என் மலர்
ஈரோடு
ஈரோடு வீரப்பன்சத்திரம் பாப்பாத்தி காடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகள் கல்பனா (வயது 19).10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். இவர் ஒரு தனியார் துணிக்கடையில் பணி புரிந்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத போது தனது துப்பட்டாவால் தூக்கு போட்டு கொண்டார். கதவு நீண்ட நேரம் திறக்காததால் அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவர் வீட்டுக்கு சென்று பார்த்தனர்.
அப்போது கதவு உள்பக்கமாக தாள் போட பட்டு இருந்தது. கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அங்கு கல்பனா தூக்கில் தொங்கி கொண்டிருந்தார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கல்பனா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு பஸ் நிலையம் திருப்பூர் பஸ் நிற்கும் பகுதியில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் மயங்கிய நிலையில் கிடந்தார்.
அந்த பெண்ணை ஆம்புலன்சு மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அந்த பெண்ணை பரிசோதித்த டாக்டர் அவர் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினார்.
இறந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. அந்த பெண் 5 அடி உயரத்தில் மாநிறத்தில் காணப்பட்டார். பச்சை கலர் ஜாக்கெட் கத்திரி பூ கலரில் பூ போட்ட சேலை அணிந்து உள்ளார். வலது கால் முட்டியில் காயத்தழும்பு காணப்படுகிறது.
இது குறித்து ஈரோடு டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை மாவட்டம் தெல்லூர் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா (வயது 29). இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
இவர் தனது நண்பரை பார்ப்பதற்காக ஈரோடு வந்து விட்டு ஊருக்கு செல்வதற்காக ஈரோடு செட்டிபாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் பஸ்சுக்காக காத்திருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த ஒருவர் கருப்பையாவிடம் நைசாக பேசி ஆசைவார்த்தை அள்ளி தெளித்தார். தன்னிடம் அழகிகள் உள்ளனர். பணம் கொடுத்து அவர்களிடம் உல்லாசமாக இருக்கலாம் என ஆசை வாத்தை கூறினார். ஒரு நாள் முழுவதும் தங்கி செக்ஸ் அனுபவிக்கலாம் என கிளு.. கிளுப்பாக கூறினார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் ஈரோடு தாலுகா போலீசில் இது குறித்து புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஈரோடு பூந்துறை ரோடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு ஒரு இளம்பெண் இருந்தார். அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் என்று தெரிய வந்தது. மேலும் தன்னை வேலை வாங்கி தருவதாக கூறி அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக அவர் தெரிவித்தார்.
இதையடுத்து அந்த இளம்பெண்ணை மீட்டு கோவையில் உள்ள பெண்கள் பாதுகாப்பு மையத்துக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
மேலும் ஈரோடு நொச்சிக் காட்டு வலசு பகுதியை சேர்ந்த சித்ரா (37) மற்றும் கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (35) ஆகியோர் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரிய வந்ததது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு நகர பகுதிகளில் சில வெளியூர் வாசிகள் வாடகைக்கு வீடு எடுத்து இளம்பெண்களை வரவழைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதாக பரவலாக புகார்கள் உள்ளது.
அதிக வாடகைக்கு ஆசைப்பட்டு வீடு வாடகைக்கு விடுபவர்கள் அந்த மாதிரி ஆசாமிகளிடம் கவனமாக இருக்க வேண்டும். இவர்கள் உங்களுக்கு தெரியாமலே சொந்தகார பெண் என்று கூறி அழைத்து வந்து சமூக விரோத செயல்களில் ஈடுபடுவார்கள். அப்படி அவர்கள் மீது சந்தேகம் இருப்பின் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் வீடு வாடகைக்கு விடும் போது நன்றாக விசாரித்த பிறகே கொடுங்கள்.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
ஈரோடு அடுத்த வெள்ளோடு பாலாஜி கார்டன் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்.
இவரது மனைவி லோகம்மாள். இருவரும் டெய்லர் வேலை பார்கிறார்கள்.
சென்னிமலை பகுதியை சேர்ந்த ஒரு பைனான்சியரிடம் இவர்கள் முதலில் ரூ.70 ஆயிரம் கடன் வாங்கினார்கள். பிறகு மேலும் அவரிடம் தம்பதியினர் ரூ.45 ஆயிரம் கடன் வாங்கினார்கள்.
மொத்தம் ரூ.1.15 லட்சம் கடன் வாங்கி உள்ளனர். இந்த பணத்துக்கு வட்டியாக மட்டும் மாதம் தோறும் இதுவரை 16 மாதமாக வட்டி மட்டும் மாதம் தோறும் ரூ.12,500 கொடுத்துள்ளார்கள்.
இந்த நிலையில் அந்த பைனான்சியர் “நீங்கள் வாங்கிய கடனுக்கு வட்டி கந்து வட்டி என 15 லட்ச ரூபாய் கொடுக்க வேண்டும்’’ என்று கூறினாராம்.
இதை கேட்டு கணவனும் மனைவியும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். 1.15 லட்சம் வாங்கியதற்கு வட்டி மட்டும் 2 லட்சம் கொடுத்து விட்டோம். இது போக அசல் வட்டி கந்து வட்டி என மேலும் 15 லட்சம் கொடுக்க வேண்டுமா...? என கேட்டனர்.
அதற்கு அந்த பைனான்சியர் பணம் கொடுத்தே ஆக வேண்டும் என்று கூறி கொலை மிரட்டலும் விடுத்தாராம். மேலும் வெற்று பேப்பரில் கையெழுத்து வாங்கியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை கேட்பு முகாமில் கலந்து கொண்ட பாலகிருஷ்ணன்-லோகம்மாள் தம்பதியினர் கலந்து கொண்டு கலெக்டர் கதிரவனிடம் மனு கொடுத்தனர்.
அதில் ரூ.1.25 லட்ச கடனுக்கு இதுவரை 2 லட்சம் வட்டி கொடுத்துவிட்டோம். இப்போது மேலும் ரூ.15 லட்சம் கேட்கிறார்கள். பணம் கொடுக்காவிட்டால் கொன்றுவிடுவோம் என மிரட்டல் விடுக்கிறார்கள் எங்கள் உயிருக்கும் உடமைக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
சென்னிமலை:
சென்னிமலை அருகே துலுக்கம்பாளையத்தை சேர்ந்தவர்கள் கார்த்தி, (29) ஹரீஸ், (25) சதீஸ், (41) மற்றும் பிரகாஷ (25) உறவினர்களான இந்த நால்வரும் துலுக்கம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் தேங்காய் மட்டையில் இருந்து நார் தயாரிக்கும் தொழிற்சாலை அமைத்து நடத்தி வருகிறார்கள்.
இங்கு தேங்காய் மட்டையில் இருந்து நவீன முறையில் நாராக மாற்றி அதை உயரவைத்து இயந்திரங்கள் மூலம் நார் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்து வருகின்றனர்.
இந்த மில்லில் 10- க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) என்பதால் தொழிற்சாலைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்த நிலையில், மதியம் பகல் 2 மணியளவில் தொழிற்சாலையின் உள் பகுதியில் இருந்து கரும்புகை வெளி வந்துள்ளது.
இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக அதன் உரிமையாளர்களுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து சென்று பார்த்த போது தொழிற்சாலைக்குள் இருந்த தேங்காய் நார்களில் தீ கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. பின்னர் உடனடியாக நார்களை உலர்த்தும் இயந்திரங்களில் பொருத்தப்பட்டிருந்த எரிவாயு சிலிண்டர்களை அப்புறப்படுத்தினார்கள்.
பின்னர் சென்னிமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அதிகாரி மணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்க முயற்சி செய்தனர்.
ஆனால் காற்று பலமாக வீசியதால் தொழிற்சாலைக்கு வெளியே குவித்து வைக்கப்பட்டிருந்த தேங்காய் மட்டைகளிலும் தீ பரவியது. அப்போது தொழிற்சாலை அருகிலேயே அடுக்கி வைக்கப்பட்டிருந்த நார்களில் தீ பிடிக்காமல் இருக்க அப்பகுதியை சேர்ந்த 25-க்கும் மேற்பட்டோர் பச்சை வேப்பிலைகளை ஒடித்து தீயை தட்டி தீ பரவாமல் தடுத்தனர். அப்போதும் தீ பரவியதால் பெருந்துறை தீயணைப்பு நிலையத்தில் இருந்தும் தீயணைப்பு வண்டி வரவழைக்கப்பட்டு தீயை அணைக்க முயற்சி செய்தனர்.
ஆனால் தீயணைப்பு வண்டிகளில் இருந்த தண்ணீர் தீர்ந்து போனதால் உடனடியாக சென்னிமலை, பெருந்துறை பகுதியில் இருந்து 10-க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் மற்றும் டிராக்டர்கள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு சுமார் மூன்று மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் தேங்காய் நாரை உலர வைக்கும் இயந்திரம், தேங்காய் மட்டைகளை அள்ளி போடும் இயந்திரம், பார்சல் போடும் இயந்திரம் மற்றும் தேங்காய் நார், தேங்காய் மட்டைகள் என ஏராளமான பொருட்கள் தீயில் எரிந்து நாசம் ஆனது.
இதன் மதிப்பு ரூ. 50 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த தீ விபத்து குறித்து சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோபி:
கோபியில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித் தார். அப்போது அவர் கூறிய தாவது:-
தேசிய நல்லாசிரியர் விருது பெற்றுள்ள தமிழகத்தை சேர்ந்த இரு ஆசிரியர்களும் தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
பாலியல் தொல்லையில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க சட்ட வல்லுனர்களிடம் கலந்து ஆலோசித்தபின் முதலமைச்சரிடம் கூறி ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இது போன்ற நிகழ்வுகள் நடப்பது வேதனைக்குரியது. இதுபோன்ற ஆசிரியர்களினால் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கும் அவப்பெயர் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தற்காலிக ஆசிரியர்களுக்கு புதிய சிலபஸ் குறித்த பயிற்சி அளிக்கவும் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த கல்வி தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்தவும் அரசு நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது.
மேலை நாடுகள் சுற்றுப் பயணத்தில் பின்லாந்து நாடு கல்வியில் மேன்மை அடைந்துள்ளது. எல்.கே.ஜி. யு.கே.ஜி. வகுப்புகளிலேயே நல்ல ஒழுக்கம் உடல் ஆரோக்கியம் பழக்கவழக்கம் பன்பாடு ஆகியவற்றை கற்றுக்கொடுக்கின்றனர். ஆகவே இந்த புதிய முறைகளை நம்நாட்டிலும் கொண்டுவருவதற்கு நிதிகள் தேவைபடுகிறது. இதற்காக முதல்வருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.
பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பறைகள் மாற்றப்பட்டுள்ளது. மேலும் சிசிடிவி கேமரா அமைக்க நிதி தேவைப்படுவதால் முதலமைச்சரிடம் அரசு பரிசீலனை செய்யும். 90 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் கொண்டுவருவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எல்.கே.ஜி. யு.கே.ஜிக்கு அங்கன்வாடி பணியாளர்களுக்கு பயிற்சியளித்து பணியில் அமர்த்த வேண்டும் என்ற ஆசிரியர்கள் சங்கங்களின் கோரிக்கை குறித்து சமூக நலத்துறை தான் முடிவெடுக்க வேண்டும் ஆசிரியர்கள் கூடுதலாக உள்ளனர். இருந்தாலும் இது குறித்து அரசு ஆய்வு செய்யும்.
ஆசிரியர்கள் தேர்வு முறைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. புதிய சிலம்பஸ் பாடத்தை முழுமையாக படித்தால் மட்டுமே ஆசிரியர்கள் தேர்வில் வெற்றிபெற முடியும். பணியில் உள்ள 1500 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் பயிற்சி பெற்று ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே பணி வாய்ப்பு வழங்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
பெருந்துறை அடுத்த பெரிய வேட்டுவபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜேம்ஸ் ராபர்ட் (வயது 29). இவரது மனைவி சங்கீதா (25) இவர்களுக்கு விலோம் (5), ஷெர்பின் (1) ஆகிய 2 மகன்கள் உள்னர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கணவன்- மனைவிக்கு இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதனால் கணவருடன் கோபித்து கொண்டு தனது 2 மகன்களையும் அழைத்து கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார்.
அவரை ஜேம்ஸ் ராபர்ட் தனது உறவினர்கள், அக்கம்பக்கம் மற்றும் நண்பர்கள் வீடுகளிலும் தேடிப்பார்த்தார். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இது குறித்து பெருந்துறை போலீஸ் நிலையத்தில் ஜேம்ஸ் ராபர்ட் புகார் அளித்தார் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சங்கீதா மற்றும் அவரது 2 மகன்களை தேடி வருகிறார்கள்.
சித்தோடு:
ஆப்பக்கூடல் சக்தி நகர் காந்தி வீதியில் வசிப்பவர் கிருஷ்ணன் மகன் செந்தில் (வயது 40). இவர் பவானி அருகிலுள்ள சித்தோடு ஆவின் பால்பண்ணை எதிரில் உள்ள டாஸ்மாக் கடையில் ஊழியராக பணியாற்றி வந்தார்.
நேற்று இரவு செந்தில் கடையை மூடிவிட்டு கடையின் உள்ளே தாழிட்டுக் கொண்டு தூங்கினார்.
இன்று காலை கடையை திறக்க வந்த கோவிந்தசாமி பலமுறை கதவை தட்டியும் திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்து சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். போலீசார் சம்பவம் இடத்துக்கு வந்து கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது செந்தில் இறந்து கிடந்தார்.
செந்திலின் உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக சித்தோடு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் செந்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இறந்த செந்திலுக்கு உதயா என்ற மனைவியும், ஹேம்நாத் (10), நந்தா (7) என்ற 2 மகன்களும் உள்ளனர். செந்திலுக்கு கடன் பிரச்சனையா? அல்லது வேறு ஏதாவது பிரச்சனையா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெருந்துறை:
பள்ளிபாளையம் ஆவுத்திபாளையம் கண்ணகி வீதியை சேர்ந்த மாணிக்கம் என்பவரது மகன் தன்ராஜ் (வயது 57). இவர் தனது மனைவி பாப்பு மற்றும் மகனுடன் மேற்கண்ட முகவரியில் குடியிருந்து வருகிறார்.
மனைவி பாப்புவும் மகனும் பெருந்துறை சிப்காட்டில் உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான பால் கடையில் வேலை பார்த்து வருகின்றனர். தன்ராஜ் அதே பகுதியில் ஒரு டீக்கடையில் வேலை பார்த்து வந்தார். அவர் காலில் ஆணி உள்ளதால் நின்று கொண்டே டீ போட முடியாதால் வேலையில் இருந்து நின்று விட்டார்.
வேலை இல்லாததால் மனமுடைந்து காணப்பட்ட அவர் மனைவி வேலை பார்க்கும் பால் கடைக்கு வந்துள்ளார். பின்னர் அங்கிருந்து ஒரு டம்ளர் தண்ணீரை வாங்கிக் கொண்டு பால் கடைக்கு வெளியே நின்று கையில் வைத்திருந்த மூன்று விஷ மாத்திரைகளை எடுத்து சாப்பிட்டு விட்டார்.
விஷ மாத்திரைகளை சாப்பிடுவதை கண்ட மனைவியும் மகனும் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தன்ராஜை சேர்த்தனர்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆப்பக்கூடல்:
ஆப்பக்கூடல் அருகே உள்ள புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 27). அரசு ஒப்பந்த காண்டிராக்டராக இருந்தார்.
இவர் தனது மோட்டார் சைக்கிளில் ஆப்பக்கூடலில் இருந்து சத்தியமங்கலத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். வரட்டுப்பள்ளம் சின்னதுரை தோட்டம் அருகே ஒரு வளைவில் திரும்பிய போது எதிரே வந்த ஒரு ஆம்னி வேன் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தலையில் அடிப்பட்ட அவரை மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே கோபாலகிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து ஆப்பக்கூடல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு அடுத்த அரச்சலூர் ராட்டை சுற்றிபாளையம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது65). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று கோவிந்த ராஜ் கடைக்கு சென்று விட்டு வருவதாக கூறிவிட்டு சென்றார். ராட்டை சுற்றிபாளையம் மாகாளியம்மன் கோவில் அருகே வந்தபோது கோவிந்தராஜ் காலில் பாம்பு ஒன்று கடித்துள்ளது. இரவு நேரம் என்பதால் என்ன பாம்பு கடித்தது? என்று அவருக்கு சரியாக தெரியவில்லை.
பின்னர் வீட்டுக்கு வந்த கோவிந்தராஜ் நடந்த சம்பவத்தை கூறினார். இதையடுத்து அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி கோவிந்தராஜ் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அரச்சலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






