என் மலர்tooltip icon

    ஈரோடு

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அந்தியூரை சேர்ந்த பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள நகலூரை சேர்ந்தவர் வெங்கடேஷ் கூலித்தொழிலாளி. இவரது மனைவி பெயர் ராஜாத்தி.

    இந்த தம்பதியினருக்கு யாழினி (வயது 6) என்ற மகளும், நிகிதன் (2) என்ற ஒரு மகனும் உள்ளனர்.

    சிறுமி யாழினிக்கு கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இருந்தது. அந்தியூர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாள். அப்போது சிறுமி யாழினிக்கு டெங்கு பாதிப்பு இருந்தது தெரிய வந்தது.

    இதையொட்டி சிறுமியை கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுமி யாழினி நேற்று இரவு பரிதாபமாக இறந்தாள்.

    அவளது உடலை பார்த்து பெற்றோர், உறவினர்கள் கதறி அழுத காட்சி நெஞ்சை உருக்கும் வகையில் இருந்தது.

    இன்று சிறுமியின் உடல் அந்தியூருக்கு கொண்டு வரப்படுகிறது.



    ஈரோடு மாவட்டத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட 33 ஒப்பந்த தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பி.எஸ்.என்.என். ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட 33 ஒப்பந்த தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக் கையை வலியுறுத்தி பி.எஸ்.என்.என். ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இன்று ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். முதன்மை பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் மாநிலம் முழுவதிலும் இருந்து வந்த ஊழியர்கள் பங்கேற்ற உண்ணாவிரதம் நடந்தது.

    பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாநில செயலாளர் பாபு ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்க மாநில செயலாளர் வினோத்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாநில துணை செயலாளர் சுப்பிரமணியன், அமைப்பு செயலாளர் மணியன், மாநில செயற்குழு உறுப்பினர் வளர்மதி, மாவட்ட செயலாளர்கள் பரமேஸ்வரன், பழனிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கம், தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்க மாநில நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பலர் பங்கேற்றனர். அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினர்.
    ஈரோடு மாவட்டம் முழுவதும் பலத்த மழை கொட்டியது. தாளவாடி பகுதியில் ரோட்டோரம் உள்ள பழமையான மரம் வேரோடு சாய்ந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக மழை பெய்யாமல் வெயில் அடித்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று மாலை முதல் பல்வேறு இடங்களில் விட்டு விட்டு மழை பெய்தது. இரவில் மாவட்டம் முழுவதும் ஒரு சில இடங்களில் பலத்த மழையும் பல இடங்களில் பரவலாகவும் மழை கொட்டியது.

    இந்த மழையால் ஈரோடு மாவட்டம் மீண்டும் குளுமையானது. மாவட்டத்தில் அதிக பட்சமாக பவானி கவுந்தப்பாடி, அம்மாபேட்டை ஆகிய இடங்களில் அதிகபட்ச மழை பதிவாகி இருந்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    இதேபோல் பெருந்துறை, வரட்டுப்பள்ளம் அணை, பெரும்பள்ளம் அணை மற்றும் குண்டேரிபள்ளம் அணை பகுதிகளிலும் மழை பெய்தது.

    ஈரோடு மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளிலும் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை விட்டு விட்டு மழை பெய்தது. இந்த மழையால் ரோட்டின் இருபுறத்திலும் தண்ணீர் தேங்கி நின்றது. வெயிலின் பிடியிலிருந்து தப்பி மீண்டும் ஈரோடு குளுமையானது.

    வனப்பகுதியான தாளவாடி பகுதியில் ரோட்டோரம் உள்ள பழமையான ஒரு வாத மரம் வேரோடு சாய்ந்து ரோட்டில் விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    ஈரோட்டில் விளைச்சல் அதிகரிப்பால் தக்காளி விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட் மற்றும் உழவர் சந்தைகளில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வரை தக்காளி விலை கிலோ ரூ.60 வரை விற்பனையானது. கடும் வறட்சியால் தக்காளி வரத்து குறைந்து தக்காளி விலை கிடு கிடுவென உயர்ந்து இருந்தது.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்ததால் தக்காளி விளைச்சல் அதிகமானது. இதனால் காய்கறி விலைகள் குறைந் துள்ளது. குறிப்பாக தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் தாளவாடி, நசியனூர், காஞ்சிகோவில், பெருந்துறை, பள்ளபாளையம், மொடக்குறிச்சி, எழுமாத்தூர் போன்ற பகுதியில் இருந்து ஈரோடு மாநகரில் உள்ள மார்க்கட்டிற்கு தக்காளி வரத்தாகிறது.

    முன்பு சந்தைகளுக்கு 750 கிலோ வரை மட்டுமே தக்காளி வரத்தானது.தற்போது விளைச்சல் அதிகரிப்பால் தக்காளி வரத்து 2 டன் முதல் 3 டன்னாக அதிகரித்துள்ளது. இதனால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

    கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கிலோ ரூ.60-க்கு விற்ற தக்காளி கடந்த வாரம் ரூ.24-க்கு விற்றது. இந்த வாரம் ரூ.13 முதல் ரூ.15 வரை விற்பனையாகிறது.

    இது குறித்து தக்காளி வியாபாரி கூறும் போது, ஈரோடு நேதாஜி மார்க்கெட்டில் ஈரோடு மட்டும் இன்றி கிருஷ்ணகிரி, தர்மபுரி,ஆந்திர மாநிலம் கடப்பா உள்ளிட்ட பகுதியில் இருந்தும் தக்காளி வரத்து அதிகமாக வருகிறது.

    தற்போது விளைச்சல் அதிகரித்து உள்ளதால் தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விலையும் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. தற்போது கிலோ ரூ.15 வரை விற்பனையாகிறது என்றார்.

    சமையலுக்கு முக்கியமான பொருளாக பயன் படுத்தப்படும் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்து குறைந்த விலையில் விற்பதால் பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தமிழகத்தில் அனைத்து பணிகளும் கமி‌ஷன் அடிப்படையில் தான் நடந்து வருகிறது என ஈரோட்டில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் துரைமுருகன் பேசினார்.
    ஈரோடு:

    ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. பொதுக்கூட்டம் ஈரோடு காளைமாட்டு சிலை பகுதியில் நடந்தது.

    கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் முத்துசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், தி.மு.க. முதன்மை செயலாளருமான துரைமுருகன், துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.

    தமிழக மக்களுக்கு சோதனை காலம் நடந்து கொண்டிருக்கிறது. இன உணர்ச்சி, மொழி உணர்ச்சி கிடையாது. அரசியல், கேள்விகள், பதில்கள், நிர்வாகம் என எதுவுமே தெரியாது. தமிழகத்தில் அனைத்து பணிகளும் கமி‌ஷன் அடிப்படையில் தான் நடக்கிறது.

    ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது நீட் தேர்வு, நவோதயா பள்ளி போன்றவற்றை எதிர்த்தார். அவருடைய ஆட்சி நடப்பதாக கூறி வரும் முதல்-அமைச்சரும், அமைச்சர்களும் ஏன் நீட் தேர்வையும், நவோதயா பள்ளிகளையும் எதிர்ப்பதில்லை?.

    எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், தம்பிதுரை ஆகியோர் ஜெயலலிதா குறித்து கேட்டபோது அவர்கள் அனைவரும் ஜெயலலிதா நன்றாக இருக்கிறார் என்றே தெரிவித்தனர். கவர்னரிடம் கேட்டபோதும் அதையே கூறினார். 2 அணிகளாக இருந்தபோது ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும், சசிகலாவை நீக்க வேண்டும் போன்ற நிபந்தனைகளை ஓ.பன்னீர்செல்வம் முன்வைத்தார். 2 அணிகளும் இணைந்தபோது ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த நீதிபதியின் தலைமையில் குழு அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஆனால் இதுவரை எந்தவொரு விசாரணையும் நடத்தப்படவில்லை. இதுபற்றி நான் சட்டசபையில் கேள்வி எழுப்புவேன்.

    தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சியை அ.தி.மு.க.வினர் நடத்தி வருகிறார்கள். பிரதமர் நரேந்திரமோடிக்கு சிறந்த அடிமைகளாக எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இருக்கிறார்கள். இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வரை ஓய்வு கிடையாது. விரைவில் அவர்களை வீட்டுக்கு அனுப்புவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஆப்பக்கூடலில் பள்ளிக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் பிளஸ்-1 மாணவி மாயமானர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு:

    ஆப்பக்கூடல், கல்லாங்காட்டுமேட்டை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகள் கவுசல்யா (வயது16). இவர் அங்குள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். திடீரென பள்ளிக்கு போகமாட்டேன் என வீட்டில் இருந்துள்ளார்.

    கவுசல்யாவின் பெற்றோர் பள்ளிக்கு செல்ல வேண்டும் என வற்புறுத்தியுள்ளனர். இதனால் கவுசல்யா மனவேதனையுடன் இருந்துள்ளார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு கவுசல்யா வெளியேறினார். அதன்பிறகு 3 நாட்களுக்கு பின்னர் தான் திரும்பி வந்துள்ளார். இதையடுத்து கவுசல்யாவை பெற்றோர் கண்டித்து வீட்டில் வைத்துள்ளனர்.

    இந்நிலையில் மீண்டும் கவுசல்யா வீட்டை விட்டு வெளியே சென்றவர், திரும்பி வீட்டிற்கு வர வில்லை. அக்கம் பக்கம் தேடி பார்த்தும் கிடைக்க வில்லை. எங்கு சென்றார்? என்ன ஆனார்? என தெரியவில்லை.

    இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி அருகே வியாபாரத்துக்கு சென்ற பெண் மாயமானது குறித்து அவரது மகள் போலீசில் புகார் செய்தார். போலீசார் பெண்ணை தேடி வருகிறார்கள்.

    கோபி:

    கோபி அடுத்த புது வள்ளியாம் பாளையம், பெருமாள் நகரை சேர்ந்தவர் பெருமாள் கவுண்டர். இவரது மனைவி சகுந்தலா (வயது 57).

    சகுந்தலா மொடச்சூர் சந்தையில் ஆப்பிள் வியாபாரம் செய்து வந்தார். காலையில் வியாபாரத்துக்கு செல்லும் அவர் இரவில் வீடு திரும்புவார்.

    அதே போன்று சம்பவத்தன்றும் வழக்கம் போல் சகுந்தலா மொடச் சூர் சந்தைக்கு வியாபார த்துக்காக சென்றார். இரவு வியாபாரம் முடிந்ததும் உறவினரை பார்க்க செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் நீண்ட நேர மாகியும் சகுந்தலா வராததால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர்.

    எனினும் சகுந்தலா குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. காணாமல் போன அன்று சகுந்தலா பச்சை நிற புடவையும், அதில் எம்ராய்டிங் பூ போட்ட பச்சை நிற ஜாக்கட்டும் அணிதிருந்தார்.

    இது குறித்து சகுந்தலா மகள் சுதா கோபி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் கோபி போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான சகுந்தலாவை தேடி வருகிறார்கள்.

    கொடுமுடி அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    ஈரோடு:

    கொடுமுடி அருகே உள்ள கொளாநல்லி சத்திரத்தில் 115 வீடுகள் உள்ளன. இந்த பகுதிக்கு காவிரி குடிநீர் சப்ளை கிடையாது.

    அந்த பகுதியில் உள்ள கிணற்றின் அருகே மேல் நிலைத் தொட்டி அமைத்து குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் கடந்த 8 மாதமாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று தெரிகிறது. இது தொடர்பாக அந்த பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

    ஆனாலும் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்பட வில்லையாம். இதனால் அந்த பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டனர்.

    அவர்கள் இன்று திடீர் போராட்டத்தில் குதித்தனர். ஈரோடு-கரூர் சாலையில் இன்று காலை ஏராளமான பெண்கள் காலி குடங்களுடன் திரண்டனர்.

    அவர்களுடன் பொதுமக்களும் சேர்ந்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சாலையின் இரு பக்கத்திலும் பஸ்களும், வாகனங்களும் நின்றன.

    முக்கியமான சாலை என்பதால் அங்கு கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் மலையம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

    அவர்கள் அந்த வழியாக வந்த மற்ற வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பி விட்டு போக்குவரத்து பாதிப்பை குறைத்தனர்.

    பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதிகாரிகளிடம் குடிநீர் பற்றி பேசி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறினர்.

    இதனை ஏற்றுக்கொண்ட பெண்களும், பொதுமக்களும் சாலையில் இருந்து எழுந்து போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து சீரானது.

    ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களும், பொதுமக்களும் கலைந்து செல்லவில்லை. ரோட்டில் ஓரத்தில் திரண்டு நின்றனர்.

    அதிகாரிகள் வந்து குடிநீர் விநியோகம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் வரை கலைந்து செல்லமாட்டோம் என்று கூறி அவர்கள் அங்கேயே நின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நீடித்தது.

    ஈரோட்டில் மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு கஸ்பாபேட்டை அடுத்த செங்கரைபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி(வயது67).

    ராமசாமி சம்பவத்தன்று கஸ்பாபேட்டை, பூந்துறை ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் எதிர்பாராத வகையில் ராமசாமி மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட ராமசாமி படுகாயம் அடைந்து உயிருக்காக போராடினார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி ராமசாமி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    ஈரோடு அருகே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குலதெய்வ கோவிலின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் மற்றும் வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோடு அருகே உள்ள நசியனூர் பைபாஸ் ரோட்டில் அப்பாத்தாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் முருகர், சிவன், பார்வதி, பிரம்மா, தட்சிணாமூர்த்தி, விநாயகர், துர்க்கை ஆகிய விக்கிரங்களும் உள்ளது.

    இந்த கோவில் தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் குலதெய்வ கோவில் என்பது குறிப்பிடத்தக்கது. தனது குடும்பத்தினருடன் எடப்பாடி பழனிசாமி கோவிலுக்கு வந்து அடிக்கடி சாமி கும்பிட்டு விட்டு செல்வார்.

    வழக்கம் போல் நேற்று இரவு பூசாரிகள் கோவில் கதவை பூட்டி விட்டு சென்று விட்டனர்.

    இந்த நிலையில் நள்ளிரவில் யாரோ மர்ம ஆசாமிகள் கோவில் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பிறகு கோவில் உள்ளே இருந்த கோவில் அலுவலக கதவின் பூட்டையும் உடைத்து உள்ளே நுழைந்தனர்.

    அலுவலகத்தின் அறையில் உள்ள பீரோவை கொள்ளையர்கள் உடைத்தனர். உள்ளே ரூ.1 லட்சம் கோவில் பணம் இருந்தது. மேலும் ரூ.50 அயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்களும் இருந்தது. இவற்றை கொள்ளையர்கள் கொள்ளையடித்தனர்.

    பிறகு கோவில் கருவறை கதவு பூட்டையும் உடைத்துள்ளனர். பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. ஆனால் உள்ளே கொள்ளையர்கள் செல்லவில்லை. பிறகு கொள்ளையடித்த பணம் மற்றும் வெள்ளி பொருட்களுடன் தப்பி சென்று விட்டனர்.

    இன்று காலை வழக்கம் போல் கோவில் நடையை திறக்க வந்த பூசாரி சத்தி என்பவர் கோவில் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறக்கப்பட்டு கிடந்ததை கண்டு திடுக்கிட்டார். இது பற்றிய தகவல் கிடைத்ததும் அந்த பகுதி மக்கள் அப்பாத்தாள் கோவிலில் திரண்டனர். அவர்கள் சித்தோடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.


    சித்தோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் கொள்ளை நடந்த அலுவலகம் உள்பட கோவில் பகுதிகளை சுற்றி பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    மேலும் கோவை மேற்கு மண்டல ஐ.ஜி.பாரியும் கோவிலுக்கு வந்து விசாரணை நடத்தினார். கைரேகை பெண் நிபுணர் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கை ரேகைகளை பதிவு செய்தார்.

    பொதுமக்கள் எப்போதும் நடமாடும் மேலும் அடிக்கடி வாகனங்கள் செல்லும் பகுதியில் உள்ள இந்த கோவிலில் நடந்துள்ள இந்த துணிகர சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த துணிகர கொள்ளை சம்பவம் பற்றி சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் முதல்வர் மற்றும் சபாநாயகருக்கு தபாலில் நைட்டி, சேலை அனுப்பிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு மாவட்ட கொங்குநாடு வேட்டுவ கவுண்டர் இளைஞர் நல சங்க செயலாளர் ஜெகதீசன் தலைமையில் நிர்வாகிகள் ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள தலைமை தபால் நிலையத்துக்கு வந்தனர்.

    அவர்கள் ஸ்பீடு போஸ்ட் மூலம் முதல்-அமைச்சருக்கு நைட்டியும், சபாநாயகருக்கு சேலையும் அனுப்பும் நூதன போராட்டம் நடத்தினர்.

    பெரும்பான்மையை இழந்த எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடாத சபாநாயகர் தனபால், 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்துள்ளார்.

    இது ஜனநாயக படுகொலை ஆகும். இதை கண்டித்தும் மைனாரிட்டி அரசுக்கு தலைமை வகிக்கும் எடப்பாடி பழனிச்சாமியையும் கண்டித்தும் இந்த போராட்டத்தை நாங்கள் நடத்துகிறோம்.

    இந்த விவகாரம் தொடர்பாக வருகிற 24-ந் தேதி ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இதற்கு அனுமதி கேட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்துள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    அவர்கள் முதல்வர் மற்றும் சபாநாயகருக்கு நைட்டி, சேலையை தபாலில் அனுப்பிவிட்டு சென்றனர். இந்த தகவல் கிடைத்து வந்த ஈரோடு டவுன் போலீசார் போராட்டம் நடத்திய கொங்கு நாடு வேட்டுவ கவுண்டர் இளைஞர் நல சங்க கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெகதீசன், தொண்டர் அணி அமைப்பாளர் சசி, மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் மோகன், பவானி ஒன்றிய செயலாளர் சவுந்தர், செய்தி தொடர்பாளர் விவேக்ராஜ் உள்பட 8 பேரை கைது செய்தனர்.

    அதன்பிறகு அந்த 8 பேரையும் போலீசார் கடுமையாக எச்சரித்து விடுதலை செய்தனர்.

    கோபி அருகே மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் கவிழ்ந்ததில் வாலிபர் உயிரிழந்தார். நண்பர் படுகாயத்துடன் உயிர் தப்பினார்.

    கோபி:

    கோபி அடுத்த புதுக்காட்டையை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 32). கட்டிடவேலை பார்த்து வந்தார். இவரது நண்பர் நவநீதன் (32). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் குன்னத்தூர்-கொளப்பலூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். நவநீதன் வண்டியை ஓட்ட பின்னால் செந்தில்குமார் உட்கார்ந்து வந்தார்.

    வண்ணாங்காடு பகுதியில்ஒரு வளைவில் வந்த போது திடீரென மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி ரோட்டில் உள்ள ஒரு பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்தது. இதில் இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டனர்.

    இருவரையும் அக்கம்- பக்கத்தினர் மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே செந்தில் குமார் பரிதாபமாக இறந்தார்.

    நவநீதன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த விபத்து குறித்து சிறுவலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×