என் மலர்
ஈரோடு
ஈரோடு அருகே உள்ள பள்ளிபாளையம் ரெயில்வே தண்டவாளத்தில் ஆண் பிணம் ஒன்று கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். இறந்து கிடந்தவரின் சட்டை பையில் ஒரு விசிட்டிங் கார்டு இருந்தது.
அதில் இருந்த தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு போலீசார் பேசினர்.
அப்போது இறந்து கிடந்தவர் ஈரோடு மாணிக்கம் பாளையம் செங்காரம்பாளையத்தை சேர்ந்த பெருமாள் என்பவரது மகன் கந்தசாமி (வயது 32) என்பது தெரியவந்தது.
அவரது உறவினர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை பார்த்து அவர் கந்தசாமிதான் என்பதை உறுதி செய்தனர்.
இதைத் தொடர்ந்து பிணத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொத்தனாரான கந்தசாமி அந்த வழியாக வந்த ரெயிலில் அடிபட்டு இறந்துள்ளார். அவர் தற்கொலை செய்தாரா? அல்லது தண்டவாளத்தை கடக்கும்போது ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? என்று தெரியவில்லை.
இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு காந்தி ஜி ரோட்டில் உள்ள ஜவானடபவன் முன் இன்று காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா மகன் ஊழல் செய்து வருகிறார் என கூறி அதை கண்டித்து காங்கிரசார் இன்று ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு ஈரோடு மாநகர் மாவட்ட தலைவர் ரவி தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் முன்னிலை வகித்தார்.
அமித்ஷா மகனை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
இதில் விவசாய பிரிவு தலைவர் பெரியசாமி, மண்டல தலைவர்கள் ஜாபர் சாதிக், அம்புலி, முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மாவட்ட துணைத் தலைவர் செல்வ குமாரசாமி, மகிளா காங்கிரஸ் தலைவி புவனேஸ்வரி, பாஷா, முகமது அர்சத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 40). இவர் கோபி அடுத்த கெட்டிச்செவியூரில் உள்ள ஒரு தனியார் நூல்மில்லில் பணிபுரிந்து வந்தார்.
நேற்று மதியம் சரவணகுமாரும் அவரது நணபர் பரத் (21) என்பவரும் மோட்டார்சைக்கிளில் கோபி தாராபுரம் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர்.
வண்டியை சரவணகுமார் ஓட்டிச் சென்றார். பின்னால் பரத் உட்கார்ந்து சென்றார். அப்போது எதிரே வந்த ஒரு வேன் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 2 பேரும் மோட்டார் சைக்கிளிலிருந்து தூக்கி வீசப்பட்டனர்.
உடனடியாக இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே சரவணகுமார் பரிதாபமாக இறந்தார். பரத் கோபி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பாட்டார். இந்த விபத்து குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் அதிகம் உள்ளதால் பலர் தொடர்ந்து இறந்து வருகிறார்கள். மேலும் பலர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். டெங்கு நோயை மத்திய-மாநிலஅரசுகள் கட்டுப்படுத்த தவறி விட்டன. அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு நோயாளிகள் அலைக்கழிக்கப்படுகிறார்கள் என்று கூறி அதை கண்டித்து இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ்நிறுத்தத்தில் டெங்குவை கட்டுப்படுத்த தவறிய மத்திய- மாநில அரசுகளை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் சார்பில் ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு மாவட்ட செயலாளர் சிறுத்தை வள்ளுவன் தலைமை தாங்கினார்.
மண்டல அமைப்புச் செயலாளர் விநாயகமூர்த்தி, கிழக்கு மாவட்ட செயலாளர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் “கட்டுப்படுத்து கட்டுப்படுத்து டெங்கு நோயை கட்டுப்படுத்து”, “தடுத்து நிறுத்து தடுத்து நிறுத்து உயிர் பலியை தடுத்து நிறுத்து”போன்ற கோஷங்களை எழுப்பினர்.
இதில் மாநில மேலிட நெறியாளர் சிவசெல் லாண்டியப்பன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
ஈரோடு:
கேரளா மாநிலம் மலப்புரம் இரும்புழி பகுதியை சேர்ந்தவர் ஷரின். இவரது மனைவி உஸ்னா(வயது 26). இவர் நேற்று முன்தினம் எர்ணாகுளத்தில் இருந்து விஜயவாடா செல்வதற்காக ரெயிலில் ஏறினார். அந்த ரெயில் ஈரோடு அருகே வந்து கொண்டிருந்தது.
அப்போது உஸ்னாவுக்கு எதிர் இருக்கையில் அமர்ந்து இருந்த ஒருவர் உஸ்னாவிடம் சில்மிஷத்தில் ஈடுப்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த உஸ்னா இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசுக்கு தனது செல்போன் மூலம் எஸ்.எம்.எஸ்.அனுப்பினார்.
அந்த ரெயில் ஈரோடு ரெயில் நிலையம் வந்ததும் அங்கு தயாராக இருந்த ரெயில்வே போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அந்த வாலிபர் கேரள மாநிலம் பத்தினம்திட்டா மல்லப்பள்ளி கீழ்வாய்ப்புரை சேர்ந்த செரியன் (45) எனபதும், அவர் நாக்பூரில் உள்ள ரெயில்வே பாதுகாப்பு படையில் போலீஸ்காரராக பணியாற்றி வருவதும் தெரிய வந்தது.
இதையடுத்து செரியனை போலீசார் கைது செய்தனர். மேலும் இது குறித்து நாக்பூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா அருகே நடந்த ஒரு விழாவில் பங்கேற்க நடிகை ஹன்சிகா வந்திருந்தார். அவரை காண காலை 7 மணியில் இருந்தே ரசிகர்கள் காத்துகிடந்தனர். விழா நடக்கும் பகுதியில் சிறிய மேடை அமைக்கப்பட்டிருந்தது. அந்த மேடையில் ஹன்சிகா தோன்றி பேசுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அவரை காணும் ஆவலில் ரசிகர்கள் காத்து கிடந்தனர்.
ஹன்சிகா காரில் வந்து இறங்கியதும் ரசிகர்கள் கூட்டம் முண்டியடித்தது. அதிவிரைவு படை போலீசார், சூரம்பட்டி போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
விழா நடக்கும் இடத்துக்கு வந்த நடிகை ஹன்சிகா விருட்டென்று புகுந்தால் அப்போது அவரை யாரும் பார்க்க முடியவில்லை. இதனால் வெளியே காத்து கிடந்த ரசிகர்கள் குறிப்பாக இளைஞர்கள் “ஹன்சிகா”, “ஹன்சிகா” என்று கோஷமிட்டபடி இருந்தனர்.

பிறகு வெளியே வந்த நடிகை ஹன்சிகா மேடை மீது ஏறினார். அப்போது ரசிகர்கள் விசிலடித்தும், கைத்தட்டியும் கரகோஷம் எழுப்பினர். அவர்களை பார்த்து ஹன்சிகா கையை அசைத்தார்.
ஹன்சிகா கையசைத்ததும் ரசிகர்கள் உற்சாக மிகுதியால் கைகளை அசைத்து மகிழ்ச்சி அடைந்தனர். அவர்களை பார்த்து நடிகை ஹன்சிகா “பிளையிங் கிஸ்” கொடுத்தார். இதில் மேலும் உற்சாகம் அடைந்த ரசிகர்கள் பேசுங்கள்.. பேசுங்கள்.. என்று கூறினர்.
உடனே ஹன்சிகா “ஈரோடு வந்திருக்கேன், ரசிகர்களாகிய உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்” என்று மட்டும் கூறி பேச்சை முடித்தார்.
பிறகு நடிகை ஹன்சிகா தனது செல்போன் மூலம் மேடையில் நின்றபடி ரசிகர்களுடன் சேர்ந்து ‘செல்பி’யும் எடுத்துக் கொண்டார். அதன் பிறகு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மேடையில் இருந்து இறங்கி காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.
நடிகை ஹன்சிகா வந்ததையொட்டி அரசு ஆஸ்பத்திரிரோடு, பிரப்ரோடு, மேட்டூர் ரோடு மற்றும் பெருந்துறை ரோட்டில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாற்றுப்பாதையில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டது.
சத்தியமங்கலம்:
தாளவாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கேர் மாளம் மலை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக கோமதி என்பவர் பணியாற்றி வருகிறார். மாணவர்களின் கற்றல் செயல்பாட்டிற்காக 3 கம்ப்யூட்டர்கள் பீரோவில் 5 லேப்டாப்கள் இருந்துள்ளது.
கடந்த 4-ந் தேதி வழக்கம் போல் பள்ளியை திறந்து பார்த்த போது கம்ப்யூட்டர் அறையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதில் இருந்து 2 லேப்டாப்கள் திருட்டு போனது தெரிய வந்தது.
இது குறித்து ஆசனூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து ஆசனூர் போலீசாரிடம் போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது பேசும் போதே இணைப்பை துண்டித்தனர்.
பவானி:
பவானி தேவபுரம் 2-வது வீதி பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் கூலி தொழிலாளி. இவரது மகள் பார்வதி தேவி (வயது 13). இவர் பவானியில் உள்ள அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 2 தினங்களுக்கு முன்பு பார்வதிதேவிக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அவரை உடனடியாக அவரது பெற்றோர் பவானி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.
பிறகு மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். மீண்டும் அங்கிருந்து சேலம் அரசு மருத்துவ மனைக்கு சென்றனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனில்லாமல் நேற்று இரவு மாணவி பார்வதிதேவி பரிதாபமாக உயிரிழந்தார்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சித்திரெட்டிப் பாளையத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 30). தொழிலாளி. இவரது மனைவி தீபா (25). ஒருமகன் உள்ளான்.
இந்த நிலையில் 2-வதாக கர்ப்பிணியான தீபாவுக்கு கடந்த 10நாட்கக்கு முன்பு தான் மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்தது.
தீபாவுக்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து காய்ச்சல் அடித்தது இதனால் அந்தியூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அவரை சேர்த்தனர். அவருக்கு டெங்கு பாதிப்பு இருந்தது தெரியவந்தது. காய்ச்சல் குணமாகததால் சேலத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி தீபா பரிதாபமாக இறந்தார். குழந்தை பெற்ற 10-வது நாளில் டெங்கு பாதிப்புக்கு இளம்பெண் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அவரது உறவினர்கள் கூறும்போது “டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தீபாவுக்கு தீவிரசிகிச்சை அளித்திருந்தால் அவரை காப்பாற்றி இருக்கலாம்” என்று புகார் கூறினர்.
தீபாவுடன் சேர்ந்து ஈரோடு மாவட்டத்தில் டெங்கு நோய்க்கு பலி எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.
ஜி.எஸ்.டி.வரியை ரத்து செய்ய வேண்டும், சுங்க கட்டணத்தை வருடத்திற்கு ஒரு முறை வசூலிக்க வேண்டும், பெட்ரோல், டீசல் விலையை மாதம் ஒரு முறை நிர்ணயம் செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் சார்பில் இன்றும்(திங்கட்கிழமை), நாளையும்(செவ்வாய்க்கிழமை) இரண்டு நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தது.
இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆதரவு அளித்தது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் லாரிகள் ஸ்டிரைக் இன்று தொடங்கியது. இதில் ஈரோடு மாவட்டம் முழுவதும் 4 ஆயிரம் லாரிகள் பங்கேற்றுள்ளது.
ஈரோடு நரிப்பள்ளம் ஓடையில் 100-க்கும் மேற்பட்ட லாரிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. லாரி டிரைவர்கள், கிளீனர்கள் தாயம், சீட்டு போன்ற விளையாடி பொழுதை கழித்தனர். மேலும் அங்கேயே சமையல் செய்து சாப்பிட்டனர்.
லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தால் ஜவுளிகள் ஏற்றுமதி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் ஜவுளி தொழில் பாதிக்கும். கோடி கணக்கில் ஜவுளி வர்த்தகம் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதே போன்று ஈரோடு மாவட்டத்தில் இருந்து தான் மஞ்சள் அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் இந்த பணியும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
வெளிமாநிலங்களில் இருந்து குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் காய்கறிகள் வரத்து பாதிக்கப்படும். இதனால் காய்கறிவிலைகள், பருப்பு விலைகள் உயரும் நிலை உள்ளது. மேலும் எண்ணெய் விதைகள் கொண்டு செல்லும் பணிகளும் பாதிக்கப்படும்.
இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 2 நாட்களுக்கு சுமார் ரூ.200 கோடி வரை வர்த்தகம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பெருந்துறை:
ஈரோடு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவுகிறது. காய்ச்சல் பாதித்து மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் வரை 27 பேர் இறந்தனர்.
இந்த நிலையில் நேற்று மேலும் ஒரு பெண் டெங்கு காய்ச்சலுக்கு பலியானார். ஈரோடு முத்தம்பாளையம் அவுசிங் யூனிட் அடுத்த ரெயில் நகரை சேர்ந்தவர் ஷேக் ரிஸ்வான் (வயது 39). கேபிள் டி.வி. ஆபரேட்டர்.
இவரது மனைவி சையது நிஷா (34). இவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.இதைத்தொடர்ந்து அவரை ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவரது ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. எனவே அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனாலும் அவருக்கு காய்ச்சல் குறையவில்லை. இதைத்தொடர்ந்து அவரை கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி சையது நிஷா பரிதாபமாக இறந்தார்.
பலியான சையது நிஷாவுக்கு நலித் அகமது (10) என்ற மகன் உள்ளார். நலித் அகமது அங்குள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கிறார்.
சையது நிஷா பலியானதை தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் டெங்கு காய்ச் சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்து உள்ளது. டெங்கு காய்ச்சலுக்கு பெண் இறந்திருப்பது ஈரோடு மாநகர பகுதி மக்களை அச்சப்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் பெருந்துறை அருகே வட மாநில வாலிபர் ஒருவர் மர்ம காய்ச்சலுக்கு பலியாகி உள்ளார்.
ஓடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ஜெல்வாசிங் (வயது21). இவர் பெருந்துறை அடுத்த ஈங்கூர், கவுண்டனூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் ஜெல்வா சிங் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதனையடுத்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர கிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி ஜெல்வாசிங் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.
ஈரோடு- நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை இணைக்கும் காவிரி ஆற்றுப்பாலம் மிக குறுகிய பாலமாக இருந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வந்தது.
இதையொட்டி அந்த பழைய மேம்பாலம் அருகே புதிய உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு வந்தது. ரூ.33.3 கோடி மதிப்பில் அந்த புதிய பாலம் கட்டும் பணி முடிந்து உள்ளது.
இந்த உயர்மட்ட மேம்பாலத்தின் திறப்பு விழா வரும் 8-ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) மாலை 4 மணிக்கு நடக்கிறது. பள்ளிபாளையம் பஸ் நிலையம் அருகே விழா மேடை அமைக்கப்படுகிறது. விழாவுக்கு மின் துறை அமைச்சர் தங்கமணி தலைமை தாங்குகிறார். அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன், சரோஜா ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.
இதில் தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட புதிய பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்து சிறப்புரை ஆற்றுகிறார்.
விழாவில் ஈரோடு எம்.பி. செல்வகுமார சின்னையன், நாமக்கல் எம்.பி. சந்தரம், ஈரோடு எம்.எல்.ஏக்கள் கே.வி.ராமலிங்கம், தென்னரசு, நாமக்கல் மாவட்ட எம்.எல்.ஏ.க்கள் பொன்.சரஸ்வதி, பாஸ்கர், சந்திரசேகர், மூர்த்தி, உள்பட அரசு அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.
முனனதாக நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் வரவேற்கிறார். முடிவில் பொறியாளர் செல்வம் நன்றி கூறுகிறார்.
மேம்பாலம் விழாவையொட்டி பள்ளிபாளையம் பஸ் நிலையத்தில் மேடை அமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.
இந்த பணியை மின்வாரிய துறை அமைச்சர் தங்கமணி பார்வையிட்டு ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த புதிய பாலம் திறக்கப்பட்டதும் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும்.






