search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கடலூர் தொகுதியை ஒதுக்க வேண்டும் - முதலமைச்சரிடம் வேல்முருகன் வலியுறுத்தல்
    X

    தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. கடலூர் கோர்ட்டில் ஆஜராக வந்த காட்சி.

    கடலூர் தொகுதியை ஒதுக்க வேண்டும் - முதலமைச்சரிடம் வேல்முருகன் வலியுறுத்தல்

    • முதலமைச்சர் வெளிநாடு பயணம் முடிந்து தமிழகத்திற்கு வந்த பிறகு எங்களுக்கான பதில் கிடைக்கும் என நம்புகிறோம்.
    • தேர்தல் தொடர்பாக எந்த முடிவு எடுக்க வேண்டுமானாலும் பொதுக்குழு மற்றும் முக்கிய நிர்வாகிகளை கலந்தாலோசித்து முடிவுகள் வெளியிடப்படும்.

    கடலூர்:

    கடலூர் நீதிமன்றத்தில் முத்தாண்டிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக இன்று காலை தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. நேரில் ஆஜரானார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியிட்ட பிறகு கூட்டணி கட்சி தலைமையுடன் சேர்ந்து வேட்பாளர்கள் வெற்றி பெற பாடுபடுவோம். கடலூர் நாடாளுமன்ற தொகுதியை தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

    முதலமைச்சர் வெளிநாடு பயணம் முடிந்து தமிழகத்திற்கு வந்த பிறகு எங்களுக்கான பதில் கிடைக்கும் என நம்புகிறோம். மேலும் சட்டமன்றத்தில் எங்கள் கட்சியின் குரலாக எனது குரல் ஒலித்து வரும் நிலையில், பாராளுமன்றத்திலும் எங்கள் கட்சி குரல் ஒளிரட்டும் என்ற அடிப்படையில் வாய்ப்பு கேட்டுள்ளோம். அது கிடைக்கும் என்று நம்புகிறோம்.

    தற்போது தி.மு.க. சார்பில் கூட்டணி கட்சியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அந்த குழுவில் கலந்து பேசுவோம். இந்தியா கூட்டணியில் இருந்து தற்போது நிதீஷ் குமார் வெளியேறி உள்ளார். ஆனால் இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு வரும் வரை அரசியலில் எது வேண்டுமானால் நடக்கலாம்.

    பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவின் பன்முகத் தன்மையாக உள்ள சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றுக்கு ஆபத்து ஏற்படும் என தொடர்ந்து வலுவான கருத்து வந்து கொண்டிருக்கிறது.

    மேலும் சர்வாதிகாரம் நோக்கி பா.ஜ.க. இந்தியாவை அழைத்து செல்கிறது என குற்றச்சாட்டு உள்ளது. பா.ஜ.க. அரசு பல்வேறு நடவடிக்கையை சர்வாதிகாரம் மூலம் எடுத்து வருகிறது.

    பன்முக தன்மை கொண்ட இந்தியாவை ஒரு மதத்தின் அடையாளத்தின் கீழும், ஒற்றை மொழியான இந்தி ஆட்சியின் கீழும் வரவேண்டும் என பா.ஜ.க. அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக வருமானவரித்துறை அதிகாரிக்கு இந்தி தெரியாது என சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட காரணத்தினால் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

    மேலும் விமான நிலையத்தில் கனிமொழி எம்.பி.க்கு இந்தி தெரியாது என கூறியதால் வட மாநிலத்தினர்கள் விமர்சித்து உள்ளனர். தமிழகத்தில் மத்திய அரசு அலுவலகத்தில் தமிழ் அலுவல் மொழி இல்லை. இதையெல்லாம் பார்க்கும்போது ஜனநாயகத்திற்கு பாதிப்பு ஏற்படக்கூடிய நிலை உள்ளது. வேறு எந்த கட்சியுடன் கூட்டணி பேசவில்லை. தேர்தல் தொடர்பாக எந்த முடிவு எடுக்க வேண்டுமானாலும் பொதுக்குழு மற்றும் முக்கிய நிர்வாகிகளை கலந்தாலோசித்து முடிவுகள் வெளியிடப்படும். ஆனால் தற்போது வரை தி.மு.க.வின் தலைமையின் கீழ் வெற்றி கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளது.

    இவ்வாறு கூறினர்.

    அப்போது அமைப்புக்குழு கண்ணன், ஆனந்த், மாவட்ட செயலாளர் லெனின், கவுன்சிலர் அருள் பாபு மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×