என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோடு மாவட்டத்தில் 4 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை: ஜவுளி - மஞ்சள் தொழில் பாதிப்பு
    X

    ஈரோடு மாவட்டத்தில் 4 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை: ஜவுளி - மஞ்சள் தொழில் பாதிப்பு

    ஈரோடு மாவட்டத்தில் லாரிகள் ஸ்டிரைக் இன்று தொடங்கியது. இதில் மாவட்டம் முழுவதும் லாரிகள் ஓடாததால் ஜவுளி - மஞ்சள் தொழில் பாதிப்பு அடைந்துள்ளது.
    ஈரோடு:

    ஜி.எஸ்.டி.வரியை ரத்து செய்ய வேண்டும், சுங்க கட்டணத்தை வருடத்திற்கு ஒரு முறை வசூலிக்க வேண்டும், பெட்ரோல், டீசல் விலையை மாதம் ஒரு முறை நிர்ணயம் செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் சார்பில் இன்றும்(திங்கட்கிழமை), நாளையும்(செவ்வாய்க்கிழமை) இரண்டு நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தது.

    இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆதரவு அளித்தது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் லாரிகள் ஸ்டிரைக் இன்று தொடங்கியது. இதில் ஈரோடு மாவட்டம் முழுவதும் 4 ஆயிரம் லாரிகள் பங்கேற்றுள்ளது.

    ஈரோடு நரிப்பள்ளம் ஓடையில் 100-க்கும் மேற்பட்ட லாரிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. லாரி டிரைவர்கள், கிளீனர்கள் தாயம், சீட்டு போன்ற விளையாடி பொழுதை கழித்தனர். மேலும் அங்கேயே சமையல் செய்து சாப்பிட்டனர்.

    லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தால் ஜவுளிகள் ஏற்றுமதி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் ஜவுளி தொழில் பாதிக்கும். கோடி கணக்கில் ஜவுளி வர்த்தகம் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதே போன்று ஈரோடு மாவட்டத்தில் இருந்து தான் மஞ்சள் அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் இந்த பணியும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    வெளிமாநிலங்களில் இருந்து குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் காய்கறிகள் வரத்து பாதிக்கப்படும். இதனால் காய்கறிவிலைகள், பருப்பு விலைகள் உயரும் நிலை உள்ளது. மேலும் எண்ணெய் விதைகள் கொண்டு செல்லும் பணிகளும் பாதிக்கப்படும்.

    இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 2 நாட்களுக்கு சுமார் ரூ.200 கோடி வரை வர்த்தகம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
    Next Story
    ×