என் மலர்
காஞ்சிபுரம்
ஆலந்தூர்:
குடியரசு தினவிழா வருகிற 26-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை சீர்குலைக்க பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக மத்திய உளவுத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையடுத்து பொது மக்கள் அதிகம் கூடும் விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி சென்னை விமான நிலையத்தில் இன்று முதல் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.
பயணிகள் தீவிர பரிசோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். இதேபோல் பார்வையாளர்களுக்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வருகிற 31-ந் தேதி வரை பார்வையாளர்கள் தடை அமலில் இருக்கும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
தாம்பரத்தை அடுத்த இரும்புலியூரை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது19). இவர் தாம்பரம் பகுதியில் உள்ள கலைக்கல்லூரியில் படித்து வந்தார்.
இவர் உடன்படிக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரதாபன் (18), அடையாறு, சத்யா நகரை சேர்ந்த அரிகிருஷ்ணன் ஆகியோருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் சோமங்கலம் நோக்கி சென்றனர்.
சோமங்கலம் அருகே, எட்டையூரில் சென்ற போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் திடீரென விக்னேஷ் மற்றும் நண்பர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் விக்னேஷ், பிரதாபன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் அரிகிருஷ்ணன், மற்றொரு மோட்டார் சைக்கிளில் இருந்த சோமங்கலத்தை அடுத்த மேட்டூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்த சஞ்சய்குமார், அவரது தம்பி சதிஷ் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
அவர்களுக்கு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மோதிய வேகத்தில் 2 மோட்டார் சைக்கிளும் நொறுங்கியது. இதுகுறித்து சோமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்
தாம்பரம்:
பல்லாவரத்தை அடுத்த பம்மலை சேர்ந்தவர் மணிகண்டன் (38). டிரைவர். நேற்று இரவு மணிகண்டன் குடித்துவிட்டு நாகல்கேணி பகுதியில் வந்து கொண்டு இருந்தார். அப்போது குடிபோதையில் வந்த மற்றொரு வாலிபருடன் தகராறு ஏற்பட்டது.
வாய்தகராறு கைகலப்பாக மாறியது. ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் ஆத்திரம் அடைந்த வாலிபர் அருகில் உள்ள காய்கறி கடையில் இருந்தகத்தியை எடுத்து வந்து மணிகண்டனை சரமாரியாக குத்தினார். இதில் அவர் உயிர் இழந்தார்.
சங்கர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளியை தேடி வந்தனர். விசாரணையில் நாகல்கேணி பகுதியை சேர்ந்த அருள்ராஜ் (37) என்பவர் இந்த கொலையை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். குடிபோதையில் இருந்த போது மணிகண்டன் தன்னை தாக்கியதால் ஆத்திரத்தில் கத்தியால் குத்தியதாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து வாலிபர் அருள்ராஜ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
ஆலந்தூர்:
நங்கநல்லூர் 30-வது தெருவை சேர்ந்தவர் ஸ்ரீராம் (25). இவர் ஆதம்பாக்கம் நியூ காலனி மெயின் ரோட்டில் உள்ள டாஸ்மாக் பாரில் மது குடித்தார். அதிகாலை 3 மணியளவில் இவருக்கும் மதுபார் மேலாளர் கார்த்திக் (29). என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது ஏற்பட்ட மோதலில் அங்கு நிறுத்திருந்த மேலாளர் கார்த்திக்கின் மோட்டார் சைக்கிளை ஸ்ரீராம் பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்தார். தகவல் அறிந்ததும் அங்கு வந்த போலீசார் ஸ்ரீராமை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அதிக பணம் வசூலித்ததால் ஏற்பட்ட தகராறில் மோட்டார் சைக்கிளை எரித்ததாக அவர் கூறினார்.
இப்பகுதியில் இந்த பார் இரவு முழுவதும் செயல்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். அங்கு கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
சோழிங்கநல்லூர்:
செம்மஞ்சேரி, சுனாமி குடியிருப்பில் வசித்து வருபவர் அருள்சாமி. இவரது மகன் ஜான் போஸ்கோ (வயது 25), பெயிண்டர். இவர் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்தார். இதனை அவரது தாய் கண்டித்தார்.
இதனால் மனவேதனை அடைந்த ஜான்போஸ்கோ, மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து செம்மஞ்சேரி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவையில் இருந்து நேற்றிரவு சென்னை திரும்பினார். அப்போது விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பா.ஜனதாவிற்கு எதிரான கட்சிகள் ஒன்றுகூட வேண்டும் என்று மம்தா பானர்ஜி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அது எனக்கு தெரியும். ஆனால் எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை.
மேலும் அதை முடிவு செய்ய வேண்டிய தருணம் இதுவல்ல. மக்கள் நீதி மய்யம் அதில் தெளிவாக இருக்கிறது. எங்களுடைய முக்கிய நோக்கமே தமிழகம் தான். எது எது நல்ல விஷயங்களோ அங்கே நான் போவேன்.
கேரளாவில் சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அந்த அரசு கடைபிடித்துக் கொண்டு இருக்கிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பை பாதுகாப்பது ஒரு அரசின் கடமை. அந்த மலை தமிழத்தில் இருந்து இருந்தாலும் நாமும் அந்த தீர்ப்பை கடை பிடித்திருப்போம். அந்த தீர்ப்பை செயல்படுத்த கடமைப்பட்டு இருப்போம்.
மக்களுக்கு எது வேண்டும், எது வேண்டாம் என்று தீர்மானித்து அதை செய்தால் எந்த கோர்ட்டும் ஒன்றும் செய்ய முடியாது.
ஊழல் இல்லாத கட்சிகளுடன்தான் நான் கூட்டணி அமைப்பேன். ஊழல் இல்லை என்றுதான் எல்லா கட்சிகளும் சொல்வார்கள். நிரூபிக்கப்பட்ட பின்தான் தெரியும். அதில் நாங்கள் முன் ஜாக்கிரதையாக இருக்கிறோம்.
ரஜினியின் பேட்ட படம், அஜித்தின் விஸ்வாசம் படங்களின் வசூல் போட்டி என்பது ஒரு வியாபாரம். ஒரு விளையாட்டை எப்படி ஸ்போர்ட்டிவாக எடுத்து கொள்கிறோமோ அப்படித்தான் இதை எடுத்துக்கொள்ள வேண்டும். இதைத்தான் நான் 40 வருடமாக செய்து வந்தேன்.
இவ்வாறு அவர் கூறினார். #KamalHaasan #MakkalNeedhiMaiam
சென்னை, மடிப்பாக்கத்தை சேர்ந்தவர் வசந்தா (வயது 60). இவர் பக்ரைனில் உள்ள மகனை சந்திக்க கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்றார்.
இந்த நிலையில் நேற்று இரவு அவர் சென்னை திரும்புவதற்காக விமானத்தில் வந்தார்.
அதிகாலை 3 மணி அளவில் நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது வசந்தாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு விமான பெண்கள் முதல் உதவி சிகிச்சை அளித்தனர். சிறிது நேரத்தில் வசந்தா மயங்கினார்.
இதற்கிடையே விமானம் சென்னையில் தரையிறங்கியது. தயாராக இருந்த மருத்துவ குழுவினர் வசந்தாவை மீட்டு பரிசோதித்தனர். அவர் ஏற்கனவே மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிந்தது.
இதையடுத்து அவரது உடல் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து விமான நிலைய போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இலங்கையில் இருந்து நேற்று சென்னைக்கு ஒரு விமானம் வந்தது. அதில் இருந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பயணி ஒருவர் மேல் சந்தேகம் ஏற்பட்டது. அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
அவர் முன்னுக்கு பின் முரண்பாடாக பதில் சொன்னார். எனவே சந்தேகத்தின் பேரில் அவரை தனி அறையில் வைத்து விசாரித்தனர்.
அப்போது அவர் சென்னையை சேர்ந்த முகமது (26) என்பதும் அவருடைய உடம்பில் ரூ. 8 லட்சம் மதிப்புடைய 235 கிராம் தங்கத் துண்டுகளை ரப்பர் ஸ்பாஞ்சுக்குள் வைத்து மறைத்து எடுத்து வந்ததும் தெரியவந்தது.
மருத்துவக் குழுவினர் உதவியுடன் உடலுக்குள் மறைத்து வைத்திருந்த தங்கம் வெளியில் எடுக்கப்பட்டது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் 3 ஆயிரம் வீடுகளில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடந்த 20 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.
இப்பகுதி காஞ்சீபுரம் மாவட்டத்தில் இருந்து சமீபத் தில் சென்னை மாவட்டத்தில் இணைக்கப்பட்டது. அப்போது முதலே அரசு அதிகாரிகள் நீதிமன்ற நடவடிக்கையை காரணம் காட்டி வீடுகளை அகற்ற முற்பட்டனர்.
இந்த மாதத்திற்குள்ளாக வீடுகளை காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் வழங்கப்பட்டது. இது அங்குள்ளவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனால் பொங்கல் பண்டிகையை புறக்கணித்து விட்டு வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி இந்த பொங்கலை கருப்பு பொங்கலாக அனுசரித்தனர்.
அரசு தங்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு இப்பகுதியில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்கிட வலியுறுத்தி கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் கருப்பு உடை அணிந்து சுமார் 1000க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
5 ஆண்டுகள் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க அரசு ஆணை உள்ள நிலையில் தங்கள் வீடுகளை அகற்றக்கூடாது என்றும் அப்பகுதியினர் தெரிவித்தனர்.
இந்த போராட்டத்தில் தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ், தி.மு.க. எம்.எல்.ஏ, அரவிந்த் ரமேஷ் மற்றும் அ.ம.மு.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆலந்தூர்:
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தல் குழுக்கள் அமைப்பதற்காக தமிழக பொறுப்பாளர்களை சந்திக்க டெல்லி செல்கிறேன். இறுதி முடிவை ராகுல்காந்தி அறிவிப்பார்.
எந்த மாநிலத்திலும் மோடியின் அலை இல்லை. குறிப்பாக தமிழகத்தில் 5 சதவீதம் கூட மோடிக்கு ஆதரவு இல்லை. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இதில் இருந்து மோடிக்கு எதிர்ப்பு இருப்பது தெரிகிறது.
அகிலேஷ் யாதவ், மாயவாதி கூட்டணி பா.ஜனததாவுக்கு எதிரான கூட்டணி. மதம், ஜாதி, மொழி ஆகியவற்றை வைத்து மக்களை பிரித்து ஆளும் வழக்கம் உடையவர் மோடி. அப்படித்தான் சபரிமலை, முத்தலாக் போன்ற விஷயங்களில் தலையிட்டுள்ளார்.
தமிழகத்தில் கூட்டணி கதவு திறந்து இருக்கிறது என்று மோடி கூறி இருக்கிறார். அந்த கதவுக்குள் நுழைய யாரும் இல்லை. பா.ஜனதா கூட்டணியில் இருந்து பல கட்சிகள் வெளியே வருகிறது. தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி வலுவாக இருக்கிறது.
கொடநாடு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும். அவர் வைத்துள்ள போலீஸ் துறையை வேறு யாருக்காவது கொடுக்க வேண்டும். கொடநாடு விவகாரம் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். அல்லது பணியில் இருக்கும் நீதிபதியை வைத்து விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் நாட்டு மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
போரூர், சந்தோஷ் நகரைச் சேர்ந்தவர் மதிவாணன் (வயது45). ஐயப்பந்தாங்கல் பணிமனையில் மாநகர பஸ்சில் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று முன்தினம் நண்பருடன் வெளியே சென்ற மதிவாணன் பின்னர் திரும்பி வரவில்லை. அவரை குடும்பத்தினர் தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை போரூர் ஆற்காடு சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே மதிவாணன் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் போரூர் இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து மதிவாணன் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அப்போது நேற்று முன் தினம் முன்பு மதிவாணன் நண்பர் ஒருவருடன் போரூர் பகுதியில் உள்ள மதுபான கடைக்கு சென்றதும், அங்கு ஏற்பட்ட தகராறில் அவர் கொடூரமாக தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டு இருப்பதும் தெரிந்தது.
மதிவாணனுடன் சென்ற நண்பர் யார் என்று தெரியவில்லை. அவர் மதிவாணனை கொலை செய்து தப்பி இருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள்.
இதற்கிடையே அப்பகுயில் உள்ள கண்காணிப்பு கேமராவில் கொலையாளி உருவம் பதிவாகி உள்ளது. அதில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ரத்தக்கறை படித்த சட்டையை கழற்றி விட்டு புதிய சட்டையை மாற்றிக் கொண்டு செல்கிறார்.
மேலும் மதிவாணனின் செல்போனையும் கொலையாளி எடுத்துச்சென்று உள்ளார். இதனை வைத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
முன்விரோதம் காரணமாக மதிவாணன் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதாவது பிரச்சனை காரணமா என்று பல்வேறு கோணத்தில் விசாரணை நடக்கிறது.
போரூர்:
எம்ஜிஆர் நகர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் திருநகர் கம்பர் தெருவில் உள்ள ஒரு வீட்டில் சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்று மாலை அந்த வீட்டிற்கு இன்ஸ்பெக்டர் ரூபன் பிராங்க்ளின் தலைமையில் போலீசார் சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஒரு அறையில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது உடனடியாக சத்யமூர்த்தி, விவேக், முகேஷ்ராஜா உள்ளிட்ட 15 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 லட்சத்து 14ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். விசாரணையில் பைனான்ஸ் அலுவலகத்திற்காக வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.






