என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    தமிழகம் முழுவதும் இன்று திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. சோழிங்கநல்லூர் தொகுதியில் 6 லட்சத்து 18 ஆயிரத்து 695 வாக்காளர்கள் உள்ளனர். #ElectoralList
    காஞ்சிபுரம்:

    தமிழகம் முழுவதும் இன்று திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலை கலெக்டர் பொன்னையா வெளியிட்டார். அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 6 லட்சத்து 18 ஆயிரத்து 695 வாக்காளர்கள் உள்ளனர்.

    குறைந்தப்பட்சமாக செய்யூர் தொகுதியில் 2 லட்சத்து 13 ஆயிரத்து 963 வாக்காளர்கள் உள்ளனர்.

    தொகுதி வாரியாக வாக்காளர்கள் விவரம் வருமாறு:-

    தொகுதி                    ஆண்கள்  பெண்கள்  இதர  மொத்தம்

    சோழிங்கநல்லூர்    311102         307518           75       618695

    ஆலந்தூர்                  177216         179296          10       356522           

    ஸ்ரீபெரும்புதூர் (தனி)155959       163451         47       319457

    பல்லாவரம்                200225       201420            29       401674

    தாம்பரம்                    187273       188022            36       375331

    செங்கல்பட்டு            191480        197261          41      388782

    திருப்போரூர்             130726        134417          23      265166

    செய்யூர்                      105942        107994          27      213963

    மதுராந்தகம்             106872        109397          41      216310

    உத்திரமேரூர்            118826        125857          19      244702

    காஞ்சிபுரம்                140993        149390          12      290395

    மொத்தம்                    1826614      1864023        360    3690997



    அ.தி.மு.க.வும், அ.ம.மு.க.வும் இணைவதற்கு வாய்ப்பே இல்லை என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். #TTVDhinakaran #ADMK #DMK
    மதுராந்தகம்:

    செய்யூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அ.ம.மு.க. துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொண்டார்.

    அவர் அச்சிறுப்பாக்கத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஆறுமுகசாமி நீதி விசாரணையில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் விசாரணையை தள்ளி போட்டு வருகிறார். அவர் எங்கள் வழக்கறிஞர் குழுவின் விசாரணைக்கு பயந்து வழக்கை தள்ளி போடுகிறார். இதில் இருந்தே யார் குற்றவாளி என்பது தெரிய வரும்.

    ஆளும் கட்சியில் உள்ளவர்கள் பதவிக்கும் ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும் பொன்னுக்கும், பொருளுக்கும் ஆசைப்படுபவர்கள். அனைவரும் எங்களுக்கு துரோகிகளே.

    தி.மு.க.ஆட்சி பல முறை இருந்துள்ளது. அப்போதெல்லாம் தீர்க்கப்படாத அரசு ஊழியர்கள் பிரச்சனைகளை இனி வரும் தேர்தலுக்கு பின் ஆட்சி அமைத்து தீர்க்கப் போகிறாரா? .

    தேசியக் கட்சிகளோடு ஒரு போதும் கூட்டணி இல்லை. 20 தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றால் இந்த ஆட்சிக்கு ஒரு முடிவு தெரியும்.

    மீண்டும் அ.தி.மு.க.வும், அ.ம.மு.க.வும் இணைவதற்கு வாய்ப்பே இல்லை.

    பாராளுமன்றத் தேர்தலுக்கு சில கட்சிகளுடன் கூட்டணி பேசி வருகிறோம். கூட்டணியை உறுதி செய்தால் அறிவிப்போம்.

    இவ்வாறு டி.டி.வி. தினகரன் கூறினார். #TTVDhinakaran #ADMK #DMK
    சோழிங்கநல்லூர் அருகே தொழில் அதிபர் காரின் பக்கவாட்டு கண்ணாடியை உடைத்து ரூ.15 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சோழிங்கநல்லூர்:

    சோழிங்கநல்லூரை அடுத்த ஈ.சி.ஆர். சாலை பனையூர் நைனார் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பாத்திமா (40). தொழிலதிபர்.

    இவர் நேற்று முன்தினம் சென்னையில் உள்ள ஒரு வங்கிக்கு காரில் சென்றார். வங்கியில் இருந்து ரூ.15 லட்சம் ரொக்க பணத்தை எடுத்து வந்தார்.

    காரை வீட்டின் எதிரே உள்ள காலி நிலத்தில் விட்டு விட்டு, பாத்திமா வீட்டிற்கு சென்றார். பணம் காரிலேயே இருந்தது.

    பின்னர் காரில் இருந்த பணத்தை எடுக்க வந்தார். அப்போது கார் பக்கவாட்டு கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது. காரில் வைத்திருந்த ரூ.15 லட்சத்தை யாரோ கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து கானத்தூர் போலீஸ் நிலையத்தில் பாத்திமா புகார் செய்தர். போலீசார் கொள்ளையனை தேடி வருகின்றனர்.
    தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி பலமானது என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
    ஆலந்தூர்:

    தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காங்கிரஸ், தி.மு.க., இடதுசாரி கட்சிகள், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், ம.ம.க., முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் ஒன்றாக செயல்பட்டு வருகிறோம். பாராளுமன்ற தேர்தலில் ஒரே கூட்டணியாக போட்டியிடுவோம்.

    தமிழகத்தில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணிதான் பலமாக உள்ளது. 40 தொகுதிகளிலும் மக்களின் ஆதரவுடன் எங்கள் கூட்டணி வெற்றி பெறும்.

    கூட்டணிக்கான கதவு திறந்து இருப்பதாக மோடி சொல்லி பல நாட்களாகியும் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணிக்கு எந்த கட்சியும் தயாராக இல்லை. ஆனால் தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 10 தொகுதிகளில் வெற்றிபெறும் என பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார். இது வினோதமாக உள்ளது.

    கோர்ட்டில் வழக்கு இருக்கும்போது ராமர் கோவில் கட்ட முடியாது. இந்து வாக்கு வங்கியை பெற தேர்தலுக்கு முன்னால் பாரதிய ஜனதா சொல்லும் வார்த்தை இது.

    ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக மோடி எந்த அடிப்படையில் சொன்னாரோ, அதன்படியே காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததால் ஏழை மக்களின் வங்கி கணக்கில் குறைந்தபட்ச நிதி போடுவேன் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். அதை ராகுல் காந்தி நடைமுறைப்படுத்துவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    சென்னை விமானநிலையத்தில் கின்னஸ் சாதனைக்காக 300 வகை இயற்கை உணவுகளை மாணவர்கள் தயாரித்தனர். #ChennaiAirport
    ஆலந்தூர்:

    ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வலியுறுத்தி காய்கறிகள் மற்றும் பழங்களை வைத்து உணவு தயாரிக்கும் நிகழ்ச்சி சென்னை விமான நிலையத்தில் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

    எண்ணை சேர்க்காமல், காய்கறிகளை வேக வைக்காமல் 3.05 நிமிடத்தில் இந்த இயற்கையான உணவுகள் தயாரிக்கப்பட்டது. இதில் கல்லூரி மாணவர்கள் 300 பேர் கலந்துகொண்டு 300 வகையான உணவுகளை தயாரித்தனர்.

    கின்னஸ் சாதனைக்காக ஜியோ இந்தியா பவுண்டேசன் மற்றும் விமானநிலைய கல்யாண் மயி ஆகியோர் இணைந்து இந்த முயற்சியை மேற்கொண்டனர். நிகழ்ச்சியில் சென்னை விமானநிலைய இயக்குனர் சந்திரமவுலி, நடிகை அஞ்சனா, சமையல் கலைஞர் படையல் சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #ChennaiAirport
    சென்னை பல்லாவரம் அருகே அ.தி.மு.க. பிரமுகரிடம் போலி நகையை விற்று ரூ.40 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
    தாம்பரம்:

    சென்னை பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர் நவ ரத்தன்மால் (வயது52). இவர் பல்லாவரம் இந்திராகாந்தி பிரதான சாலையில் நவரத்தன் ஜெயின் என்ற பெயரில் நகைக்கடை மற்றும் அடகுகடை நடத்தி வருகிறார்.

    அ.தி.மு.க. பிரமுகரான இவர் காஞ்சீபுரம் மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளராகவும் உள்ளார். இவரது சொந்த ஊர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் ஆகும். கடந்த 10 வருடங்களாக இவர் இங்கு நகைக்கடையையும், அடகு கடையையும் நடத்தி வருகிறார்.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அவரது கடைக்கு 4 பேர் வந்தனர். அவர்கள் நவரத்தன் மாலிடம் தங்களது சொந்த ஊரும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர்தான் என்று கூறினார்கள். உங்கள் உறவினர்களை எங்களுக்கு தெரியும் என்றுகூறி அவரது உறவினர்களின் பெயர்களையும் கூறினார்கள். இதனால் நவரத்தன் மால் அவர்களிடம் நன்றாக பேசினார்.

    அந்த 4 பேரும் தாங்கள் ஜெய்ப்பூரில் மாடுகளை வளர்த்து பால்பண்ணை நடத்தி வருவதாக தெரிவித்தனர். சென்னையில் தொழில்தொடங்கப் போவதாகவும் அதற்காக நகையை விற்று பணம் பெற வந்திருப்பதாகவும் தெரிவித்தனர். அவரும் நகைகளுக்கு பணம் தர சம்மதித்தார்.

    2½ கிலோ எடைகொண்ட 64 காசு மாலைகளை அவரிடம் கொடுத்து ரூ.40 லட்சம் பணம் கேட்டனர். அந்த காசுமாலைகளை வாங்கி லேசாக உரசிப் பார்த்த போது தங்கம் போலவே இருந்ததால் நவரத்தன்மால் அதற்கு ரூ.40 லட்சம் பணத்தை கொடுத்தார். 4 பேரும் பணத்தை வாங்கிக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.

    நவம்பர் மாதம் புதிய நகைகள் தயாரிக்கலாம் என்று கருதிய நவரத்தன் மால் அந்த காசு மாலைகளை உருக்கினார். அப்போது அது போலி நகை என்று தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த நவரத்தன் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இதுகுறித்து அவர் கடந்தமாதம் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த பல்லாவரம் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.

    இதைத்தொடர்ந்து பல்லாவரம் போலீசார் போலி நகை மோசடி குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி 4 பேரையும் தேடி வருகிறார்கள்.
    இலங்கையில் இருந்து சென்னை வந்த விமானத்தில் ரூ.29 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து 7 பேரை போலீசார் கைது செய்தனர். #ChennaiAirport
    ஆலந்தூர்:

    இலங்கையில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    அப்போது 7 வாலிபர்களின் நடவடிக்கைகளில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதையடுத்து அவர்களை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அவர்கள் அனைவரும் உடலில் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்து இருப்பது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். மொத்தம் 870 கிராம் தங்கம் இருந்தது. இதன் மதிப்பு ரூ. 29 லட்சம் ஆகும்.

    தங்கம் கடத்தி வந்த 7 பேரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். பிடிபட்டவர்களில் 4 பேர் ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர்கள். மற்ற 3 பேரும் சென்னை வாலிபர்கள். அவர்கள் குருவியாக செயல்பட்டு தங்கம் கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது.

    தங்கம் கடத்தலில் பின்னணியில் உள்ளவர்கள் யார்? யாருக்கு தங்கம் கடத்தப்பட்டது என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது. #ChennaiAirport
    பொய்யான வாக்குறுதிகளை அளித்து காங்கிரஸ் வெற்றி பெற முயற்சிப்பதாக மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். #BJP #PonRadhakrishnan #Congress #Rahulgandhi
    ஆலந்தூர்:

    மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பிரதமர் மோடி கடந்த 27-ந்தேதி மதுரை வந்து, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். பா.ஜனதா கூட்டத்திலும் பங்கேற்றார். இது தமிழக அரசியலில் எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

    வருகிற 10-ந்தேதி திருப்பூருக்கும், 19-ந்தேதி கன்னியாகுமரிக்கும் பிரதமர் வருகிறார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கவும், கூட்டங்களை பிரமாண்டமாக நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவரது வருகை புதிய எழுச்சியை ஏற்படுத்தும்.



    ஏழைகளுக்கு வருமானம் வரும் திட்டத்தை ராகுல்காந்தி தேர்தல் வாக்குறுதியாக அறிவித்துள்ளார். காங்கிரஸ் இதுபோன்ற பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து தேர்தலில் வெற்றி பெற முயற்சி செய்கிறது. மக்கள் இதை நம்ப மாட்டார்கள்.

    இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது 20 அம்ச திட்டத்தை அறிவித்தார். அந்த வாக்குறுதி என்ன ஆனது? அதுபோல இப்போதும் மக்களை ஏமாற்ற பொய்யான வாக்குறுதிகளை அளிக்கிறார்கள். இதை ஏற்க மக்கள் தயாராக இல்லை.

    தமிழ்நாட்டில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதை முடிவுக்கு கொண்டு வர அரசு நல்ல முடிவு எடுக்க வேண்டும். போராட்டம் செய்பவர்களை அழைத்துப் பேசி நல்ல தீர்வு ஏற்பட செய்வார்கள் என்று நம்புகிறேன்.

    இந்து மதம் வாட்ஸ்அப் மூலம் வளரும் நிலை உள்ளதாக விஜயேந்திரர் வருத்தப்பட்டுள்ளார். துறவிகள் மதத்தின் காவலர்கள். இந்து மதத்தை எந்த காலத்திலும் அழிக்க முடியாது. நவீன தொழில் நுட்பம் வளர்ந்துள்ள இந்த காலத்தில் இளைஞர்கள் அதற்காக அதிக நேரத்தை செலவிடுகிறார்கள்.

    ஓட்டுப்பதிவு எந்திரம் மூலம் பா.ஜனதா தில்லு முல்லு செய்வதாக காங்கிரஸ் பொய் பிரசாரம் செய்து வருகிறது. சமீபத்தில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் 3 மாநிலங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. பல இடைத்தேர்தல்களில் பா.ஜனதா வெற்றி வாய்ப்புகளை இழந்துள்ளது.

    உண்மை இவ்வாறு இருக்க ஓட்டு எந்திரங்களில் மோசடி செய்வதாக காங்கிரஸ் கூறுவது ஜனநாயக நம்பிக்கையை அழிக்கும் செயல். உண்மையை மறைத்து ஆதாயம் பெற காங்கிரஸ் முயற்சிக்கிறது.

    தமிழ்நாட்டில் பா.ஜனதா வலுவான கூட்டணி அமைக்கும். பாராளுமன்ற தேர்தலில் 10 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெறும்.

    10 சதவீத இட ஒதுக்கீடு குறித்து எதிர்க்கட்சிகள் தவறான கருத்துக்களை கூறி வருகின்றன. ஏழைகளுக்கு உதவுவதற்காக பிரதமர் மோடி கொண்டு வந்த அருமையான திட்டம் இது. ஏழைகள் முன்னேறாமல் ஜாதி எப்படி ஒழியும்?

    தமிழ்நாட்டில் பா.ஜனதா பரிதாப நிலையில் உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். இதை சொல்லும் அவருடைய நிலைமை தான் பரிதாபமாக உள்ளது.

    இவ்வாறு பொன்.ராதா கிருஷ்ணன் கூறினார். #BJP #PonRadhakrishnan #Congress #Rahulgandhi
    கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தை திசைதிருப்பும் நோக்கில் தான் இதுவரை இந்த அரசு ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை அழைத்து பேச மறுத்து வருவதாக டி.டி.வி. தினகரன் குற்றம்சாட்டினார். #TTVDhinakaran #KodanadIssue
    மாமல்லபுரம்:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மக்கள் சந்திப்பு சுற்றுபயணமாக நேற்று இரவு கல்பாக்கம் வந்தார். அப்போது நிருபர்களிடம் கூறியதாவது:-

    கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தை திசைதிருப்பும் நோக்கில் தான் இதுவரை இந்த அரசு ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை அழைத்து பேச மறுத்து வருகிறது. இது அரசுக்கு ஆரோக்கியமானது அல்ல.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் இந்த அரசுக்கு முடிவு கட்டப்படும். தேர்தலில் கூட்டணி குறித்து எங்களிடம் சில கட்சிகள் பேசி வருகிறார்கள் விரைவில் நல்ல முடிவை அறிவிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #KodanadIssue
    திருநின்றவூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் கணவரை மனைவி கொன்று புதைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருநின்றவூர்:

    திருநின்றவூரை அடுத்த கொட்டாம்பேடு கொசவன்பாளையம் ஆற்றங்கரையில் கடந்த 16-ந்தேதி அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடந்தது.

    திருநின்றவூர் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பிணமாக கிடந்தவர் யார்? என்பது தெரியாமல் இருந்தது.

    இந்த நிலையில் பிணமாக கிடந்தது விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தைச் சேர்ந்த குமார் (வயது40) என்பதும் கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டு இருப்பதும் தெரிந்தது.

    இதையடுத்து குமாரின் மனைவி செல்வி, அவரது கள்ளக்காதலன் மணிகண்டன், கூட்டாளிகள் அய்யனார், பூமிநாதன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கொலையுண்ட குமாருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

    குமாரின் மனைவி செல்விக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டனுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. மணிகண்டன் திருநின்றவூரில் உள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வந்தார். இதுபற்றி அறிந்த குமார் மனைவியை கண்டித்தார். எனினும் செல்வி கள்ளக்காதலை கைவிடாமல் இருந்தார்.

    இதற்கிடையே குமாருக்கு கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளி வேலை கிடைத்தது. இதனால் கடந்த 2 மாதத்துக்கு முன்பு அவர் குடும்பத்துடன் கூடுவாஞ்சேரிக்கு இடம் பெயர்ந்தார்.

    இதனை அறிந்த மணிகண்டன் அடிக்கடி செல்வியை சந்தித்து கள்ளக்காதலை வளர்த்து வந்தார்.

    மணிகண்டன் மீண்டும் நெருங்குவதை அறிந்த குமார் மனைவியை கண்டித்தார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    இதையடுத்து கணவன் உயிரோடு இருந்தால் கள்ளக்காதலனோடு உல்லாசமாக இருக்க முடியாது என்று நினைத்த செல்வி கணவரை கொலை செய்ய முடிவு செய்தார். இதற்கு கள்ளக்காதலன் மணிகண்டனும் ஒப்புக்கொண்டார்.

    கடந்த 10-ந்தேதி இரவு குமாருடன் பாசமாக இருப்பது போல் செல்வி நடித்து பாயாசம் தயாரித்து கொடுத்தார். அதில் தூக்க மாத்திரை கலந்து இருந்தார்.

    இதனை அறியாத குமார் பாயாசம் குடித்த சிறிது நேரத்தில் மயங்கினார். இதுபற்றி செல்வி கள்ளக்காதலனுக்கு தெரிவித்தார்.

    அப்பகுதியில் தயாராக நின்ற மணிகண்டன், தனது கூட்டாளிகளான உடன் வேலை பார்க்கும் அய்யனார், பூமிநாதன் ஆகியோருடன் குமாரின் வீட்டுக்குச் சென்றனர். அவர்கள் கயிற்றால் இறுக்கி குமாரை கொலை செய்தனர்.

    பின்னர் குமாரின் உடலை மோட்டார் சைக்கிளில் எடுத்து திருநின்றவூர் கொசவன்பாளையம் ஆற்றில் புதைத்து தப்பி சென்று விட்டனர். பதட்டத்தில் உடல் அறை குறையாக புதைக்கப்பட்டதால் நாய்கள் வெளியே இழுத்தன. இதனால் துர்நாற்றம் வீசி உடல் வெளியே தெரிந்துவிட்டது.

    கொலைக்கு வேறு யாரேனும் உதவினார்களா? என்பது குறித்து கைதான செல்வி உள்பட 4 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    செங்கல்சூளையில் மணிகண்டனும் அவனது கூட்டாளிகளும் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது அவர்களுக்குள் சிறு சிறு தகராறு ஏற்பட்டது. அப்போது அவர்கள் ஒருவருக்கொருவர் கொலை பற்றி தெரிவித்து மிரட்டி வந்தனர்.

    இதனை கண்டு சந்தேகம் அடைந்த மற்ற தொழிலாளர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் மணிகண்டன் கூட்டாளிகளுடன் சேர்ந்து குமாரை தீர்த்து கட்டியதை ஒப்புக்கொண்டார்.

    கள்ளக்காதல் விவகாரத்தில் கணவரை மனைவி கொன்று புதைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    செம்மஞ்சேரியில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சட்னியில் உயிருடன் எலி இருந்த சம்பவம் குறித்து மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சோழிங்கநல்லூர்:

    செம்மஞ்சேரியில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இங்குள்ள விடுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியுள்ளனர். இன்று காலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சட்னியில் உயிருடன் இருந்த எலி ஒன்று தத்தளித்தபடி இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவர்கள் காலை உணவு சாப்பிடவில்லை.

    இந்தநிலையில் இன்று காலை கல்லூரிக்கு வந்த மாணவர்கள் வகுப்பிற்கு செல்லாமல் கல்லூரி வளாகத்திலேயே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் கல்லூரி நிர்வாகத்தினர், செம்மஞ்சேரி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணி குறைந்தபட்சம் தமிழகத்தில் 30 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். #PonRadhakrishnan #BJP
    ஆலந்தூர்:

    மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ம.தி.மு.க. தோன்றிய நாள் முதல் இந்நாள் வரை தமிழகத்தில் எந்தெந்த திட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. என்ன திட்டங்கள் வேண்டும் என்று கேட்டுள்ளது என்ற பட்டியலை போட வேண்டும். எந்த திட்டத்தை பற்றியும் பேசாமல், எந்த திட்டத்துக்கும் குரல் கொடுக்காமல் போராட்டத்துக்கு மட்டும் களம் இறங்கும் ஒரு கட்சியாக ம.தி.மு.க. இருக்கிறது. இது துரதிருஷ்டமானது.



    நேற்று பிரதமருக்கு ம.தி.மு.க. கருப்பு கொடி காட்டியது பிரதமருடைய பெயருக்கோ, புகழுக்கோ, எந்த பாதகமும் விளைவிக்கவில்லை. தமிழக மக்களுக்கு தேவையான எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி சென்றுள்ளார்.

    இதற்கு முன்பும், லட்சக்கணக்கான மக்களுக்கு வேலை தர, பாதுகாப்பு உபகரணங்கள் போன்ற தொழிற்சாலைகள் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீட்டில் மத்திய அரசு திட்டங்களை ஏற்படுத்தி தந்திருக்கிறது. இதையெல்லாம் அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

    பா.ஜனதா அரசும், பிரதமர் மோடியும் தமிழகத்துக்கு அங்கீகாரம், வேலைவாய்ப்பு, போன்ற நல்ல திட்டங்களை கொடுத்துள்ளார். இதற்கு நேர்மாறாக சில கட்சிகள் எதிராக செயல்படுகிறார்கள். இது தமிழ்நாட்டு மக்களுக்கு செய்யும் துரோகம்.

    நேற்று பிரதமர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிபரப்பவில்லை என்ற சர்ச்சையை ஏற்றுக்கொள்ள முடியாது. பா.ஜனதாவும், பிரதமர் மோடியும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கும், தமிழுக்கும், தமிழ்த்தாய்க்கும் எந்த அவமானமும் வர விட மாட்டார்கள். ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள்.

    கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கத்துக்கு மாநில அரசின் ஒப்புதலை பெற்று இருக்கிறோம். அதற்கான வேலைகள் துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    தமிழகத்தில் மெகா கூட்டணி அமைக்கிறவர்களின் செல்வாக்கு மக்கள் மத்தியில் என்ன என்று தேர்தல் நேரத்தில் பார்ப்போம். பா.ஜனதா கூட்டணி உரிய நேரத்தில் அமைக்கப்படும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணி குறைந்தபட்சம் தமிழகத்தில் 30 தொகுதிகளில் வெற்றி பெறும்.

    நாட்டின் நலன் கருதி, தமிழக மக்களின் நலன் கருதி கூட்டணி அமைக்கப்படும். அடுத்த மாதம் 10-ந்தேதி திருப்பூருக்கும், 19-ந்தேதி கன்னியாகுமரிக்கும் பிரதமர் வர இருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார். #PonRadhakrishnan #BJP

    ×