search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாரடைப்பில் இறந்த போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மூர்த்தி.
    X
    மாரடைப்பில் இறந்த போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மூர்த்தி.

    வாக்குப்பதிவு எந்திர பாதுகாப்பு பணியில் இருந்த ஈரோடு சப்-இன்ஸ்பெக்டர் திடீர் மரணம்

    ஈரோடு அடுத்த சித்தோட்டில் வாக்குப்பதிவு எந்திர பாதுகாப்பு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார்.
    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் காவேரி ரோடு மாசிமலை வீதியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 52). இவரது மனைவி பெயர் பாவாத்தாள். கவுதம் என்ற மகனும், காவியா என்ற ஒரு மகளும் உள்ளனர்.

    ஈரோடு சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் மூர்த்தி சப்- இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். தற்போது பாராளுமன்ற தேர்தல் நடந்து முடிந்து ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்கள் ஈரோட்டை அடுத்த சித்தோடு ஐ.ஆர்.டி.டி. கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இங்கு போலீசார் மற்றும் துணை ராணுவ வீரர்களும் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தியும் இந்த வாக்குப்பதிவு எந்திரங்களின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். இவர் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதி ஓட்டுப்பதிவு எந்திரங்கள் உள்ள அறை முன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்.

    நேற்று நள்ளிரவு 12.30 மணி அளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சப்- இன்ஸ்பெக்டர் மூர்த்திக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. நெஞ்சை பிடித்தப்படி சரிந்து விழுந்தார்.

    உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த மற்ற போலீசார் அவரை போலீஸ் ஜீப்பில் ஏற்றி கொண்டு பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு டாக்டர் அவரை பரிசோதித்த போது அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    திடீர் மாரடைப்பில் இறந்த சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி உடல் பவானி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.

    ஓட்டுப்பதிவு எந்திரங்களின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் திடீர் மாரடைப்பில் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கதிரவன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் ஆகியோர் சப்-இன்ஸ்பெக்டர் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×