என் மலர்
ஈரோடு
ஈரோடு:
ஈரோடு திண்டலில் உள்ள வேளாளர் கல்வியியல் கல்லூரியில் ஈரோடு மாவட்ட பள்ளி கல்விதுறை சார்பில் போட்டி தேர்வுக்கான மாநில அளவிலான கருத்தாளர்கள் பயிற்சி முகாம் இன்று தொடங்கியது.
பள்ளி கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார்.
பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மற்ற மாநிலங்களுக்கு தமிழகம்தான் கல்வியில் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. 12 ஆண்டுக்கு பிறகு மாற்றி அமைக்கப்பட்டு 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளும் கணினிமயமாக்கப்படும். இன்டர்நெட் இணைப்பு கொடுக்கும் பணி நடந்து வருகிறது. 70 ஆயிரம் ஸ்மார்ட் வகுப்புகள் வசதி செய்து கொடுக்கப்படும்.
நீட் தேர்வு மட்டுமின்றி அனைத்து வகை போட்டி தேர்வுகளுக்கும் சிறந்த கல்வியாளர்கள் கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு நீட் தேர்வில் 38.49 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர். இந்த வருடம் தீவிர பயிற்சி மூலம் 48.57 சதவீத மாணவ-மாணவிகள் வெற்றி பெற்று உள்ளனர். இன்னும் ஒரு வாரத்தில் தமிழகம் முழுவதும் நீட் தேர்வு பயிற்சி சென்டர் 412 மையங்கள் ஒரு வாரத்தில் தொடங்கப்படும். இதன் மூலம் ஏழை மாணவர்கள் பெரிதும் பயன் அடைவார்கள்.
மேலை நாடுகளில் மாணவர்களுக்கு கல்வியுடன் தொழில் சார்ந்த கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மேலும் உடற்பயிற்சி சமுதாய பழக்க வழக்கங்கள் நெறிமுறைகளு அவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்படுகிறது. அதேபோல் கல்வி முறை இங்கும் கொண்டு வர முதல்வருடன் கலந்து ஆலோசிக்கப்படும். ஆசிரியர்களுக்கும் லேப்டாப் வழங்கப்படும்.
நீலகிரியில் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு அங்குள்ள மாவட்ட முதன்மை மாவட்ட கல்வி அலுவலர் மெமோவை அனுப்பி உள்ளார். ஆசிரியர்கள் என்பவர்கள் மாணவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை கொடுப்பவர்கள். வேலை நாட்களில் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்பது எனது நிலைப்பாடு.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு:
வெள்ளகோவில் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். அதே பகுதியை சேர்ந்தவர் அபிராமி (19). இருவரும் காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு பலத்த எதிர்ப்பு ஏற்பட்டது. இதனால் காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். பவானி கூடுதுறைக்கு வந்த காதல் ஜோடி அங்கு மாலை மாற்றி கொண்டு தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர்.
பிறகு காதல் தம்பதியினர் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என கேட்டு ஈரோடு மகளிர் போலீசில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் அவர்களின் மனுவை பெற்று இருவர் வீட்டு பெற்றோர்கள், உறவினர்களையும் சமரசம் செய்ய அழைத்தனர்.
இது காதல் தம்பதிக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. நம்மை பிரித்து விடுவார்களோ... என பயந்தனர். இதனால் காதல் ஜோடியினர் யாரிடமும் சொல்லாமல் போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியேறி சென்று விட்டனர்.
இந்த நிலையில் இருவரது பெற்றோர். உறவினர்கள் வர காதல் ஜோடி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.பிறகு இரு தரப்பினரும் தங்களது பிள்ளையை காணவில்லை. மீட்டு தாருங்கள் என்று கூறி சென்றனர்.
இந்த சம்பவம் மகளிர் போலீஸ் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புஞ்சைபுளியம்பட்டி:
கோவையிலிருந்து கர்நாடக மாநிலம் பெல்லாரிக்கு ஒரு லாரி தளவாடப் பொருட்களை ஏற்றி சென்று கொண்டிருந்தது. லாரியை பு.புளியம்பட்டி அடுத்த மாராயிபாளையத்தை சேர்ந்த பழனிசாமி (வயது 60) என்பவர் ஓட்டி சென்றார்.
இந்த லாரி புளியம்பட்டி அருகே உள்ள புங்கம் பள்ளிகுளம் அருகே வந்தபோது திடீரென லாரி டிரைவரின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி குளத்தில் பாய்ந்தது. இதில் லாரி சேதம் அடைந்தது. அதில் இருந்த பொருட்கள் எல்லாம் சிதறி குளத்தில் விழுந்தது. இந்த விபத்தில் டிரைவர் பழனிசாமி படுகாயம் அடைந்தார். அந்த வழியாக வந்தவர்கள் இடிபாட்டில் சிக்கிய அவரை மீட்டு சத்திய மங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில், வாக்காளர் சரிபார்க்கும் திட்டத்தினை மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் நேற்று தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து அவர் கூறியதாவது:-
இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் உள்ள தங்கள் விவரங்களை வாக்காளர்களே சரிபார்த்து திருத்தம் செய்து கொள்ள ‘ voter help line ’ என்ற செயலியில் ‘ ELECTOR VERIFICATION PROGRAMME ’ எனும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து வாக்காளர்களும் ‘ voter help line ’ என்ற செயலியினை பதிவிறக்கம் செய்து வாக்காளர் பட்டியலில் உள்ள தங்களது மற்றும் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் விபரங்களை சரிபார்த்து கொள்ளலாம்.
மேலும் பொதுமக்கள், அனைத்து வட்ட அலுவலகங்களில் உள்ள பொது சேவை மையங்கள், ஈரோடு மற்றும் கோபி ஆர்.டி.ஓ. அலுவலகங்கள், மாவட்ட வாக்காளர் தகவல் தொடர்பு மையம், தேர்தல் பிரிவு, ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகம், வாக்காளர் சேவை மையங்கள் மூலமாகவும் வாக்காளர் பட்டியலில் உள்ள தங்களது விபரங்களை வருகிற 30-ந்தேதி வரை சரிபார்த்து கொள்ளலாம். .
இவ்வாறு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கூறினார்.
அதைத்தொடர்ந்து அவர், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம், வாக்காளர் சரிபார்ப்பு திட்டம் தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா, ஈரோடு ஆர்.டி.ஓ. முருகேசன், தாசில்தார் ரவிச்சந்திரன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. 10 பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்படுகிறது. அதன்படி 4 பெரிய வங்கிகளுடன் 6 சிறிய வங்கிகள் இணைக்கப்படுகின்றன.
இதன் மூலம் 10 பொதுத்துறை வங்கிகள் 4 வங்கிகள் ஆகின்றன. இந்த அறிவிப்புக்கு இந்திய வங்கி சங்கங்கள் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இதை கண்டித்து இன்று இந்தியா முழுவதும் வங்கி ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்துள்ளது.
ஈரோடு மாவட்டத்திலும் இன்று வங்கி ஊழியர்கள் 10 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர் சம்மேளனம் சார்பில் இன்று மாலை எஸ்பி அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள ஸ்டேட் வங்கி முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் நரசிம்மன் கூறியதாவது :-
ஒரே நேரத்தில் 10 பொதுத்துறை வங்கிகளை இணைப்பதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய வங்கி சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் இன்று இந்தியா முழுவதும் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.
ஈரோடு மாவட்டத்திலும் இன்று மாலை ஸ்டேட் பேங்க் முன்பு வங்கி ஊழியர்கள் சம்பளம் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு மாவட்ட வங்கி ஊழியர் சங்கம், அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம், நேஷனல் கன்பெடரேஷன் ஆப் பேங் எம்பிளாயிஸ், ஆல் இந்திய பேங்க் ஆபீஸ் அசோசியேசன், ஆல் இந்திய பேங்க் ஆபீஸர் கான்பெடரேசன் உட்பட 9 ஊழியர் சங்கத்தை சேர்ந்தவர்கள் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுபடுகின்றனர்.
மேலும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று காலை வங்கி ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு அருகே வெள்ளோடு அடுத்த தேவனாம்பாளையத்தை சேர்ந்த இளம்பெண் தனது உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் என 100 பேருடன் ஈரோடு எஸ்.பி. அலுவலகத்திற்கு நேற்று இரவு வந்தார்.
பின்னர் அந்தப் பெண் எஸ்.பி. அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு அளித்தார் .
நானும் எனது பக்கத்து ஊரைச் சேர்ந்த ஒருவரும் கடந்த 12 வருடங்களாக காதலித்து வருகிறோம். அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி என்னிடம் நெருங்கி பழகி வந்தார்.
இந்நிலையில் அவருக்கு அரசு வேலை கிடைத்தது. இதையடுத்து அவரது போக்கில் மாற்றம் தெரிந்தது. இந்நிலையில் அவருக்கு வேறு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்க அவரது வீட்டார் முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து அவரிடம் கேட்டால் நான் அரசு உத்தியோகத்தில் உள்ளேன். இதெல்லாம் நீ கண்டுக்க கூடாது என்று கூறிவிட்டார். எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியிருந்தார்.
இளம்பெண் ஒருவர் அரசு அதிகாரி மீது புகார் கொடுக்க இரவில் 100 பேருடன் எஸ்.பி. அலுவலகத்தில் திரண்டு வந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள பங்களா புதூரை சேர்ந்தவர் சிவகுமார். தொழில் அதிபர். இவர் இன்று மதியம் கோபி வந்தார். அங்குள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே உள்ள ஒரு வங்கியில் 10 லட்சம் ரூபாயை எடுத்து ஒரு பையில் வைத்துக் கொண்டு வெளியே வந்தார்.
ரோட்டு பக்கம் வந்த போது அங்கு வேகமாக ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது. அதில் 2 பேர் இருந்தனர்.
இதில் பின்னால் இருந்த ஆசாமி தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் இருந்த பணப்பையை பறித்தான். பிறகு மர்ம ஆசாமிகள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த தொழில் அதிபர் கூக்குரலிட்டார். பிடியுங்கள்... பிடியுங்கள் என சத்தம் போட்டார். ஆனால் கொள்ளையர்கள் கண் இமைக்கும் நேரத்தில் மாயமாகிவிட்டனர்.
பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவத்தால் கோபியில் கடும் பரபரப்பு நிலவியது. இது குறித்து தொழிலதிபர் சிவக்குமார் கோபி போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். மேலும் அப்பகுதியில் உள்ள கடைகளில் இருக்கும் கண்காணிப்பு கேமிராவில் கொள்ளையர்கள் உருவம் பதிவாகி உள்ளதா? எனவும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அருகே உள்ள நிச்சாம்பாளையம் பிரப்நகர் காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் பிரகாஷ் (வயது 28).
இவருக்கும் கவுந்தப்பாடி அருகே உள்ள ஆவாரங்காட்டூரை சேர்ந்த சதாசிவம் என்பவரது மகள் மஞ்சுளா (வயது 19) என்பவருக்கும் கடந்த 3 மாதத்துக்கு முன்பு தான் திருமணம் நடந்தது.
மஞ்சுளா ஒரு கல்லூரியில் படித்து வந்தார். இவரது கணவர் பிரகாஷ் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் கணவன்-மனைவி மற்றும் அவர்களது உறவினர் செம்பருத்தி என்ற பெண் என 3 பேர் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
கவுந்தப்பாடி அருகே சிறுவலூர் ரோட்டில் வேலாம்பாளையம் அருகே சென்ற போது எதிரே ஒரு ஈச்சர் வேன் வந்தது.
இதில் எதிர்பாராத விதமாக வேனும்-மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உடனடியாக அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் சிகிச்சை பலன் பெறாமல் கணவன்-மனைவியான பிரகாசும், மஞ்சுளாவும் பரிதாபமாக இறந்தனர்.
உறவினர் பெண்ணான செம்பருத்திக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து கவுந்தப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விபத்தில் புதுமண தம்பதி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு:
தமிழ்நாடு விவசாயிகளின் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் செ.நல்லசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உள்ளாட்சி அமைப்புகளான சிற்றூராட்சி, பேரூராட்சி, ஒன்றியம், மாவட்ட ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி போன்றவற்றில் கொள்கை முடிவு எடுக்கப்படுவதில்லை. மாறாக நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் எடுக்கப்படும் கொள்கை முடிவுகளை நடைமுறைப்படுத்தும் இடங்களே இவை. பொதுவாக சிறிய அலகுகளாக இருக்கும் இவைகளுக்கான தேர்தல் அரசியல் கட்சிகளின் தலையீடும், குறுக்கீடும், சின்னம் ஒதுக்கீடும் இல்லாமல் நடத்த வேண்டும்.
அப்போது தான் நல்லவர்கள், வல்லவர்கள், மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்கள் பொறுப்புக்கு வர வாய்ப்பு கிடைக்கும். உள்ளாட்சி தேர்தல்கள் கட்சி அடிப்படையில் நடத்தப்பட்டால் இவர்களுக்கான வாய்ப்பு மறைமுகமாக மறுக்கப்படுவதாகவே இருக்கும். டெல்லியிலும், சென்னையில் இருந்து வார்டு வேட்பாளர் முதல், மாநகர மேயர் வேட்பாளர் வரை தேர்வு செய்து அறிவிப்பு வெளியிடுவது ஏற்புடையதாக இருக்காது. கால், வால் பிடிக்கும் கலாச் சாரத்துக்கு இது வழி வகுக்கும். உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர் அனைவருக்கும் சுயேட்சை சின்னங்களே ஒதுக்க வேண்டும்.
உள்ளாட்சி அமைப்புகள் ஜனநாயகத்தின் அடித்தளங்கள் பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை இந்திய தேர்தல் ஆணையம் எற்று நடத்துவதை போல உள்ளாட்சி தேர்தல்களையும் ஏற்று நடத்த வேண்டும். பதவி விலகும் குழு தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவிடம் தான் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டுமே தவிர இடையில் தனி அதிகாரி என்ற பேச்சுக்கே இடம் இருக்க கூடாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






