search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரியில்மாம்பழம், வாழைத்தார்களை பழுக்க வைக்க புது ரசாயனம்
    X

    தருமபுரியில்மாம்பழம், வாழைத்தார்களை பழுக்க வைக்க புது ரசாயனம்

    • ருசி தன்மையை இழந்து இருக்கும் எத்திலின் பொடியில் இருந்து, எந்த வாசனையும் வருவதில்லை.
    • இந்த பழங்களை உண்போருக்கு, அதிகளவில் உடல்நல பாதிப்பு ஏற்படும் என, மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி பழ மார்க்கெட் மற்றும் பழக்கடைகளில் செயற்கையாக பழுக்க வைத்து விற்பனை செய்து வரும் பழங்களையும், பழங்களை பழுக்க வைக்க பயன்படுத்தும், எத்திலின் பொடி மற்றும் 'கால்சியம் கார்பைடு' ரசாயன கல்லை, அதிகாரிகள் உடனடியாக தடுத்து வேண்டும்.

    தருமபுரிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து மாம்பழம், வாழைப்பழம், திராட்சை, சாத்துக்குடி, பப்பாளி உள்ளிட்ட பல வகை பழங்களும் விற்பனைக்கு வருகின்றன. கோடைக்காலம் என்பதால், நீர்ச்சத்து அதிகம் உள்ள சாத்துக்குடி, திராட்சை, ஆரஞ்சு, மாம்பழம் போன்ற பழங்கள் அதிக அளவில் விற்பனையாகும். ஏப்ரலில் துவங்கும் மாம்பழ சீசன், ஜூலை வரை நீடிக்கும்.

    தமிழகத்தில் கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களில், வர்த்தக ரீதியாக மாம்பழ உற்பத்தி நடக்கிறது. மாமரம், பூத்து, காய் பருவத்திற்கு வர, எட்டு மாதங்கள் தேவைப்படுகின்றன.

    அதற்குள், காற்று, பனி, மழை உள்ளிட்ட பிரச்னைகளால், மாங்காய் விளைச்சல் பாதிக்கப்படுகிறது.

    இதனால், ஆறு மாதத்திலேயே, காய் பதத்தில் பறிக்கப்பட்டு, விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இந்த மாங்காய், இயற்கையாக பழமாக மாற வேண்டுமானால், ஒரு வார கால அவகாசம் தேவைப்படும். இயற்கையாக கனியும் பழங்கள், நம்மை கவர்ந்த இழுக்கும் வாசனையுடன் மிகவும் ருசியாகவும், உடல் நலத்துக்கு பாதிப்பு இல்லாததாக இருக்கும்.

    ஆனால், வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகள், மாங்காயை உடனடியாக பழுக்க வைக்க, 'கால்சியம் கார்பைடு' என்ற ரசாயன கல்லை பயன்படுத்துகின்றனர். ரசாயன பொருளில் இருந்து வெளியாகும், வெப்பத்தை தாங்க முடியாமல், இரண்டு நாட்களுக்குள், மாங்காய் முழுமையாக பழுத்துவிடும்.

    இந்த பழங்களை உண்பவர்களுக்கு வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வாந்திபேதி போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. சிறு பாக்கெட்டில் வரும் எத்திலின் ரசாயன பொடியை, தண்ணீரில் கரைத்து, பழங்கள் மீது தெளிக்கின்றனர்.

    இவ்வாறு எத்திலின் ரசாயனம் தெளித்த பழங்கள் இயற்கையாக வரும் வாசனை இன்றி காணப்படும். அதேபோல் திருச்சி மாவட்டம், முசிறி, நாமக்கல் மாவட்டம், தொட்டியம், உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினந்தோறும் வாழைத்தார்கள் கொண்டுவரப்பட்டு தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சப்ளை செய்யப்படுகிறது.

    இயற்கையாக வாழைத்தார்கள் பழுக்க குறைந்தபட்சம் 5 நாட்கள் ஆகும். ஆனால் வியாபாரிகள் உடனடி பணம் பார்க்க வேண்டும் என்பதால் எத்திலின் போட்டியை நீரில் கலந்து வாழைத்தார்களை நனைத்து எடுத்து விற்பனை செய்யப்படுகிறது.

    ஒரே நாளில் வாழைத்தார் கண்ணை பறிக்கும் அளவிற்கு மஞ்சள் நிறத்தில் பல பல வென காட்சி அளிக்கும். இந்த பழம் இயற்கையான ருசி தன்மையை இழந்து இருக்கும் எத்திலின் பொடியில் இருந்து, எந்த வாசனையும் வருவதில்லை.

    இதனால், பழங்கள் செயற்கையாக பழுக்க வைத்துள்ளதை, கண்டுபிடிக்க முடிவதில்லை. இந்த பழங்களை உண்போருக்கு, அதிகளவில் உடல்நல பாதிப்பு ஏற்படும் என, மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

    தற்போது மாம்பழம் சீசன் என்பதால் கால்சியம் கார்பைடு வைத்த மாம்பழங்களும் எத்திலின் நீரில் நனைத்த வாழைப்பழங்களும் அதிக அளவு தருமபுரி மாவட்டத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

    வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் வாழைப்பழங்கள் எத்திலின் நீரில் நனைத்து அட்டைப் பெட்டிகளில் பேக்கிங் செய்து தினந்தோறும் சிங்கப்பூர், மலேசியா விமானம் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

    கால்சியம் கார்பைடு' ரசாயன கல் பயன்படுத்த தடை உள்ளது போல், எத்திலின் பயன்படுத்தவும் தடை உள்ளது. பழங்கள் பழுக்க வைக்க, 100 பி.பி.எம்., எத்திலின் வாயு பயன்படுத்தலாம் என, உணவு பாதுகாப்பு ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. ஆனால், எத்திலின் பொடியாகவோ, தண்ணீரில் கலந்தோ பயன்படுத்த அனுமதி வழங்கவில்லை.

    பணத்திற்காக மனிதர்களின் உயிரோடு விளையாடும் வியாபாரிகளிடமிருந்து கால்சியம் கார்பைடு கல்லையும், எத்திலின் உள்ளிட்ட ரசாயன பொருட்களையும், ரசாயன பொருட்களில் பழுக்க வைத்த பழங்களையும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து நச்சுத்தன்மையில் இருந்து பொதுமக்களை காப்பாற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விட்டுள்ளனர்.

    Next Story
    ×