என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஈரோடு அரசு பெண்கள் பள்ளியில் திரண்ட பெற்றோர்கள்- தலைமை ஆசிரியையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
- பள்ளி கட்டிடத்தின் சிமெண்ட் சிலாப் இடிந்து விழுந்த விவகாரம் தொடர்பாக இன்று காலை சத்திரோட்டில் உள்ள அரசு பெண்கள் பள்ளியின் முன் 50-க்கும் மேற்பட்ட மாணவிகளின் பெற்றோர் திரண்டனர்.
- இது குறித்து தகவல் அறிந்து வந்த வீரப்பன்சத்திரம் போலீசார் மற்றும் டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் ஆகியோர் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஈரோடு:
ஈரோடு வீரப்பன்சத்திரம் சத்தி ரோட்டில் மாசிமலை ரங்கசாமி கவுண்டர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது.
இதே பள்ளியின் மற்றொரு பிரிவு பெரிய குட்டை வீதியில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையும் இயங்கி வருகிறது. இதில் பெரிய குட்டை வீதியில் செயல்படும் பள்ளியில் வகுப்பறை கட்டிடம் பழுதடைந்ததன் காரணமாக கடந்த 3-ந்தேதி கட்டிடத்தில் இருந்த சிமெண்ட் சிலாப் (சன் ஷேடு) இடிந்து விழுந்தது.
இதைப்பார்த்து பள்ளிக்கு வந்த மாணவிகளின் பெற்றோர் பள்ளியின் கட்டிடத்தினை பராமரிப்பு பணி செய்து மாணவிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து பள்ளி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் பள்ளி கட்டிடத்தின் சிமெண்ட் சிலாப் இடிந்து விழுந்த விவகாரம் தொடர்பாக இன்று காலை சத்திரோட்டில் உள்ள அரசு பெண்கள் பள்ளியின் முன் 50-க்கும் மேற்பட்ட மாணவிகளின் பெற்றோர் திரண்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த வீரப்பன்சத்திரம் போலீசார் மற்றும் டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் ஆகியோர் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பள்ளியின் தலைமை ஆசிரியை ஜெயந்தியை முற்றுகையிட்டு பெற்றோர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
பள்ளியின் கட்டிடத்தினை தரம் உயர்த்த வேண்டும். அதுவரை மாணவிகளை மாற்று கட்டிட வகுப்பறையில் வைத்து பாடம் நடத்த வேண்டும். கழிப்பறை வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றனர்.
கட்டிடத்தினை தரம் உயர்த்துவது, பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரின் கவனத்திற்கும் எடுத்து செல்லப்பட்டுள்ளது. பணிகள் அடுத்த 15 நாட்களுக்குள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இதன்பேரில் சமாதானம் அடைந்த மாணவிகளின் பெற்றோர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






