என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு எங்களுக்கு அழைப்பு வரும் - திருமாவளவன்
    X

    தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு எங்களுக்கு அழைப்பு வரும் - திருமாவளவன்

    தி.மு.க. தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீட்டுக்கான பேச்சுவார்த்தைக்கு எங்களுக்கு அழைப்பு விடுப்பார்கள் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். #Thirumavalavan
    ஆலந்தூர்:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் நடந்த தேசம் காப்போம் மாநாட்டில் தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு, ம.தி.மு.க. தலைவர்கள் கலந்து கொண்டனர். இது தேர்தலுக்கான வெற்றிக் கூட்டணிக்கு அடித்தளத்தை அமைக்கின்ற மாநாடாக இருந்தது.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகம்- புதுவையில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். இந்த மாநாடு தேர்தலுக்கான பிரசார பொதுக்கூட்டமாக தேர்தல் கூட்டணியை வலுப்படுத்தும் வகையில் அமைந்தது.

    காங்கிரஸ் பொதுச்செயலாளராக பிரியங்காவை நியமித்ததை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது. பிரியங்காவுக்கு பதவி வழங்கியதில் பிரதமர் உள்பட பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    மோடி பதறுவதில் இருந்தே பிரியங்காவின் முக்கியத்துவம் தெரிகிறது. உத்தரபிரதேச மாநிலத்தில் பிரியங்காவை தேர்தல் பொறுப்பாளராக நியமித்தது ராகுல்காந்தியின் யுக்தியை காட்டுகிறது.

    தி.மு.க. தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீட்டுக்கான குழுவை அமைத்துள்ளது. அவர்கள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்குவார்கள். எங்களுக்கு அழைப்பு விடுப்பார்கள் என்று நம்புகிறேன். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நான் என்ன செய்துள்ளேன் என்பது தெரியும்.

    கொடநாடு விவகாரத்தில் தி.மு.க. முன் வைத்திருக்கிற கோரிக்கைகள் நியாயமானது. இதில் எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியில் இருக்கும்போது விசாரணை நடத்தினால் உண்மை வெளியில் வராது.

    எனவே அவர் பதவி விலக வேண்டும். கொடநாடு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியே முன்வந்து சிறப்பு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும். அல்லது சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ViduthalaiChiruthaikalKatchi #Thirumavalavan
    Next Story
    ×