search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கால் தடை: பவானி கூடுதுறையில் புனிதநீராட வந்த பொதுமக்கள் ஏமாற்றம்

    • மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
    • காவிரி கரைப்பகுதியில் பொதுமக்கள் புனித நீராட பரிகார பூஜை செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.

    பவானி, காவிரி, அமுதநதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறை புனித நீராட சிறந்த தலமாக உள்ளது. அமாவாசை நாட்களில் ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து முன்னோர்களுக்கு இங்கு திதி கொடுப்பார்கள்.

    இதற்காக திதி கொடுக்க தனியாக இடங்கள் உள்ளன. மேலும் பொதுமக்கள் பரிகார பூஜை செய்து காவிரி ஆற்றில் புனித நீராடி செல்வார்கள்.

    இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆடிப்பெருக்கு அன்று புனித நீராட தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    கொரோனா தற்போது குறைந்து இருப்பதால் சில நாட்களுக்கு முன்பு ஆடி அமாவாசை முதல்நாள் அன்று புனித நீராட அனுமதி அளிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு புனித நீராடினார்கள்.

    இந்நிலையில் இன்று ஆடிப்பெருக்கையொட்டி ஆயிரக்கணக்கான மக்கள் பவானி கூடுதுறையில் குவிவார்கள் என்பதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் போலீசார் ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    பவானி படித்துறையில் பாதுகாப்புக்காக 60 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு இருந்தன. இதேபோல் கொடுமுடி, கருங்கல்பாளையம் காவிரி கரை போன்ற பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் பெய்தகனமழை காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    ஏற்கனவே மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120அடியை எட்டி உள்ளது. தொடர்ந்து தண்ணீர் அதிகரித்து வருவதால் மேட்டூர் அணையில் இருந்து 1.40 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதனால் காவிரி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் அம்மாபேட்டை நெருஞ்சிப்பேட்டை, பிபி அக்ரஹாரம், கருங்கல்பாளையம் காவிரிக்கரை, கொடுமுடி காவேரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    மாவட்ட நிர்வாகம் சார்பில் தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு வெள்ள எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. மேலும் தாழ்வான பகுதியில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆடிப்பெருக்கை ஒட்டி பவானி கூடுதுறை, கொடுமுடி காவிரி ஆற்றில் புனித நீராடவும் பரிகாரப் பூஜைகள் மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டது.

    தடையை மீறி புனித நீராட வருபவர்கள் பரிகார பூஜை செய்ய வருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி எச்சரிக்கை விடுத்திருந்தார்.

    இதுபற்றி தெரியாமல் இன்று காலை பவானி கூடுதுறையில் புனிதநீராட வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்தனர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் திருப்பி அனுப்பினர். இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

    பவானி சங்கமேஸ்வரர் கோவில் நுழைவாயில் முன்பு போலீசார் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேபோல் கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலிலும் இன்று அதிகாலை முதல் ஆடி பெருக்கையொட்டி பொதுமக்கள் ஏராளமான பேர் வந்தனர். ஆனால் காவிரி ஆற்றில் குளிக்கவோ பரிகார பூஜை மேற்கொள்ளவோ அனுமதி இல்லை என போலீசார் அவர்களை திருப்பி அனுப்பினர். இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அதேபோல் கருங்கல்பாளையம் காவிரி கரைப்பகுதியிலும் பொதுமக்களுக்கு புனித நீராட பரிகார பூஜை செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.

    பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் அதிக அளவில் வெளியேறுவதால் கொடிவேரி அணையில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் அங்கும் சுற்றுலா பயணிகளுக்கு மறுக்கப்பட்டுள்ளது. அணை முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அணைக்கு வந்த பொதுமக்களை அவர்கள் திருப்பி அனுப்பினர்.

    Next Story
    ×