என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    காஞ்சிபுரம் ரவுடி ஸ்ரீதரின் கூட்டாளிகள் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஸ்ரீதர். போலீசார் தேடுவதை அறிந்த அவன் வெளிநாடு தப்பி சென்று இருந்தான்.

    கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஸ்ரீதர், கம்போடியா நாட்டில் உள்ள ஓட்டலில் திடீரென சயனைடு தின்று தற்கொலை செய்து கொண்டான்.

    இதைத் தொடர்ந்து ஸ்ரீதரின் கூட்டாளிகளாக இருந்த தனிகா மற்றும் தினேஷ் ஆகியோர் இரு பிரிவாக பிரிந்தனர். அவர்களுக்குள் யார் பெரியவர் என்பதில் மோதல்கள் ஏற்பட்டு வந்தன.

    இதனால் ரவுடி ஸ்ரீதரின் இறப்புக்கு பின்னரும் காஞ்சிபுரம் பகுதிகளில் தொடர்ந்து குற்ற செயல்கள் நடந்து வந்தன.

    இந்த நிலையில் சிறையில் இருந்த தினேஷ் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியே வந்தார். கடந்த வாரம் பொன்னேரிக்கரை அருகே ஆயுதங்களுடன் சுற்றிய அவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஏற்கனவே ரவுடி தனிகா குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.

    இதற்கிடையே ரவுடி தினேசின் கூட்டாளிகளான சின்ன காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த சரவணன், காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் தெருவை சேர்ந்த சதீஷ்குமார் ஆகிய 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

    பொன்னேரிக்கரை அருகே காரில் ஆயுதங்களுடன் சுற்றிய அவர்கள் 2 பேரும் போலீசில் சிக்கி உள்ளனர். அவர்களிடம் இருந்து 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரும் தனித்தனி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    காஞ்சிபுரத்தில் ரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    மனைவியை சேர்த்து வைக்குமாறு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    காஞ்சீபுரம்:

    திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்தவர் பாபு (வயது 35). இவர் எந்த வேலைக்கும் செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் இவருக்கு காஞ்சீபுரம் மாவட்டம் இளநகரை சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகும் பாபு எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்தார். இதனால் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. 

    தகராறு முற்றிய நிலையில் பாபுவின் மனைவி கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த பாபு நேற்று காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தார். அலுகலகத்தின் முன்பு நின்று கொண்டு, தான் எடுத்து வந்த பெயிண்டு தின்னரை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

    இதை பார்த்ததும் அங்கு இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    தி.மு.க. தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீட்டுக்கான பேச்சுவார்த்தைக்கு எங்களுக்கு அழைப்பு விடுப்பார்கள் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். #Thirumavalavan
    ஆலந்தூர்:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் நடந்த தேசம் காப்போம் மாநாட்டில் தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு, ம.தி.மு.க. தலைவர்கள் கலந்து கொண்டனர். இது தேர்தலுக்கான வெற்றிக் கூட்டணிக்கு அடித்தளத்தை அமைக்கின்ற மாநாடாக இருந்தது.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகம்- புதுவையில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். இந்த மாநாடு தேர்தலுக்கான பிரசார பொதுக்கூட்டமாக தேர்தல் கூட்டணியை வலுப்படுத்தும் வகையில் அமைந்தது.

    காங்கிரஸ் பொதுச்செயலாளராக பிரியங்காவை நியமித்ததை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது. பிரியங்காவுக்கு பதவி வழங்கியதில் பிரதமர் உள்பட பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    மோடி பதறுவதில் இருந்தே பிரியங்காவின் முக்கியத்துவம் தெரிகிறது. உத்தரபிரதேச மாநிலத்தில் பிரியங்காவை தேர்தல் பொறுப்பாளராக நியமித்தது ராகுல்காந்தியின் யுக்தியை காட்டுகிறது.

    தி.மு.க. தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீட்டுக்கான குழுவை அமைத்துள்ளது. அவர்கள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்குவார்கள். எங்களுக்கு அழைப்பு விடுப்பார்கள் என்று நம்புகிறேன். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நான் என்ன செய்துள்ளேன் என்பது தெரியும்.

    கொடநாடு விவகாரத்தில் தி.மு.க. முன் வைத்திருக்கிற கோரிக்கைகள் நியாயமானது. இதில் எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியில் இருக்கும்போது விசாரணை நடத்தினால் உண்மை வெளியில் வராது.

    எனவே அவர் பதவி விலக வேண்டும். கொடநாடு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியே முன்வந்து சிறப்பு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும். அல்லது சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ViduthalaiChiruthaikalKatchi #Thirumavalavan
    போராட்டத்தில் ஈடுபட்டு கைதான ஆசிரியர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வலியுறுத்தி உள்ளார். #Congress #Thirunavukkarasar
    ஆலந்தூர்:

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருச்சியில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டில் பா.ஜனதா ஆட்சியை அகற்ற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காங்கிரஸ் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

    அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா நியமிக்கப்பட்டிருப்பதை தமிழக காங்கிரஸ் சார்பில் வரவேற்கிறேன். பிரியங்கா இப்போது அரசியலுக்கு வரவில்லை. அவருக்கு விவரம் தெரிந்த காலத்தில் இருந்தே இந்திரா காந்தியுடனும், சோனியா காந்தியுடனும் உத்தரபிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அங்கு வெற்றியும் பெற்று தந்திருக்கிறார்.

    ராகுல் காந்திக்கு பக்க பலமாக பிரியங்கா இருப்பார். பிரியங்காவுக்கு பதவி வழங்கியதால் மோடிக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. அதனால்தான் பிரியங்காவை கடுமையாக விமர்சனம் செய்கின்றனர். பிரியங்காவை குடும்ப வாரிசு, திடீரென்று அரசியலுக்கு வந்து விட்டார் என்று சொல்கிறார்கள்.

    ஆனால் பா.ஜனதாவில் சீரியல், சினிமா நடிகைகளான ஸ்மிரிதிஇரானி, ஹேமமாலினி ஆகியோர் பதவி வகிக்கின்றனர்.


    தெகல்கா முன்னாள் ஆசிரியர் மாத்யூஸ் சாமுவேல் தனக்கு கிடைத்த தகவலின் பேரில் முதல்-அமைச்சர் எடப்படி பழனிசாமி மீது குற்றம் சாட்டியுள்ளார்.

    ஏற்கனவே மேத்யூஸ், பா.ஜனதா தலைவர்களில் ஒருவரான பங்காரு லட்சுமண் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறினார். அதை ஏற்றுக்கொண்டு அவரை நீக்கினார்கள். அதேபோல் மேத்யூஸ், எடப்பாடி பழனிசாமி மீது சொல்லி இருக்கும் ஆதாரங்களை வைத்து அவரை கவர்னர் ஏன் பதவி விலக சொல்லவில்லை.

    போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை கைது செய்திருக்கிறார்கள். அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். அவர்களை அழைத்து முதல்-அமைச்சர், அமைச்சர்கள் பேச வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Congress #Thirunavukkarasar
    பிரதமர் மோடி கூட்டணி கதவு திறந்து இருப்பதாக கூறியிருந்தும் பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்க யாரும் முன்வரவில்லை என திருநாவுக்கரசர் கூறியுள்ளார். #PMModi #BJP #Congress #Thirunavukkarasar
    ஆலந்தூர்:

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

    கொடநாடு விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்ககோரி, நாளை கவர்னர் மாளிகை முன்பு தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. இதற்கு காங்கிரசும் ஆதரவு அளிக்கும். இந்த பிரச்சினை குறித்து உடனடி நடவடிக்கை தேவை.

    மாநில அரசு குறித்து யாராவது குற்றம் சாட்டினால் தி.மு.க. பின்னணியில் இருக்கிறது என்கிறார்கள். மத்திய அரசு பற்றி குற்றம் சாட்டினால் காங்கிரஸ் பின்னணியில் உள்ளது என்று கூறுகிறார்கள். இது பிரச்சினையை திசை திருப்பும் செயல். மக்களை ஏமாற்றும் நாடகம்.

    ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, அவர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். விரைவில் இதற்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே தமிழ்நாட்டின் உண்மை நிலையை அறியாமல் கூட்டணி பற்றி கருத்து கூறி இருக்கிறார். அ.தி.மு.க., தினகரன் கட்சிகள் இணைந்து பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற அவருடைய விருப்பம் நிறைவேற வாய்ப்பு இல்லை.

    பா.ஜனதாவுடன் அ.தி.மு.க., தினகரன் கட்சி கூட்டணி சேர வேண்டும் என்று அச்சுறுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் தம்பிதுரை போன்றவர்கள் தங்கள் கருத்துக்களை பா.ஜனதாவுக்கு எதிராக கூறி வருகிறார்கள். தினகரனும் பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

    கூட்டணி கதவு திறந்து இருப்பதாக பிரதமர் மோடி கூறி இருக்கிறார். ஆனால், பா.ஜனதாவில் கூட்டணி வைப்பதற்காக யாரும் இந்த கதவு வழியாக உள்ளே போகவில்லை. போக தயாராகவும் இல்லை. தற்போது பா.ஜனதா தனித்து விடப்பட்டுள்ளது.



    ஓட்டு எந்திரத்தில் தில்லுமுல்லு செய்து கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றதாக சையது சுஜா என்ற மின்னணு நிபுணர் கூறி இருக்கிறார். இதை அறிந்த மத்திய பிரதேச மாநில பா.ஜனதா பிரமுகர் கோபிநாத் முண்டே, வாக்கு எந்திரங்களை வடிவமைத்த அரசு நிறுவன ஊழியர்கள் சிலர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

    இதற்கு மத்திய பா.ஜனதா அரசு பதில் சொல்ல வேண்டும். மத்திய தேர்தல் ஆணையம் உரிய விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு சாக்குப்போக்கு சொல்லி நழுவக்கூடாது. மாயாவதி, சந்திரபாபு நாயுடு ஆகியோர் வரும் தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளனர். அதை நானும் வரவேற்கிறேன்.

    மம்தா பானர்ஜி நடத்திய எதிர்கட்சி தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட மு.க.ஸ்டாலின் அங்கு பேசும் போது, பிரதமராக ராகுல்காந்தி வரவேண்டும் என்பதை ஏன் வற்புறுத்தவில்லை என்று எதிர் அணியினர் கேட்கிறார்கள்.

    ராகுல்காந்தி பிரதமராக வரவேண்டும் என்ற தமிழ்நாட்டு மக்களின் கருத்தை மு.க.ஸ்டாலின் பிரதிபலித்தார். மம்தா பானர்ஜி நடத்திய கூட்டத்தில் பிரதமர் குறித்து யாரும் கருத்து சொல்லவில்லை. எனவே, சபை நாகரீகம் கருதி ஸ்டாலினும் பிரதமர் வேட்பாளர் பற்றி குறிப்பிடவில்லை.

    தமிழக அரசு உலக முதலீட்டாளர் மாநாடு நடத்துகிறது. இதன்மூலம் எங்கு எல்லாம் தொழிற்சாலை வரும்? எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதை பட்டியலிட்டு தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #PMModi #BJP #Congress #Thirunavukkarasar
    பெருங்குடி குப்பையில் கை, கால் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட பெண் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பள்ளிக்கரணை:

    பெருங்குடி பகுதியில் மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. நேற்று மாலை கோடம்பாக்கம், பவர்அவுஸ் பகுதியில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை லாரியில் கொண்டு சென்று தொழிலாளர்கள் அங்கு கொட்டினர்.

    அப்போது குப்பையுடன் பெண்ணின் துண்டிக்கப்பட்ட வலது கை மற்றும் 2 கால்கள் தனித்தனியாக விழுந்தது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் பள்ளிக்கரணை போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் துண்டிக்கப்பட்ட கை, 2 கால்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அந்த கையில் ‘டிராகன்’ படம், மற்றும் சிவன்-பார்வதி உருவம் பச்சை குத்தப்பட்டு இருந்தது. கால் விரலில் மெட்டி காணப்பட்டது.

    மர்ம கும்பல் அவரை கடத்தி சென்று துண்டு, துண்டாக வெட்டி குப்பையில் வீசி உள்ளனர். கொலையுண்ட பெண்ணின் தலை மற்றும் மற்ற உடல் பாகங்கள் இதுவரை சிக்கவில்லை. அதனை கண்டு பிடிக்கும் பணியில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோடம்பாக்கம் பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட குப்பையில் பெண்ணின் கை, கால் கிடந்தததால் அவர் அந்த பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இது தொடர்பாக அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்து சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கடந்த வாரத்தில் மாயமான பெண்கள் பற்றிய விவரத்தை சேகரித்து வருகின்றனர்.

    கொலையுண்ட பெண்ணை அடையாளம் காண்பது போலீசாருக்கு பெரிய சவாலாக உள்ளது.
    சாலை தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி கல்லூரி மாணவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    சென்னை எம்.ஜி.ஆர். நகர் சூளை பள்ளம் ஆவுடையப்பன் தெருவைச் சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகன் மணிகண்டன் (வயது 19) தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று இரவு அவர் அதே பகுதி பாரதியார் 1-வது தெருவைச் சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் மாணவன் பாலகணேசுடன் (15) அருகில் உள்ள ஓட்டலில் டிபன் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    எம்.ஜி.ஆர். நகர், அண்ணா மெயின் ரோடு அழகிரிசாமி சாலை சந்திப்பில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் திடீரென சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதியது.

    இதில் தலையில் படுகாய மடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். படுகாயமடைந்த பாலகணேஷ் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கிண்டி போக்குவரத்து பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரத்தில் காவலாளி மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் பகுதியை சேர்ந்தவர் சம்பத் (வயது 60). இவர் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் குடியிருப்பு பகுதி வளாகத்தில் தங்கி காவலாளியாக வேலை பாத்து வந்தார்.

    இந்த நிலையில் தங்கியிருந்த அறையில் சம்பத் இறந்து கிடந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் மாமல்லபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து சம்பத் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.அவர் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது.

    சம்பத் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    இந்த ஆண்டு 17 செயற்கைகோள்கள், 14 ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறினார். #ISRO #Sivan
    ஆலந்தூர்:

    இஸ்ரோ தலைவர் சிவன் சென்னை விமான நிலையத்தில் நேற்று இரவு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    இஸ்ரோ சார்பில் பள்ளி மாணவர்களுக்கு புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி 8, 9-ம் வகுப்புக்கு செல்லும் மாணவர்களில் மாவட்டத்துக்கு தலா 3 பேர் தேர்வு செய்யப்பட்டு விண்வெளி பயிற்சி அளிக்கப்படும்.

    சிறிய ரக செயற்கை கோள்களை உருவாக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன்மூலம் விண்வெளி படிப்பில் மாணவர்களுக்கு ஆர்வம் ஏற்படும்.

    பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் கடைசி பகுதியில் மாணவர்கள் உருவாக்கும் சிறிய ரக செயற்கைகோள்கள் பொருத்தி சோதனை செய்யப்படும்.

    பி.எஸ்.எல்.வி.சி-44 ராக்கெட் வருகிற 24-ந்தேதி விண்ணில் ஏவப்படுகிறது. இந்த ஆண்டு 17 செயற்கைகோள்கள், 14 ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்படும்.

    சிறிய ரக செயற்கைகோளான எஸ்.எஸ்.எல்.வி. முதல் முறையாக இந்த ஆண்டு ஜூலை அல்லது ஆகஸ்டு மாதம் ஏவப்படும்.

    அதேபோல விண்ணில் இருந்து பூமிக்கும், பூமியிலிருந்து விண்ணுக்கும் மறு சுழற்சி ராக்கெட் சோதனை செய்து பார்க்கப்படும்.

    ககன்யான் என்ற மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டப் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

    2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு விண்கலமும், 2021-ம் ஆண்டு ஜூலையில் ஒரு விண்கலமும், 2021-ம் ஆண்டு டிசம்பரில் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் திட்டமும் செயல்படுத்தப்படும்.

    ஒரு பயணத்தில் 3 பேர் விண்வெளிக்கு செல்வார்கள். அங்கு அவர்கள் 7 நாட்கள் தங்கி இருப்பார்கள். இதற்காக தகுதி வாய்ந்தவர்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. அவர்களுக்கு 6 முதல் 12 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும்.

    சந்திராயன்-2 ஏவப்படுவதில் தாமதம் ஏற்படுவதற்கு காரணம், அதில் புதிய யுக்திகளை சேர்த்து நீண்ட காலம் செயல்படுவதற்கு பணிகள் நடக்கிறது. அதற்கு பல கட்ட சோதனை நடைபெறுவதால் தாமதம் ஆகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #ISRO #Sivan

    தண்ணீர் எடுக்க சென்றபோது 40 அடி ஆழ கிணற்றுக்குள் தவறி விழுந்த மூதாட்டி அரைமணி நேரத்தில் உயிருடன் மீட்கப்பட்டார்.

    தாம்பரம்:

    குரோம்பேட்டை, சாந்தி நகரை சேர்ந்தவர் சரோஜா (வயது 75). நேற்று இரவு அவர் பக்கத்து வீட்டில் உள்ள கிணற்றில் தண்ணீர் எடுக்க சென்றார். கிணற்றின் தடுப்பு சுவர் உயரம் குறைவாக இருந்ததால் திடீரென அவர் நிலைதடுமாறி 40 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்தார்.

    இரவுநேரம் என்பதால் சரோஜா கிணற்றுக்குள் விழுந்ததை யாரும் கவனிக்க வில்லை. அவர் தண்ணீரில் தத்தளித்தபடி கிணற்றில் உள்ள சுவரை பிடித்துக் கொண்டு கூச்சலிட்டார்,

    இதற்கிடையே சரோஜா திரும்பி வராததால் உறவினர்கள் சந்தேகம் அடைந்தனர். அவர்கள் தேடியபோது கிணற்றுக்குள் இருந்து சரோஜா காப்பாற்றும்படி கூச்சலிட்டது தெரிந்தது.

    இதுபற்றி உடனடியாக தாம்பரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். சரோஜா வயதானவர் என்பதால் அவரை கயிறு கட்டி மீட்பதில் சவால் ஏற்பட்டது.

    தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி துரிதமாக செயல்பட்டனர். அவர்கள் சரோஜாவை பத்திரமாக கயிறுகட்டி மேலே கொண்டு வந்தனர்.

    அவர் பத்திரமாக மீட்கப்பட்டதை அறிந்த அப்பகுதி மக்கள் உற்சாகம் அடைந்தனர். அவர்கள் தீயணைப்பு வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

    சரோஜாவுக்கு கீழே விழுந்ததில் லேசான காயம் ஏற்பட்டு இருந்தது. அவருக்கு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர் கிணற்றுக்குள் விழுந்த அரை மணிநேரத்தில் பத்திரமாக மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    சோமங்கலம் அருகே விபத்தில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற மேலும் ஒரு மாணவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    தாம்பரத்தை அடுத்த இரும்புலியூர் ஏரிக்கரை அந்தோணியார் தெருவை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 19). கல்லூரி மாணவர்.

    இவர் உடன் படிக்கும் நண்பர்களான படப்பையை அடுத்த வஞ்சுவாஞ்சேரியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன், மாடம்பாக்கத்தை சேர்ந்த பிரதாபன் (18) ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    சோமங்கலம் அருகே சென்ற போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த விக்னேஷ், பிரதாபன் ஆகியோர் பலியானார்கள். ஹரிகிருஷ்ணன் படுகாயம் அடைந்தார்.

    இதில் விபத்துக்குள்ளான மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த சோமங்கலம், மேட்டூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்த அண்ணன்- தம்பியான சஞ்சய்குமார் (19). சதீஷ் (17) ஆகியோருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

    காயம் அடைந்த 3 பேரும் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி சஞ்சய்குமார் இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. அவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.

    காயம் அடைந்த சதீஷ், ஹரிகிருஷ்ணன் ஆகியோருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பலியான சஞ்சய்குமார், தனது தம்பியுடன் உறவினர் திருமண பத்திரிக்கை கொடுக்க மோட்டார் சைக்கிளில் சென்ற போது விபத்தில் சிக்கிக் கொண்டார்.

    இந்த விபத்து வழக்கை சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி விசாரணை நடத்தினார். நேற்று இரவு அவர் பணி முடிந்து காஞ்சீபுரத்தில் உள்ள வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். வேடல் அருகே சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில் சென்ற போது எதிரே வந்த ஆட்டோ மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சப்- இன்ஸ்பெக்டர் மூர்த்தி படுகாயம் அடைந்தார். அவருக்கு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    குழந்தை வேண்டி பரிகாரபூஜை செய்வதாக கணவன்-மனைவியை தாக்கி நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    காஞ்சீபுரம்:

    மதுராந்தகம் அடுத்த புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன். பெயிண்டர்.இவரது மனைவி ஜானகி (30) இவர்களுக்கு திருமணமாகி 3 வருடங்கள் ஆகிறது. குழந்தை இல்லை.

    இந்த நிலையில் பிரபாகரனுக்கு காஞ்சீபுரம் அடுத்த தாமரைத் தாங்கல் பகுதியைச் சேர்ந்த சாமியார் பாபு உடன் தொடர்பு ஏற்பட்டது. அவரிடம் தனக்கு குழந்தை இல்லையே என்று கூறி வருத்தப்பட்டார்.

    இதையடுத்து பாபு, பவுர்ணமி அன்று ரகசிய யாகம் நடத்தினால் உங்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும் என்று பிரபாகரனிடம் கூறினார்.

    மேலும் கணவன்-மனைவி இருவரும் குளித்துவிட்டு நகைகள் அணிந்து யாகத்தில் இருவர் மட்டுமே இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இதனை நம்பிய பிரபாகரன் ரகசிய பரிகார பூஜைக்கு சம்மதித்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு பிரபாகரன் தனது மனைவி ஜானகியுடன் தாமரைத் தாங்கல் கிராமத்திற்கு சென்றார். அவர்களை சாமியார் பாபு, இரவு 11 மணி அளவில் தாமரைத் தாங்கல் கிராமத்துக்கு ஒதுக்குப்புறத்தில் இருந்த புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு வீட்டுக்கு அழைத்து சென்று யாகம் செய்தார். அப்போது கணவன்-மனைவி இருவரும் கண்ணை மூடிக் கொண்டு சாமி கும்பிடுங்கள் என பாபு கூறினார்.

    தம்பதி இருவரும் கண்ணை மூடிக் கொண்டிருந்த போது திடீரென பாபு அங்கிருந்த கல்லால் பிரபாகரனின் முகத்தில் தாக்கினார். பின்னர் ஜானகியையும் தாக்கி கண் இமைக்கும் நேரத்தில் அவரது கழுத்தில் இருந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டார்.

    அதிர்ச்சி அடைந்த ஜானகி கூச்சலிட்டார். கிராம மக்கள் திரண்டு வந்து காயம் அடைந்த பிரபாகரனை மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    காஞ்சீபுரம் டி.எஸ்.பி. பாலசுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை செய்தனர்.

    தப்பி ஓடிய போலி சாமியார் பாபுவை தேடி வருகின்றனர்.

    ×