என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு ஊழியர்களின் பிள்ளைகள்கூட அரசு பள்ளிகளில் சேரும் நிலை ஏற்படும்: அமைச்சர் செங்கோட்டையன்
    X

    அரசு ஊழியர்களின் பிள்ளைகள்கூட அரசு பள்ளிகளில் சேரும் நிலை ஏற்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

    வரும் கல்வி ஆண்டில் அரசு ஊழியர்கள், பேராசியர்களின் பிள்ளைகள் கூட அரசு பள்ளிகளில் சேரும் நிலை ஏற்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
    ஈரோடு:

    ஈரோடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான அறிவியல் நாடக விழா திண்டலில் இன்று நடந்தது. மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார்.

    செல்வகுமார சின்னையன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கே.வி. ராமலிங்கம், தென்னரசு, ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பால முரளி வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கலந்து கொண்டு அறிவியல் நாடக விழாவை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார்.

    மாணவர்கள் எழுச்சி பெறும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க சத்துணவு திட்டத்தை எம். ஜி.ஆர். கொண்டு வந்தார்.

    ஜெயலலிதாவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். அவர் வழியில் நடக்கும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசும் பள்ளிக் கல்வித்துறையில் மாணவர்கள் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் ரேங்க் முறை ரத்து செய்யப்பட்டது ஒரு மிகப்பெரிய மாற்றம் ஆகும். மத்திய அரசின் எந்த வகை தேர்வையும் எதிர்கொள்ளும் வகையில் பயிற்சி அளிக்க 402 பயிற்சி மையங்கள் அமைக்கப்படுகிறது. இந்த மையங்கள் அமைக்கும் பணி அடுத்த மாதம் 15-ந் தேதிக்குள் தொடங்கும்.

    வரும் கல்வி ஆண்டு முதல் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும். இதற்காக 2 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. 10 பேர் கொண்ட ஒரு குழுவினர் பாடத்திட்டத்தை மாற்றி அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

    எனது தலைமையிலான இன்னொரு குழுவில் சிறந்த கல்வியாளர்கள், விஞ்ஞானிகள், துணை வேந்தர்கள் இடம்பெற்றுள்ளனர். வரும் கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு இணையாக அரசு பள்ளி மாணவர்களும் திகழ்வார்கள்.

    32 மாவட்டங்களிலும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். 1 கோடியே 28 ஆயிரம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்.

    வரும் கல்வி ஆண்டு முதல் அரசு பள்ளிகளில் 3 நிற சீருடைகள் அறிமுகப்படுத்தப்படும். 1 முதல் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஒரு நிற சீருடையும், 6 முதல் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஒரு நிற சீருடையும், 11 முதல் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஒரு நிற சீருடையும் வழங்கப்படும்.

    9 முதல் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் கணினி பயன்பாட்டுக்காக ரூ. 434 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. பள்ளிகளில் வை-பை வசதி செய்யப்படும். வரும் கல்வி ஆண்டில் அரசு ஊழியர்கள், பேராசியர்களின் பிள்ளைகள் கூட அரசு பள்ளிகளில் சேரும் நிலை ஏற்படும்.

    ஆசிரியர்கள் பணி மாறுதல் வெளிப்படை தன்மையாக நடந்துள்ளது. 2372 ஆசிரியர்களை அவர்கள் விரும்பும் இடத்தில் பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். கற்றல் குறைபாடு உள்ளவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

    இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
    Next Story
    ×