என் மலர்
ஈரோடு
- இந்நிலையில், கடந்த 1-ந் தேதி பாத்திமா என்ற கமலா, குழந்தைக்கு கொலுசு வாங்கி வருவதாக, குழந்தையுடன் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
- இதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான இருவரையும் தேடி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் சுரேஷ்(41). தொழிலாளி. இவரது மனைவி பாத்திமா என்ற கமலா(30). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். பாத்திமா அருகே உள்ள சேம்பரில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 1-ந் தேதி பாத்திமா என்ற கமலா, குழந்தைக்கு கொலுசு வாங்கி வருவதாக, குழந்தையுடன் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
அக்கம்பக்கம் தேடியும் கிடைக்காததால் சுரேஷ் ஈரோடு கருங்கல்பாளையம் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான இருவரையும் தேடி வருகின்றனர்.
- ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் வாய்ப்பாடி பிரிவு அருகே கழிவு நீர் சாக்கடையில் ஒருவர் விழுந்து இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
- இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெருந்துறை:
ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் வாய்ப்பாடி பிரிவு அருகே கழிவு நீர் சாக்கடையில் ஒருவர் விழுந்து இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதன்பேரில், பெருந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இதில், இறந்தவருக்கு சுமார் 40 வயது இருக்கும் எனவும், உடல் அழுகிய நிலையில் இருந்ததால் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.
இதையடுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மனவேதனையில் இருந்து வந்தார். இதனால், நேற்று வீட்டிற்கு அருகே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
- இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஈரோடு:
ஈரோடு கருங்கல்பாளையம் கமலா நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன்(65). ஓட்டல் தொழிலாளி. இவருக்கு மது பழக்கம் இருந்து வந்துள்ளது. மதுப்பழக்கத்தை கைவிடக்கோரி அவரது குடும்பத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தும், கைவிட முடியாத மனவேதனையில் இருந்து வந்தார்.
இதனால், நேற்று வீட்டிற்கு அருகே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் ராமச்சந்திரனை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாமாக இறந்தார்.
இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
- தற்போது சாகுபடி பரப்பு குறைந்து வருகிறது. வரத்து சரிவாலும், தேவை அதிகரிப்பால் விலை உயர்ந்து வருகிறது.
- இதனால் விவசாயிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கொடுமுடி, மொடக்குறிச்சி, பவானி, அந்தியூர், தாளவாடி, கடம்பூர் மலைப்பகுதியில் மரவள்ளி கிழங்கு அதிகமாக சாகுபடியாகிறது. ஓராண்டு பயிரான மரவள்ளி கிழங்கில், கடந்த 2 ஆண்டாக மாவு பூச்சி தாக்குதல் அதிகமாக இருப்பதால் மகசூல் குறைந்து காணப்பட்டது.
ஆனால் தற்போது மகசூலுடன் வரத்து குறைந்து வருவதாலும், தற்போது அறுவடை சீசன் நிறைவடைந்ததாலும் அரவை மில்களுக்கு ஒரு டன், 12,500 ரூபாய்க்கு கொள்முதல் செய்கின்றனர்.
இது குறித்து, தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுதந்திரராசு கூறியதாவது:-
கடந்த 2 ஆண்டாக மரவள்ளி கிழங்கில் மாவு பூச்சி தாக்குதல், அறுவடை தொடங்கும் காலத்தில் விலை இல்லாததால் தற்போது சாகுபடி பரப்பு குறைந்து வருகிறது. வரத்து சரிவாலும், தேவை அதிகரிப்பால் விலை உயர்ந்து வருகிறது.
கடந்த ஓராண்டுக்கு முன் ஒரு டன் மரவள்ளி கிழங்கு, 8,000 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது, 12,500 ரூபாய் என்ற விலையில் அரவை மில் உரிமையாளர்கள் கொள்முதல் செய்கின்றனர். சிப்ஸ் தயாரிப்பு, பிற உணவு பயன்பாட்டுக்காக பிற மாநில வியாபாரிகள், ஒரு டன்னை, 25,000 ரூபாய் வரையிலான விலையில் கொள்முதல் செய்கின்றனர்.
அதற்கேற்ப, ஜவ்வரிசி, 90 கிலோ மூட்டை, 4,500 ரூபாயில் இருந்து, 5,300 ரூபாய்க்கு விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
நவம்பர், மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரை மரவள்ளி கிழங்கு அறுவடை சீசனாக உள்ளது. தற்போது சாகுபடி பரப்பு குறைந்ததாலும், தேவை அதிகரிப்பாலும் நடப்பு பருவத்தில் மரவள்ளி கிழங்குக்கு இதே விலை கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆடிப்பெருக்கு விழாவையொட்டி பவானிசாகர் அணை பூங்காவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
- இதையொட்டி பாது காப்பு கருதி அணையை காண பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
சத்தியமங்கலம்:
ஆடி பெருக்கு விழாவை யொட்டி சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் அணை பூங்காவுக்கு இன்று காலை முதலே ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கனைள சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.
அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பூங்காவுக்கு சென்றனர்.
தொடர்ந்து அவர்கள் பூங்காவில் ஊஞ்சல் விளையாடி மகிழ்ந்தனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் சறுக்கு விளையாடி குதுகளித்தனர்.
ஆடி 18 அன்று மட்டும் பவானிசாகர் அணையின் மேல் பகுதியை காண பொது மக்களுக்கு அனுமதி வழங்கப்படும். இதற்காகவே சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அணையை காண வரு வார்கள்.
இந்த நிலையில் பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணை 102 அடியை எட்டும் நிலையில் உள்ளது. இதனால் அணை கடல் போல் காட்சி அளிக்கிறது.
இதையொட்டி பாது காப்பு கருதி அணையை காண பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அணை யின் மேல் பகுதிக்கு செல்லும் நுழைவுவாயில் அடைக்கப்பட்டு தடை என அறிவிப்பு பலகை வைக்கப் பட்டுள்ளது. இதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணி க்கப் பட்டு வருகிறது.
இதே போல் ஆடிப்பெ ருக்கு விழாவையொட்டி பண்ணாரியம்மன் கோவி லில் இன்று அதிகாலை அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்த னர். இதனால் கோவில் வளாகம் முழுவதும் பக்தர் களின் கூட்டமாக காண ப்பட்டது.
சென்னிமலை முருகன் கோவிலில் இன்று காலை முருகப் பெருமானுக்கு பால், தயிர், இளநீர் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்கா ரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதையொட்டி பக்தர்கள் பலர் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தனர்.
இதே போல் திண்டல் முருகன், கோபிசெட்டி பாளையம் சாரதா மாரி யம்மன், பாரியூர் கொண்ட த்து காளியம்மன், பச்சை மலை, பவளமலை முருகன், கொளப்பலூர் அஞ்சநேயர், அளுக்குழி செல்லாண்டி யம்மன், பவானி கூடுதுறை சங்க மேஸ்வரர், செல்லா ண்டியம்மன் உள்பட அனைத்து கோவில்களில் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
- கருமாண்டிசெல்லிபாளையம் சித்தன்பட்டி குளம் நீர் வழிப்பாதைகளை ஜெயக்குமார் எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார்.
- அப்போது நீர் வழி பாதைகளை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு நெடுஞ்சாலை துறை மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
பெருந்துறை:
கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சி காஞ்சிகோயில் சாலையில் சித்தன் பட்டி குளம் உள்ளது. இந்த குளத்திற்கு சீலம்பட்டி, எல்லப்பாளையம், ஒண்டிப்புலியங்காடு, மற்றும் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் இருந்து மழை நீர் வடிந்து குளத்திற்கு வருமாறு நீர்வழிப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த நீர்வழிப் பாதைகள் அடைக்கப்பட்டு கடந்த 3 முறை பெய்த மழை நீர் வீணாகி போனது. இது குறித்து பொதுமக்கள் பெருந்துறை ஜெயக்குமார் எம்.எல்.ஏ.விடம் புகார் அளித்தனர். இதனை அடுத்து அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது நீர் வழி பாதைகளை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு நெடுஞ்சாலை துறை மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
இந்த ஆய்வின்போது பெருந்துறை வடக்கு ஒன்றிய செயலாளர் வைகை தம்பி என்கிற ரஞ்சித் ராஜ், கருமாண்டி செல்லிபாளையம் பேரூர் செயலாளர் கே.எம். பழனிசாமி, பெருந்துறை கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள்ஜோதி கே. செல்வராஜ், பெருந்துறை பேரூர் செயலாளர் கல்யாண சுந்தரம், வார்டு செயலாளர் ராஜா, கே.பி.எஸ். மோகன் குமார்,
என்.எஸ்.கே. சக்திவேல், எஸ்.ஆர். வி.சாமிநாதன், தகவல் தொழில்நுட்ப பிரிவு கோபால், ரகு, எல்லப்பாளையம் நடராஜ்,
காலனி துரை, டீக்கடைத்துரை உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகளும் பொதுமக்களும் உடன் இருந்தனர்.
- புஞ்சைபுளியம்பட்டியில் ஸ்பிரிங் டேல் பப்ளிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு வரும் 5-ந் தேதி ( வெள்ளிக்கிழமை) பள்ளிகளுக்கு இடையேயான சதுரங்கப் போட்டி நடைபெற உள்ளது.
- இதில் 12 ,14 ,16, 19 வயதுக்கு உட்பட்ட மாணவ ,மாணவிகளுக்கு தனி தனி பிரிவுகளில் போட்டி நடைபெற உள்ளது.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியில் ஸ்பிரிங் டேல் பப்ளிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு வரும் 5-ந் தேதி ( வெள்ளிக்கிழமை) பள்ளிகளுக்கு இடையேயான சதுரங்கப் போட்டி நடைபெற உள்ளது.
இந்த சதுரங்க போட்டியில் பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை ,பழனி ,திருப்பூர் ,கோவை,பல்லடம் தாராபுரம், மேட்டுப்பா ளையம்,அன்னூர் ஆகிய சி.பி.எஸ்.இ பள்ளிகளின் கூட்டமைப்பான கோவை கொங்கு சகோதயா பள்ளி காம்ப்ளக்சில் இடம்பெற்றிருக்கும் 40-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 400-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதில் 12 ,14 ,16, 19 வயதுக்கு உட்பட்ட மாணவ ,மாணவிகளுக்கு தனி தனி பிரிவுகளில் போட்டி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்பிரிங்டேல் பப்ளிக் பள்ளியின் நிர்வாக இயக்குனர் கமல், பள்ளி முதல்வர் பிரியா ஆகியோர் செய்து வருகின்றனர்.
- அந்தியூர் தெப்பக்குளம் வீதி பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் எதிரே செல்லக்கூடிய மின் வயர் மீது பறவைகள் கம்பியை கொண்டு சென்றபோது மின் கம்பியின் மீது போட்டுவிட்டு சென்று விட்டது.
- இதையடுத்து அந்த கம்பி அகற்றப்ப ட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
அந்தியூர்:
அந்தியூர் தெப்பக்குளம் வீதி பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் எதிரே செல்லக்கூடிய மின் வயர் மீது பறவைகள் கம்பியை கொண்டு சென்றபோது மின் கம்பியின் மீது போட்டுவிட்டு சென்று விட்டது.
இதனால் அந்த கம்பி மின்கம்பியிலிருந்து சாலையின் கீழ் பகுதி வரை தொங்கிக் கொண்டிருந்தது. இதனால் சாலையில் நடந்து செல்பவர்கள் அந்த கம்பியை தொட்டால் மின்தாக்கிவிடும் என்ற அச்சத்தில்ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின் ஊழியர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் வர தாமதம் ஆகிவிட்டது.
இதனால் காலை நேரங்களில் பள்ளிக்கு குழந்தையை கொண்டு சென்று விட்டு செல்லும் பெற்றோர்களும் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களும் அச்சத்தோடு சென்றனர்.
இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் அட்டையும் கற்களையும் வைத்து பொ துமக்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தி அந்த கம்பியில் மோதாமல் செல்லுமாறு அறிவுறுத்திக் கொண்டி ருந்தனர். இதையடுத்து அந்த கம்பி அகற்றப்ப ட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
- காவிரி கரைப்பகுதியில் பொதுமக்கள் புனித நீராட பரிகார பூஜை செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.
பவானி, காவிரி, அமுதநதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறை புனித நீராட சிறந்த தலமாக உள்ளது. அமாவாசை நாட்களில் ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து முன்னோர்களுக்கு இங்கு திதி கொடுப்பார்கள்.
இதற்காக திதி கொடுக்க தனியாக இடங்கள் உள்ளன. மேலும் பொதுமக்கள் பரிகார பூஜை செய்து காவிரி ஆற்றில் புனித நீராடி செல்வார்கள்.
இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆடிப்பெருக்கு அன்று புனித நீராட தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
கொரோனா தற்போது குறைந்து இருப்பதால் சில நாட்களுக்கு முன்பு ஆடி அமாவாசை முதல்நாள் அன்று புனித நீராட அனுமதி அளிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு புனித நீராடினார்கள்.
இந்நிலையில் இன்று ஆடிப்பெருக்கையொட்டி ஆயிரக்கணக்கான மக்கள் பவானி கூடுதுறையில் குவிவார்கள் என்பதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் போலீசார் ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பவானி படித்துறையில் பாதுகாப்புக்காக 60 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு இருந்தன. இதேபோல் கொடுமுடி, கருங்கல்பாளையம் காவிரி கரை போன்ற பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் பெய்தகனமழை காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஏற்கனவே மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120அடியை எட்டி உள்ளது. தொடர்ந்து தண்ணீர் அதிகரித்து வருவதால் மேட்டூர் அணையில் இருந்து 1.40 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால் காவிரி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் அம்மாபேட்டை நெருஞ்சிப்பேட்டை, பிபி அக்ரஹாரம், கருங்கல்பாளையம் காவிரிக்கரை, கொடுமுடி காவேரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம் சார்பில் தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு வெள்ள எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. மேலும் தாழ்வான பகுதியில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆடிப்பெருக்கை ஒட்டி பவானி கூடுதுறை, கொடுமுடி காவிரி ஆற்றில் புனித நீராடவும் பரிகாரப் பூஜைகள் மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டது.
தடையை மீறி புனித நீராட வருபவர்கள் பரிகார பூஜை செய்ய வருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதுபற்றி தெரியாமல் இன்று காலை பவானி கூடுதுறையில் புனிதநீராட வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்தனர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் திருப்பி அனுப்பினர். இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
பவானி சங்கமேஸ்வரர் கோவில் நுழைவாயில் முன்பு போலீசார் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல் கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலிலும் இன்று அதிகாலை முதல் ஆடி பெருக்கையொட்டி பொதுமக்கள் ஏராளமான பேர் வந்தனர். ஆனால் காவிரி ஆற்றில் குளிக்கவோ பரிகார பூஜை மேற்கொள்ளவோ அனுமதி இல்லை என போலீசார் அவர்களை திருப்பி அனுப்பினர். இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அதேபோல் கருங்கல்பாளையம் காவிரி கரைப்பகுதியிலும் பொதுமக்களுக்கு புனித நீராட பரிகார பூஜை செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.
பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் அதிக அளவில் வெளியேறுவதால் கொடிவேரி அணையில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் அங்கும் சுற்றுலா பயணிகளுக்கு மறுக்கப்பட்டுள்ளது. அணை முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அணைக்கு வந்த பொதுமக்களை அவர்கள் திருப்பி அனுப்பினர்.
- இன்று அதிகாலை முதல் பக்தர்கள் கொடுமுடியில் குவிய தொடங்கினர்.
- பலர் கொடுமுடிக்கு முளைப்பாரி எடுத்து வந்தனர்.
கொடுமுடியில் மிகவும் பிரசித்தி பெற்ற மகுடேஸ்வரர், வீரநாராயணப் பெருமாள் கோவில் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆடி 18 திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
இதையொட்டி ஆடி 18 அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து காவிரியில் புனித நீராடியும், முளைப்பாரி ஆற்றில் விட்டும் காவிரி தாயை வணங்கியும், மகுடேசுவரரை தாசித்தும் செல்வது வழக்கம்.
இதற்காக இன்று அதிகாலை முதல் பக்தர்கள் கொடுமுடியில் குவிய தொடங்கினர். இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதையடுத்து கொடுமுடி காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது. இதனால் மாவட்ட நிர்வாகம் காவிரி ஆற்றில் துணி துவைக்க, நீராட, கால்நடைகள் குளிப்பாட்ட தடை விதிக்கப்பட்டது.
இதனால் ஆற்றங்கரை பகுதி முழுவதும் தடை ஏற்படுத்தி போலீஸ், தீயணைப்பு துறை வீரர்களை கொண்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர். இதனால் பக்தர்கள் யாரும் எங்கும் சென்று காவிரி ஆற்றில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
மேலும் பலர் கொடுமுடிக்கு முளைப்பாரி எடுத்து வந்தனர். தடை விதித்துள்ளதால் ஆற்றங்கரை ஓரத்தில் செல்லும் புகளூரான் வாய்க்காலில் குளித்தும், முளைப்பாரி விட்டும் சென்றனர்.
இந்த நிலையில் வெளியூரில் இருந்து வந்த பக்தர்கள் குளிப்பதற்கு வசதியாக கொடுமுடி பேரூராட்சி சார்பாக கோவில் முன்பு ஷவர் அமைத்து சிறப்பு ஏற்பாடு செய்து இருந்தனர். இதையடுத்து பக்தர்கள் அந்த ஷவர் மூலம் புனித நீராடி மகுடேஸ்வரரை வழிபட்டனர்.
+2
- காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
- பவானி மார்க்கெட் பகுதியோரம் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.
பவானி:
காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து உபரிநீராக காவிரி ஆற்றில் வினாடிக்கு 1 லட்சத்து 40 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இதனால் காவிரி ஆற்றின் இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. நேற்று மாலை முதல் காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு அதிகரிக்க தொடங்கியதால் ஈரோடு மாவட்டத்தில் காவிரி ஆற்று ஓரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல எச்சரிக்கை செய்யப்பட்டது.
இந்நிலையில் பவானி மார்க்கெட் பகுதியோரம் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து பாதுகாப்பு கருதி அந்த பகுதியில் 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் வசித்த பொதுமக்கள் அருகில் உள்ள முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு மின்சார டிரான்ஸ்பார்மரை வெள்ளம் சூழ்ந்தது. ஆனாலும் மின் இணைப்பு துண்டிக்கப்படவில்லை. முகாம்களில் தங்கி வைக்கப்பட்டுள்ள ஒரு சிலர் தங்களது வீடுகளுக்கு வெள்ளத்தில் சென்று வருவதால் அசம்பாவிதம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மின்சார துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து மின்இணைப்பை துண்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மேட்டூர் அணை நிரம்பியதையொட்டி அணையில் இருந்து 1 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
- நெரிஞ்சிப்பேட்டையில் கதவணை மின் உற்பத்தி நிலையத்திலும் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
அம்மாபேட்டை:
ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அருகே, நெரிஞ்சிப்பேட்டை படித்துறையில் இருந்து, சேலம் மாவட்டம், பூலாம்பட்டிக்கு படகு போக்குவரத்து இயங்கி வந்தது.
இந்த நிலையில் மேட்டூர் அணை நிரம்பியதையொட்டி அணையில் இருந்து 1 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
இதனால் காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் வரத்து அதிகமாக வருவதால் நெரிஞ்சிபேட்டை படகு போக்குவரத்தை நிறுத்த வேண்டும்.
மேலும் காவிரி ஆற்றின் கரையோரத்தில் பொதுமக்கள் துணி துவைக்கவோ, குளிக்கவோ வேண்டாம் எனவும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி நெரிஞ்சிபேட்டை- பூலாம்பட்டி இடையேயான படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இதனால் இரு மாவட்ட பொதுமக்களும் நெரிஞ்சிப்பேட்டை கதவணை வழியாக இரு சக்கர வாகனங்கள் மூலம் சென்று வருகின்றனர். மேலும் நெரிஞ்சிப்பேட்டையில் கதவணை மின் உற்பத்தி நிலையத்திலும் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி பொதுமக்கள் காவிரியில் புனித நீராடி அருகில் உள்ள கோவில்களில் வழிபடுவார்கள். ஆனால் தற்போது காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் யாரும் குளிக்க கூடாது என பேரூராட்சி மற்றும் வருவாய் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.






