என் மலர்
ஈரோடு
ஈரோடு- நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை இணைக்கும் காவிரி ஆற்றுப்பாலம் மிக குறுகிய பாலமாக இருந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வந்தது.
இதையொட்டி அந்த பழைய மேம்பாலம் அருகே புதிய உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு வந்தது. ரூ.33.3 கோடி மதிப்பில் அந்த புதிய பாலம் கட்டும் பணி முடிந்து உள்ளது.
இந்த உயர்மட்ட மேம்பாலத்தின் திறப்பு விழா வரும் 8-ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) மாலை 4 மணிக்கு நடக்கிறது. பள்ளிபாளையம் பஸ் நிலையம் அருகே விழா மேடை அமைக்கப்படுகிறது. விழாவுக்கு மின் துறை அமைச்சர் தங்கமணி தலைமை தாங்குகிறார். அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன், சரோஜா ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.
இதில் தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட புதிய பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்து சிறப்புரை ஆற்றுகிறார்.
விழாவில் ஈரோடு எம்.பி. செல்வகுமார சின்னையன், நாமக்கல் எம்.பி. சந்தரம், ஈரோடு எம்.எல்.ஏக்கள் கே.வி.ராமலிங்கம், தென்னரசு, நாமக்கல் மாவட்ட எம்.எல்.ஏ.க்கள் பொன்.சரஸ்வதி, பாஸ்கர், சந்திரசேகர், மூர்த்தி, உள்பட அரசு அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.
முனனதாக நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் வரவேற்கிறார். முடிவில் பொறியாளர் செல்வம் நன்றி கூறுகிறார்.
மேம்பாலம் விழாவையொட்டி பள்ளிபாளையம் பஸ் நிலையத்தில் மேடை அமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.
இந்த பணியை மின்வாரிய துறை அமைச்சர் தங்கமணி பார்வையிட்டு ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த புதிய பாலம் திறக்கப்பட்டதும் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும்.
சுதந்திர போராட்ட தியாகி திருப்பூர் குமரனின் 114-வது பிறந்த நாள்விழா திருப்பூர் குமரன் பிறந்த ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் தமிழக அரசு சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு கல்வி துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தலைமை தாங்கினார். மேலும் அமைச்சர்கள் கே.சி.கருப்பணன் கால்நடை துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், செய்தி மறறும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, இந்து சமயத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
சென்னிமலையில் திருப்பூர் குமரன் பிறந்த அவரது வீட்டில் குமரன் உருவபடத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து சென்னிமலையில் உள்ள திருப்பூர் குமரனின் புதுப்பிக்கப்பட்ட சிலைக்கும் அமைச்சர்கள் மாலை அணிவித்தனர்.
பிறகு குமரப்பா செங்குந்தர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த குமரனின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டனர். அங்கு குமரனின் வாரிசு தாரர்களை பொன்னாடை அணிவித்து அமைச்சர்கள் கவுரவித்தனர்.
மேலும் விழாவில் 99 பயனானிகளுக்கு ரூ.28¼ லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பேசும் போது, “மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க குமரன் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு உள்ளது. அனைவரும் வியக்கத்தக்க வகையில் குமரன் வாழ்ந்து சுதந்திரத்துக்காக உயிர் நீத்துள்ளார். குமரனின் தியாகத்தை போற்றிவணங்க வேண்டும்“ என்று கூறினார்.
அமைச்சர் கருப்பணன் பேசும்போது, “நாம் ஒவ்வொருவரும் தியாகிகளின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து வாழவேண்டும. அம்மா வழியில் அனைத்து அரசு திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.” என்று கூறினார்.
செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கூறும்போது, “மறைந்த அம்மா அவர்கள் தியாகிகளை போற்றி புகழ்வதில் சிறந்து விளங்கினார். தமிழ்நாட்டை கல்வித்துறையில் முதன்மை மாநிலமாக மாற்றிட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார்.
சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டி வேண்டி சிறப்பு சேர்த்தவர் ஜெயலலிதா ஆவார். இப்போது திருப்பூர் குமரனின் பிறந்தநாள் விழாவை அவரது உத்தரவின்பேரில் கொண்டாடி மகிழ்கிறோம். பகத்சிங்குக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் கொடி காத்த குமரன் ஆவார். அவர் தியாகத்தை போற்றுவோம்.” என்று கூறினார்.
மேலும் விழாவில் மாவட்ட கலெக்டர் பிரபாகர், எம்.பி.க்கள், செல்வகுமார சின்னையன், சத்யபாமா, எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ். தென்னரசு, அந்தியூர் ராஜா கிருஷ்ணன், காங்கயம் தனியரசு, மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, கோ-ஆப்டெக்ஸ் இயக்குனர் கோபால கிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் பி.சி.ராமசாமி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் தெய்வநாயகம், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராம்குமார், கலை மாமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அடுத்த ஒலகடம் குட்டை மேடு பகுதியை சேர்ந்தவர் ராமன். இவரது மனைவி சந்திரா (வயது 57). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
மகனுக்கு திருமணமாகி தனியாக மனைவியுடன் வசித்து வருகிறார். அருகே உள்ள கீற்று கொட்டகையில் சந்திரா வசித்து வந்தார். இவர் திருமண பெண் புரோக்கர். அவ்வப்போது கூலி வேலைக்கு சென்று வந்தார்.
நேற்று இரவு வழக்கம் போல சந்திரா தனது வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டு இருந்தார். இரவில் லேசாக மழை தூறிக்கொண்டு இருந்தது.
இன்று அதிகாலை 4 மணி அளவில் சந்திரா வீட்டின் பக்கவாட்டு சுவர் திடீரென இடிந்து விழுந்தது.
அந்த சுவர் சந்திரா மீது விழுந்து நசுக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இது பற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு வருவாய்த்துறையினர் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வீட்டு சுவர் இடிந்து விழுந்து பெண் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள குள்ளம் பாளையத்தில் தேங்காய் தொட்டி எரிக்கும் மில் ஒன்று உள்ளது. இந்த மில்லில் வேலை பார்த்து வந்தவர் பீமாதேவ் (வயது 48). பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். மில்லில் இவர் பணிபுரிந்த போது அங்குள்ள ஒரு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது.
அதை அவர் சரி செய்து கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீப்பொறி பல இடங்களில் சிதறி விழுந்தது. இதில் பீமாதேவ் உடலிலும் தீ பிடித்து எரிந்தது.
உடலில் பற்றி எரிந்த தீயுடன் அவர் அலறினார். அவரது அபாய குரலை கேட்டதும் சக தொழிலாளர்கள் அங்கு ஓடி வந்தனர். அவரது உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்து உடனடியாக கோபியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பீமாதேவ் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து கோபி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பவானிசாகர் அணையின் தற்போதைய நீர் மட்டம் 82 அடியாக உள்ளது. அணையின் நீர் பிடிப்பு பகுதியில் மிதமான மழை பெய்து வருவதால் அணைக்கும் தொடர்ந்து மிதமான அளவில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இன்று(திங்கட்கிழமை) காலை 9 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 1283 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நீர்மட்டம் 82 அடியை எட்டி உள்ளது.
பவானிசாகர் அணையின் நீர் மட்டம் உயர்ந்து உள்ளதால் பாசனத்துக்கு உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதற்கிடையே டெல்டா மாவட்ட விவசாயிகள் கோரிக்கையை ஏற்று மேட்டூர் அணை இன்று திறக்கப்பட்டது.
இதே போல் ஈரோடு மாவட்ட வாய்க்கால்களிலும் பாசனத்துக்கு பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என ஈரோடு மற்றும் திருப்பூர், கரூர் மாவட்ட கடைமடை விவசாயிகள் கேட்டு கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள பழனிகவுண்டன் பாளையத்தில் ரூ.1 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட தார்சாலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது.-
ஈரோடு மாவட்டத்தில் 386 குளங்கள் தூர்வாரப்பட்டு உள்ளது. இதனால் மழை நீரை அதிகமாக சேமிக்கலாம். பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். அவர்களின் கோரிக்கையினை ஏற்று பவானிசாகர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும். திறக்கும் தேதியை அரசு சார்பில் நாளை(செவ்வாய்க்கிழமை) அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கர்நாடக மாநில முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பா. இவர் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் ஸ்ரீரங்கம் புறப்பட்டார். பெங்களூருவில் இருந்து மைசூர் வழியாக சத்தியமங்கலம் வனப்பகுதி ஆசனூர் வந்தார். ஆசனூரில் சிறிது நேரம் காரை விட்டு இறங்கி வனப்பகுதியின் அழகை ரசித்தார்.
பிறகு திம்பம் வழியாக மலைப்பாதை வழியாக கீழே இறங்கி சத்தியமங்கலம் வந்தார். அவருக்கு ஆசனூர் போலீசார் பாதுகாப்புடன் கூடவே வந்தனர்.
மதியம் ஒரு ஓட்டலில் சாப்பிட வேண்டும் எங்கே சாப்பிடலாம்? என போலீசாரிடம் கேட்டார்.
அதற்கு அவர்கள் பக்கத்தில்தான் ஈரோடு உள்ளது. அங்கு சாப்பிட்டு விட்டு கரூர் வழியாக நீங்கள் விரைவில் ஸ்ரீரங்கம் போய் விடலாம் என்று கூறினர்.
அதன்படி ஈரோடு வந்த எடியூரப்பா ஈரோட்டில் மேட்டூர் ரோட்டில் உள்ள சாலையோர ஒரு ஓட்டலில் தனது குடும்பத்தினருடன் மதிய உணவு சாப்பிட்டார்.
கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை கண்டதும் பலர் அவரிடம் சென்று நலம் விசாரித்தனர். அனைவரிடமும் அன்புடன் பேசிய எடியூரப்பா,“நீங்கள் நல்லா இருக்கீங்களா?” என்று கேட்டார்.
சிலர் எடியூரப்பாவுடன் சேர்ந்து செல்போனில் “செல்பி”யும் எடுத்துக் கொண்டனர்.
“அவரிடம் எங்க ஊர் சாப்பாடு எப்படி?” என்று சிலர் கேட்டபோது, “தமிழக உணவை நான் எப்போதும் விரும்பி சாப்பிடுவேன். டேஸ்ட்டா சூப்பராக இருக்கு” என்று கூறினர்.
சாப்பிட்டு முடித்த குடும்பத்தினருடன் காரில் ஏறி ஸ்ரீரங்கம் புறப்பட்டு சென்றார் எடியூரப்பா.
ஈரோடு:
புதுக்கோட்டை மாவட்டம் கதிரம்குடி என்ற இடத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 48) தொழிலாளி. இவர் பெங்களூருவில் இருந்து சென்னை செல்லும் ரெயிலில் பயணித்தார்.
இன்று காலை அந்த ரெயில் ஈரோட்டுக்கு வந்தது. அதில் இருந்து இறங்கிய அவர் திருச்சி ரெயிலில் ஏற பிளாட்பாரத்தில் காத்து நின்றார்.
திடீரென அவர் நெஞ்சு வலியால் மயங்கி கீழே விழுந்தவர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். அவரது உடலை மீட்ட ரெயில்வே போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஈரோடு ரெயில் நிலையத்தில் 1-வது பிளாட்பாரத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்து கிடந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை.
ரெயில்வே போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியான தாளவாடி அருகே உள்ள ராமாபுரத்தை சேர்ந்தவர் ஜோசப் மாதேஷ் (வயது 35). இவர் கோவையில் குடும்பத்துடன் தங்கி தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணி செய்து வந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊரான ராமாபுரத்திற்கு வந்து விட்டு கோவை சென்றார். அப்போது அவர் திடீரென காய்ச்சலால் அவதிப்பட்டார். இதனால் கோவை அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனால் அவருக்கு காய்ச்சல் குணமாக வில்லை. பின்பு கோவையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
ஜோசப் மாதேஷ் வைரஸ் காய்ச்சலால் இறந்தார் என கூறப்படுகிறது. இறந்தவருக்கு தீபா என்ற மனைவியும் 7 வயதில் பெண் குழந்தையும் 5 வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர்.
இந்த சம்பவத்தால் தாளவாடி பொதுமக்கள் டெங்கு காய்ச்சல் பீதியில் உள்ளனர்.
தமிழகம் முழுவதும் டெங்கு நோயால் பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர். பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஈரோடு, சேலம், கோவை ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோய் பாதிப்பு அதிகரித்துள்ளது.
அதிலும் குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகம் உள்ளது. 25-க்கும் மேற்பட்டவர்கள் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலால் உயிரிழந்து உள்ளனர்.
நேற்று முன்தினம் கூட அந்தியூர் அருகே உள்ள நகலூர் அண்ணா நகரை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரின் 6 வயது மகள் யாழினி டெங்கு நோயால் இறந்தாள்.
ஒரு வாரத்துக்கும் மேல் டெங்குவால் பாதிக்கப்பட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிறுமி யாழினி பரிதாபமாக இறந்தாள்.
இப்போது ஈரோடு மாவட்டத்தில் மேலும் ஒரு பள்ளி சிறுவன் டெங்குவால் பலியாகி உள்ளான். அந்த சிறுவன் பெயர் பரத்(வயது7). ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அடுத்த கவுண்டப்பையன் காடு பகுதியை சேர்ந்த கோபால கிருஷ்ணனின் மகன்.
பரத் சில்லாங்காட்டு புதூர் அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த சில நாட்களாக பரத் காய்ச்சலால் அவதிப்பட்டான். ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு டெங்கு பாதிப்பு இருந்தது தெரியவந்தது.
இதையொட்டி சிறுவன் பரத்தை கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரத் பரிதாபமாக இறந்தான்.
பலியான சிறுவன் பரத்தின் அக்கா ரம்யா(10), எழுமாத்தூரில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி 5-ம் வகுப்பு படித்து வந்தாள். இவருக்கும் கடந்த 2 வாரத்துக்கு முன் கடுமையான காய்ச்சல் அடித்தது.
இவளது தந்தை அவளை திருப்பூர் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். தீவிர சிகிச்சைக்கு பிறகு மாணவி ரம்யா பிழைத்து கொண்டாள். டெங்கு காய்ச்சலால் பலியான சிறுவன் பரத் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.
ஈரோடு மாவட்டத்தில் டெங்குவால் நூற்றுக்கணக்கானோர் தொடர்ந்து பாதிக்கப்பட்டு அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்ற வருகிறார்கள்.
தொடரும் டெங்கு பலியால் பொது மக்கள் அச்சத்துடன் உள்ளனர். மழையும் தொடர்ந்து பெய்து வருகிறது. ஆகவே டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் முழு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறும் போது, “முன்பெல்லாம் ஊருக்கு ஊர் வீதிக்கு வீதி வந்த டெங்கு நோயை கட்டுப்படுத்த கொசுக்களை ஒழிக்க கொசு மருந்து அடிப்பார்கள். ஆனால் இப்போது அவ்வளவாக அடிக்கவில்லை. குறிப்பாக கிராம புற பகுதிகளிலும் இந்த பணிகள் நடக்கிறதா?...இல்லையா?. என்று தெரியவில்லை” என்று வேதனையுடன் கூறினர்.
ஈரோடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான அறிவியல் நாடக விழா திண்டலில் இன்று நடந்தது. மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார்.
செல்வகுமார சின்னையன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கே.வி. ராமலிங்கம், தென்னரசு, ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பால முரளி வரவேற்றார்.
நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கலந்து கொண்டு அறிவியல் நாடக விழாவை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார்.
மாணவர்கள் எழுச்சி பெறும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க சத்துணவு திட்டத்தை எம். ஜி.ஆர். கொண்டு வந்தார்.
ஜெயலலிதாவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். அவர் வழியில் நடக்கும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசும் பள்ளிக் கல்வித்துறையில் மாணவர்கள் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் ரேங்க் முறை ரத்து செய்யப்பட்டது ஒரு மிகப்பெரிய மாற்றம் ஆகும். மத்திய அரசின் எந்த வகை தேர்வையும் எதிர்கொள்ளும் வகையில் பயிற்சி அளிக்க 402 பயிற்சி மையங்கள் அமைக்கப்படுகிறது. இந்த மையங்கள் அமைக்கும் பணி அடுத்த மாதம் 15-ந் தேதிக்குள் தொடங்கும்.
வரும் கல்வி ஆண்டு முதல் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும். இதற்காக 2 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. 10 பேர் கொண்ட ஒரு குழுவினர் பாடத்திட்டத்தை மாற்றி அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
எனது தலைமையிலான இன்னொரு குழுவில் சிறந்த கல்வியாளர்கள், விஞ்ஞானிகள், துணை வேந்தர்கள் இடம்பெற்றுள்ளனர். வரும் கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு இணையாக அரசு பள்ளி மாணவர்களும் திகழ்வார்கள்.
32 மாவட்டங்களிலும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். 1 கோடியே 28 ஆயிரம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்.
வரும் கல்வி ஆண்டு முதல் அரசு பள்ளிகளில் 3 நிற சீருடைகள் அறிமுகப்படுத்தப்படும். 1 முதல் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஒரு நிற சீருடையும், 6 முதல் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஒரு நிற சீருடையும், 11 முதல் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஒரு நிற சீருடையும் வழங்கப்படும்.
9 முதல் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் கணினி பயன்பாட்டுக்காக ரூ. 434 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. பள்ளிகளில் வை-பை வசதி செய்யப்படும். வரும் கல்வி ஆண்டில் அரசு ஊழியர்கள், பேராசியர்களின் பிள்ளைகள் கூட அரசு பள்ளிகளில் சேரும் நிலை ஏற்படும்.
ஆசிரியர்கள் பணி மாறுதல் வெளிப்படை தன்மையாக நடந்துள்ளது. 2372 ஆசிரியர்களை அவர்கள் விரும்பும் இடத்தில் பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். கற்றல் குறைபாடு உள்ளவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 24-ந் தேதி இரவு கவுந்தபாடி பகுதியில் பெய்த மழை காரணமாக பி. மேட்டுப்பாளையம் பகுதியில் 20 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.
தாளவாடி பகுதியிலும் 24-ந் தேதி மற்றும் 25-ந் தேதிகளில் மழை பெய்தது. மரங்கள் கீழே விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நேற்றும் தாளவாடி பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்தது. அங்கு 12 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதேபோல அணை பகுதியிலும் மழை நீடித்து வருகிறது.
வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் இன்று காலை வரை 7 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. தொடர் மழை காரணமாக அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி அணை நீர் மட்டம் 32.50 அடியாக உள்ளது.
பவானிசாகர் அணை நீர்மட்டமும் படிப்படியாக உயர்ந்து 81 அடியை தொடுகிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 80.65 அடியாக இருந்தது.
அணையில் 16.33 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 1653 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 105 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
நேற்று அணையின் 6-வது மதகில் நீர் கசிவு ஏற்பட்டது. இது அந்த பகுதி மக்களை அச்சப்படுத்தியது.
இது பற்றி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘அணையின் நீர்மட்டம் 80 அடியை எட்டும்போது இதுபோன்ற நீர்க்கசிவு ஏற்படும். இந்த நீர்க்கசிவால் பாதிப்பு ஏற்படாது’’ என்றனர்.
குண்டேரிபள்ளம் அணை பகுதியில் நேற்று 22 மி. மீட்டரும், கொடிவேரி அணை பகுதியில் 12 மி.மீட்டரும் மழை பதிவாகி உள்ளது. கொடிவேரி பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக கொடிவேரி அருவி தண்ணீர் செந்நிறமாக உள்ளது.
மழை தண்ணீர் மட்டுமே விழுவதால் அருவியில் அதிக தண்ணீர் விழவில்லை. இதனால் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைவாக இருந்து வருகிறது.
அரச்சலூர்:
அரச்சலூர், சென்னிமலை மெயின் ரோடு நடுப் பாளையத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது46). கார் டிரைவர். இவரது மனைவி சித்ரா (38).
சம்பவத்தன்று சென்னிமலைக்கு மோட்டார் சைக்கிளில் சங்கர் சென்று கொண்டிருந்தார். சென்னிமலை- அரச்சலூர் ரோட்டில் செல்லும் போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலை ஓரத்தில் உள்ள மின்கம்பத்தில் மோதியது.
இதில் சங்கருக்கு தலை மற்றும் கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் பார்த்து அதிர்ச்சியடைந்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் 108 ஆம்புலன்சு மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சங்கர் ஏற்கன வே இறந்து விட்டதாக கூறினர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






