என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே டெங்கு காய்ச்சலுக்கு 2-ம் வகுப்பு மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் கர்நாடகா மாநில எல்லையையொட்டி உள்ள தாளவாடியை சேர்ந்தவர் மஞ்சுநாத். அரசு பள்ளி ஆசிரியர். இவரது மனைவி பெயர் சுஜதா.

    இவர்களது மகன் சரண் (வயது 7). தாளவாடி அருகே தொட்ட காஜனூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான்.

    கடந்த 20 தினங்களுக்கு முன் மாணவன் சரணுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அவனை தாளவாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பிறகு மேல் சிகிச்சைக்காக கர்நாடகா மாநிலம் மைசூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவனை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். இதில் மாணவனுக்கு டெங்கு அறிகுறி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவனுக்கு 5 நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் மாணவன் சரண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான்.

    மாணவன் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுத காட்சி உருக்கமாக இருந்தது. அவனது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    உடலை பெற்று கொண்டு உறவினர்கள் இன்று தாளவாடி திரும்பினர்.

    டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் பலியான சம்பவம் தாளவாடியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறும் போது, ‘‘தாளவாடி பகுதியில் சுற்றுப்புறத்தை மிகவும் சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும். கொசு மருந்து அடிக்க வேண்டும். சுகாதார குழுவினர் மூலம் டெங்கு நோயை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கேட்டு கொண்டுள்ளனர்.
    சத்தியமங்கலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில உள்ள சார்பதிவாளர் அலுவலகம் முன் வேகமாக ஒரு கார் நின்றது.

    காரிலிருந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் இறங்கி சார்பதிவாளர் அலுவலகத்துக்கு வந்தனர்.

    பிறகு அவர்கள் யாரும் எங்கும் போகக்கூடாது. அனைவரும் உட்கார்ந்த இடத்திலேயே அப்படியே உட்காருங்கள் என்று உத்தரவிட்டனர்.

    சார்பதிவாளர் அலுவலக கதவும் இழுத்து சாத்தப்பட்டது. இதனை தொடர்ந்து காரில் வந்து இறங்கிய 2 பெண்கள் உள்பட லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    மாலை 5.30 மணிக்கு தொடங்கிய இந்த அதிரடி சோதனை நள்ளிரவு 11.30 மணி வரை 6 மணி நேரம் நடந்தது.

    நேற்று மட்டும் 92 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டன. சோதனையில் பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை. அதே சமயம் லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிவாளர் அலுவலகத்திலிருந்து முக்கிய ஆவணங்களை எடுத்து சென்றனர்.

    ஈரோடு அருகே பணியின்போது இறந்ததால் ரூ.10 லட்சம் நஷ்ட ஈடு வழங்க கோரி சுமை தூக்கும் தொழிலாளர் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட ஏஐடியுசி சுமை தூக்கும் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகில் சங்க ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    சங்க நிர்வாகிகள் ஏ.பழனியப்பன், எஸ்.ஜாபர்சாதிக் (ஈரோடு), ஏகாம்பரம், மாகாளி (பவானி), குமார், என்.மணி (பெருந்துறை), வீரக்குமார், பி.மகேந்திரன் (சென்னிமலை), குமாரசாமி, மணி (சத்தி), துரைசாமி (கோபி), ஜோதிவேல் (கொடுமுடி), சதீஸ் (புஞ்சை புளியம்பட்டி) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தமிழ்நாடு ஏஐடியுசி சுமை தூக்கும் தொழிலாளர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர்சின்னசாமி, சம்மேளனப் பொருளாளர் ஜெயராமன், ஏஐடியுசி மாவட்ட துணைத் தலைவர்கள் ஸ்டாலின் சிவகுமார், செல்வம், சங்க ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில் 250-க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

    சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்கப்பட வேண்டும் இவ்வாரியத்தில் அனைத்து சுமைதூக்கும் தொழிலாளர்களையும் உறுப்பினர்களாக்கி சமூகப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த வேண்டும்.

    பணியிடத்தில் நிகழும் விபத்துகளில் உயர் இழக்கும் சுமைதூக்கும் தொழிலாளர் குடும்பங்களுக்கு குறைந்த பட்சம் ரூ10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

    சுமை தூக்கும் தொழிலாளர் குழந்தை களின் கல்விச் செலவு முழுவதையும் வாரியம் மூலம் வழங்குவதோடு, திருமண உதவித்தொகையை ரூ.1 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

    சொந்த வீடில்லாத சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு இலவசமாக வீடு கட்டித்தர வேண்டும். என்பன போன்ற கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன.
    மொடக்குறிச்சி அருகே வீட்டுக்குள் புகுந்து மூதாட்டி கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை மர்ம நபர் பறித்து சென்றார்.
    ஈரோடு

    மொடக்குறிச்சி அடுத்த பஞ்சலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி . இவரது மனைவி சாமியத்தாள் (வயது60). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறார்கள். பெரியசாமி சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். சாமியத்தாள் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

    இந்நிலையில் இன்று காலை 6.15 மணி அளவில் சாமியத்தாள் துணி துவைப்பதற்காக வீட்டின் குளியல் அறைக்கு சென்றார். அப்போது அவரது வீட்டிற்குள் திடீரென வாட்டசாட்டமான வாலிபர் ஒருவன் புகுந்து கண்ணிமைக்கும் நேரத்தில் சாமியத்தாள் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துச் சென்று ஓடினான். திடீரென நடந்த இந்த சம்பவத்தால் சாமியாத்தாள் அதிர்ச்சியில் உறைந்தார். பின்னர் சுதாரித்துக் கொண்டு திருடன்.. திருடன் என கத்தினார்.

    ஆனால் அதற்குள் அந்த நபர் தான் வந்த மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று தப்பிவிட்டான். மர்ம நபர் நகையை கழுத்தில் இருந்து பறித்த போது காளியாத்தாளுக்கு காயம் ஏற்பட்டது.

    இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.

    பட்டப்பகலில் மூதாட்டியிடம் நடந்த நகை பறிப்பு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    புளியம்பட்டி அருகே கோவில் உண்டியலை திருடிய தந்தை, மகனை கைது செய்த போலீசார் உண்டியலை பறிமுதல் செய்ததோடு தப்பியோடிய நபரை தேடிவருகின்றனர்.

    பு. புளியம்பட்டி:

    புளியம்பட்டி அடுத்துள்ள கணக்கரசம்பாளையத்தில் இருந்து பருசாபாளையம் செல்லும் சாலையில் சடையப்பச்சி கோயில் உள்ளது. இக்கோவிலுக்குள் சம்பவத்தன்று 3 பேர் கொண்ட கும்பல் புகுந்தது. கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியலை திருடிச் சென்றுள்ளனர். இதை பார்த்த அப்பகுதி மக்கள் 3 பேரையும் துரத்தினர். அப்போது 2 பேர் மட்டும் பிடிபட்டனர். ஒருவர் தப்பியோடிவிட்டார்.

    பிடிபட்ட 2 பேரையும் புளியம்பட்டி போலீசில் பொதுமக்கள் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில் பிடிபட்ட நபர்கள், புளியம்பட்டி சொலவனூர் அரசாணி மொக்கை பகுதியை சேர்ந்த முருகேசன்(50) மற்றும் இவரது மகன் ராஜன்(28) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் உண்டியலை பறிமுதல் செய்ததோடு தப்பியோடிய நபரை தேடிவருகின்றனர்.

    ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் பழைய சிலைதான் வைக்க வேண்டும்... இல்லை புதிய சிலைதான் வேண்டும்... என கிராம மக்களின் மோதலால் கோவில் கும்பாபிஷேகம் நின்றது.
    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை- ஊத்துக்குளி செல்லும் வழியில் உள்ளது பால தொழுவு ஊராட்சி இப்பகுதியில் வெங்கமேடு செல்லும் வழியில் மிகவும் பழமையான கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இது இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவிலாகும்.

    கோவில் சேதமடைந்து விட்டதால் இதை கடந்த ஒரு வருடமாக புதுப்பிக்கப்பட்டு வந்தது. கடந்த சில மாதமாக கும்பாபிஷேகம் நடத்த தேவையான ஏற்பாடுகள் செய்து வந்தனர்.

    இந்நிலையில் கோவிலில் சிலை வைப்பது தொடர்பாக பொதுமக்களில் இரு தரப்பினரிடையே பிரச்சனை ஏற்பட்டது. பொதுமக்களில் ஒரு தரப்பினர் கோவிலில் பல வருடங்களாக தரிசனம் செய்துவந்த பழைய சிலையே வைக்கவேண்டும் என்றனர். ஆனால், மற்றொரு தரப்பினர் புதிய சிலை வைக்க வேண்டும் என்றனர்.

    இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு பெருந்துறை தாசில்தார் துரைசாமி முன்னிலையில் பெருந்துறையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது இரு தரப்பினரையும் சமரசம் செய்தனர்.

    இதில் பழைய சிலை வைப்பதற்கு உடன்பாடு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற இருந்தது. ஆனால் இதற்கிடையில் ஒரு தரப்பினர் அத்துமீறி கோவிலில் புதிய சிலையை வைத்தனர். இதனால் அங்கு மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது. போலீசார் அங்கு குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

    இந்நிலையில் வருவாய்த்துறையினர், அறநிலையத்துறை, போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். உடன்பாட்டை மீறி அங்கு வைக்கப்பட்ட புதிய சிலையை அகற்றுமாறு உத்தரவிட்டனர். ஆனால், அதை அகற்ற மறுத்தனர்.

    இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் சூழல் உருவானதால் அதிகாரிகளின் உத்தரவின்படி கும்பாபிஷேகத்தை தற்போது நிறுத்தவும் மற்றொரு நாளில் நடத்த முடிவு செய்து ஒத்திவைத்தனர். கும்பாபிஷேகம் நிறுத்தப்பட்டதால் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    ஈரோடு மாவட்டம் முழுவதும் விடிய விடிய கொட்டி தீர்த்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பவானி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகபட்சமாக 65 மி.மீட்டர் மழை கொட்டியது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கருமேக கூட்டங்கள் சூழ்ந்து வந்தாலும் மழை பெய்யாமல் சில துளிகள் மட்டுமே போட்டு ஏமாற்றி சென்றது.

    இந்த நிலையில் நேற்று மாலையும் வழக்கம்போல் திடீரென கருமேக கூட்டங்கள் திரண்டு வந்தன. எங்கே மழை பெய்யப்போகிறது? என சலித்த மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் வகையில் லேசாக பெய்யத் தொடங்கிய மழை அடுத்தக் கணம் பலத்த இடி-மின்னலுடன் கொட்டி தீர்த்தது.

    மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது. சில இடங்களில் 2 மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது.

    பவானி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகபட்சமாக 65 மி.மீட்டர் மழை கொட்டியது. இதையொட்டி பவானி நகரில் மழை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    ஏற்கனவே காவிரி ஆற்றின் இருகரையையும் தொட்டப்படி ஆர்ப்பரித்து செல்லும் காவிரி ஆற்றின் தண்ணீர் பவானியில் சில வீதிகளிலும் புகுந்து 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது.

    இந்த நிலையில் நேற்று கனமழை பெய்ததையொட்டி பவானி நகரில் எங்கு பார்த்தாலும் தண்ணீராகவே காட்சி அளித்தது.

    இதேபோல் கவுந்தப்பாடி, எலந்த குட்டைமேடு, அம்மாபேட்டை, ஈரோடு, பெருந்துறை, நம்பியூர், கொடுமுடி என மாவட்டம் முழுவதும் மழை பெய்து மக்கள் உள்ளத்தை குளிர வைத்தது.
    மூன்று தலைமுறைக்கு முன்பு சிங்கப்பூர் சென்று குடியேறி வாழ்ந்து வந்த தனலட்சுமியை சென்னிமலை வாலிபர் காதலித்து, தமிழ் கலாசார முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.
    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்துள்ள பசுவபட்டி பிரிவு பகுதியினை சேர்ந்தவர், மோகன்குமார், பி.எச்.டி., பட்டதாரியான இவர் சிங்கப்பூரில் காற்றாலை மின்சார உற்பத்தியில் சீனியர் ஆராய்ச்சி என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.

    அங்கு, நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் ராசாம்பாளையத்தினை பூர்வீகமாக கொண்ட குடும்பத்தினர் கடந்த மூன்று தலைமுறைக்கு முன்பு சிங்கப்பூர் சென்று குடியேறி வாழ்ந்து வருபவர் தனலட்சுமி இவர்களுக்கிடையே காதல் ஏற்பட்டு, திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

    இது தொடர்பாக, இரு வீட்டு பெற்றோருடன் பேசி, தமிழ் கலாசார முறைப்படி, திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு, அதற்காக சிங்கப்பூரில் இருந்து மணமகள் குடும்பத்தினர் ஒரு வாரம் முன்பு வருகை தந்து கோவையில் தங்கினர். காங்கேயம்-சென்னிமலை ரோட்டில் உள்ள நால்ரோடு அருகே திருமண மண்டபத்தில் இவர்களின் திருமணம் நடைபெற்றது.

    மணமகன் பட்டு வேட்டி - சட்டையிலும், மணமகள் பட்டு புடவையிலும் இருந்தனர். மணமகனுக்கு தாய் மாமன் துணை இருக்க, மணமகளுக்கு நங்கைகள் துணை இருக்க தாலி கட்டி, சிவாச்சாரியர் மந்திரம் ஓத உற்றார் உறவினர் வாழ்த்த திருமணம் நடந்தது.

    திருமண விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள், டாக்டர் எம்.எஸ்., உதயமூர்த்தி எழுதிய ‘எண்ணங்கள்’ புத்தகம் இலவசமாக வழங்கினர்.

    இதுபற்றி மணமகள் தனலட்சுமி கூறுகையில், நான் சிங்கப்பூரிலேயே பிறந்து வளர்ந்தேன், தமிழ் கலாசாரத்தினை படித்துள்ளேன். நான் இதுவரை தமிழ்நாடு வந்தது இல்லை, இங்குள்ள மருதாணி, பாரம்பரிய இசை, மக்களின் அன்பான அணுகுமுறை, உபசரிப்பு, போன்றவை தனக்கு மிகவும் பிடித்துள்ளதாக தெரிவித்தார்.




    பண்ணாரி கோவில் அருகே புலி நடமாட்டம் என தகவல் கேட்டதும் பக்தர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் வனப் பகுதியில் தற்போது புலிகளின் எண்ணிக்கை கூடி உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே அந்த வழியாக செல்பவர்களும் ரோந்து பணியில் ஈடுபடும் வனத்துறையினரும் அவ்வப்போது புலியை நேரில் பார்த்தும் உள்ளனர்.

    சத்தியமங்கலத்தை சேர்ந்த வியாபாரி ஒருவர் தனது மோட்டார் சைக்கிளில் தாளவாடி போய் விட்டு மீண்டும் சத்தியமங்கலத்துக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

    வனப்பகுதியையொட்டி உள்ள பண்ணாரி கோவில் அருகே எக்காலஜி பார்ம் என்ற வனக்குட்டை அருகே மதியம் 2 மணியளவில் அவர் வந்தபோது வனக் குட்டையிலிருந்து திடீரென மஞ்சள் நிறத்தில் ஏதோ ஒன்று தென்பட அந்த வியாபாரி திரும்பி பார்த்தார். அடுத்தகணம் ஆடிப்போனார். வனக்குட்டை அருகே பெரியபுலிஒன்று ஜம்மென்று நின்று கொண்டிருந்தது. தனது பைக்கை நிறுத்தி அந்த புலியை பார்த்தார். சிறிது நேரம் உட்கார்ந்திருந்த அந்த புலி பிறகு காட்டுக்குள் புகுந்தது.

    இதுகுறித்து அவர் மற்றவர்களுக்கு கூற பண்ணாரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கோவில் அருகே புலி நடமாட்டம் என தகவல் கேட்டதும் பக்தர்களும் சிலிர்த்தனர்.

    இதுகுறித்து சத்தியமங்கலம் வனச்சரகர் பெர்னார்டு கூறும்போது, “பண்ணாரி பகுதியில் புலி நடமாட்டம் உள்ளதை பார்த்து உள்ளனர். எனவே பக்தர்கள் பொதுமக்கள் என யாரும் வனப்பகுதி உள்ளே சென்றுவிட வேண்டாம், ஆடு-மாடு மேய்ப்பவர்களும் கவனமாக இருக்க வேண்டும்“ என்று கூறி உள்ளார்.

    ஈரோட்டில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ஈரோடு:

    ஈரோடு ரெயில்வே காலனி பகுதியை சேர்ந்தவர் தனபால். இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 38) தனபால் ஜவுளிக்கடையில் பணியாற்றி வருகிறார்.

    இவர்களுக்கு புவனேஸ்வரி (18) என்ற ஒரு மகள், பிரகாஷ் (15) ஒரு மகனும் உள்ளனர். ஜெயலட்சுமிக்கு கடந்த சில மாதங்களாக வயிற்று வலி இருந்ததாக கூறப்படுகிறது.

    இதற்காக அவர் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் வயிற்று வலி குணமாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தியில் இருந்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது ஜெயலட்சுமி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே லாரி மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த 2 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு அடுத்த சித்தோடு டெலிபோன் நகரை சேர்ந்த தறி பட்டறை தொழிலாளி விசாகவேல் மகன் தரனேஷ் (வயது 15). சாணார் பாளையத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவரது மகன் சிவா (வயது 15)

    இந்த 2 சிறுவர்களும் சித்தோடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தனர். இருவரும் நண்பர்கள்.

    மாணவர்கள் 2 பேரும் நேற்று மாலை பள்ளி முடிந்து உற்சாகமாக தங்கள் வீடுகளுக்கு சென்று கொண்டிருந்தனர். சைக்கிள் இருந்தும் நண்பர்கள் 2 பேரும் சைக்கிளை தள்ளிக்கொண்டே ரோட்டோரமாக பேசியபடி சென்று கொண்டிருந்தனர்.

    சித்தோடு-பவானி ரோட்டில் சென்ற போது சித்தோடு நோக்கி ஒரு லாரி வந்தது. இந்த லாரி முன்னாள் சென்ற ஒரு காரை முந்த முயன்றது.

    அப்போது எதிர்பாராத விதமாக ரோட்டோரம் நடந்து சென்று கொண்டிருந்த 2 மாணவர்கள் மீதும் அந்த லாரி பயங்கரமாக மோதியது. இதில் 2 மாணவர்களும் தூக்கி வீசப்பட்டு படுகாயங்களுடன் உயிருக்காக போராடினர்.

    இதை கண்டதும் லாரி டிரைவர் கீழே குதித்து தப்பி ஓடிவிட்டார். அதே சமயம் அந்த வழியாக வந்த ஒரு ஆம்புலன்சு அங்கு வந்தது.

    ஆம்புலன்சை ஓட்டி வந்த டிரைவர் சித்தன் ஓடி வந்து 2 மாணவர்களுக்கும் முதலுதவி சிகிச்சை கொடுத்தார். ஆனால் 2 மாணவர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    ஒன்றாக இணைந்து வீட்டுக்கு சென்ற 2 மாணவர்களும் ஒன்றாகவே உயிர்களை இழந்தசம்பவம் பேரிடியாக இருந்தது. மாணவர்களின் உறவினர்களும் ஊர்காரர்களும் பதறியடித்து கொண்டு ஓடி வந்தனர். உயிரற்ற பிணமாக கிடந்த மாணவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதனர்.

    உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் ஆவேசத்துடன் போராட்டத்தில் குதித்தனர். சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பரபரப்பு ஏற்பட்டது.

    சம்பவ இடத்துக்கு சித்தோடு போலீசார் விரைந்தனர். மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சார்லஸ் பவானி டி.எஸ்.பி. சேகர் ஆகியோர் சாலை மறியல் நடத்தியவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இரவு 8.20 மணி வரை 4 மணி நேரமாக இந்த பேச்சுவார்த்தை நடந்தது. அந்த பகுதியில் விபத்தை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். லாரி டிரைவர் மீது கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும் என போலீசார் கூறியதை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

    விபத்தில் பலியான 2 மாணவர்களின் உடல்களும் பவானி அரசு ஆஸ் பத்திரியில் உடல் பரிசோதனைக்காக சேர்க்கப்பட்டு உள்ளது. உடல் பரிசோதனைக்கு பிறகு உடல்கள் உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது.

    விபத்தை ஏற்படுத்தி நிற்காமல் சென்ற லாரி டிரைவரை மடக்கி பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் சித்தோடு சமத்துவபுரம் பகுதியில் வசிக்கும் பரமசிவம் என்பவரின் மகன் செல்வராஜ் (வயது 25) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து சித்தோடு போலீசார் லாரி டிரைவர் செல்வராஜை கைது செய்தனர்.
    ஈரோடு மாவட்டம் தாளவாடியில் தக்காளி விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டத்தின் கடை கோடியில் கடல் மட்டத்தில் இருந்து 1105 மீட்டர் உயரத்தில் உள்ளது தாளவாடி வனப்பகுதி. அதன் சுற்று வட்டார கிராமங்களான கொங்கள்ளி, பனகஹள்ளி, தொட்ட காஜனூர் பாரதிநகர், கெட்டவாடி, தலமலை அருள்வாடி போன்ற 40-க்கும் மேற்பட்ட கிராங்களில் கத்திரி, வெண்டை, தக்காளி பீட்ரூட், சிவப்பு முள்ளங்கி, முட்டைகோஸ், சின்ன வெங்காயம் , பீன்ஸ் ஆகிய பயிர்களை பயிரிடுவது வழக்கம்.

    இந்த பகுதியில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது. இவற்றை வாங்க வரும் வியாபாரிகள் ஒரு கிலோ ரூ.3 மற்றும் ரூ.4 விலை கொடுப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து தாளவாடி விவசாயிகள் கூறியதாவது:-

    3 மாத பயிரான தக்காளி 1 ஏக்கருக்கு நாற்று , களை எடுத்தல், உரம் மருந்து என ஏக்கர் ஒன்றுக்கு 50 ஆயிரம் வரை செலவு ஆகிறது. கடந்த 3 மாதம் முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ 25 வரை வியாபாரிகள் கொள்முதல் செய்தனார். ஆனால் தற்போது வியாபாரிகள் ஒரு கிலோ ரூ 3 முதல் ரூ 4 வரை மட்டுமே கொள்முதல் செய்கின்றனர்.

    விளைச்சல் அதிகம் எனக் காரணம் கூறி குறைவான விலைக்கு கேட்கின்றனர் வியாபாரிகள். கொள்முதல் செய்வதால் பயிர்களுக்கு செலவு செய்த அசல் தொகை கூடகிடைப்பதில்லை. இதனால் பழுத்த தக்காளியை பறித்து சாலை ஓரத்தில் கொட்டி வருகிறோம். விவசாயத்தை நம்பி இருந்தால் கடன் தான் அதிகமாகி அதனால் அவதிப்பட வேண்டிய நிலை வந்து விடும். எனவே விவசாயத்தை விட்டு நகர் பகுதிக்கு தான் இனி வேலைக்கு செல்ல வேண்டும்.

    இவ்வாறு விவசாயிகள் வேதனையுடன் கூறினர்.

    ×