என் மலர்
ஈரோடு
டாஸ்மாக் மதுபானங்களின் விலையை குவாட்டர் ஒன்றுக்கு சராசரியாக ரூ,10 முதல் ரூ.12 வரை உயர்த்தி தமிழக அரசு கடந்த 5 நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டது.
இந்த விலை உயர்வு கடந்த 12-ந் தேதி முதல் அமலுக்கு வந்தது. புதிய விலை உயர்வுக்கு குடிமகன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஈரோட்டில் ஒரு சில டாஸ்மாக் கடைகளில் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.
பெரும்பாலான கடைகளில் புதிய விலை உயர்வு பட்டியல் ஒட்டப்பட்டிருந்தது. ஆனாலும் அதை ஏற்காத குடிமகன்கள் பழைய விலை தான் கொடுப்போம் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. இது குறித்து டாஸ்மாக் ஊழியர்கள் கூறியதாவது:-
மதுபானங்கள் விலை உயர்வை ஏற்று கொள்ளாத சில மதுபிரியர்கள் எங்களுடன் தகராறில் ஈடுப்பட்டு வருகிறார்கள். எங்களுக்கும் இந்த விலை ஏற்றத்துக்கும் எந்த தொடர்பு இல்லை என்று கூறினாலும் அதை அவர்கள் ஏற்று கொள்ள மறுக்கிறார்கள்.
புதிய விலை பட்டியல் மாவட்ட டாஸ்மாக் அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைப்பதற்கு காலதாமதம் ஏற்பட்டதால் கடை முன்பு புதிய விலையேற்ற பட்டியலை உடனடியாக ஒட்ட முடியவில்லை. ஒரு சில கடைகளில் மதுபிரியர்கள் போதையில் தகாத வார்த்தையில் திட்டுகிறார்கள் என்று வேதனையுடன் கூறினர்.
ஈரோடு:
சத்தியமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர்.
அப்போது சத்தியமங்கலம் அடுத்த கொண்டமுத்தனூர் பகுதியில் உள்ள ஒரு மறைவான இடத்தில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.
போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர்.விசாரணையில் அவர்கள் கோபிநாத்(39), செல்வராஜ்(56), வடிவேல்(51), பிரகாஷ்(39), நடராஜன்(46), சுப்பிரமணி(50) என தெரிய வந்தது.
அவர்கள் 6 பேரையும் சத்தியமங்கலம் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து சீட் கட்டுகளையும், ரூ.9 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
கவுந்தப்பாடி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் கைத்தறி நெசவாளர்களுக்கு போனஸ் வழங்கும் விழா நடந்தது. விழாவில் தமிழக சுற்றுச் சூழல் துறை அமைச்சர் கருப்பணன் கலந்து கொண்டு போனஸ் வழங்கினார்.
செந்தாம்பாளையம் கலைவாணர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம், கவுந்தப்பாடி சக்தி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் மற்றும் கவுந்தப்பாடி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் ஆகிய கைத்தறி கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். ஈரோடு மாவட்ட கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குனர் பிச்சை முத்து முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் கோபி ஆர்.டி.ஓ. கோவிந்தராஜ், கலைவாணர் கூட்டுறவு சங்கத்தலைவர் மாரிமுத்து, மேலாண்மை இயக்குனர் பழனிக்குமார், மேலாளர் கந்தசாமி, சக்தி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க தலைவர் பெரியசாமி, மேலாண்மை இயக்குனர் ஜானகி, மேலாளர் ராஜேந்திரன், கவுந்தப்பாடி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தலைவர் மாதேஸ் வரன், மேலாண்மை இயக்குனர் மாலதி, மேலாளர் தண்டபாணி, முன்னாள் சேர்மேன் தங்கவேல், கவுந்தப்பாடி வட்டார கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க தலைவர்கள், மேலாளர்கள், இயக்குனர்கள், கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்க பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
அணைக்கு தண்ணீர் நேற்று வரை மிதமாக வந்து கொண்டிருந்தது. வினாடிக்கு 1600 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
ஆனால் இன்று காலை முதல் அணைக்கு தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்து அதாவது 1000 கனஅடி குறைந்தது. வினாடிக்கு 648 கனஅடி வீதமே தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து ஆற்றுக்கு 1050 கனஅடி வீதமும் வாய்க்காலுக்கு 2200 கனஅடி வீதமும் திறந்து விடப்பட்டு வருகிறது. அணையின் நீர் மட்டம் இன்று காலை 10 மணி நிலவரப்படி 79.68 அடியாக இருந்தது.
நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்தால் மட்டுமே அணைக்கு தண்ணீர் மேலும் அதிகரிக்கும். மழை பெய்து அணைக்கு தண்ணீர் வந்தால் தண்ணீர் திறப்பு தடைபெறாமல் இருக்கும்.
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி கிராமத்தை அடுத்த ஓலப்பாளையம் உள்ளது. இங்கு பழமையான மாயவர் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையில் மாயவர் திருவிழா சிறப்பாக நடக்கும். அதன்படி மாயவர் திருவிழா நடந்தது.
விழாவின் சிறப்பம்சமாக மண் பானைகளில் சமையல் செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கோவில் பின்புறம் உள்ள சமையல் கொட்டகையில் மேல் சட்டை அணியாமல் காவி வேட்டியுடன் நெற்றியில் நாமமிட்டு மண் பானைகளில் சோறு சமைத்து வடித்தனர். இப்படி 40 மூட்டை சாதம் மண் பானைகளில் சமைக்கப்பட்டது.
இதே போல் மண் பானைகளிலேயே சாம்பார், ரசம் ஆகியவை தயார் செய்யப்பட்டது. இளைஞர்கள் செய்த சமையலுக்காக 100-க்கும் மேற்பட்ட பெண்கள் உதவியாக இருந்து காய்கறிகளை நறுக்கி கொடுத்தனர்.
அன்னதானத்துக்கு முன்பு விரதம் இருந்து வந்திருந்த நூற்றுக்கணக்கான பெண்களுக்கு மடி சாதம் வழங்கப்பட்டது. அதற்கு பிறகு பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த விழாவையொட்டி கிராமமே விழாக் கோலம் பூண்டிருந்தது. விழாவில் உள்ளூர் மட்டுமில்லாமல் வெளியூரை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்களும் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்தி கடனாக மாடுகள் மற்றும் கன்றுகளை கோவில் பூசாரியிடம் வழங்கினர்.
கோபி பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மடிகணினி வழங்கும் விழா நடைபெற்றது. கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பால முரளி அனைவரையும் வரவேறார்.
திருப்பூர் எம்.பி. சத்திய பாமா முன்னிலை வகித்தார். விழாவில், அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மாவட்ட அளவில் 13,577 பிளஸ்-2 படித்து முடித்த மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மடிகணினிகளை வழங்கி பேசினர்.
அப்போது அவர் பேசியதாவது:-
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவை நனவாக்கும் பொருட்டு கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.
இனிவரும் ஆண்டுகளில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு பள்ளியில் படிக்கும் போதே விலையில்லா மடி கணினிகள் வழங்கப்படும். இந்த அரசுக்கு பலநிதி நெருக்கடி இருந்த போதிலும் பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
தற்போது பொதுத்தேர்வு மையங்கள் 20, 22 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. அதை மாற்றி 10 கி.மீ. தூரத்திற்குள் பொதுத்தேர்வு மையங்கள் இருக்கும். இதன் மூலம் மாணவ-மாணவிகள் மன உளைச்சல் இல்லாமல் பொதுத் தேர்வை சிறப்பாக எழுத முடியும். தற்போது உள்ளதை விட 1,000 மையங்கள் கூடுதலாக அமைக்கப்படும்.
இந்த கல்வியாண்டு முதல் இது செயல்படுத்தப்படும். மாணவ- மாணவிகளுக்கு இலவச விபத்து காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த இந்த அரசு முனைப்புடன் உள்ளது. தமிழகம் முழுவதும் 32 மாவட்ட நூலகங்களில் ஐஏஎஸ். அகாடமி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்.டி.ஓ. கோவிந்த ராஜன், தாசில்தார் பூபதி, சிட்கோ வாரிய முன்னாள் தலைவர் சிந்துரவிச்சந்திரன், பள்ளி தாளாளர் கருப்பணன், நம்பியூர் ஒன்றிய செயலாளர் தம்பி சுப்பிரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கடத்தூர்:
தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள மோட்டாங்குறிச்சி ஊராட்சியை தர்மபுரி எம்.பி. அன்புமணிராமதாஸ் சான் சத் ஆதர்ஸ் கிராம யோஜனா திட்டம் மூலம் தத்தெடுத்துள்ளார். இந்த கிராம பகுதியில் உள்ள மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் வரும் மூன்று மாதத்தில் முடித்து கொடுப்பதாக அவர் உறுதி கூறினார்.
அவர் பேசும் போது, மத்தியில் ஆட்சியில் உள்ள மோடி அரசு ஒவ்வொரு ராஜ்ஜிய சபா உறுப்பினர்களும் ஒவ்வொரு பஞ்சாயத்தைத் தத்தெடுக்க வேண்டும் என கூறியதால் அந்த கிராமத்திற்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தரவும் மாதிரி பஞ்சாயத்தாக மாற்றிட கூடுதல் நிதி ஒதுக்கி தரும் என்று நினைத்து எனது தொகுதிக்குட்பட்ட மோட்டாங்குறிச்சி பஞ்சாயத்தை தத்தெடுத்தேன். ஆனால் எம்பி நிதியை தவிர ஒரு பைசா கூட கூடுதலாக கொடுக்கவில்லை.
மேலும் இப்பகுதியில் உள்ள மக்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுப்பதில்லை. தர்மபுரி மாவட்ட எம்.பி.யான என்னுடைய அனைத்து விழாக்களிலும் கலந்து கொள்ளாமல் வேண்டுமென்றே இந்த மாவட்டத்தின் கலெக்டர் புறக்கனித்து வருகின்றார். இதனால் இந்த மாவட்டத்தின் மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டு வருகின்றது. எப்படியிருந்தாலும் எதிர்ப்பிலும் என்னை முழுமையாக ஆதரித்து வெற்றி பெறவைத்த பஞ்சாயத்தில் உள்ள அனைத்து அடிப்படை தேவைகளும் மூன்று மாதத்திற்குள்ளாக முடித்து கொடுப்பேன் என்று பேசினார்.
அரச்சலூர் அடுத்த பள்ளியூத்து நவரசம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மத்திய அரசின் அறிவியல் ஆய்வகம் திறப்பு விழா, புதிய கலையரங்கம் திறப்பு விழா, மாணவர் மன்ற நிர்வாகிகள் பதவியேற்பு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு மொடக்குறிச்சி எம்.எல்.ஏ வி.பி. சிவசுப்பிரமணி தலைமை தாங்கினார். ஈரோடு எம்.பி. செல்லக்குமாரசின்னையன் முன்னிலை வகித்தார். நவரசம் பள்ளி தலைவர் எஸ்.சி.துரைசாமி விழா நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார்.
விழாவில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு ரூ.20 லட்சம் மதிப்பிலான மத்திய அரசின் “அடல் டிங்கரிங் லேப்” எனும் நவீன அறிவியல் ஆய்வகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்துகொண்டு புதிய கலையரங்கத்தை துவக்கி வைத்தார். ஈரோ டு மேற்கு தொகுதி எம்.எல்.ஏ கே.வி. ராமலிங்கம் மாணவர் மன்றத்தை துவக்கி வைத்து பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
விழாவில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசும் போது கூறியதாவது:-
இந்த பள்ளியில் திறக்கப்பட்டுள்ள மத்திய அரசின் அடல் அறிவியல் ஆய்வகம் மூலம் புதிய கண்டுபிடிப்புகளுக்கு தேவையான சர்க்யூட்களை எளிதில் உருவாக்க முடியும். பெரிய விஞ்ஞானிகள் பயன்படுத்தும் புதிய கண்டுபிடிப்புக்கான நவீன முறைகளை எளிதில் பயன்படுத்தி உருவாக்க முடியும்.
இதனால் எந்த நாட்டிற்கு சென்றாலும் தமிழக மாணவர்களை யாரும் வெல்ல முடியாத நிலை உருவாகும். அதேபோல் சிறந்த புதிய கல்வித் திட்டத்தை உருவாக்கி வருகிறோம்.
தமிழ் பண்பாடு, கலாசாரம், தொன்மை மாறாமல் சிறந்த பாடத்திட்டம் அமையும். நீட் தேர்வை வரும் ஆண்டு தமிழக மாணவர்கள் தூள் தூளாக்குவர். இதற்காக 412 பயிற்சி மையங்கள் தொடங்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிக்கூட மாணவ மாணவிகளுக்கு ஸ்மார்ட் அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. அதேபோல் தற்போது தனியார் பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கும் ஸ்மார்ட் அட்டை வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசும்போது, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். தான் தனியார் கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள் தொடங்க அனுமதி அளித்தார். தற்போது அனைவரும் எந்தக் கல்வியும் கற்கலாம் என்ற நிலை உருவாகி உள்ளது.
மேலும் படிப்புடன் பொது அறிவையும் வளர்த்து கொண்டால் மட்டுமே சிறந்த வேலைக்கு செல்ல முடியும். எனவே மாணவர்கள் பொது அறிவை வளர்க்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்’’ என்றார்.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள எலத்தூர் செட்டிபாளையத்தை சேர்ந்த 16 வயது சிறுமி தனது பெற்றோருடன் மைசூரில் இருந்தார். அவ்வப்போது அவர்கள் எலத்தூர் செட்டிபாளையத்துக்கு வருவார்கள்.
இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி கோபி அரசு ஆஸ்பத்திரியில் அந்த சிறுமி உடல் நலக்குறைவு காரணமாக சேர்க்கப்பட்டார். அப்போது அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் பெண் குழந்தை பெற்றெடுத்தார். இது அவரது பெற்றோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எனவே கர்ப்பத்துக்கு யார் காரணம்? என்று சிறுமியிடம் அவர்கள் விசாரித்தனர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த ரமேஷ்குமார்(29) என்பவர்தான் சிறுமியின் கர்ப்பத்துக்கு காரணம் என தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து சிறுமியின் தாய் கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதில், ‘‘நாங்கள் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டுக்கு வந்து எனது மகளை ரமேஷ்குமார் கட்டாய பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காயத்ரி வழக்குப்பதிவு செய்து ரமேஷ்குமாரை கைது செய்தார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் ஆர்.என்.புதூர், பெருமாள் மலை பகுதியை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி (வயது 42). இவரது மனைவி மகேஸ்வரி (45).
சம்பவத்தன்று புண்ணியமூர்த்தி துணிகளை துவைக்க அருகில் உள்ள காவிரி ஆற்றுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார்.
இரவு நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த மகேஸ்வரி கணவரை துணிதுவைக்க சென்ற காவிரி ஆறு உள்பட பல்வேறு இடங்களில் தேடினர். எனினும் கணவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் கோண வாய்க்கால், லட்சுமிநகர் வழியாக செல்லும் காவிரி ஆற்றில் புண்ணியமூர்த்தி பிணமாக கிடந்தார். புண்ணிய மூர்த்தி துணி துவைக்கும் போது தவறி ஆற்றில் விழுந்து இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இது குறித்து சித்தோடு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து புண்ணியமூர்த்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கர்நாடக மாநிலம் ஒஸ்பட்டை சேர்ந்தவர் மாதேவன் (வயது38). இவரது அக்கா வீடு சத்தி வனப்பகுதி கெத்தேசாலில் உள்ளது. அக்கா உடல் நலம் சரியில்லாமல் இருந்தாராம். இதனால் தன் அக்காவை பார்க்க மாதேவன் மோட்டார் சைக்கிளில் வந்தார். அக்காவை பார்த்து விட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டார்.
ஆசனூரில் ஒரு ஓட்டல் அருகே வந்தபோது அந்த வழியாக வந்த ஒரு வேன் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு அவர் படுகாயம் அடைந்தார். அவர் மீது மோதிய வேன் டிரைவர் கீழே குதித்து ஓடி விட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மாதேவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து ஆசனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம் ஓம்சக்தி நகரை சேர்ந்தவர் டான் பிரவீன் (வயது 32). இவர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி பெயர் கிருத்திகா (31). 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இவரது நண்பர் சேலம் நெத்திமேட்டைச் சேர்ந்த புஷ்பராஜன் (33). இவர் சேலத்தில் உள்ள ஒரு பிஸ்கட் கம்பெனியில் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று புஷ்பராஜன் சேலத்தில் இருந்து ஈரோடு வந்தார். பிறகு இவரும் இவரது நண்பர் டான் பிரவீனும் டெக்ஸ்வேலிக்கு சென்று ஜவுளி வாங்கி கொண்டனர்.
பிறகு நண்பர்கள் இருவரும் காளிங்கராயன் அணைக்கட்டுக்கு வந்தனர். அங்கு குளித்தனர். இருவருக்கும் நீச்சல் தெரியாது என தெரிகிறது.
இவர்கள் குளித்து கொண்டிருந்தபோது திடீரென மாயமாகி விட்டார்கள். மாயமாவதற்கு முன் டான் பிரவீன் மனைவி தன் கணவருக்கு போன் செய்து ரொம்ப நேரம் ஆகி விட்டதே.. எங்கே இருக்கிறீர்கள்? என்று கேட்டார்.
அதற்கு டான் பிரவீன் “அணைக்கட்டில் குளித்துக் கொண்டிருக்கிறேன். சீக்கிரம் வீட்டுக்கு வந்து விடுகிறேன்” என்று கூறி உள்ளார். ஆனால் பேசி நீண்ட நேரம் ஆனதால் அவரது மனைவி மீண்டும் போனில் தொடர்பு கொண்ட போது போன் “சுவிட்ச் ஆப்” ஆகி இருந்தது.
இந்த நிலையில் அணைக் கட்டில் குளித்து மாயமானவர்களை அப்பகுதியை சேர்ந்தவர்களும், தீயணைப்பு வீரர்களும் தேடினர். இதற்கிடையே அவர்கள் குளித்த இடத்தில் இருந்து 1கி.மீட்டர் தூரத்தில் புஷ்பராஜன் உடல் கிடந்தது கண்டெடுக்கப்பட்டு மீட்கப்பட்டது. அவரது நண்பர் டான் பிரவீனை தொடர்ந்து தேடி வருகிறார்கள். அவரும் அணைகட்டில் மூழ்கி பலியாகி இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
இது குறித்து சித்தோடு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.






