search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வனத்துறை"

    வேதாரண்யத்தில் மின்சாரம் தாக்கி மயில் உயிரிழந்துள்ளது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகாவில் கோடியக்கரை, கோடியக்காடு, வேதாரண்யம், ஆயக்கரன்புலம், பன்னாள் தென்னடார் வாய்மேடு, தகட்டூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேசியப் பறவையான மயில் வசித்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று தகட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே உயர் அழுத்த மின்கம்பியில் சிக்கிய மயிலை சமூக ஆர்வலர் பிரின்ஸ் கோபால்ராஜா காப்பாற்ற முயற்சி செய்தார். 

    ஆனால் மயில் இறந்துவிட்டது. இது குறித்து கோடியக்கரை வனத்துறை அலுவலர் அயூப்கானுக்கு தகவல் தெரிவித்தனர்.
    கோடியக்கரை வனக்காவலர் ரனில்குமார், வேட்டை தடுப்பு காவலர் பாண்டியன் ஆகியோர் அங்கு வந்தனர். 

    பின்பு வாய்மேடு இன்ஸ்பெக்டர் கன்னிகா மற்றும் போலீசார் முன்னிலையில் இறந்த மயிலை வனத்துறையினரிடம் சமூக ஆர்வலர் பிரின்ஸ் கோபால்ராஜா ஒப்படைத்தார். 

    பின்பு வனத்துறையினர் மயிலை எடுத்து சென்று கோடியக்காடு வனவிலங்கு சரணாலயத்தில் புதைத்தனர்.
    மதுரையில் அனுமதியின்றி வளர்க்கப்பட்ட பெண் யானையை 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வனத்துறையினர் லாரியில் ஏற்றி திருச்சியில் உள்ள யானைகள் மறுவாழ்வு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
    மதுரை:

    மதுரை தல்லாகுளத்தை சேர்ந்தவர் மாலா. இவர் தனது வீட்டில் 22 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்றை வளர்த்து வந்தார். அதனை பராமரிக்க பாகன் ஒருவரை நியமித்திருந்தார். மாலா தனது யானையை கோவில் திருவிழாக்கள், திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விட்டு வந்திருக்கிறார்.

    அவர் உரிய அனுமதியில்லாமல் யானையை வளர்த்து வருவதாக மதுரை மாவட்ட வன அலுவலர் குருசாமிக்கு தகவல் வந்தது. அதன் பேரில் விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டார். இதனையடுத்து 30 பேர் அடங்கிய வனக்குழுவினர் நேற்று இரவு தல்லாகுளத்தில் உள்ள மாலா வீட்டிற்கு சென்றனர்.

    வனத்துறையினருடன் கால்நடை மருத்துவ குழுவினரும் சென்றனர். யானைக்குரிய ஆவணங்களை வனத்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது அந்த யானை உரிய ஆவணங்கள் இன்றி வளர்க்கப்பட்டது தெரிய வந்தது. அது குறித்து மாலாவிடம் வனத்துறையினர் விசாரித்தனர்.

    அந்த யானை பீகார் மாநிலத்தில் இருந்து கொண்டு வந்து மாலா வளர்த்து வந்திருக்கிறார். அதற்கான ஆவணங்கள் எதுவும் தன்னிடம் இல்லை என அவர் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து அந்த பெண் யானையை வனத்துறையினர் அங்கிருந்து மீட்டு கொண்டு செல்ல முயன்றனர்.

    ஆனால் அதற்கு மாலா எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் வனத்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.இதையடுத்த அங்கு போலீசார் வரவழைக்கப்பட்டனர். போலீசார் உதவியுடன் யானையை வனத்துறையினர் மீட்டனர்.

    பின்பு அதனை அங்கிருந்து திருச்சிக்கு கொண்டு செல்ல முயன்றனர். அந்த யானையை பராமரித்து வந்த அந்த பாகன் வனத்துறையினர் வந்த போதே அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பாகன் இல்லாததால் லாரியில் ஏற யானை மறுத்தது. இதனால் யானையை லாரியில் ஏற்ற மாற்று பாகன் வரவழைக்கப்பட்டார்.

    அவரின் உதவியுடன் சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு லாரியில் யானை ஏற்றப்பட்டது. இதையடுத்து இன்று அதிகாலை திருச்சி எம்.ஆர்.பாளையத்தில் உள்ள யானைகள் மறுவாழ்வு மையத்திற்கு யானை கொண்டு செல்லப்பட்டது. 

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள மரண பாறையில் 3 நாள் சிக்கித் தவித்த மயிலை வனத்துறையினர் பாதுகாப்பாக மீட்டனர்.
    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலி துறை கடற்கரை பகுதியில் கடலுக்குள் மரண பாறை ஒன்று உள்ளது. பல உயிர்களை பலி வாங்கிய ஆபத்தான இந்த மரண பாறையில் கடந்த 3 நாட்களாக ஆண் மயில் ஒன்று காலில் அடிபட்டு பறக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது.

    இதனைப் பார்த்த சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்கள் தங்கள் செல்போனில் அந்த மயிலை படம் பிடித்ததோடு மட்டுமின்றி வனத்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.

    அதன் பேரில் பூதப்பாண்டி வனச்சரக அலுவலர் திலிபன் தலைமையில் வனக்காப்பாளர்கள் அசோக், அர்ஜுனன், வனக்காவலர் ஜோயல் மற்றும் வேட்டை தடுப்பு காவலர் சிவகுமார் ஆகியோர் ஒரு குழுவாக அங்கு விரைந்து வந்தனர்.

    அவர்கள் இன்று அதிகாலை சுமார் 1 மணிக்கு கடலில் அமைந்து உள்ள மரணப்பாறையில் சிக்கிய அந்த மயிலை நீந்தி சென்று மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அந்த மயிலுக்கு முதல் உதவி சிகிச்சை செய்தனர்.அதன்பின்னர் அந்த மயிலை பாதுகாப்பான வனப்பகுதியில் பத்திரமாக கொண்டு விட்டனர்.
    வனப்பகுதியை செழுமையாக்கும் வகையிலும், யானைகளுக்கு உணவு கிடைக்கும் வகையிலும் வனத்துறையினர் புதிய முயற்சியில் இறங்கி உள்ளனர்.
    நீலகிரி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டத்தில் காட்டு யானைகள், புலிகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. காட்டு யானைகள் உணவு தேடி இடம் மாறிச் செல்கின்றன. உணவு கிடைக்காத சமயத்தில் குடியிருப்புகளுக்குள் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்துகின்றன.

    இதனை தடுக்கும் வகையிலும்  வனப்பகுதியை செழுமையாக்கும் வகையிலும், யானைகளுக்கு உணவு கிடைக்கும் வகையிலும் வனத்துறையினர் புதிய முயற்சியில் இறங்கி உள்ளனர். அதன்படி நேற்று கூடலூர் வனப்பகுதியில் 1000 மூங்கில் விதை பந்துகளை வீசினர்.

    இதுபற்றி வனத்துறையினரிடம் கேட்டபோது யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்கும் வகையில் மொத்தம் 10 ஆயிரம் மூங்கில் விதை பந்துகள் வீச முடிவு செய்யப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக 1000 விதைப்பந்துகள் வீசப்பட்டது. தொடர்ந்து மழையும் பெய்து வருவதால் எதிர்காலத்தில் மூங்கில் காடுகள் பெருகி விடும். மேலும் காட்டு யானைகள் ஊருக்குள்ளும் வராது என்றனர்.

    வனத்துறையினரின் இந்த முயற்சிக்கு வன ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.
    ×