search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிரைவர் உயிர் தப்பினார்"

    விழுப்புரத்தில் இன்று காலை பால் கேன்கள் ஏற்றி வந்த லாரி மேம்பாலத்தில் கவிழ்ந்தது. இதில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.

    விழுப்புரம்:

    விழுப்புரத்தில் அரசுக்கு சொந்தமான ஆவின் பால் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. விழுப்புரம்-கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து உற்பத்தியாளர் சங்கத்தில் இருந்து பெறப்படும் பாலை கேன்களில் ஏற்றி அதனை ஆவின் பால் நிறுவனத்துக்கு கொண்டு வருவது வழக்கம்.

    அதுபோல் இன்று காலை உளுந்தூர்பேட்டை, திருவெண்ணைநல்லூர், திருநாவலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து உற்பத்தி செய்யபட்ட 4 ஆயிரம் லிட்டர் பால் 200 கேன்களில் நிரப்பப்பட்டது. பின்னர் அந்த கேன்கள் ஒரு மினிலாரியில் ஏற்றப்பட்டது. இதையடுத்து அந்த மினிலாரி விழுப்புரம் ஆவின் நிறுவனம் நோக்கி புறப்பட்டது. இதனை கீரிமேட்டை சேர்ந்த கார்த்திக் (வயது 35) ஓட்டி வந்தார். அந்த லாரி விழுப்புரம் ஜானகிபுரம் ேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென லாரியின் முன்பக்க டயர்கள் வெடித்தன. இதில் கட்டுபாட்டை இழந்த லாரி மேம்பாலத்தில் தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது.

    லாரியில் ஏற்றபட்டிருந்த பால் கேன்கள் அனைத்தும் மேம்பாலத்தில் உருண்டு ஓடின. இதில் கேன்களில் இருந்த பால்கள் மேம்பாலத்தில் கொட்டி ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. அந்த பகுதி பொதுமக்கள் கேன்களில் இருந்து கொட்டிய பாலை பாத்திரங்களில் பிடித்து சென்றனர். இந்த விபத்தில் டிரைவர் கார்த்திக் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.

    தகவல் அறிந்த நெடுஞ்சாலை போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், ஏட்டுக்கள் கண்ணன், குணா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். கவிழ்ந்து கிடந்த லாரியை அப்புறப்படுத்தினர்.

    இந்த விபத்தால் அந்த பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×