என் மலர்
கடலூர்
- சாமிகள் பெண்ணையாற்றில் புனித தீர்த்தவாரி செய்து ஆற்றங்கரைகளில் வரிசையாக நிறுத்தப்பட்டன.
- ஏராளமானோர் சுருளிகிழங்கு வாங்குவதற்காகவே ஆற்றுத் திருவிழாவிற்கு வருகின்றனர்.
கடலூர்:
பொங்கல் திருவிழா கடந்த 15-ந் தேதி தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் கடலூர் தென்பெண்ணையாற்றில் ஆற்று திருவிழா இன்று நடந்தது.
இதை முன்னிட்டு அதிகாலையிலேயே கடலூர் வண்டிப்பாளையம், புருகீஸ்பேட்டை, முதுநகர், பச்சாங்குப்பம், பாதிரிக்குப்பம், மஞ்சக்குப்பம், செம்மண்டலம், சாவடி, புதுப்பாளையம், வன்னியர்பாளையம், தேவனாம்பட்டினம், ஆனைக்குப்பம், குண்டு உப்பலவாடி, தாழங்குடா, உச்சிமேடு, நானமேடு உள்ளிட்ட ஏராளமான கிராம பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட சாமிகள் அலங்கரிக்கப்பட்டு பெண்ணையாற்றிற்கு கொண்டு வரப்பட்டன. சாமிகள் பெண்ணையாற்றில் புனித தீர்த்தவாரி செய்து ஆற்றங்கரைகளில் வரிசையாக நிறுத்தப்பட்டன.
கடலூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் ஆற்றுத் திருவிழாவில் கலந்துகொண்டு வழிபட்டனர். இதில் ஒரு சிலர் ஆற்றில் புனித நீராடினர். ஆற்று கரையோரம் கடைகள் வைக்கப்பட்டு இருந்தன. இங்கு பொருட்கள், குழந்தைகளுக்காண விளையாட்டு பொருட்கள், உணவு பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்டவைகள் விற்பனை செய்யப்பட்டன. ஏராளமானோர் சுருளிகிழங்கு வாங்குவதற்காகவே ஆற்றுத் திருவிழாவிற்கு வருகின்றனர். இந்த கிழங்கினை ஏராளமானோர் வாங்கிச்சென்றனர். . ஆற்று திருவிழாவில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதேபோல் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டை தென்பெண்ணை ஆற்றில் ஆண்டுதோறும் தை மாதம் 5-ம் நாள் ஆற்று திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு ஆற்று திருவிழா இன்று நடந்தது. இதில் கடலூர், விழுப்புரம், புதுவை பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் இருந்து சாமி சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு தீர்த்தவாரி நடந்தது.
- இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு 20,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.
- போக்குவரத்து தொழிலாளர்கள் உடன் நாளை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் ஆவினங்குடியில் உள்ள வெள்ளாற்றில் மணல் திருடப்படுவதை கண்டித்து கடந்த 2015-ம் ஆண்டு அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவசங்கரன் எம்.எல்.ஏ. தலைமையில் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவசங்கரன் உள்ளிட்ட 37 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு கடலூர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. பின்னர் இந்த வழக்கு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த தேர்தலில் வெற்றிபெற்ற சிவசங்கரன் எம்.எல்.ஏ. போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
கடலூர் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற இந்த வழக்கில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆஜர் ஆனார். வழக்கு விசாரணை அடுத்த மாதம் (பிப்ரவரி) 14-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
கோர்ட்டில் ஆஜராகி விட்டு வெளியே வந்த அமைச்சர் சிவசங்கரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க. ஆட்சியில் பொதுமக்கள் பிரச்சனை தொடர்பாக போராட்டம் நடத்தியதில் பொய் வழக்கு போடப்பட்டு உள்ளது. இந்த வழக்கை எதிர்நோக்கும் வகையில் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளேன்.
இந்த நிலையில் தொழிலாளர் நலத்துறை சார்பில் போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சனை தொடர்பாக முத்தரப்பு பேச்சுவார்த்தை நாளை 19-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள். இந்த பேச்சுவார்த்தையில் முடிவுகள் தெரியவரும்.
தமிழகத்தில் பல்வேறு துறைகள் இருந்து வரும் நிலையில் அனைத்து பிரச்சனைக்கும் முதலமைச்சர் நேரில் பேசுவது என்பது சிரமம் ஆகும். அதற்காகத்தான் ஒவ்வொரு துறைக்கும் அமைச்சர்கள், செயலாளர்கள், அதிகாரிகள் உள்ளனர்.
ஏற்கனவே தற்போது உள்ள போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அவர்கள் வைத்திருக்கும் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. போராட்டத்தில் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கையான ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் கோரிக்கையாக உள்ளது. இந்த கோரிக்கையானது ஒரு துறைக்கு சம்பந்தப்பட்ட கோரிக்கையாக இல்லாமல் பல்வேறு துறை சேர்ந்த ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக உள்ளதால் அரசின் நிதி சுமை எவ்வளவு கூடுதலாகும் என்பதை கணக்கிட்டு தான் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் இது சம்பந்தமாக முடிவெடுத்தால் மற்ற துறை சார்ந்த ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு பாதிப்பாகும் என்ற காரணத்தினால் ஆலோசனை நடைபெற்று வருகிறது. தற்போது போக்குவரத்து தொழிலாளர்கள் 6 அம்ச கோரிக்கைகள் வைத்துள்ள நிலையில், ஏற்கனவே 2 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்த நிலையில் பணிக்காலத்தில் இறந்த ஊழியர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு தற்போது வேலையில் இருந்து வருகின்றனர். பணியாளர்கள் பற்றாக்குறையை நீக்குவதற்கு எழுத்து தேர்வு நடைபெற்று வருவதால் 2 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மீதமுள்ள 4 கோரிக்கைகளில் தற்போது 2 கோரிக்கைகள் தொடர்பாக நடைபெற்று வரும் நடவடிக்கை குறித்து விரிவாக தெரிவித்து உள்ளோம். மேலும் இவர்கள் வைத்த கோரிக்கைகள் நிதித்துறை சம்பந்தப்பட்டது என்பதால் உடனடியாக நிறைவேற்ற முடியாத நிலையில் உள்ளது. ஆனால் அரசியல் காரணத்தினால் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தான் போக்குவரத்து தொழிலாளர்களின் அகவிலைப்படி நிறுத்தப்பட்டது. ஆனால் அகவிலைப்படி வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
தற்போது நிதி நிலை சரியான பிறகு அகவிலைப்படி வழங்கப்படும். மேலும் தேர்தல் நேரத்தில் கலைஞர் உரிமை திட்டம் தொகை வழங்கப்படும் என்பது தொடர்பாக கூறியபடி நிதி நிலைமையை சரி செய்து தற்போது வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
பொங்கல் பண்டிகை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்வதற்காக இந்த ஆண்டு கூடுதலாக ஒரு லட்சம் பேர் முன்பதிவு செய்து இருந்தனர். இந்த ஆண்டு முதலமைச்சர் தலைமையில் போக்குவரத்து துறை சிறப்பாக செயல்படுவதை தொடர்ந்து பொதுமக்கள் அரசு பஸ்களில் அதிகளவில் பயணம் செய்து வந்தனர்.
இதில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 2 லட்சம் பேர் கூடுதலாக பயணம் செய்தது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலையில் தமிழக அரசு திட்டமிட்டதை விட அதிக அளவில் பயணிகள் சென்று வந்ததால் பல்வேறு இன்னல்களுக்கு இடையே கண்டக்டர்கள், டிரைவர்கள் பயணிகளை பாதுகாப்பாக தங்களது ஊர்களுக்கு அழைத்துச் சென்று வந்தனர். சென்னை நோக்கி வெளியூரில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வரும் காரணத்தினால் 1000-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இன்னும் 2 நாட்களுக்கு இயக்கப்பட உள்ளது.
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் ஏற்கனவே அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விழுப்புரம், கும்பகோணம், சேலம் உள்ளிட்ட மற்ற போக்குவரத்துக் கழகம் பஸ்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளிலிருந்து இயக்கப்பட்டு வந்த நிலையில் கிளாம்பக்கம் பஸ் நிலையத்தில் இருந்தும் இயக்கப்பட்டது.
மேலும் படிப்படியாக கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து அனைத்து பஸ்களும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். சொந்த ஊரிலிருந்து திரும்பி செல்பவர்கள் சென்னை கோயம்பேடு செல்வதற்கு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. அடுத்த ஒரு வாரத்தில் நடைபெறும் கூட்டத்தில் கிளாம்பாக்கத்தில் இருந்து அனைத்து பஸ்கள் இயக்கப்படுவதற்கும், போக்குவரத்து நெருக்கடிகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் படிப்படியாக கண்டறிந்து தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது தி.மு.க. மாநகர செயலாளர் ராஜா, தொ.மு.ச. பழனிவேல், தகவல் தொழில்நுட்ப அணி கார்த்திக், பகுதி துணை செயலாளர் வக்கீல் பாபு மற்றும் பலர் உடன் இருந்தனர்.
- கோபி கிருஷ்ணன் தீவிர தோனி ரசிகர் என்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிறமான மஞ்சள் நிறத்தில் தனது வீட்டை மாற்றி பிரபலமடைந்தார்.
- வீடு முழுவதும் தோனி படத்தை வரைந்துள்ளார்.
அரங்கூர்:
கடலூர் மாட்டம் திட்டக்குடி அடுத்த அரங்கூர் பகுதியை சேர்ந்தவர் கோபிகிருஷ்ணன் (34). இவருக்கு அன்பரசி என்ற மனைவியும் கிஷோர், சக்திவேல் என்ற ஆண் குழந்தைகளும் பிறந்து 10 நாட்களே ஆன பெண் குழந்தையும் உள்ளது.
கோபி கிருஷ்ணன் தீவிர தோனி ரசிகர் என்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிறமான மஞ்சள் நிறத்தில் தனது வீட்டை மாற்றி பிரபலமடைந்தார். மேலும் வீடு முழுவதும் தோனி படத்தை வரைந்துள்ளார்.
இந்நிலையில், கோபிகிருஷ்ணன் இன்று அதிகாலையில் வீட்டில் தனது மனைவி சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நேற்றிரவு கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் அதே பகுதியை சேர்ந்த சிலர் கோபிகிருஷ்ணனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த கோபிகிருஷ்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் சம்பவம் குறித்து ராமநத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் மற்ற அரசியல் கட்சியுடன் கூட்டணியாக இணைந்து செயல்படுவது தவறு இல்லை.
- விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு எதிர்ப்பான திட்டத்தை மத்திய அரசு திணிக்க கடந்த காலங்களில் செயல்பட்டனர்.
கடலூர்:
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் பிறந்த நாளை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று காலை கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இன்று எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அ.ம.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிலையில் நானும் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் அரசியலில் இணைந்து செயல்படுவதற்கு முடிவு செய்து தற்போது செயல்பட்டு வருகின்றோம்.
ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் மற்ற அரசியல் கட்சியுடன் கூட்டணியாக இணைந்து செயல்படுவது தவறு இல்லை. தமிழக மக்கள் நலனுக்கு எதிராக செயல்படும் எந்த ஒரு கட்சியுடனும் கூட்டணி வைக்க மாட்டோம்.

விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு எதிர்ப்பான திட்டத்தை மத்திய அரசு திணிக்க கடந்த காலங்களில் செயல்பட்டனர். ஸ்டெர்லைட் மற்றும் ஹைட்ரோகார்பன் போன்ற மக்களுக்கு எதிர்ப்பான திட்டங்களை செயல் படுத்தும் நிலைப்பாட்டில் இருந்து மத்திய அரசு மாறுபட்டதால் தற்போது எதிர்ப்பு காட்ட வில்லை.
தமிழகத்திற்கு வெள்ள நிவாரணம் வழங்க அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். தமிழகத்தில் காவி ஆடை அணிந்த திருவள்ளுவர் படத்தை தமிழக கவர்னர் வெளியிட்டதை பார்த்தால் அவர் போல் செயல்படவில்லை. இதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் வகையில் அவரை திரும்ப பெற வேண்டும்.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவெடுக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாவட்ட செயலாளர் ஆடிட்டர் சுந்தரமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாரதனை.
- சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது.
மேல்மலையனூர்:
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று இரவு மார்கழி மாதஅமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு நேற்று அதிகாலை மூலவர் அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால்,தயிர், மஞ்சள், குங்குமம், விபூதி, சந்தனம் இளநீர் பஞ்சாமிர்தம், தேன், பன்னீர் உள்ளிட்ட பூஜைப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து உற்சவர் அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு பலவித மலர்களை கொண்டு ராஜகாளியம்மன் அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் அருள்பாலித்தார்.
இரவு 11 மணிக்கு மேளதாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக உற்சவர் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். அப்போது ஊஞ்சல் மண்டபம் எதிரில் இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அங்காளம்மா, அங்காளம்மா, என கரகோஷத்துடன தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து கோவில் பூசாரிகள் அங்காளபரமேஸ்வரி அம்மனை வாழ்த்தி தாலாட்டு பாடல்கள் பாடினர்.
இரவு ஊஞ்சல் உற்சவம் முடிந்து அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து உற்சவர் அங்காளபரமேஸ்வரி அம்மனை கோவில் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.ஊஞ்சல் உற்சவத்தில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி விழுப்புரம், கடலூர், சேலம், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, ஆகிய மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் கைது.
- நாளை கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த நோட்டீஸ்.
ஊதிய உயர்வு, நிரந்தர பணி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி இன்று பேரணியாக செல்ல முயன்றனர்.
இதைதொடர்ந்து, 300க்கும் மேற்பட்ட என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
ஆனால், என்எல்சி தொழிலாளர்கள் திருமண மண்டபத்தை விட்டு வெளியே செல்ல மறுத்துவிட்டனர்.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் உடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் விரைவில் என்எல்சி நிர்வாகத்துடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
இருப்பினும், நாளை கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த நோட்டீஸ் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், குடியரசு தினத்தன்று கருப்புக்கொடி ஏந்தி என்எல்சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிடவும், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை துவக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- காரின் பின் பகுதி சேதமடைந்தது. இருப்பினும் காரில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பினர்.
- விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கடலூர்:
போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று தொடங்கி இன்று 2-வது நாளாக நீடித்து வருகின்றது.
இதனால் தடையின்றி 100 சதவீத பஸ்களை இயக்கும் நோக்கில் போக்குவரத்து துறை, தற்காலிக டிரைவர்கள் மூலம் பஸ்களை இயக்கி வருகிறது. அந்த வகையில் கடலூரிலும் நேற்று தற்காலிக ஊழியர்கள் மூலம் 50-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டன.
இந்த நிலையில் தற்காலிக டிரைவர் வெங்கடேசன் என்பவர் கடலூர் போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்து அரசு பஸ்சை இயக்கிக் கொண்டு அண்ணா பாலம் வழியாக சென்றார்.
அப்போது சீமாட்டி சிக்னல் சாலையில் இருந்து ஜவான்பவன் சாலைக்கு திரும்புவதற்காக நின்று கொண்டிருந்த காரின் பின்பகுதியில் வெங்கடேசன் ஓட்டிச்சென்ற பஸ் எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில் காரின் பின் பகுதி சேதமடைந்தது. இருப்பினும் காரில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பினர். இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அரசு பஸ்சை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்கு படுத்தினர்.

இதேபோல கடலூரிலிருந்து விருத்தாச்சலத்திற்கு இன்று காலை தற்காலிக பஸ் டிரைவர் ஒருவர் அரசு பஸ்சில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார். அப்போது கடலூர்-சிதம்பரம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது எந்தவித அச்சமும் இன்றி, அரசு உத்தரவை கடைபிடிக்காமல் மிகுந்த மகிழ்ச்சியுடன் செல்போன் பேசிக்கொண்டு சென்றார். கடுமையான போக்குவரத்து பாதிப்பு உள்ள சாலையில் அரசு பஸ்சை ஓட்டி சென்று கொண்டிருந்தார்.
அப்போது பஸ்சில் பயணம் செய்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்து பார்த்தனர். மேலும், நிரந்தர போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்காலிக டிரைவர்களை கொண்டு அரசு பஸ் இயங்கி வரும் நிலையில், பஸ் இயங்கினால் போதும் என்ற நிலைப்பாட்டில் அதிகாரிகள் இருப்பதால் இதுபோன்ற நிலை உருவாகி உள்ளது. உயிருக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் பஸ்களை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
- கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.
- முதியவர் ஒருவர் தலையில் பேப்பர் கட்டை வைத்துக்கொண்டு மனு அளிக்க நேரில் வந்தார்.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து வந்த பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்கள் மனு அளித்தனர்.
இந்த நிலையில் இன்று காலை முதியவர் ஒருவர் தலையில் பேப்பர் கட்டை வைத்துக்கொண்டு மனு அளிக்க நேரில் வந்தார். இவர் திட்டக்குடி வடகரம்பூண்டி கிராமத்தை சேர்ந்த அய்யாசாமி (வயது 70). இவருக்கு அதே பகுதியில் நிலம் உள்ளது.
இந்த நிலத்திற்கான பட்டாவை மாற்ற மனு கொடுத்தும், மாற்றம் செய்யாமல் பல ஆண்டுகளாக அலைகழித்து வருகின்றனர். இது தொடர்பாக 67 முறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் 67 முறை மனு அளித்ததற்கான ஒப்புகை சீட்டுகளை கட்டி அதனை தலையில் சுமந்து கலெக்டரிடம் மனு கொடுக்க வந்ததாக அவர் கூறினார்.
- ஏரி நீரில் நச்சுக்கள் கலந்துள்ளதாக சென்னை பல்கலைக்கழகம் மற்றும் பிரசிடென்சி கல்லூரி ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
- ஒரு லிட்டர் குடிநீரில் 1 மைக்ரோ கிராமுக்கு மேல் நச்சுக்கள் இருக்க கூடாதென உலக சுகாதார மைய வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ளது.
சேத்தியாத்தோப்பு:
கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி சென்னையின் முக்கிய நீராதாரமாக விளங்குகிறது. இந்த ஏரி கடந்த 10-ம் நூற்றாண்டில் சோழர்களால் உருவாக்கப்பட்டது. இங்கிருந்து குழாய்கள் மூலம் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த ஏரி நீரில் நச்சுக்கள் கலந்துள்ளதாக சென்னை பல்கலைக்கழகம் மற்றும் பிரசிடென்சி கல்லூரி ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து 2019-ம் ஆண்டு மார்ச் வரை 16 கி.மீ. பரப்பில் உள்ள வீராணம் ஏரியின் 6 இடங்களில் இருந்து ஏரி நீர் எடுக்கப்பட்டது. இதனை ஆய்வுக்கு உட்படுத்தியபோது வீராணம் ஏரி நீரில் 10 சயனோ பாக்டீரியாக்கள் உள்ளதால் இவைகள் மூலமாக இந்த நச்சுக்கள் உருவானது ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது.
ஒரு லிட்டர் குடிநீரில் 1 மைக்ரோ கிராமுக்கு மேல் நச்சுக்கள் இருக்க கூடாதென உலக சுகாதார மைய வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ளது. ஆனால், வீராணம் ஏரியில் ஒரு லிட்டர் நீரில் 17.72 மைக்ரோ கிராம் முதல் 19.38 கிராம் வரை நச்சுகள் உள்ளது கண்டறியப்பட்டது. இந்த நச்சுக்கள் மனித உடலில் உள்ள கல்லீரலை பாதிப்படைய செய்வதோடு, தோல் வியாதிகளும் வருமென சென்னை பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
மழைக்காலங்களில் விளைநிலங்களில் தேங்கும் நீர் வடிவாய்க்கால்கள் மூலம் வீராணம் ஏரிக்குள் வருகிறது. இந்த நிலங்களின் விளைச்சலுக்காக பயன்படுத்தப்படும் உரங்களினால், ஏரிக்கு வரும் நீரின் மூலமாக இந்த நச்சுக்கள் வந்திருக்கும் என்று சென்னை பிரசிடென்சி கல்லூரி தாவரவியல் ஆராய்ச்சியாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், இந்நீரில் உள்ள அமினோ அமிலம் மூலமாக புற்றுநோய் வருவதற்கான அபாயமும் உள்ளதாக அவரது அறிக்கையில் கூறியுள்ளார்.
கடந்த 2-ம் உலகப்போரின் போது மேற்கண்ட நச்சுக்களை எதிரி நாடுகளில் உள்ள நீர்நிலைகளில் கலந்து அந்த மக்களை ஹிட்லர் கொன்று குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
- அறுவடைக்கு தயாராக இருந்த பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது.
- ஏற்கனவே வெட்டி எடுக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ள நிலக்கரி மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
சிதம்பரம்:
சிதம்பரத்தில் 22 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது.
கடலூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. கடலூர், நெல்லிக்குப்பம், காட்டு மன்னார் கோவில், சேத்தியா தோப்பு, புவனகிரி, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடலூர் மாவட்டத்தில் அதிக பட்சமாக சிதம்பரத்தில் 22 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது.
புவனகிரி, சேத்தியா தோப்பு, காட்டு மன்னர் கோவில் பகுதிகளில் 14 சென்டி மீட்டருக்கு மேல் மழை பெய்துள்ளது.
நெய்வேலி என்.எல்.சி. நிறுவன சுரங்கங்களில் மழை காரணமாக தண்ணீர் தேங்கி நிற்பதால் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் மின் உற்பத்தியில் பாதிப்பு இல்லை. ஏற்கனவே வெட்டி எடுக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ள நிலக்கரி மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
பண்ருட்டி, தொரப்பாடி, புதுப்பேட்டை காடாம் புலியூர், அண்ணாகிராமம், முத்தாண்டிக்குப்பம், கண்டரக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று (இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
பண்ருட்டியில் இன்று காலை 6 மணி வரை 60 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
கடலூர் மாவட்டத்தில் இன்று 2-வது நாளாக மழை பெய்து வருகிறது.
- 11 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு எழுத்துத்தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் நிறைவடைந்தது.
- அண்ணா விளையாட்டு மைதானத்தில் பொதுமக்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் நடைபயிற்சி மேற்கொள்பவர்களுக்கு வரும் 13-ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடலூர்:
அக்னிபத் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்திற்கு 2024-ம் ஆண்டிற்கான ஆட்கள் சேர்ப்பு முகாம் கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் இன்று முதல் தொடங்கி 13-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதற்காக, சென்னை, கடலூர், விழுப்புரம், வேலுார் மற்றும் புதுச்சேரி மாநிலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு எழுத்துத்தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, கடலுார் அண்ணா விளையாட்டு மைதானத்தில் உடற்தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு இன்று தொடங்கியது. ஆள்சேர்ப்பு முகாமையொட்டி, அண்ணா விளையாட்டு மைதானத்தில் பொதுமக்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் நடைபயிற்சி மேற்கொள்பவர்களுக்கு வரும் 13-ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கிய முகாமில் பங்கேற்றவர்களுக்கு, தேர்வு நுழைவுச்சீட்டு, கல்விச் சான்றிதழ்கள், காவல்துறை நடத்தை சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் உள்பட 18 வகையான சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு உடல் தகுதி திறன் பரிசோதிக்கப்பட்டது. அப்போது நடந்த ஓட்டப்பந்தயத்தில் இளைஞர்கள் ஓடிக் கொண்டிருந்த போது, 2 பேருக்கு திடீரென்று காலில் அடிபட்டு காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து 2 பேரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் திருவண்ணாமலை மாவட்டம் நரியம்பாடி சேர்ந்தவர் மோகன் (வயது 20), வீராணங்கள் சங்கம் சேர்ந்த மோகன் குமார் (19) என தெரியவந்தது . தொடர்ந்து இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- போக்குவரத்து துறை என்பது மக்களுக்கு சேவையாற்றும் துறையாக செயல்பட்டு வருகின்றது.
- பொங்கல் பண்டிகை முன்னிட்டு சிறப்பு பேருந்தில் பொதுமக்கள் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் செல்லலாம்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் ஆவினங்குடியில் உள்ள வெள்ளாற்றில் மணல் திருடப்படுவதை கண்டித்து கடந்த 2015-ம் ஆண்டு அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவசங்கர் எம்.எல்.ஏ. தலைமையில் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவசங்கர் உள்ளிட்ட 37 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு கடலூர் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. இந்த நிலையில் கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற சிவசங்கர் எம்.எல்.ஏ. போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
கடலூர் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற இந்த வழக்கில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் உள்பட 33 பேர் நேரில் ஆஜரானார்கள். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேர் இறந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. கோர்ட்டில் ஆஜரானவர்களுக்கு குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டது.
பின்னர் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நிருபர்களிடம் பேட்டி அளித்ததாவது:-
அ.தி.மு.க.ஆட்சி காலத்தில் குன்னம் தொகுதியில் சுடுகாடு பகுதியில் அத்துமீறி மணல் அள்ளியதால் அனைத்து கட்சி சார்பிலும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பொய் வழக்கு போடப்பட்டு உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் எதிர்கொள்ளப்படும்.
போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக கடந்த ஒப்பந்த பேச்சுவார்த்தையில் முழுமையாக நிறைவேற்றி உள்ளோம். இதில் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் கோரிக்கை மட்டும் நிலுவையில் உள்ளது. தற்போது நிதி நிலைமை அனைவருக்கும் தெரியும். மேலும் சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் வெள்ள சேத பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த நிதி நிலைமையிலும் முதலமைச்சர் நிவாரணம் வழங்கி வருகிறார்.
ஆனால் மத்திய அரசு நம்மிடம் இருந்து நிதியை வசூல் செய்து வரும் நிலையில் மீண்டும் நிதியை சரியான முறையில் தருவதில்லை. ஆனால் பல்வேறு வேறுபாடுகள் இருந்து வரும் நிலையில் முதலமைச்சர் சிறப்பான திட்டங்களை தமிழக மக்களுக்கு நிறைவேற்றி வருகிறார்.
போக்குவரத்து துறை முதலமைச்சர் வழங்கும் நிதியால் தான் போக்குவரத்து துறை சிறப்பாக செயல்படுகிறது. இது மட்டுமின்றி மகளிர் கட்டணம் இல்லா பயணம், மாணவர்களின் கட்டணமில்லா பயணம், டீசல் மானியம் உள்ளிட்ட பல்வேறு திட்டத்திற்கு முதலமைச்சர் நிதி வழங்கி வருவதால் போக்குவரத்து துறை சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. மேலும் மாதம் முதல் தேதியில் அனைவருக்கும் சம்பளம் வழங்கப்பட்டு வருகின்றது. ஆனால் கேரளா உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் எத்தனை மாதத்திற்கு ஒருமுறை சம்பளம் வழங்குகிறார்கள் என்று கேட்டுப்பாருங்கள். அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சீரழிந்து வந்த துறையை முதலமைச்சர் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.
மேலும் போக்குவரத்து துறை என்பது மக்களுக்கு சேவையாற்றும் துறையாக செயல்பட்டு வருகின்றது. மேலும் டீசல் விலை உயர்ந்த நிலையிலும் ஏழை மக்கள் பாதிப்படையாத வகையில் கட்டணம் உயர்த்தவில்லை. பொங்கல் நேரத்தில் பொதுமக்களுக்கு இடையூறு தரும் வகையில் போராட்டம் நடத்தக்கூடாது என கேட்டுக்கொள்கிறோம். பொங்கலுக்கு பிறகு நான் போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்துவேன் என அறிவிப்பு தெரிவித்த நிலையில் இந்த போராட்டம் அறிவித்துள்ளனர்.
பொங்கலுக்கு பிறகு நாங்கள் பேச தயாராக உள்ளோம். அவர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தாலும் நாங்கள் தயாராக உள்ளோம். கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் பொங்கலுக்குப் பிறகு முழுமையாக அனைத்து பஸ்கள் இயக்கப்படும். போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 9 ஆண்டுகளாக அகவிலைப்படி வழங்கவில்லை. ஆனால் தற்போது போராட்டம் நடத்தி வரும் அ.தி.மு.க. தொழிற்சங்கங்கள் தூங்கிக் கொண்டிருந்தார்களா? என தெரியவில்லை.
மேலும் அ.தி.மு.க. ஆட்சியில் கேட்கப்படாத அகவிலைப்படியை தி.மு.க. ஆட்சியில் சேர்த்து வழங்க வேண்டும் என கூறுவது அரசியல் நோக்கமாகும். பொங்கல் பண்டிகை முன்னிட்டு சிறப்பு பேருந்தில் பொதுமக்கள் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் செல்லலாம். மேலும் தற்போது அறிவித்துள்ள போராட்டத்தில் குறைவான நபர்கள் தான் செல்வார்கள். ஆகையால் எந்த பிரச்சனையும் வராது. போக்குவரத்து தடை ஆகாது.
இவ்வாறு அவர் கூறினார்.






