search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொய் வாக்குறுதி அளித்து காங்கிரஸ் வெற்றி பெற முயற்சி- பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
    X

    பொய் வாக்குறுதி அளித்து காங்கிரஸ் வெற்றி பெற முயற்சி- பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

    பொய்யான வாக்குறுதிகளை அளித்து காங்கிரஸ் வெற்றி பெற முயற்சிப்பதாக மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். #BJP #PonRadhakrishnan #Congress #Rahulgandhi
    ஆலந்தூர்:

    மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பிரதமர் மோடி கடந்த 27-ந்தேதி மதுரை வந்து, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். பா.ஜனதா கூட்டத்திலும் பங்கேற்றார். இது தமிழக அரசியலில் எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

    வருகிற 10-ந்தேதி திருப்பூருக்கும், 19-ந்தேதி கன்னியாகுமரிக்கும் பிரதமர் வருகிறார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கவும், கூட்டங்களை பிரமாண்டமாக நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவரது வருகை புதிய எழுச்சியை ஏற்படுத்தும்.



    ஏழைகளுக்கு வருமானம் வரும் திட்டத்தை ராகுல்காந்தி தேர்தல் வாக்குறுதியாக அறிவித்துள்ளார். காங்கிரஸ் இதுபோன்ற பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து தேர்தலில் வெற்றி பெற முயற்சி செய்கிறது. மக்கள் இதை நம்ப மாட்டார்கள்.

    இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது 20 அம்ச திட்டத்தை அறிவித்தார். அந்த வாக்குறுதி என்ன ஆனது? அதுபோல இப்போதும் மக்களை ஏமாற்ற பொய்யான வாக்குறுதிகளை அளிக்கிறார்கள். இதை ஏற்க மக்கள் தயாராக இல்லை.

    தமிழ்நாட்டில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதை முடிவுக்கு கொண்டு வர அரசு நல்ல முடிவு எடுக்க வேண்டும். போராட்டம் செய்பவர்களை அழைத்துப் பேசி நல்ல தீர்வு ஏற்பட செய்வார்கள் என்று நம்புகிறேன்.

    இந்து மதம் வாட்ஸ்அப் மூலம் வளரும் நிலை உள்ளதாக விஜயேந்திரர் வருத்தப்பட்டுள்ளார். துறவிகள் மதத்தின் காவலர்கள். இந்து மதத்தை எந்த காலத்திலும் அழிக்க முடியாது. நவீன தொழில் நுட்பம் வளர்ந்துள்ள இந்த காலத்தில் இளைஞர்கள் அதற்காக அதிக நேரத்தை செலவிடுகிறார்கள்.

    ஓட்டுப்பதிவு எந்திரம் மூலம் பா.ஜனதா தில்லு முல்லு செய்வதாக காங்கிரஸ் பொய் பிரசாரம் செய்து வருகிறது. சமீபத்தில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் 3 மாநிலங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. பல இடைத்தேர்தல்களில் பா.ஜனதா வெற்றி வாய்ப்புகளை இழந்துள்ளது.

    உண்மை இவ்வாறு இருக்க ஓட்டு எந்திரங்களில் மோசடி செய்வதாக காங்கிரஸ் கூறுவது ஜனநாயக நம்பிக்கையை அழிக்கும் செயல். உண்மையை மறைத்து ஆதாயம் பெற காங்கிரஸ் முயற்சிக்கிறது.

    தமிழ்நாட்டில் பா.ஜனதா வலுவான கூட்டணி அமைக்கும். பாராளுமன்ற தேர்தலில் 10 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெறும்.

    10 சதவீத இட ஒதுக்கீடு குறித்து எதிர்க்கட்சிகள் தவறான கருத்துக்களை கூறி வருகின்றன. ஏழைகளுக்கு உதவுவதற்காக பிரதமர் மோடி கொண்டு வந்த அருமையான திட்டம் இது. ஏழைகள் முன்னேறாமல் ஜாதி எப்படி ஒழியும்?

    தமிழ்நாட்டில் பா.ஜனதா பரிதாப நிலையில் உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். இதை சொல்லும் அவருடைய நிலைமை தான் பரிதாபமாக உள்ளது.

    இவ்வாறு பொன்.ராதா கிருஷ்ணன் கூறினார். #BJP #PonRadhakrishnan #Congress #Rahulgandhi
    Next Story
    ×