search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DMK party"

    தி.மு.க. ஆட்சிக்கு வர மக்கள் துணை நிற்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #MKStalin #DMK

    திருப்போரூர்:

    திருப்போரூரை அடுத்த இள்ளலூர் ஊராட்சியில் தி.மு.க. சார்பில் ஊராட்சி கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

    இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

    அண்ணா, கலைஞர் ஆகியோர் வழியில், ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்களுக்கு தேவையானது கிடைக்க போராடுவதற்காக தி.மு.க. தமிழ்நாடெங்கும் இந்த ஊராட்சிசபை கூட்டத்தின் மூலம் மக்களை நேரிடையாக சந்தித்து வருகிறது. தமிழகத்தில் நடைபெறும் எடப்பாடி ஆட்சிக்கு மத்தியில் நடைபெறும் மோடி ஆட்சி முட்டுக்கொடுத்து காப்பாற்றி வருகிறது. இரண்டையும் அகற்றுவதுதான் நீங்கள் வைக்கப்போகும் முற்றுப் புள்ளி. அதற்கு மாற்றாக தி.மு.க. ஆட்சிக்குவர நீங்கள் செலுத்தும் வாக்குதான் நாட்டில் நல்லது நடப்பதற்கான தொடக்கப்புள்ளி.

    மக்களை நேரிடையாக சந்திக்க தி.மு.க.வைத்தவிர எந்தக்கட்சியாலும் முடியாது. தி.மு.க. ஆட்சியில் இங்கு தொடங்கப்பட்ட தொழிற்சாலைகள் மூலம் வேலைவாய்ப்பு உருவாகி பயனடைந்தனர். ஆனால் இன்று வேலைவாய்ப்பு இல்லாமை தலைவிரித்தாடுகிறது. தொழிற்சாலைகள் தொடங்க கமி‌ஷன் கேட்பதால் பல நிறுவன முதலாளிகள் இங்கு வர பயப்படுகின்றனர். அவர்கள் பக்கத்து மாநிலங்களுக்கு செல்லும் நிலை உள்ளது.

    ஜெயலலிதா மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றபோது அமைச்சர்களோ மற்றும் நிர்வாகிகளோ பார்க்கவில்லை அவருடைய உடல்நிலைகுறித்து எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. ஆனால் கலைஞர் மருத்துவ மனையில் இருந்தபோது பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வந்து அவரை பார்த்தனர். அதுவும் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அந்த கட்சி அமைச்சர் ஒருவரே சொல்லியிருக்கிறார்.

    மீண்டும் தி.மு.க. ஆட்சிதான் வரும் என்று எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ பொதுமக்களுக்கும், இங்கு வந்துள்ள பெண்களுக்கும் நம்பிக்கை உள்ளது. இன்னும் 4 மாதத்தில் வரப்போகிற பாராளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வரப்போகிறது என மக்கள் பேசத்தொடங்கிவிட்டனர்.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் உள்ளாட்சிதேர்தல் நடத்தப்படும். உள்ளாட்சி தேர்தல் நடத்தாதற்கு தி.மு.க. தான் காரணம் என அ.தி.மு.க. சார்பில் பரப்பப்படுகிறது. உரிய இடஒதுக்கீடு அடிப்படையில் உள்ளாட்சிதேர்தலை நடத்தவேண்டும் என்றுதான் நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தோம். கலைஞர் ஆட்சியில்தான் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதை பார்த்துதான் மற்ற மாநிலங்களிலும் பின்பற்றினார்கள்.

    தி.மு.க. ஆட்சியில் பெண்கள் தன்னம்பிக்கையுடன் வாழ, தலைநிமிர்ந்து நிற்க எண்ணற்ற மகளிர்சுய உதவிக்குழுக்களுக்கு சுழல்நிதி கடன் வழங்கப்பட்டது நானே முன்னின்று வழங்கியுள்ளேன். பா.ஜனதா தமிழ்நாட்டில் அ.தி.மு.க. மூலம் நுழைய முயற்சி செய்கிறது. மத்தியில் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு கொண்டு வருவதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்தது. இதுபற்றி சட்டமன்றத்திலும் தெரிவித்தோம். ஆனால் அ.தி.மு.க. கபடநாடகம் ஆடுகிறது.

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில்வாடும் 7 பேரை விடுவிக்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு என்ன ஆனது. ஆனால் தர்மபுரி பஸ் எரிப்பில் தண்டனைக்குள்ளானவர்கள் விடுவிக்கப்படுகின்றனர். மத்திய மாநிலத்தில் உள்ள இந்த 2 கட்சிக்கும் முற்றுப்புள்ளி வைத்து தி.மு.க. ஆட்சி மலர தொடக்கபுள்ளி வைக்க வேண்டும்.

    ஊராட்சிசபை கூட்டத்தில் பேசிய அனைவரும் தங்கள் பகுதிக்கு பஸ்வசதி, மருத்துவமனை, புதிய பள்ளிக் கட்டிடம், சாலை வசதி, குடிநீர் மற்றும் ஆட்சிக்கு வந்தால் மது ஒழிப்பு உள்ளிட்டவை குறித்து கேட்டனர்.

    முன்னதாக அங்கு நிறுவப்பட்ட புதிய கொடிக் கம்பத்தில் தி.மு.க. கொடியை மு.க.ஸ்டாலின் ஏற்றிவைத்தார். இதில் காஞ்சி வடக்கு மாவட்டசெயலாளர் தா.மோ.அன்பரசன், ஒன்றியசெயலாளர்கள் இதயவர்மன், சேகர், படப்பை மனோகரன், நகரசெயலாளர் தேவராஜ், மற்றும் தி.மு.க. மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #MKStalin #DMK

    கட்சியில் என்னை சேர்க்காவிட்டால் அதற்கான பின்விளைவுகளை தி.மு.க. சந்திக்க வேண்டியது இருக்கும் என்று மு.க.அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார். #DMK #MKAzhagiri #MKStalin
    மதுரை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவுக்கு பிறகு முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி போர்க்கொடி உயர்த்தி வருகிறார். மு.க.ஸ்டாலினுக்கு எதிராக கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார்.

    வருகிற 5-ந்தேதி தனது ஆதரவாளர்களை திரட்டி சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடம் நோக்கி பேரணி செல்லப்போவதாகவும் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

    அதற்கான வேலைகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார். மாநிலம் முழுவதும் உள்ள தனது ஆதரவாளர்களை சந்தித்து வருகிறார்.

    கடந்த சில நாட்களாக மதுரையில் உள்ள தனது வீட்டில் இருந்தபடியே ஆதரவாளர்களிடம் பேரணியை வெற்றிகரமாக நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

    நேற்று நிருபர்களிடம் பேசிய அவர், இடைத்தேர்தல் வந்தால் வேட்பு மனுதாக்கல் செய்வோம் என்று பரபரப்பை ஏற்படுத்தினார்.

    இன்றும் மு.க.அழகிரி நிர்வாகிகள், தொண்டர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கட்சி தொண்டர்களின் விருப்பத்தின் பேரிலேயே சென்னையில் 5-ந்தேதி மெரினா நோக்கி பேரணி செல்கிறோம். கருணாநிதி இல்லை என்பதால்தான் தி.மு.க.வை காப்பாற்ற களம் இறங்கி உள்ளோம்.


    தி.மு.க.வில் என்னை சேர்க்கவில்லை என்றால் அதற்கான பின்விளைவுகளை அந்த கட்சி சந்திக்க வேண்டியது இருக்கும் என்றார்.

    அப்போது நிருபர்கள், 5-ந்தேதி பேரணியில் தி.மு.க. தலைவர்கள் யாராவது பங்கேற்க உள்ளார்களா? என கேள்வி எழுப்பினர். யூகத்தின் அடிப்படையிலான கேள்விகளுக்கு பதில் அளிக்க விரும்பவில்லை என மு.க.அழகிரி தெரிவித்தார். #DMK #MKAzhagiri #MKStalin
    தி.மு.க.வில் மாநில அளவிலான பதவி வேண்டும் என்று மு.க. அழகிரி கேட்பதாகவும், இது குறித்து பொதுக்குழுவில் இறுதி முடிவு எடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. #DMK #MKAlagiri #MKStalin
    மதுரை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்ததால் புதிய தலைவர் மற்றும் நிர்வாகிகளை நியமிப்பது பற்றி ஆலோசனை நடத்த தி.மு.க.வின் அவசர செயற்குழு கூட்டம் சென்னையில் வருகிற 14-ந் தேதி நடைபெறுகிறது.

    தி.மு.க.வின் தென் மண்டல அமைப்புச் செயலாளராக இருந்த முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரிக்கு மீண்டும் பதவி அளிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அவர் ஏற்கனவே கட்சி பொறுப்பில் இருந்தும் உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

    அவருக்கு மீண்டும் கட்சி பொறுப்பு வழங்க வேண்டும் என்று தி.மு.க.வின் ஒரு பிரிவினர் விரும்புகிறார்கள்.

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவு போல தி.மு.க.வில் எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று தி.மு.க. மேலிடத் தலைவர்களும், கருணாநிதியின் குடும்பத்தினரும் விரும்புகிறார்கள்.

    அதனால் மு.க.அழகிரியை மீண்டும் கட்சி பணிக்கு கொண்டு வரவும், அவருக்கு ஏற்கனவே வழங்கிய தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவியை மீண்டும் கொடுக்க வேண்டும் என்றும் வற்புறுத்துகிறார்கள்.

    ஆனால் மு.க.அழகிரி அந்த பொறுப்பை பெற விரும்பவில்லை என்றும், மாநில அளவிலான பதவி வேண்டும் என்று கேட்பதாகவும் தெரிகிறது.

    தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அனைத்து பொறுப்புகளிலும் உள்ள நிர்வாகிகள், தொண்டர்களின் பிரச்சனைகளை நேரடியாக ஆய்வு நடத்தும் அதிகாரம் இருந்தால் தான் தனக்கு கவுரவமாக இருக்கும் என்று அவர் விரும்புவதாக தெரிகிறது.

    இந்த பொறுப்பை வழங்கினால் விரைவில் வர உள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் தி.மு.க. வெற்றி பெறுவதற்கான அனைத்து வியூகங்களையும் முன்னின்று எடுக்க தயாராக இருப்பதாக மு.க.அழகிரி தரப்பில் கூறப்படுகிறது.

    மு.க.அழகிரியின் விருப்பம் குறித்து பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

    மு.க.அழகிரி ஒதுங்கி இருக்காமல் கட்சி வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும். அதற்குரிய பதவி அவருக்கு வழங்கப்பட வேண்டும் என்று கருணாநிதியின் குடும்பத்தினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    இதனால் மு.க.அழகிரிக்கு விரைவில் பதவி வழங்கப்படலாம் என்று அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கையில் உள்ளனர்.

    இது குறித்து செயற்குழுவில் ஆலோசனை நடத்தப்பட்டாலும் பொதுக்குழுவில் தான் இறுதி முடிவு எடுக்க வாய்ப்பு இருக்கிறது. #DMK #MKAlagiri #MKStalin
    புதுவை எம்.பி. தொகுதியை காங்கிரசுக்கு விட்டுக் கொடுக்க முடியாது என்று தி.மு.க. பதிலடி கொடுத்துள்ளது.

    புதுச்சேரி:

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது. புதுவையில் உள்ள அரசியல் கட்சிகள் பாராளு மன்ற தேர்தலுக்கு தயாராகும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

    புதுவை எம்.பி. தொகுதியில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து காங்கிரஸ் கட்சியே மீண்டும் போட்டியிடும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் கூறியிருந்தார்.

    மேலும் புதுவை எம்.பி. தொகுதியை தி.மு.க.வுக்கு விட்டு கொடுக்க மாட்டோம் என்றும் அவர் கூறினார். இதற்கு புதுவை எம்.பி. தொகுதியை காங்கிரசுக்கு விட்டுக் கொடுக்க முடியாது என்று தி.மு.க. பதிலடி கொடுத்துள்ளது.

    புதுவை தெற்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. கூறியதாவது:-

    எம்.பி. தொகுதியை விட்டுத்தர மாட்டோம் என காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் கூறியதால், நாங்களும் கருத்து கூற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    புதுவை லோக்சபா தேர்தலில் தி.மு.க. போட்டியிடுவது உறுதி. அதற்காக புதுவையில் இருந்து சென்னை வரை அங்கபிரதட்சணமாக சென்று கூட கட்சி தலைமையிடம் வலியுறுத்த நிர்வாகிகளும், தொண்டர்களும் தயாராக உள்ளோம். முதல்-அமைச்சர் நாராயணசாமி, ராஜ்ய சபாவுக்கு சென்றதும், 2009-ம் ஆண்டு லோக் சபாவுக்கு சென்றதும் தி.மு.க. கூட்டணியால்தான்.

    அதே போன்று மோகன் குமாரமங்கலம், சண்முகம், பரூக் என காங்கிரஸ் எம்.பி.யாக இருந்தவர்கள் தி.மு.க. கூட்டணி தயவில் தான் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் எம்.பி.க்கள் இதுவரை கூட்டணி தயவின்றி வெற்றி பெற்றது கிடையாது.

    புதுவை எம்.பி. தொகுதியை கேட்கும் உரிமை காங்கிரஸ் கட்சிக்கு எப்படி உள்ளதோ, அதே போல் எங்களுக்கும் தொகுதியை கேட்க உரிமை உள்ளது. கண்டிப்பாக வரும் லோக்சபா தேர்தலில் தொகுதியை விட்டுக் கொடுக்க மாட்டோம்.

    இவ்வாறு சிவா கூறினார்.

    இது தொடர்பாக தி.மு.க. வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி. சிவக்குமார், கூறும் போது, தி.மு.க. தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம். தனிப்பட்ட முறையில் எந்த முடிவையும் தெரிவிக்க முடியாது என்றார்.

    புதுவையில் கூட்டணியில் உள்ள காங்கிரஸ்- தி.மு.க. இருகட்சிகளுமே புதுவை எம்.பி. தொகுதியில் போட்டியிட குறி வைத்திருப்பது கூட்டணியில் சலசலப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    ×