என் மலர்
ஈரோடு
ஈரோடு, மே. 15-
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் ஈரோட்டில் இன்று நிருபர் களுக்கு பேட்டியளித்தார்.
மக்கள் நீதிமய்ய தலைவர் கமலஹாசன் மதங்களுக் கிடையே பிரச்சனை வரும் வகையில் பேசியது கண்ட னத்திற்குரியது.
அரசியல் கட்சி தொடங்கிய ஒருவர் இப்படி பேசியது வருத்தமாக உள்ளது. நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்பது அனைவரின் ஆசை. தேர் தலில் வாக்குகளை பெறும் நோக்கில் பேசியது ஏற்று கொள்ள கூடியது அல்ல.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியது கமல ஹாசன் பேசியதை விட குற்றம். ஊடகத்தின் கவனத் தை ஈர்க்க இவ்வாறு பேசி யுள்ளார். தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்டும் இவர்கள் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை விரைந்து எடுக்க வேண்டும்.
தேர்தலுக்கு பின்னர் என்ன நடக்கும் என்பது இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சி யினருக்கும் தெரியும்.தமிழ கத்தில் தேர்தல் முடிவுகளை தெரிந்து கொண்டதால் தி.மு.க.வை கூட்டணிக்கு போட்டி போட்டு அழைக் கின்றனர்.
இவ்வாறு அவர் கூறி னார்.
ஈரோடு மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் கடந்த 2 நாட்களாக மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
நேற்று 2-வது நாளாக மாவட்டத்தில் பரவலாக பலத்த மழை பெய்தது. அதிக பட்சமாக கொடுமுடி, ஊஞ்சலூர், சாலைப்புதூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் அதிக மழை கொட்டியது. கொடுமுடி பகுதியில் மட்டும் அதிகப்பட்சமாக 44மி.மீ மழை கொட்டியது.
இதேபோல் ஈரோடு, கவுந்தப்பாடி, கோபி, எலந்தகுட்டை மேடு ஆகிய பகுதிகளிலும் அதிக மழை கொட்டியது.
ஈரோடு மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை 6.30 மணிக்கு பெய்யத்தொடங்கிய மழை தொடர்ந்து அரைமணி நேரத்துக்கு மேலாக பலமாக கொட்டியது.
நேற்று பெய்த மழையின் போது காற்று அதிகமாக பெய்யவில்லை. இதனால் மழை பலமாக கொட்டியது. இந்த மழையால் கே.என்.வி. ரோடு, சூரம்பட்டி ரோடு, கொல்லம்பாளையம், மூலப்பாளையம், பெருந்துறை ரோடு ஆகிய இடங்களில் மழை தண்ணீர் ரோட்டில் இருபுறமும் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் இரவு நேரத்தில் ஈரோட்டில் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டது.
ஈரோடு காளைமாட்டு சிலையிலிருந்து கொல்லம் பாளையம் ரெயில்வே மேம்பாலம் வரை வாகனங்கள் போட்டி போட்டுக் கொண்டு முந்தி சென்றதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதேபோல் பூந்துறை ரோடு மூலப்பாளையம் பஸ்நிறுத்தம் அருகே ஏற்கெனவே பாதாள சாக்கடை பணியில் பழுது காரணமாக 3 மாத காலமாக வேலை நடந்து வருகிறது. அந்த பகுதியில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
நேற்று இரவு மழை பெய்ததையொட்டி மிகவும் நெரிசல் ஏற்பட்டு மக்களும் வாகன ஓட்டிகளும் படாதபாடுபட்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-
கொடுமுடி- 44
எலந்தகுட்டைமேடு- 34.4
கவுந்தப்பாடி-25
ஓலப்பாளையம்-24
ஈரோடு - 21
கோபி-17
பவானி - 14.4
வரட்டுப்பாளையம் அணை-10
சென்னிமலை-5
மொடக்குறிச்சி-4
மொடக்குறிச்சி - 4
வருமான சான்றிதழ் சாதி சான்றிதழ் முதல் பட்டதாரிகள் சான்றிதழ் மற்றும் பல்வேறு சான்றிதழ்கள் தாலுகா அலுவலகங்களில் முன்பு பெறப்பட்டு வந்தன.
இப்போது இது போன்ற சான்றிதழ்கள் பொது சேவை மையம் மூலம் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இந்த பொது சேவை மையத்தில் வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், விதவைகள் மற்றும் பல்வேறு சான்றிதழ்கள் பெறுவதற்கு பதிவு செய்யப்படுகின்றன.
இந்த பொது சேவை மையம் ஈரோடு தாலுகா அலுவலகம் கலெக்டர் அலுவலகம் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம் பொதுமக்கள் முன்பு போல வருவாய் அதிகாரி, கிராம நிர்வாக அலுவலர், தாசில்தார் என்று தனித்தனியாக பார்த்து கையெழுத்து வாங்கி சான்றிதழ்கள் பெறும் நிலை ஏற்பட்டது இதனால் காலதாமதமும் பொதுமக்களுக்கு மன உளைச்சலும் ஏற்பட்டு வந்தன.
இப்போது பொது சேவை மையத்தில் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டு குறைந்தது 7 நாட்களில் இருந்து 10 நாட்களுக்குள் சான்றிதழ் பொது மக்களுக்கு கிடைத்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் சிரமமின்றி சான்றிதழ்களுக்கு உரிய அரசு கட்டணத்தை மட்டுமே செலுத்தி சான்றிதழ் பெற்று வருகிறார்கள். இது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.
இந்த நிலையில் ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள பொது இ சேவை மையம் கடந்த இரண்டு நாட்களாக செயல்படவில்லை. இதனால் பொதுமக்கள் ஏராளமான பேர் தினமும் இந்த பொது சேவை மையத்திற்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்கள்.
இப்போது பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரிக்கு செல்வதற்காக மாணவ-மாணவிகள் தயாராகி வருகிறார்கள். இதற்காக அவர்களுக்கு வருமான சான்றிதழ் ஜாதி சான்றிதழ் முதல் பட்டதாரி சான்றிதழ் போன்றவை உடனடியாக தேவைப்படுகிறது.
இதனால் வழக்கத்தை விட இப்போது அதிகமான பேர் இந்த பொது சேவை மையத்தில் ஆன்லைனில் பதிவு செய்ய வருகிறார்கள்.
ஆனால் அங்குள்ள ஊழியர்கள் இரண்டு நாட்களுக்கு பிறகு வாருங்கள். அப்போதுதான் சான்றிதழ்கள் பதிவு செய்யப்படும் அப்போது தான் ஏற்கனவே சான்றிதழ்கள் பெற பதிவு செய்தவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்க இயலும் என்று கூறுகிறார்கள்.
இதுபற்றி அவர்களிடம் கேட்டால் ‘‘இங்கே 2 ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களில் ஒருவர் விபத்தில் சிக்கி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இன்னொரு பெண் ஊழியருக்கு உடல்நிலை சரியில்லை. அதனால் இரண்டு நாட்கள் கழித்து வாருங்கள்’’ என்று கூறுகிறார்கள் இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கிறார்கள்.
இதைத் தவிர்ப்பதற்காக உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பொது சேவை மையத்தில் ஊழியர்கள் இல்லாமல் இருந்தால் அவர்களுக்கு பதில் வேறு ஊழியர்களை தற்காலிகமாக நியமித்து பொதுமக்களுக்கும் மாணவ மாணவிகளுக்கும் உடனடியாக உரிய சான்றிதழ் கிடைக்க ஏற்பாடு செய்யும் படி சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
கோபி அருகே உள்ள ஓலப்பாளையத்தை சேர்ந்தவர் கவுரி சங்கர் (வயது 27). இவரது மனைவி பெயர் ஞானசுந்தரி. காதல் திருமண தம்பதியினர்.
இவர்களுக்கு மவுலீஸ்வரி என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த கவுரி சங்கர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அவர் எதற்காக தற்கொலை செய்தார்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு வீரப்பன்சத்திரம் காவேரி ரோடு மாசிமலை வீதியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 52). இவரது மனைவி பெயர் பாவாத்தாள். கவுதம் என்ற மகனும், காவியா என்ற ஒரு மகளும் உள்ளனர்.
ஈரோடு சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் மூர்த்தி சப்- இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். தற்போது பாராளுமன்ற தேர்தல் நடந்து முடிந்து ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்கள் ஈரோட்டை அடுத்த சித்தோடு ஐ.ஆர்.டி.டி. கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இங்கு போலீசார் மற்றும் துணை ராணுவ வீரர்களும் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தியும் இந்த வாக்குப்பதிவு எந்திரங்களின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். இவர் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதி ஓட்டுப்பதிவு எந்திரங்கள் உள்ள அறை முன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்.
நேற்று நள்ளிரவு 12.30 மணி அளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சப்- இன்ஸ்பெக்டர் மூர்த்திக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. நெஞ்சை பிடித்தப்படி சரிந்து விழுந்தார்.
உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த மற்ற போலீசார் அவரை போலீஸ் ஜீப்பில் ஏற்றி கொண்டு பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு டாக்டர் அவரை பரிசோதித்த போது அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
திடீர் மாரடைப்பில் இறந்த சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி உடல் பவானி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.
ஓட்டுப்பதிவு எந்திரங்களின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் திடீர் மாரடைப்பில் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கதிரவன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் ஆகியோர் சப்-இன்ஸ்பெக்டர் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் அமைச்சரும் பெருந்துறை எம்.எல்.ஏ.வுமான தோப்பு என்.டி. வெங்கடாச்சலத்துக்கும் தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணனுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.
அமைச்சர் கருப்பணன் குறித்து தோப்பு வெங்காடச்சலம் எம்.எல்.ஏ. கடுமையாக சாடி பேட்டி அளித்தார்.

இதற்கு தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. பதிலடி கொடுத்து இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
எனது விஸ்வாசமும் நேர்மையும் ஈரோடு மாவட்ட அ.தி.மு.க. தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் நன்கு தெரியும். நான் கேட்டது தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு எதிராக நீங்கள் வேலை பார்த்தீர்களா... இல்லையா? இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அதை காட்டினால் நீங்கள் (அமைச்சர் கருப்பணன்) ஏற்றுக்கொள்வீர்களா? உங்களது விஸ்வாசத்தை, நடத்தையில் காட்ட வேண்டும்.
அ.தி.மு.க. ஆட்சி அமைத்த 3 வருட காலத்தில் எத்தனை அ.தி.மு.க. தொண்டர்களின் பிள்ளைகளுக்கு உங்கள் கல்லூரியில் இலவசமாக பயில நீங்கள் அனுமதி அளித்து உள்ளீர்கள்? பட்டியல்போட முடியுமா? அம்மாவின் விசுவாசி என்று கூறும் நீங்கள் தகுதி உள்ள தொண்டர்களின் பிள்ளைகளுக்கு மருத்துவக் கல்லூரி, என்ஜினீயரிங் கல்லூரியில் இடம் பெற்று கொடுத்துள்ளீர்களா? ஒரு தொண்டனையாவது வாழ வைத்ததாக கூறமுடியுமா?
“மக்கள் நலம் மக்கள் நலம் என்று சொல்வார் ஆனால் தன் மக்கள் நலமே ஒன்று என்று இருந்து விடுவார்” புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் பாடிய பாட்டு உங்களுக்கு பொருந்தும்.
இவ்வாறு தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. கூறினார்.
திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா காமலாபுரம் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் அனந்தகிருஷ்ணன் (வயது44). இவரது மனைவி பெயர் விஜயலட்சுமி.
அனந்தகிருஷ்ணன் ஈரோடு ரகுபதி நாயக்கன் பாளையத்தில் உள்ள ஒரு தனியார் கிளப்பில் மேனேஜராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் அனந்த கிருஷ்ணன் ஊரில் உள்ள தனது தாயாருக்கு போன் செய்து நான் இன்று ஊருக்கு வருவதாக கூறினார். தனது நண்பர் கார் மூலம் அனந்தகிருஷ்ணன் திருச்சிக்கு புறப்பட்டு உள்ளார். பின்னர் 12 மணி அளவில் மனைவி விஜயலட்சுமி அனந்தகிருஷ்ணனுக்கு போன் செய்தார். அப்போது போன் சுவிட்ச் ஆப் என்று வந்தது.
மாலை 6.30 மணி அளவில் அனந்தகிருஷ்ணன் ஈரோடு முத்துக்கவுண்டன் பாளையம் - பரிசல் துறை சாலையில் காரில் வந்துகொண்டிருந்தபோது அசதி காரணமாக சாலையோரம் காரை நிறுத்தி ஏசி போட்டு தூங்கியுள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கியுள்ளார்.
அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அனந்தகிருஷ்ணன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
கோபி:
கோபியை அடுத்த கடத்தூர் அருகில் உள்ள இண்டியம் பாளையம், விநாயகர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மனைவி அமலா. இவர்களுக்கு ஒரு மகளும், மதன் குமார் (வயது 19) என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில் சின்னசாமி கடந்த 5 வருடத்திற்கு முன் இறந்து விட்டார். மகளுக்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். மதன்குமார் அரசூரில் மினிடோர் டிரைவராக வேலை பார்த்து வந்தார். மதன்குமார் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்தக் காதல் விவகாரத்தில் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் மதன்குமார் கடந்த சில நாட்களாக மன வேதனையில் இருந்தார்.
இந்நிலையில் மதன்குமார் அரசூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு கோவில் திருவிழாவுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் அவர் பற்றி எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.
இதனால் அவரது தாய் அமலா மறுநாள் அரசூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று பார்த்தார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக தாழ்பாள் போட பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது மதன்குமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து கடத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கடத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அக்னி நட்சத்திரம் வெயில் கடந்த 4-ந் தேதி தொடங்கியது. வெயிலின் தாக்கத்தை தாக்கு பிடிக்க முடியாமல் ஈரோடு மக்கள் குடைகளை பிடித்துக் கொண்டும், இருசக்கர வாகனத்தில் செல்லும் பெண்கள் துப்பட்டாவால் முகத்தை மூடி கொண்டும் செல்கின்றனர்.
அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதலே ஈரோடு மாவட்டத்தில் வெயில் தொடர்ந்து சதம் அடித்து வருகிறது. நேற்று ஈரோட்டில் 104 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகி இருந்தது. மேலும் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க மக்கள் நீர்நிலைகளை தேடி செல்கின்றனர்.
வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கோடை விடுமுறையில் சுற்றுலா செல்லும் மக்கள் சுற்றுலா செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
வெயில் அதிகமாக இருப்பதால் இளநீர், கரும்பு சாறு, மோர் போன்ற குளிர்ச்சியான பானங்களை தேடி மக்கள் படை எடுக்க தொடங்கியுள்ளனர்.
தொடர்ந்து வெளிநாட்டு குளிர்பானத்தை தவிர்த்து அதிக அளவில் இளநீர், கரும்பு சாறு கடைகளுக்கு மக்கள் வருவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வெயில் தாக்கத்திலிருந்து விடுபட தினமும் அதிக அளவில் நீர் பருக வேண்டும் எனவும், வெயில் காலங்களில் சூடான மற்றும் காரமான உணவுகள், எண்ணெய் பலகாரங்களை தவிர்க்க வேண்டும். இது போன்ற உணவுகள் அஜீரண வயிற்று கோளாறுகளை ஏற்படுத்தும் எனவும், பருத்தி ஆடைகள் வியர்வையை உறிஞ்சும் தன்மை உள்ளதால் வெயில் காலங்களில் பருத்தி ஆடைகளை பயன்படுத்தலாம் என்றும்,
உடல் சூட்டை தணிக்க அதிக அளவில் தர்பூசணி, வெள்ளரி, ஆரஞ்சி போன்ற பழங்கள், ஜூஸ் சாப்பிட்டால் உடல் சூட்டை தணிக்கலாம் என்று மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர், தலமலை, தாளவாடி, ஜீர்கள்ளி வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் மற்றும் வன விலங்குகள் உள்ளன.
ஆசனூர், தாளவாடி, தலமலை பகுதியில் உள்ள குட்டைகள் வறண்டு காணப்படுகின்றன. இதனால் வன விலங்குகள் தாகம் தீர்க்க வனப்பகுதியில் உள்ள வன குட்டையில் தண்ணீர் நிரப்பி வருகின்றனர்.
கடந்த வாரம் வனபகுதியில் கோடை மழை பெய்தது. இதனால் காய்ந்து கிடந்த மரம் செடிகள் உயிர் பெற்று பசுமையாக காட்சி அளிக்கிறது. கோடை மழை பெய்தாலும் ஆசனூர் பகுதியில் உள்ள குட்டைகள் நிரம்பும் அளவுக்கு மழை பெய்யவில்லை.
இதனால் யானைகள் ஆசனூர் அருகே மைசூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் கூட்டமாக வருகிறது. அவ்வப்போது ரோட்டை கடக்கும் யானைகள் அங்கு உள்ள மூங்கில் மரத்தை உடைத்து சாப்பிட்டு வருகிறது.
இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத்துறை அறிவுறுத்தி வருகின்றனர். அதே போல் வாகனங்களை நிறுத்தி புகைப்படம் எடுத்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ அபராதம் விதிக்கபடும் என்று எச்சரித்தனர்.
பு.புளியம்பட்டி:
பவானிசாகர் அருகே உள்ள பகுத்தம் பாளையம் கற்பூர காடு பகுதியைச் சேர்ந்தவர்கள் முத்துக்குமாரி (32), சாந்தாமணி (40), பத்மாவதி (40) இவர்கள் 3 பேரும் கூலித் தொழிலாளர்கள். நேற்று காலை 9 மணிக்கு வழக்கம் போல வீட்டை பூட்டி விட்டு விவசாய தோட்ட வேலைக்கு சென்று விட்டனர்.
இந்நிலையில் நேற்று மதியம் முத்துக்குமாரியின் வீடு திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இந்நிலையில் அருகில் இருந்த சாந்தாமணி மற்றும் பத்மாவதி வீடுகளுக்கும் தீ பரவியது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை போராடி அணைத்தனர். இருப்பினும் முத்துக்குமாரி வீட்டில் உள்ள வீட்டுச் சாமான்கள், சைக்கிள் உள்ளிட்ட பொருட்களும் சாந்தாமணி வீட்டில் இருந்த மற்ற கட்டில், பீரோ மற்றும் ஒரு வெள்ளாடு, மொபட், பத்மாவதி வீட்டில் இருந்த வீட்டுச் சாமான்கள், அரை பவுன் தங்க கம்மல், பள்ளி மற்றும் கல்லூரி மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் தீ விபத்தில் எரிந்து சேதமடைந்தன. இந்த தீ விபத்து குறித்து பவானிசாகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு:
தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி கடந்த சில தினங்களுக்கு முன்பு த.மா.கா, பாரதிய ஜனதாவுடன் இணைப்பது தற்கொலைக்கு சமம். அதற்கு பதிலாக த.மா.கா.வினர் காங்கிரஸ் கட்சியில் இணைய வேண்டும் என்று கூறியிருந்தார். இதற்கு தமிழகம் முழுவதும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று ஈரோடு அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள ரவுண்டானாவில் ஈரோடு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்ட இளைஞரணி தலைவர் ரமேஷ் தலைமையில் த.மா.கா.வினர் திரண்டனர். பின்னர் அவர்கள் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரிக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அப்போது திடீரென அழகிரி உருவப்படத்தை தீயிட்டுக் கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






