என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோடு அணை பகுதிகளில் தொடர் மழை: பவானிசாகர் அணை நீர்மட்டம் 81 அடியை தொடுகிறது
    X

    ஈரோடு அணை பகுதிகளில் தொடர் மழை: பவானிசாகர் அணை நீர்மட்டம் 81 அடியை தொடுகிறது

    ஈரோடு மாவட்ட அணை பகுதிகளில் தொடர் மழை பெய்து வரும்நிலையில், பவானிசாகர் அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து 81 அடியை தொடுகிறது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 24-ந் தேதி இரவு கவுந்தபாடி பகுதியில் பெய்த மழை காரணமாக பி. மேட்டுப்பாளையம் பகுதியில் 20 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.

    தாளவாடி பகுதியிலும் 24-ந் தேதி மற்றும் 25-ந் தேதிகளில் மழை பெய்தது. மரங்கள் கீழே விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    நேற்றும் தாளவாடி பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்தது. அங்கு 12 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதேபோல அணை பகுதியிலும் மழை நீடித்து வருகிறது.

    வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் இன்று காலை வரை 7 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. தொடர் மழை காரணமாக அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி அணை நீர் மட்டம் 32.50 அடியாக உள்ளது.

    பவானிசாகர் அணை நீர்மட்டமும் படிப்படியாக உயர்ந்து 81 அடியை தொடுகிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 80.65 அடியாக இருந்தது.

    அணையில் 16.33 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 1653 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 105 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    நேற்று அணையின் 6-வது மதகில் நீர் கசிவு ஏற்பட்டது. இது அந்த பகுதி மக்களை அச்சப்படுத்தியது.

    இது பற்றி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘அணையின் நீர்மட்டம் 80 அடியை எட்டும்போது இதுபோன்ற நீர்க்கசிவு ஏற்படும். இந்த நீர்க்கசிவால் பாதிப்பு ஏற்படாது’’ என்றனர்.

    குண்டேரிபள்ளம் அணை பகுதியில் நேற்று 22 மி. மீட்டரும், கொடிவேரி அணை பகுதியில் 12 மி.மீட்டரும் மழை பதிவாகி உள்ளது. கொடிவேரி பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக கொடிவேரி அருவி தண்ணீர் செந்நிறமாக உள்ளது.

    மழை தண்ணீர் மட்டுமே விழுவதால் அருவியில் அதிக தண்ணீர் விழவில்லை. இதனால் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைவாக இருந்து வருகிறது.
    Next Story
    ×