search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வனத்துறையினரால் மீட்கப்பட்ட வளர்ப்பு யானை
    X
    வனத்துறையினரால் மீட்கப்பட்ட வளர்ப்பு யானை

    மதுரையில் அனுமதியின்றி வளர்க்கப்பட்ட 22 வயது பெண் யானையை பறிமுதல் செய்த வனத்துறையினர்

    மதுரையில் அனுமதியின்றி வளர்க்கப்பட்ட பெண் யானையை 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வனத்துறையினர் லாரியில் ஏற்றி திருச்சியில் உள்ள யானைகள் மறுவாழ்வு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
    மதுரை:

    மதுரை தல்லாகுளத்தை சேர்ந்தவர் மாலா. இவர் தனது வீட்டில் 22 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்றை வளர்த்து வந்தார். அதனை பராமரிக்க பாகன் ஒருவரை நியமித்திருந்தார். மாலா தனது யானையை கோவில் திருவிழாக்கள், திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விட்டு வந்திருக்கிறார்.

    அவர் உரிய அனுமதியில்லாமல் யானையை வளர்த்து வருவதாக மதுரை மாவட்ட வன அலுவலர் குருசாமிக்கு தகவல் வந்தது. அதன் பேரில் விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டார். இதனையடுத்து 30 பேர் அடங்கிய வனக்குழுவினர் நேற்று இரவு தல்லாகுளத்தில் உள்ள மாலா வீட்டிற்கு சென்றனர்.

    வனத்துறையினருடன் கால்நடை மருத்துவ குழுவினரும் சென்றனர். யானைக்குரிய ஆவணங்களை வனத்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது அந்த யானை உரிய ஆவணங்கள் இன்றி வளர்க்கப்பட்டது தெரிய வந்தது. அது குறித்து மாலாவிடம் வனத்துறையினர் விசாரித்தனர்.

    அந்த யானை பீகார் மாநிலத்தில் இருந்து கொண்டு வந்து மாலா வளர்த்து வந்திருக்கிறார். அதற்கான ஆவணங்கள் எதுவும் தன்னிடம் இல்லை என அவர் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து அந்த பெண் யானையை வனத்துறையினர் அங்கிருந்து மீட்டு கொண்டு செல்ல முயன்றனர்.

    ஆனால் அதற்கு மாலா எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் வனத்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.இதையடுத்த அங்கு போலீசார் வரவழைக்கப்பட்டனர். போலீசார் உதவியுடன் யானையை வனத்துறையினர் மீட்டனர்.

    பின்பு அதனை அங்கிருந்து திருச்சிக்கு கொண்டு செல்ல முயன்றனர். அந்த யானையை பராமரித்து வந்த அந்த பாகன் வனத்துறையினர் வந்த போதே அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பாகன் இல்லாததால் லாரியில் ஏற யானை மறுத்தது. இதனால் யானையை லாரியில் ஏற்ற மாற்று பாகன் வரவழைக்கப்பட்டார்.

    அவரின் உதவியுடன் சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு லாரியில் யானை ஏற்றப்பட்டது. இதையடுத்து இன்று அதிகாலை திருச்சி எம்.ஆர்.பாளையத்தில் உள்ள யானைகள் மறுவாழ்வு மையத்திற்கு யானை கொண்டு செல்லப்பட்டது. 

    Next Story
    ×