search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public Service Center"

    ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள பொது இ சேவை மையம் கடந்த இரண்டு நாட்களாக செயல்படததால் பொதுமக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.
    சூரம்பட்டி:

    வருமான சான்றிதழ் சாதி சான்றிதழ் முதல் பட்டதாரிகள் சான்றிதழ் மற்றும் பல்வேறு சான்றிதழ்கள் தாலுகா அலுவலகங்களில் முன்பு பெறப்பட்டு வந்தன.

    இப்போது இது போன்ற சான்றிதழ்கள் பொது சேவை மையம் மூலம் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இந்த பொது சேவை மையத்தில் வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், விதவைகள் மற்றும் பல்வேறு சான்றிதழ்கள் பெறுவதற்கு பதிவு செய்யப்படுகின்றன.

    இந்த பொது சேவை மையம் ஈரோடு தாலுகா அலுவலகம் கலெக்டர் அலுவலகம் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம் பொதுமக்கள் முன்பு போல வருவாய் அதிகாரி, கிராம நிர்வாக அலுவலர், தாசில்தார் என்று தனித்தனியாக பார்த்து கையெழுத்து வாங்கி சான்றிதழ்கள் பெறும் நிலை ஏற்பட்டது இதனால் காலதாமதமும் பொதுமக்களுக்கு மன உளைச்சலும் ஏற்பட்டு வந்தன.

    இப்போது பொது சேவை மையத்தில் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டு குறைந்தது 7 நாட்களில் இருந்து 10 நாட்களுக்குள் சான்றிதழ் பொது மக்களுக்கு கிடைத்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் சிரமமின்றி சான்றிதழ்களுக்கு உரிய அரசு கட்டணத்தை மட்டுமே செலுத்தி சான்றிதழ் பெற்று வருகிறார்கள். இது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.

    இந்த நிலையில் ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள பொது இ சேவை மையம் கடந்த இரண்டு நாட்களாக செயல்படவில்லை. இதனால் பொதுமக்கள் ஏராளமான பேர் தினமும் இந்த பொது சேவை மையத்திற்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்கள்.

    இப்போது பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரிக்கு செல்வதற்காக மாணவ-மாணவிகள் தயாராகி வருகிறார்கள். இதற்காக அவர்களுக்கு வருமான சான்றிதழ் ஜாதி சான்றிதழ் முதல் பட்டதாரி சான்றிதழ் போன்றவை உடனடியாக தேவைப்படுகிறது.

    இதனால் வழக்கத்தை விட இப்போது அதிகமான பேர் இந்த பொது சேவை மையத்தில் ஆன்லைனில் பதிவு செய்ய வருகிறார்கள்.

    ஆனால் அங்குள்ள ஊழியர்கள் இரண்டு நாட்களுக்கு பிறகு வாருங்கள். அப்போதுதான் சான்றிதழ்கள் பதிவு செய்யப்படும் அப்போது தான் ஏற்கனவே சான்றிதழ்கள் பெற பதிவு செய்தவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்க இயலும் என்று கூறுகிறார்கள்.

    இதுபற்றி அவர்களிடம் கேட்டால் ‘‘இங்கே 2 ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களில் ஒருவர் விபத்தில் சிக்கி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இன்னொரு பெண் ஊழியருக்கு உடல்நிலை சரியில்லை. அதனால் இரண்டு நாட்கள் கழித்து வாருங்கள்’’ என்று கூறுகிறார்கள் இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கிறார்கள்.

    இதைத் தவிர்ப்பதற்காக உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பொது சேவை மையத்தில் ஊழியர்கள் இல்லாமல் இருந்தால் அவர்களுக்கு பதில் வேறு ஊழியர்களை தற்காலிகமாக நியமித்து பொதுமக்களுக்கும் மாணவ மாணவிகளுக்கும் உடனடியாக உரிய சான்றிதழ் கிடைக்க ஏற்பாடு செய்யும் படி சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
    ×