என் மலர்tooltip icon

    ஈரோடு

    • வனவிலங்குகள் குறித்து ஆண்டுதோறும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் என இரு முறை வனவிலக்கு கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருவது வழக்கம்.
    • வனவிலங்கு கணக்கெடுப்பு குறித்த விவரங்கள் சென்னை தலைமை வன பாதுகாப்பு அலுவலருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று சத்தியமங்கலம் புலிகள் காப்பக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஈரோடு:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள சத்தியமங்கலம், பவானிசாகர், டி. என். பாளையம், கடம்பூர், தலமலை, விளாமுண்டி, ஆசனூர், கேர்மாளம், தாளவாடி, ஜீரகள்ளி ஆகிய 10 வனச்சரகங்கள் உள்ளன.

    இதில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    வனவிலங்குகள் குறித்து ஆண்டுதோறும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் என இரு முறை வனவிலக்கு கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருவது வழக்கம்.

    அதன்படி சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மழை காலத்திற்கு முந்திய வனவிலங்கு கணக்கெடுப்பு பணி கடந்த ஜூன் 27-ந் தேதி தொடங்கியது.

    10 வனச்சரகங்களில் பணிபுரியும் 300-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் 76 குழுக்களாக பிரிந்து வனவிலங்கு கணக்கெடுப்பு பணி மேற்கொண்டனர்.

    இதில் வன விலங்குகளில் எச்சம், கால்தடம் உள்ளிட்டவைகளை அடிப்படையாகக் கொண்டு ஜி.பி.எஸ். கருவி, காம்பஸ், வியூ பைன்டர், ரேஞ்ச் பைன்டர் உள்ளிட்ட பல்வேறு கருவிகளை பயன்படுத்தி கணக்கெடுப்பு பணி நடந்து வந்தது.

    மொத்தம் 6 நாட்கள் நடந்த கணப்பு எடுப்பு பணி நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து வனவிலங்கு கணக்கெடுப்பு குறித்த விவரங்கள் சென்னை தலைமை வன பாதுகாப்பு அலுவலருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று சத்தியமங்கலம் புலிகள் காப்பக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஈரோடு ஸ்டோனிபாலம் ஈ.வி.என்.ரோட்டில் போக்குவரத்து எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
    • சிறுவர்கள் கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஈரோட:

    ஈரோடு ஸ்டோனிபாலம் ஈ.வி.என்.ரோட்டில் போக்குவரத்து எப்போதும் பரபரப்பாக காணப்படும். ரெயில் நிலையம் அருகில் இருப்பதால் இரவு, பகலாக வாகனங்கள் சென்று வருகின்றன.

    இந்த நிலையில் நேற்று இரவு சாலையோரமாக நின்றிருந்த சிறுவர்கள் சிலர் திடீரென அந்த வழியாக சென்ற வாகனங்களின் மீது கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டனர். குறிப்பாக அந்த வழியாக சென்ற கார்களின் மீது கற்களை வீசி கண்ணாடியை உடைக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டனர்.

    இதில் 5 கார்களின் கண்ணாடிகள் உடைந்தன. மேலும் ஒருவர் காயம் அடைந்தார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் கிடைத்ததும் அரசு தலைமை மருத்துவமனை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

    போலீஸ் வருவதை அறிந்ததும் அந்த சிறுவர்கள் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தனர்.

    இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

    இந்த பகுதியில் சில சிறுவர்கள் கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்டு வருகிறார்கள். வாகனங்களின் மீது கல்வீசி தாக்குதல் சில நாட்களாக நடந்து வருகிறது.

    இந்த சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் 16 முதல் 18 வயது உடையவராக இருக்கிறார்கள். இவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அங்கு கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தி போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி கண்காணிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பள்ளி கட்டிடத்தின் சிமெண்ட் சிலாப் இடிந்து விழுந்த விவகாரம் தொடர்பாக இன்று காலை சத்திரோட்டில் உள்ள அரசு பெண்கள் பள்ளியின் முன் 50-க்கும் மேற்பட்ட மாணவிகளின் பெற்றோர் திரண்டனர்.
    • இது குறித்து தகவல் அறிந்து வந்த வீரப்பன்சத்திரம் போலீசார் மற்றும் டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் ஆகியோர் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் சத்தி ரோட்டில் மாசிமலை ரங்கசாமி கவுண்டர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது.

    இதே பள்ளியின் மற்றொரு பிரிவு பெரிய குட்டை வீதியில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையும் இயங்கி வருகிறது. இதில் பெரிய குட்டை வீதியில் செயல்படும் பள்ளியில் வகுப்பறை கட்டிடம் பழுதடைந்ததன் காரணமாக கடந்த 3-ந்தேதி கட்டிடத்தில் இருந்த சிமெண்ட் சிலாப் (சன் ஷேடு) இடிந்து விழுந்தது.

    இதைப்பார்த்து பள்ளிக்கு வந்த மாணவிகளின் பெற்றோர் பள்ளியின் கட்டிடத்தினை பராமரிப்பு பணி செய்து மாணவிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து பள்ளி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் பள்ளி கட்டிடத்தின் சிமெண்ட் சிலாப் இடிந்து விழுந்த விவகாரம் தொடர்பாக இன்று காலை சத்திரோட்டில் உள்ள அரசு பெண்கள் பள்ளியின் முன் 50-க்கும் மேற்பட்ட மாணவிகளின் பெற்றோர் திரண்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்து வந்த வீரப்பன்சத்திரம் போலீசார் மற்றும் டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் ஆகியோர் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பள்ளியின் தலைமை ஆசிரியை ஜெயந்தியை முற்றுகையிட்டு பெற்றோர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    பள்ளியின் கட்டிடத்தினை தரம் உயர்த்த வேண்டும். அதுவரை மாணவிகளை மாற்று கட்டிட வகுப்பறையில் வைத்து பாடம் நடத்த வேண்டும். கழிப்பறை வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றனர்.

    கட்டிடத்தினை தரம் உயர்த்துவது, பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அமைச்சரின் கவனத்திற்கும் எடுத்து செல்லப்பட்டுள்ளது. பணிகள் அடுத்த 15 நாட்களுக்குள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    இதன்பேரில் சமாதானம் அடைந்த மாணவிகளின் பெற்றோர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • சிறுமி ஜீவஸ்ரீ, பாட்டி உறவு முறையான மலருடன் அதிக பாசத்துடன் பழகி வந்துள்ளார்.
    • விளையாடிக்கொண்டிருந்த ஜீவஸ்ரீ தவறி கிணற்றில் விழுந்துள்ளார்.

    சிவகிரி:

    தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியில் பல்வேறு கரும்பு தோட்டங்கள் உள்ளது. இந்த தோட்டங்களில் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகிறார்கள். கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஆர்.எஸ். மணிநகர் 9-வது தெருவை சேர்ந்த கார்த்திக் மற்றும் 20 குடும்பத்தினர் சிவகிரியில் தங்கியிருந்து கரும்பு தோட்டங்களில் பணியாற்றி வருகிறார்கள்.

    நேற்று மதியம் தோட்டத்தில் விளையாடி கொண்டிருந்த கார்த்திக்கின் மகள் ஜீவஸ்ரீ (வயது 4) என்ற சிறுமி திடீரென மாயமானாள்.

    அக்கம்பக்கத்தில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. எனவே தோட்டத்து கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் சிவகிரி போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வாசுதேவநல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ஷேக்அப்துல்லா தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று முடுக்காளன்கரையில் உள்ள ஒரு தோட்டத்தில் உள்ள கிணற்றில் இறங்கி சிறுமியை தேடினர்.

    சுமார் 4 மணி நேரம் போராட்டத்திற்கு பின்னர் சிறுமி ஜீவஸ்ரீ மற்றும் மேலும் ஒரு பெண்ணும் பிணமாக மீட்கப்பட்டனர். அப்போது அந்த பெண், சிறுமியை பாதுகாப்பாக கட்டி அணைத்தவாறு இருந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    விசாரணையில் அந்த பெண் பண்ருட்டியை சேர்ந்த ஏழுமலை என்பவரது மனைவி மலர் (வயது35) என்பது தெரியவந்தது.

    விளையாடிக்கொண்டிருந்த ஜீவஸ்ரீ தவறி கிணற்றில் விழுந்துள்ளார். இதனை பார்த்த அவரது உறவினரான மலர் அவரை மீட்க கிணற்றில் குதித்து உள்ளார். அவருக்கு நீச்சல் தெரியாததால் 2 பேரும் தண்ணீர் மூழ்கி இறந்துள்ளது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    சிறுமி ஜீவஸ்ரீ, பாட்டி உறவு முறையான மலருடன் அதிக பாசத்துடன் பழகி வந்துள்ளார். இதனால் தான் சிறுமி கிணற்றில் விழுந்ததும் தனக்கு நீச்சல் தெரியாது என்ற போதிலும் கூடகிணற்றில் குதித்து காப்பாற்ற முயன்றுள்ளார்.

    இருவரது உடலையும் போலீசார் மீட்டு சிவகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 3 நாட்களாக நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
    • இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 47 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    இந்நிலையில் கடந்த 3 நாட்களாக நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.06 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 6,889 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்காக 900 கன அடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 1,005 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • ஒரு அறையில் ரவீந்திரன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொ ண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • இது குறித்து சென்னிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த கோட்டை கணக்கு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன் (32).

    இவரது மனைவி சுகுணா. ரவீந்திரன், சுகுணா இருவரும் காதல் திருமணம் செய்தவர்கள். இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகன் உள்ளார். ரவீந்திரனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.

    இதனால் அவரை திருச்செங்கோட்டில் உள்ள மது அடிமை மறு வாழ்வு மையத்தில் சேர்த்து சிகிச்சைக்காக அனுமதி த்தனர். அதன் பின்னரும் ரவீந்திரன் குடித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    இதனால் சுகுணா தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் வீட்டிலிருந்த ரவீந்திரன் திடீரென தூக்கு போட்டுக் கொண்டார். சுகுணா வீட்டுக்கு வந்து கதவை தட்டி உள்ளார். ஆனால் பதில் ஏதும் வரவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த அவர் அக்கம்பக்க த்தினர் உதவியுடன் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தார். அப்போது ஒரு அறையில் ரவீந்திரன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொ ண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து சென்னிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேப்போல் ஈரோடு மாவட்டம் கொடு முடி அடுத்த கொளத்துப்பாளையம், வேலன் காட்டூர் பகுதி யைச் சேர்ந்தவர் துரை சாமி (65). தனியார் கட்டு மான நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். துரைசாமிக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படு கிறது.

    இந்நிலையில் சம்பவத்த ன்று துரைசாமி வாந்தி எடுத்துள்ளார். இது குறித்து அவரது மகன் தந்தையிடம் கேட்டபோது, விஷ மாத்திரையை சாப்பிட்டு விட்டதாக கூறினார்.

    இதையடுத்து துரைசாமி யை மீட்டு சிகிச்சைக்காக கொடுமுடி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள்வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து கொடுமுடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 82.69 அடியாக இருந்தது.
    • பவானிசாகர் அணையில் இருந்து மொத்தம் 1005 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    சத்தியமங்கலம்:

    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 82.69 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1967 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

    அணையில் இருந்து அரக்கன்கோட்டை-தடப்பள்ளி வாய்க்காலுக்கு 900 கன அடியும், குடிநீருக்காக 100 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலில் 5 கன அடியும் என மொத்தம் 1005 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுபுற பகுதிகளில் இன்று அதிகாலை முதல் காலை 9 மணிவரை திடீரென சாரல் மழை பெய்தது.
    • காலை நேரத்தில் திடீரென மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுபுற பகுதிகளில் இன்று அதிகாலை முதல் காலை 9 மணிவரை திடீரென சாரல் மழை பெய்தது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் குடை பிடித்தபடி சென்றனர்.

    மேலும் வேலைக்கு செல்பவர்களும் சாரல் மழையில் நனைந்த படி வேலைக்கு சென்றனர். காலை நேரத்தில் திடீரென மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

    • ஈரோடு, மணிக்கூண்டு, நேதாஜி சாலையில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • கடத்தூர் போலீசார் நடத்திய சோதனைகயில் வண்டிபாளையம், முனியன் தோட்டத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவரை கைது செய்து 9 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு, மணிக்கூண்டு, நேதாஜி சாலையில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்திய போது, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த சேலம் மாவட்டம், மேட்டூர், கோவிந்தபாடியை சேர்ந்த தன்ராஜ்(45) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவரிடமிருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    பெருந்துறை போலீசார் நடத்திய சோதனையில் மது விற்பனையில் ஈடுபட்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம், கரம்பக்குடியை சேர்ந்த சுப்பிரமணியம் (52) என்பவரை கைது செய்து 6 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் கடத்தூர் போலீசார் நடத்திய சோதனைகயில் வண்டிபாளையம், முனியன் தோட்டத்தை சேர்ந்த சுப்பிரமணி (60) என்பவரை கைது செய்து 9 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி ஒரே நாளில் மாவட்டத்தில் மேலும் 31 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • தற்போது மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 151 ஆக உயர்ந்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கொரோனா தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

    அதே நேரம் சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி ஒரே நாளில் மாவட்டத்தில் மேலும் 31 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 907 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சிகிச்சையில் இருந்த 11 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    இதுவரை 1 லட்சத்து 32 ஆயிரத்து 22 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 151 ஆக உயர்ந்துள்ளது.

    • பவானிசாகர் அருகே கணவர் இறந்த சோகத்தில் விஷம் குடித்த இளம் பெண் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
    • இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் அடுத்த பகுத்தம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மனைவி வளர்மதி (28). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நடத்த விபத்தில் தர்மராஜ் இறந்து விட்டார். கணவர் இறந்ததால் வளர்மதி சோகத்தில் இருந்து வந்தார். மேலும் கணவரை நினைத்து கொண்டு அவரின் படத்தை பார்த்து வளர்மதி அழுது கொண்டே இருந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் சமாதானம் படுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மதியம் வளர்மதி வீட்டில் சானி பவுடர் (விஷம்) குடித்து மயங்கி கிடந்தார். அவரை பார்த்து அவரது மகன் அழுது கொண்டு இருந்தார். இதை கண்ட அக்கம் பக்கம் இருந்த பொதுமக்கள் அவரது வீட்டுக்கு வந்து பார்த்தனர்.

    அப்போது வளர்மதி மயங்கி கிடந்ததை பார்த்து அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு இருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சமீபகாலமாக பஸ் நிலையத்தில் குடிமகன்கள் தொல்லை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
    • இது குறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கேட்டுக் கொண்டு உள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு பஸ் நிலையம் ஈரோட்டில் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு தினமும் உள்ளூர்-வெளியூர் மாவட்ட பஸ்கள் இயங்கி வருகின்றன. காலை மற்றும் மாலை நேரங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    தற்போது பஸ் நிலையத்தில் விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. சமீபகாலமாக பஸ் நிலையத்தில் குடிமகன்கள் தொல்லை அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாகபஸ் நிலையத்தில் மினி பஸ் நிறுத்தம் ரேக் பகுதியில் குடிமகன்கள் மது அருந்திவிட்டு செய்யும் அட்டகாசம் கொஞ்சம் நஞ்சமல்ல. மது அருந்திவிட்டு அங்கேயே தூங்குகின்றனர். சில சமயம் வாந்தி எடுக்கின்றனர். இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் குறிப்பாக பெண் பயணிகள் முகம் சுளிக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது.

    இதனை அடுத்து போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி பஸ் நிலையத்தில் தேவையில்லாமல் சுற்றி கொண்டிருப்பவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி வருகின்றனர். எனினும் குடிமகன்கள் ரகளையில் ஈடுபடும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. இன்று காலை நாமக்கல் சேலம் ரேக்கில் ஒரு குடிமகன் மது போதையில் அங்கும் இங்குமாக சுற்றி கொண்டிருந்தார். அப்போது கல்லூரி மாணவிகள் கல்லூரி செல்வதற்காக பஸ்சுக்கு காத்துக் கொண்டிருந்தனர். அதில் ஒரு மாணவியை பார்த்து அந்த குடிமகன் ஆபாச வார்த்தையில் பேசினார். இதனால் அந்த மாணவி அழுதார். இதே போன்று பஸ் நிலையத்தில் பல்வேறு பகுதிகளில் குடிமகன்கள் அட்டகாசத்ததால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.

    இது குறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கேட்டுக் கொண்டு உள்ளனர்.

    ×