில் சிக்கி 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்த பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளிக்க நாளை முதல் 17-ந் தேதி வரை போலீசார் தடை விதித்துள்ளனர்.

    மாமல்லபுரம் கடற்கரை கோவில் அருகே 700 மீட்டர் தூரத்திற்கு சவுக்கு மர தடுப்புகள் கட்டப்பட்டுள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி உத்தரவின் பெயரில் மாமல்லபுரம் டி.எஸ்.பி சுப்பாராஜு, இன்ஸ்பெக்டர்கள் சிரஞ்சீவி, ரவிக்குமார் ஆகியோர் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் இன்று முதல் ஈடுபட உள்ளனர்.



    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, சென்னையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக 5 நாள் பயணமாக நேற்று மாலை ஐதராபாத்தில் இருந்து தனி விமானத்தில் சென்னை வந்தார். #VicePresident #VenkaiahNaidu #Chennai
    ஆலந்தூர்:

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, சென்னையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக 5 நாள் பயணமாக நேற்று மாலை ஐதராபாத்தில் இருந்து தனி விமானத்தில் சென்னை வந்தார்.

    விமான நிலையத்தில் அவரை, கவர்னர் பன்வாரிலால் புரோகித், துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், பாண்டியராஜன், பென்ஜமின் மற்றும் உயர் அதிகாரிகள் சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றனர். #VicePresident #VenkaiahNaidu #Chennai
    சுங்குவார்சத்திரம் அருகே டேங்கர் லாரியில் ஆயிலை திருடி விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    சுங்குவார்சத்திரம் அடுத்த பர்பாங்குழி பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான மாந்தோப்பில் சட்ட விரோதமாக ஆயில் பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக சுங்குவார்சத்திரம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    போலீசார் மாந்தோப்பில் சோதனை செய்தனர். அப்போது அங்கு ஒரு டேங்கர் லாரியில் இருந்து கட்டுமான பணிக்கு உபயோகப்படுத்தும் ஆயிலை பேரல்களில் இறக்கி பதுக்கி வைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது.

    விசாரணையில் சென்னையில் இருந்து கர்நாடகா மாநிலத்துக்கு டேங்கர் லாரி மூலம் 16 ஆயிரம் லிட்டர் ஆயில் எடுத்து செல்லப்படுவதும், மாந்தோப்பில் உள்ள பேரல்களில் நிரப்பி சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுவதையும் கண்டுபிடித்தனர்.

    இது குறித்து சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து சட்டவிரோதமாக ஆயிலை திருடி விற்பனை செய்த தூத்துக்குடி மாவட்டம், சாத்தான் குளம் மேட்டுதெரு பகுதியை சேர்ந்த ரஞ்சித், லாரி டிரைவர் வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் ஜி.சி.கே.நகரை சேர்ந்த ஞானமகிமைதாஸ் ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். டேங்கர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

    மாந்தோப்பு உரிமையாளர் டில்லி கணேஷ், திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த பரமசிவன், ராஜா, சிவா ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

    தி.மு.க. ஆட்சிக்கு வர மக்கள் துணை நிற்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #MKStalin #DMK

    திருப்போரூர்:

    திருப்போரூரை அடுத்த இள்ளலூர் ஊராட்சியில் தி.மு.க. சார்பில் ஊராட்சி கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

    இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

    அண்ணா, கலைஞர் ஆகியோர் வழியில், ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்களுக்கு தேவையானது கிடைக்க போராடுவதற்காக தி.மு.க. தமிழ்நாடெங்கும் இந்த ஊராட்சிசபை கூட்டத்தின் மூலம் மக்களை நேரிடையாக சந்தித்து வருகிறது. தமிழகத்தில் நடைபெறும் எடப்பாடி ஆட்சிக்கு மத்தியில் நடைபெறும் மோடி ஆட்சி முட்டுக்கொடுத்து காப்பாற்றி வருகிறது. இரண்டையும் அகற்றுவதுதான் நீங்கள் வைக்கப்போகும் முற்றுப் புள்ளி. அதற்கு மாற்றாக தி.மு.க. ஆட்சிக்குவர நீங்கள் செலுத்தும் வாக்குதான் நாட்டில் நல்லது நடப்பதற்கான தொடக்கப்புள்ளி.

    மக்களை நேரிடையாக சந்திக்க தி.மு.க.வைத்தவிர எந்தக்கட்சியாலும் முடியாது. தி.மு.க. ஆட்சியில் இங்கு தொடங்கப்பட்ட தொழிற்சாலைகள் மூலம் வேலைவாய்ப்பு உருவாகி பயனடைந்தனர். ஆனால் இன்று வேலைவாய்ப்பு இல்லாமை தலைவிரித்தாடுகிறது. தொழிற்சாலைகள் தொடங்க கமி‌ஷன் கேட்பதால் பல நிறுவன முதலாளிகள் இங்கு வர பயப்படுகின்றனர். அவர்கள் பக்கத்து மாநிலங்களுக்கு செல்லும் நிலை உள்ளது.

    ஜெயலலிதா மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றபோது அமைச்சர்களோ மற்றும் நிர்வாகிகளோ பார்க்கவில்லை அவருடைய உடல்நிலைகுறித்து எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. ஆனால் கலைஞர் மருத்துவ மனையில் இருந்தபோது பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வந்து அவரை பார்த்தனர். அதுவும் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அந்த கட்சி அமைச்சர் ஒருவரே சொல்லியிருக்கிறார்.

    மீண்டும் தி.மு.க. ஆட்சிதான் வரும் என்று எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ பொதுமக்களுக்கும், இங்கு வந்துள்ள பெண்களுக்கும் நம்பிக்கை உள்ளது. இன்னும் 4 மாதத்தில் வரப்போகிற பாராளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வரப்போகிறது என மக்கள் பேசத்தொடங்கிவிட்டனர்.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் உள்ளாட்சிதேர்தல் நடத்தப்படும். உள்ளாட்சி தேர்தல் நடத்தாதற்கு தி.மு.க. தான் காரணம் என அ.தி.மு.க. சார்பில் பரப்பப்படுகிறது. உரிய இடஒதுக்கீடு அடிப்படையில் உள்ளாட்சிதேர்தலை நடத்தவேண்டும் என்றுதான் நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தோம். கலைஞர் ஆட்சியில்தான் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதை பார்த்துதான் மற்ற மாநிலங்களிலும் பின்பற்றினார்கள்.

    தி.மு.க. ஆட்சியில் பெண்கள் தன்னம்பிக்கையுடன் வாழ, தலைநிமிர்ந்து நிற்க எண்ணற்ற மகளிர்சுய உதவிக்குழுக்களுக்கு சுழல்நிதி கடன் வழங்கப்பட்டது நானே முன்னின்று வழங்கியுள்ளேன். பா.ஜனதா தமிழ்நாட்டில் அ.தி.மு.க. மூலம் நுழைய முயற்சி செய்கிறது. மத்தியில் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு கொண்டு வருவதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்தது. இதுபற்றி சட்டமன்றத்திலும் தெரிவித்தோம். ஆனால் அ.தி.மு.க. கபடநாடகம் ஆடுகிறது.

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில்வாடும் 7 பேரை விடுவிக்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு என்ன ஆனது. ஆனால் தர்மபுரி பஸ் எரிப்பில் தண்டனைக்குள்ளானவர்கள் விடுவிக்கப்படுகின்றனர். மத்திய மாநிலத்தில் உள்ள இந்த 2 கட்சிக்கும் முற்றுப்புள்ளி வைத்து தி.மு.க. ஆட்சி மலர தொடக்கபுள்ளி வைக்க வேண்டும்.

    ஊராட்சிசபை கூட்டத்தில் பேசிய அனைவரும் தங்கள் பகுதிக்கு பஸ்வசதி, மருத்துவமனை, புதிய பள்ளிக் கட்டிடம், சாலை வசதி, குடிநீர் மற்றும் ஆட்சிக்கு வந்தால் மது ஒழிப்பு உள்ளிட்டவை குறித்து கேட்டனர்.

    முன்னதாக அங்கு நிறுவப்பட்ட புதிய கொடிக் கம்பத்தில் தி.மு.க. கொடியை மு.க.ஸ்டாலின் ஏற்றிவைத்தார். இதில் காஞ்சி வடக்கு மாவட்டசெயலாளர் தா.மோ.அன்பரசன், ஒன்றியசெயலாளர்கள் இதயவர்மன், சேகர், படப்பை மனோகரன், நகரசெயலாளர் தேவராஜ், மற்றும் தி.மு.க. மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #MKStalin #DMK

    காஞ்சீபுரம் அருகே போலீசார் நடத்திய வாகன சோதனையில் காரில் எரிசாராயம் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம்- ஓரிக்கை கூட்டுரோடு பகுதியில் போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது வேலூரில் இருந்து காஞ்சீபுரம் வழியாக வந்த ஒரு காரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் இருந்த பிளாஸ்டிக் கேன்களில் எரிசாராயம் கொண்டு சென்றது தெரிய வந்தது.

    காரை ஓட்டி வந்த மணிகண்டன் (27) உத்திரமேரூக்கு செல்வதாக கூறினார்.

    காஞ்சீபுரம் தாலுகா இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், எரிசாராயம் கடத்திய வாலிபர் மணிகண்டனை கைது செய்தார். பிளாஸ்டிக் கேன்களில் இருந்த 875 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

    எரிசாராயத்தை எங்கு வாங்கினார். யாரிடம் கொண்டு செல்கிறார். எரிசாராய கடத்தல் கும்பலுடன் மணிகண்டனுக்கு தொடர்பு உண்டா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
    தாம்பரம் அருகே கள்ளக்காதலை கண்டித்ததால் தாயை மண்எண்ணெய் ஊற்றி எரித்து கொன்ற மகளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தாம்பரம்:

    தாம்பரம் சானடோரியம், துர்கா நகரில் வசித்து வருபவர் சதாசிவம். இவரது மனைவி பூபதி (வயது 60).

    இவர்களது மகள் நந்தினி. இவர் திருமணம் ஆகி அதே தெருவில் உள்ள வீட்டில் தனியாக குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    கடந்த 7-ந்தேதி காலை பூபதி மட்டும் வீட்டில் இருந்தார். திடீரென அவர் எரியும் தீயுடன் வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்தார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அன்று மாலை பூபதி பரிதாபமாக இறந்தார்.

    குடும்பத் தகராறில் அவர் தீக்குளித்து தற்கொலை செய்ததாக முதலில் கூறப்பட்டது. இது குறித்து குரோம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் கள்ளக்காதலை கண்டித்த தகராறில் மகள் நந்தினியே மண்எண்ணையை ஊற்றி பூபதியை தீ வைத்து எரித்து கொன்றிருப்பது தெரிந்தது.

    இதையடுத்து நந்தினியை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

    எனக்கும் அதே பகுதியில் வசிக்கும் ஒருவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனை அறிந்த தாய் பூபதி என்னை கண்டித்தார். இதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    தாயின் கண்டிப்பால் கள்ளக்காதலனுடன் ஒன்றாக சேர முடியாமல் போகுமோ என்று நினைத்தேன்.

    கடந்த 7-ந்தேதி பெற்றோர் வீட்டுக்கு சென்ற போது தாய் பூபதி மட்டும் இருந்தார். அப்போதும் எங்களுக்குள் மோதல் ஏற்பட்டது. பின்னர் நான் அங்கிருந்து எனது வீட்டுக்கு சென்று விட்டேன். தாய் மீது கோபத்தில் இருந்தேன்.

    தாய் பூபதி வழக்கமாக காலையில் தூக்க மாத்திரை சாப்பிட்டு விட்டு தூங்குவது வழக்கம். எனவே தூக்கத்தில் இருக்கும் அவரை மண்எண்ணை ஊற்றி எரித்து கொலை செய்ய முடிவு செய்தேன்.

    அதன்படி சிறிது நேரம் கழித்து மீண்டும் தாய் வீட்டுக்கு சென்றேன். அங்கு தாய் பூபதி தூங்கிக் கொண்டு இருந்தார். அவர் மீது மண் எண்ணையை ஊற்றி தீ வைத்து விட்டு அருகில் உள்ள எனது வீட்டுக்கு ஓடி வந்து விட்டேன். இதனை வேறு யாரும் கவனிக்கவில்லை.

    சிறிது நேரத்தில் தீயின் வெப்பத்தால் எழுந்த தாய் பூபதி எரியும் தீயுடன் வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்தார். அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்தனர்.

    அப்போது நானும் எதுவும் தெரியாதது போல் தீயை அணைத்து தாயை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றேன். அங்கு அவர் இறந்துவிட்டார்.

    எனவே நான் தப்பித்து விட்டதாக நினைத்து இருந்தேன். போலீசார் விசாரித்து என்னை கைது செய்துவிட்டனர்.

    இவ்வாறு நந்தினி கூறி உள்ளார்.

    இந்த கொலையில் நந்தினியின் கள்ளக்காதலனுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதையடுத்து அவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் அரசியல் கட்சியில் முக்கிய பிரமுகராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    துபாய், சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் வந்த சென்னை பயணிகளிடம் ரூ.24 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஆலந்தூர்:

    துபாயில் இருந்து இன்று காலை ஒரு விமானம் சென்னை வந்தது. இதில் விமான நிலையம் வந்து இறங்கிய பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையை சேர்ந்த முகமது, அப்துல்லா, ஆசாத் ஆகியோர் மறைத்து வைத்திருந்த தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    தகுந்த ஆவணங்கள் இல்லாமல் நூர்ஜகான் என்ற பெண் கொண்டு வந்த தங்க நகைகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இது போல் நேற்று இரவு சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் சென்னை வந்த ஸ்ரீராகவலு என்பவருடைய சூட்கேசை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அவர் சூட்கேஸ் கைப்பிடியில் தங்கத்தை மறைத்து கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நேற்று இரவும், இன்று காலையும் சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் பறிமுதல் செய்த தங்கம் 710 கிராம். இதன் மதிப்பு 24 லட்சம் ரூபாய்.

    நேற்று நள்ளிரவு சென்னையில் இருந்து மலேசியா புறப்பட்ட விமானத்தில் செல்வதற்காக பயணிகள் வந்தனர். அவர்களுடைய உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த ஷாஜகான் என்பவர் சூட்கேசில் உள்ள ரகசிய அறையில் இருந்து ரூ.19 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் வைத்து இருந்தது தெரிய வந்தது. அதை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    காஞ்சீபுரம் அருகே மணல் கடத்தலை தடுக்க வந்த போலீஸ்காரர்களை லாரி ஏற்றி கொல்ல முயற்சி செய்த சம்பவம் குறித்து 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். எனினும் ஆற்று படுகைகளில் மணல் கடத்தல் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.

    இந்த நிலையில் காஞ்சீபுரம் அருகே மணல் கடத்தலை தடுத்த 2 போலீஸ்காரர்களை லாரி ஏற்றி கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    காஞ்சீபுரம் அடுத்த கோவிந்தவாடி மற்றும் தைப்பாக்கம் மங்கல் கால்வாய் பகுதிகளில் மணல் கடத்தப்படுவதாக பாலுசெட்டிசத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனைத் தொடர்ந்து போலீஸ்காரர் டில்லிபுபாபு, கோவிந்தவாடி பகுதிக்கு சென்றார். அப்போது பொக்லைன் மூலம் 2 வாலிபர் மணல் அள்ளி லாரிகளில் நிரப்பிக் கொண்டிருந்தனர்.

    இது குறித்து போலீஸ் காரர் டில்லிபாபு விசாரித்த போது வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த 2 பேரும் திடீரென லாரியை ஓட்டி போலீஸ் காரர் டில்லிபாபு மீது மோத முயன்றனர்.

    உஷாரான டில்லிபாபு ஒதுங்கியதால் உயிர் தப்பினர். இதுபற்றி அவர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் அளித்தார். இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து மணல் கடத்திய லாரியில் இருந்த டில்லி என்பவரை கைது செய்தனர். அவருடன் இருந்த விஜயன் என்பவர் தப்பி விட்டார். இதேபோல் தைப்பாக்கம் மங்கல் கால்வய் ஆற்றுப் படுகையில் மணல் திருடப்படுவதாக வந்த தகவலின்படி போலீஸ்காரர் தாமோதரன் அங்கு சென்று கண்காணித்தார்.

    அப்போது மணல் கடத்தலில் ஈடுபட்ட முட்டவாக்கம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் போலீஸ்காரர் தாமோதரன் மீது லாரியை ஏற்ற முயன்றார். அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அவர் மற்ற போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் ராஜ்குமாரை மடக்கி பிடித்து கைது செய்தார்.

    கைதான டில்லி, ராஜ்குமாரை போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 லாரிகள் மற்றும் பொக்லைன் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    பாராளுமன்றத்தில் 10 சதவீத இடஒதுக்கீடு மசோதாவில் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக அ.தி.மு.க. செயல்பட்டது என்று கனிமொழி எம்.பி. குற்றம்சாட்டினார். #DMK #Kanimozhi #ADMK #BJP
    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் கனிமொழி எம்.பி., டி.கே.ரங்கராஜன் எம்.பி. ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

    பொருளாதாரத்தில் பின் தங்கிய பொது பிரிவினருக்கு 10 சதவீத இடம் ஒதுக்கீடு செய்து மத்திய பா.ஜனதா அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்து மக்களை ஏமாற்றுவதற்காக இதை செய்துள்ளனர்.

    இந்த இடஒதுக்கீட்டை தி.மு.க. கடுமையாக எதிர்க்கிறது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் இதுபற்றிய கருத்தை பதிவு செய்துள்ளார். பாராளுமன்றத்திலும் தி.மு.க. இதை எதிர்த்து ஓட்டு போட்டுள்ளது.

    அ.தி.மு.க.வும் இந்த சட்டத்தை எதிர்ப்பது போல பேசினார்கள். ஆனால் அது வெறும் நடிப்பு. அ.தி.மு.க. எம்.பி.க்கள் எதிர்த்து ஓட்டுப் போடவில்லை. பா.ஜனதா ஆணைப்படி அவர்கள் வெளிநடப்பு செய்து விட்டனர்.

    இதன்மூலம் பா.ஜனதாவுக்கு ஆதரவாக அ.தி.மு.க. செயல்பட்டிருப்பது உறுதியாகி உள்ளது. இந்த சட்ட மசோதாவை பாராளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை.

    பொது பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க ஆண்டு வருமானம் 8 லட்சம் இருக்கலாம் என்று நிர்ணயித்து இருக்கிறார்கள். நாட்டில் மற்ற பிரிவில் 97 சதவீதம் பேர் குறைந்த வருமானம் உள்ளவர்கள்தான். அவர்களுக்கு என்ன நியாயம்?

    மத்திய பா.ஜனதா அரசு இந்துத்துவா, இந்துஸ்தான் என்ற நோக்கத்துடன் செயல்படுகிறது. பள்ளிகளில் இந்தியை திணிக்க முயற்சி செய்து வருகிறது. இந்தியை எதிர்க்கும் திராவிட இயக்கத்துக்கு எதிராக செயல்படுகிறார்கள்.


    டி.டி.வி.தினகரன், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை விமர்சனம் செய்ததாக கூறினார்கள். அவரை விமர்சனம் செய்ய தினகரனுக்கு எந்தவித தகுதியும் இல்லை.

    இவ்வாறு கனிமொழி கூறினார்.

    டி.கே.ரங்கராஜன் கூறியதாவது:-

    கனிமொழிக்கும், எனக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனக்கும் அவருக்கும் எந்தவித மோதலோ, கருத்து வேறுபாடோ இல்லை.

    10 சதவீத இடஒதுக்கீடு பிரச்சனையில், அகில இந்திய கட்சி என்ற அளவில் சில மாநிலங்களை கருத்தில் கொண்டு ஆதரவாக ஓட்டு போடும் நிலை ஏற்பட்டது. ஆனால் சட்ட மசோதாவை ஆதரித்து பேசவில்லை. குறைகளை சுட்டிக்காட்டி இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #DMK #Kanimozhi #ADMK #BJP
    ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்க திமுக ஒருபோதும் ஆட்சிக்கு வராது. இவர்கள் ஆட்சிக்கு வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். #MinisterJayakumar #Jayalalithaadeath
    ஆலந்தூர்:

    மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார். அப்போது விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    டெல்லியில் இன்று நடைபெறும் ஜி.எஸ்.டி. கூட்டத்தில் பங்கேற்கிறேன். சில பொருட்களுக்கு வரி குறைப்பு, வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துவேன். ஜி.எஸ்.டி. தொகையினை மத்திய அரசு நிலுவையாக வைத்துள்ளது. அதனை தரவேண்டும் என்று வலியுறுத்துவேன்.

    பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறி உள்ளது. 69 சதவீத இட ஒதுக்கீடு இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உள்ளது. அதில் எந்த ஒரு குறைவும் வராத அளவுக்கு மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். பொதுவாக ஒரு மசோதாவை நிறைவேற்றும் முன் மாநில அரசிடம் கருத்து கேட்பது வழக்கம். ஆனால் 10 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவிற்கு கருத்து கேட்கவில்லை.

    ஸ்டெர்லைட் ஆலையை அரசாணை இல்லாமல் மூட முடியாது. பாமர மக்களை திசை திருப்ப எதிர்க்கட்சிகள், அரசு கொள்கை முடிவு எடுக்கவில்லை என்று கூறி வருகின்றன. தூத்துக்குடி மக்களின் எண்ணம், தமிழக மக்களின் முடிவு. அதனால் தான் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு இருக்கிறது. அதில் இருந்து அரசு பின்வாங்காது.



    ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சொல்லி இருக்கிறார். அவர் ஆட்சிக்கு வந்தால் சம்பந்தப்பட்டவர்களை சிறைக்கு அனுப்புவோம் என்று கூறியிருக்கிறார். தி.மு.க. ஒருபோதும் ஆட்சிக்கு வராது. இவர்கள் ஆட்சிக்கு வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இவர்களை காட்டிலும் அதிக அக்கறை எங்களுக்கு உண்டு. யார் தவறு செய்தாலும் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.

    ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று அவர் சசிகலா, டி.டி.வி. தினகரன் குடும்பத்தை மனதில் வைத்துதான் சொல்லி இருப்பார்.

    தினகரனும், மு.க.ஸ்டாலினும் நண்பர்கள். தற்போது ஒருவருக்கொருவர் உண்மை பேசி வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #MinisterJayakumar #Jayalalithaadeath

    இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு, விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 16 பேர் விமானம் மூலம் சென்னை திரும்பினர். #Fishermen

    ஆலந்தூர்:

    கடந்த ஆகஸ்டு மாதம் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தூத்துக்குடி, ராமேஸ்வரத்தை சேர்ந்த 16 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மத்திய-மாநில அரசுகளின் முயற்சியால் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.

    விடுதலையான 16 பேரும் இன்று விமானம் மூலம் சென்னை திரும்பினார்கள். அவர்களை விமான நிலையத்தில் மீனவ சங்கத்தினர் வரவேற்றனர். #Fishermen

    செவ்வாபேட்டை அருகே வீட்டு வாடகை தராததால் கணவன்-மனைவியை கத்தியால் குத்திய 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    செங்கல்பட்டு:

    செவ்வாபேட்டையை அடுத்த கிளாம்பாக்கம் விஷ்ணுநகரில் வசித்து வருபவர் ஜானகிராமன். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி, 3 வயது மகள், மாமியார் நாராயணி.

    இவர்கள் செங்குன்றத்தை சேர்ந்த ஸ்ரீதர் என்பவரின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டாக ஜானகிராமன் சரியாக வாடகை பணம் தரவில்லை. இதனால் அவருக்கும், உரிமையாளர் ஸ்ரீதருக்கும் தகராறு ஏற்பட்டது.

    இது தொடர்பாக ஜானகிராமன் திருவள்ளூர் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ஸ்ரீதரின் மகன் தியாகர் தனது நண்பர்கள் 3 பேருடன் நேற்று இரவு ஜானகிராமன் வீட்டுக்கு சென்றார்.

    அங்கிருந்த ஜானகிராமன், அவரது மனைவி விஜயலட்சுமியை கத்தியால் சரமாரியாக வெட்டினர். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி ரந்தனர். இதை பார்த்ததும் 4 பேரும் தப்பி ஓடி விட்டனர்.

    படுகாயம் அடைந்த 2 பேரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து செவ்வாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை தேடி வருகிறார்கள்.

    ×