என் மலர்tooltip icon

    கடலூர்

    • மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கையை ஆதரித்தால் மட்டுமே தமிழக அரசுக்கு வழங்கக் கூடிய 2 ஆயிரம் கோடி வழங்கப்படும்.
    • சிறுமி நிதி வழங்கிய தொடர்பாக வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் வேப்பூரில் பெற்றோர்களை கொண்டாடுவோம் என்ற விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சீர்வரிசை கொண்டு வந்து வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

    அப்போது மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கையை ஆதரித்தால் மட்டுமே தமிழக அரசுக்கு வழங்கக் கூடிய 2 ஆயிரம் கோடி வழங்கப்படும். இதன் மூலம் பல லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படும் நிலையில், தமிழக அரசு நிதி மூலம் யாருக்கும் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கப்படும் என தெரிவித்தார்.

    இந்த நிலையில் கடலூரை சேர்ந்த எல்.கே.ஜி படித்து வரும் நன்முகை என்ற சிறுமி தான் சேர்த்து வைத்திருந்த பணத்திலிருந்து ரூபாய் 10 ஆயிரத்தை தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பு திட்டத்திற்காக நிதி வழங்கி உள்ளார்.

    மேலும் சிறுமி நிதி வழங்கிய தொடர்பாக வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதற்கு ஆதரவாக கடலூரை சேர்ந்த எல்.கே.ஜி படிக்கும் சிறுமி 10 ஆயிரம் ரூபாய் வழங்கிய சம்பவம் நெகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • பழனிமுத்து மற்றும் அவரின் தாய் தெய்வ நாயகி வீட்டின் முன் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருத்தாசலம்:

    விருத்தாசலம் நகரம் அண்ணா நகர் பகுதியில் வசிக்கும் ராஜேந்திரன் மகன்கள் செல்வகுமார் (வயது 33) மற்றும் சேகர்(30) இவர்களுக்கு இடையே நீண்ட நாட்களாக குடும்ப பிரச்சனை இருந்து வருகிறது. இந்நிலையில், நேற்று சகோதரர்கள் 2 பேருக்கும் மீண்டும் குடும்ப பிரச்சனை ஏற்பட்டு சண்டை நடந்துள்ளது.

    இதனைக் கண்ட அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் பழனிமுத்து (38) என்பவர் சண்டையை விலக்க முற்பட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சகோதரர்கள் பழனிமுத்துவிடம் எங்களது குடும்ப சண்டையில் தலையிட நீ யார்? என்று கேட்டு அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    பின்னர் இருவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்நிலையில், இன்று அதிகாலை 1 மணி அளவில் சண்டையை விலக்க சென்ற முத்துவின் வீட்டின் முற்பகுதியில் மர்ம நபர்கள் அதிகாலை மண்ணெண்ணை நிரப்பிய 2 பாட்டில்களில் தீ வைத்து பழனிமுத்துவின் வீட்டின் முன்பு வீசியுள்ளனர்.

    இதில், வீட்டின் முன்புறம் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்தது. இந்நிலையில் வெடி சத்தம் கேட்டு வீட்டினுள் உறங்கிக் கொண்டிருந்த வீட்டின் உள் பகுதியில் படுத்திருந்த பழனிமுத்து மற்றும் அவரின் தாய் தெய்வ நாயகி வீட்டின் முன் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    மேலும், அவர்கள் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கொழுந்து விட்டு எறிந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். பின்னர் சம்பவம் குறித்து விருத்தாசலம் அனைத்துமகளிர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, சப்-இன்ஸ்பெ க்டர் சிவகாமி மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மண்ணெண்ணை குண்டு வீசிய இடத்தை பார்வையிட்டு வழக்குப்பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தென்பெண்ணை ஆற்று படுகையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அவ்வப்போது கள ஆய்வு மேற்கொண்டு பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை உலகுக்கு வெளிப்படுத்தி வருகிறார்கள்.
    • ஈரோடு அருகே உள்ள கொடுமணல் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட குறியீடுகளோடு ஒத்துள்ளதை காண முடிகிறது.

    புதுப்பேட்டை:

    பண்ருட்டி அருகே உள்ள தென்பெண்ணை ஆற்று படுகையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அவ்வப்போது கள ஆய்வு மேற்கொண்டு பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை உலகுக்கு வெளிப்படுத்தி வருகிறார்கள்.

    அந்த வகையில் ராஜராஜ சோழன் காலத்து செப்புநாணயம், 1,200 ஆண்டுகள் பழமையான பல்லவர் காலத்து விநாயகர் சிற்பம் மற்றும் அகல் விளக்குகள், கீரல் ஓடுகள், சுடுமண் புகை பிடிப்பான் உள்ளிட்ட பொருட்கள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தற்போது நடத்திய கள ஆய்வில் சுடுமண் குடுவை, குறியீடு ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

    பண்ருட்டி அருகே எனதிரிமங்கலம் தென்பெண்ணை ஆற்றுப்பகுதியில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல், விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரி வரலாற்று துறை 2-ம் ஆண்டு மாணவர் ராகுல், வரலாற்று ஆர்வலர் பிரதாப் ஆகியோர் மேற்புற கள ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வின்போது பழங்கால மக்கள் பயன்படுத்திய குறியீடு பொறித்த சிவப்பு நிற சுடுமண் குடுவை மற்றும் சிவப்பு, வெள்ளை நிற குறியீடு ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன.

    இதில் கண்டெடுக்கப்பட்ட குறியீடு ஓடுகள், ஏற்கனவே ஈரோடு அருகே உள்ள கொடுமணல் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட குறியீடுகளோடு ஒத்துள்ளதை காண முடிகிறது.

    அதாவது சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாக இந்த குறியீட்டு காலத்தை கணிக்க முடிகிறது என்று கூறிய தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல், தொடர்ந்து எனதிரிமங்கலம் தென்பெண்ணை ஆற்றுப்பகுதியில் பழங்கால மக்கள் வாழ்ந்ததற்கான தொல்லியல் தடயங்கள் கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

    • வடக்கு 4 முனை சந்திப்பு அருகே சேலத்திலிருந்து வந்த லாரி பேருந்து மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது.
    • ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, பேருந்து மீது மோதி சென்டர்மீடியனில் ஏறி நின்றது.

    வடலூர்:

    கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியில் உள்ள திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலுக்கு செல்வதற்காக சுமார் 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி கொண்டு கர்நாடகா அரசு சொகுசு பஸ் நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் பெங்களூருவில் இருந்து புறப்பட்டு வந்தது.

    இந்த பஸ் கடலூர் மாவட்டம் வடலூர் 4 முனை சந்திப்புக்கு அதிகாலை 4 மணி அளவில் வந்தபோது சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்த லாரியும் திடீரென்று எதிர்பாராத மோதி விபத்து ஏற்பட்டது. இதில் லாரி அருகில் இருந்த சென்டர் மீடியனில் மோதி நின்றது.

    இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த பெங்களூருவை சேர்ந்த பெக்கலாட் வில்சன் சாமு மனைவி மேரி (44), சக்ரா மனைவி வித்யா (55), சுப்ரமணிய ராவ் மனைவி ஜெயமாலா( 50), கோலார் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (50), கிருஷ்ணமூர்த்தி (52) உட்பட 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் வடலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் விரைந்து வந்து விபத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்த பயணிகளை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு 2 பேரை மேல் சிகிச்சைக்காக கடலூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சென்டர்மீடியனில் மோதி நின்று கொண்டிருந்த லாரியை ஜே.சி.பி.மற்றும் கிரேன் எந்திரம் மூலம் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி வடலூர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் தலைமையிலான போலீசார் அப்புறப்படுத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தமிழக அரசு செயல்படுத்திவரும் பல்வேறு திட்டங்கள் மூலமாக பள்ளிக் கல்வி செழுமை பெற்று வருகிறது.
    • இந்தியை திணிக்கிறார்கள் என்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே நாம் தேசியக் கல்வி கொள்கையை எதிர்க்கவில்லை.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக கடலூர் மாவட்டத்துக்கு சென்றார். நேற்று மாலை கடலூரில் நடந்த விழாவில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    பின்னர் நெய்வேலியில் தங்கி ஓய்வு எடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை வேப்பூர் அருகே நடந்த பெற்றோர்களை கொண்டாடுவோம் மாநாட்டில் கலந்து கொண்டார்.

     

    விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி, இந்த நாடே இருக்குது தம்பி, சின்னஞ்சிறு கைகளை நம்பி, ஒரு சரித்திரம் இருக்குது தம்பி. அன்னையிடம் அன்பை வாங்கலாம், தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம், இரண்டும் இருந்தால் பேரை வாங்கலாம். பேரை வாங்கினால் ஊரை வாங்கலாம். நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி என்ற கவிஞர் வாலியின் கவிதை வரிகளுக்கு இலக்கணமாக ஒரு எடுத்துக்காட்டாக அமைந்திருப்பது தான் இந்த மாநாடு. இந்த பெற்றோர், ஆசிரியர் கழக மாநாடு.

    முதலில் நான் இந்த நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்ததற்கு வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். காரணம், நான் நெய்வேலியில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்பட்டேன். நியாயமாக பார்த்தால் 1 மணி நேரத்துக்குள் வந்து சேர்ந்திருக்க முடியும். ஆனால் வழியெங்கும் மக்கள் கடல். அதுதான் காரணம்.

    ஆசிரியர்கள் இங்கு இருக்கிறீர்கள். பள்ளி மாணவர்கள் போல் காரணம் சொல்கிறேன் என்று தயவு செய்து நினைத்து விடாதீர்கள். காலை 8 மணிக்கு கிளம்பினேன். வருகிற வழி முழுவதும் மக்கள் சந்திப்பு. இதுதான் உண்மையான காரணம்.

    தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் பெற்றோரை கொண்டாடுவோம் என்ற மாநாடு நடைபெறுகிறது.

    வருங்கால நம்பிக்கை நட்சத்திரங்களான மாணவ கண்மணிகளை வார்ப்பித்தும் வளர்த்தெடுத்தும் வருகிற பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் வணங்குகிறேன், வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன்.

    அன்னை, தந்தை, ஆசிரியர் கூடியிருக்கும் மாநாடு இது. நீங்கள் மொத்தமாக கூடியிருப்பது இதுவரை தமிழ்நாடு பார்க்காத காட்சி. ஒட்டுமொத்த நாடும் பார்த்து அதிசயிக்கிற காட்சி. இதுதான் தமிழ்நாடு. இதுதான் நமது மாநில கல்வித் திட்டத்தின் சிறப்பு. தமிழ் நாடு அரசு செய்வது எல்லாமே சாதனைகள்தான்.

    அதில் கல்வித்துறையில் உலக தரத்திலான சாதனைகளை செய்து கொண்டி ருக்கிறோம். அந்த வரிசையில் இதுவும் சாதனை மாநாடாக அமைந்திருக்கிறது. பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் என 3 தரப்புக்களுக்குமான கருத்துக்களை வழங்குகிற மாநாடு இது.

    இதில் நான் ஆசிரியருமில்லை, மாணவருமில்லை, பெற்றோரே நான் உங்களில் ஒருவன். உங்கள் உள்ளத்தின் உணர்வுகளை அறிந்தவன். அதற்கேற்ப கடமைகளை செய்கிறவன்.

    திராவிட மாடல் அரசை பொருத்தவரைக்கும் பள்ளிகளை உருவாக்கினோம், மாணவர்களை சேர்த்தோம், படிக்க வைத்தோம். மதிப்பெண் வாங்க வைத்தோம், வெளியில் அனுப்பினோம். இத்தோடு பள்ளிக் கல்வித்துறையின் கடமை முடிந்து விட்டதாக யாரும் நினைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொரு மாணவ-மாணவியரும் தமிழ்நாட்டின் சொத்து என்கிற அந்த நினைப்புடன் அவர்களை வளர்த்துக் கொண்டு வருகிறோம்.

    பெற்றோருக்கு பிள்ளைகள் மீது எவ்வளவு அக்கறை இருக்கிறதோ அதே அளவு அக்கறை இந்த அரசுக்கும் இருக்கிறது என்று நிரூபிக்கும் வகையில் இந்த மாநாடு நடந்து கொண்டிருக்கிறது.

    தமிழக அரசு செயல்படுத்திவரும் பல்வேறு திட்டங்கள் மூலமாக பள்ளிக் கல்வி செழுமை பெற்று வருகிறது. இதை சொல்வது ஒன்றிய அரசின் அறிக்கைகள். ஒன்றிய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில் தமிழ்நாட்டில் கல்வி தரத்தை மனதார பாராட்டி இருக்கிறார்கள்.

    ஒரு பக்கம் நம்மை பாராட்டினாலும், இன்னொரு பக்கம் தமிழ் நாட்டுக்கு தர வேண்டிய நிதியை தர மறுக்கிறார்கள். ஒன்றிய அரசு 2151 கோடி ரூபாயை தமிழ்நாட்டுக்கு தராமல் நிறுத்தி வைத்து உள்ளது. இது 43 லட்சம் பள்ளி குழந்தைகளின் நலனுக்காக செலவு செய்ய வேண்டிய தொகை.

    தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்று தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய நிதியை தர மறுக்கிறார்கள். தேசிய கல்விக் கொள்கை என்பது சமூக நீதிக்கு வேட்டு வைக்கிற கொள்கை. தமிழுக்கு வேட்டு வைக்கிற கொள்கை.

    தமிழ் மக்களுக்கு வேட்டு வைக்கிற கொள்கை. நமது குழந்தைகளின் எதிர்காலத்துக்கு இது ஆபத்து. எந்த மொழிக்கும் தனிப்பட்ட முறையில் நாம் எதிரிகள் இல்லை. காரணம் எந்த மொழியை திணிக்க நினைத்தாலும் அந்த திணிப்பை நாங்கள் எப்போதும் எதிர்ப்போம். அதில் உறுதியாக இருப்போம்.

    இந்தியை திணிக்கிறார்கள் என்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே நாம் தேசியக் கல்வி கொள்கையை எதிர்க்கவில்லை. மாணவர்களை பள்ளிக்கூடங்களில் இருந்து விரட்டுகிற கொள்கை அது. பள்ளிக்கூடத்தை விட்டு துரத்துகிற கொள்கை அது. அதை பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் உணர்த்தி இருக்கிறோம். தொடர்ந்து உணர்த்துவோம். ஒன்றிய அரசின் கொள்கையால் என்னென்ன பாதிப்பு வரும் என்பதில் சிலவற்றை மட்டும் சொல்கிறேன்.

    ஒன்றிய கல்வி அமைச்சர் கேட்கிறார். எல்லா மாநிலங்களும் மும்மொழிக்கொள்கையையும், தேசிய கல்விக் கொள்கையையும் ஏற்றுக்கொண்ட நிலையில் தமிழகத்தில் மட்டும் ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை என்று கேட்கிறார்.

    அவருக்கு நான் சொல்கிறேன். இது தமிழ்நாடு. எங்கள் உயிரை விட மேலாக தமிழை மதிக்கிறவர்கள் நாங்கள். எங்கள் மொழியை அழிக்க எந்த ஆதிக்க மொழி நினைத்தாலும் அதை அனுமதிக்க மாட்டோம். தமிழ் மொழியை காக்கும் அரணாக தி.மு.க. திகழ்ந்து வருகிறது. இந்தியாவில் கடந்த 75 ஆண்டுகளில் ஏறத்தாழ 52 மொழிகள் அழிவின் விளிம்பிற்கு சென்று விட்டது. இந்தி பெல்ட் என்கிற மாநிலங்களில் மட்டும் கிட்டத்தட்ட 25 மொழிகள் அழிந்து விட்டன. இந்தி ஆதிக்கத்திற்கு பலியான மாநிலங்கள் இப்போது தான் விழிப்புணர்வு அடைந்து வருகிறது. இந்தி ஆதிக்கத்திற்கு பலியான மாநிலங்கள் தற்போது விழிப்புணர்வு அடைய தமிழ்நாடு தான் காரணம்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    • திருப்பெயரில் 'பெற்றோர்களைக் கொண்டாடுவோம்' மாநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
    • பள்ளி மாணவன் போல் காரணம் கூறுவதாக நினைக்க வேண்டாம்.

    கடலூர்:

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணமாக கடலூருக்கு நேற்று மாலை வருகை தந்தார். பின்னர் அவர், கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடந்த அரசு விழாவில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மேலும் முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

    இந்த நிலையில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே திருப்பெயரில் 'பெற்றோர்களைக் கொண்டாடுவோம்' மாநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

    'பெற்றோரை கொண்டாடுவோம்' மாநாட்டில் 'அப்பா' என்ற செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் செயலி மற்றும் விழா மலரையும் அவர் வெளியிட்டார். இதைத்தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

    * விழாவிற்கு தாமதமாக வந்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

    * பள்ளி மாணவன் போல் காரணம் கூறுவதாக நினைக்க வேண்டாம். வருகின்ற வழிநெடுக காத்திருந்த மக்களை சந்தித்து வந்ததால் தாமதம் ஆனது.

    * மேடையில் பேசாமல் நின்ற மாணவச் செல்வங்களின் முகத்தை பார்த்துக்கொண்டே இருக்க ஆசைப்படுகிறேன். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களை வணங்குகிறேன் என்று கூறினார்.

    • தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக நேற்று மாலை கடலூர் வந்தார்.
    • ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் முதலமைச்சருடன் கைகுலுக்கி மகிழ்ந்தனர்.

    நெய்வேலி:

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெய்வேலி நகர பகுதியில் 2 கி.மீ., வரை நடந்து சென்று பொதுமக்களுடன் கைகுலுக்கினார். குழந்தைகள், மாணவ, மாணவிகள் என பலரும் முதலமைச்சருடன் செல்பி எடுத்துக் கொண்டாடினர்.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக நேற்று மாலை கடலூர் வந்தார். கடலூரில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் நெய்வேலியில் நடைபெற்ற விழாவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாற்று கட்சியில் இருந்து விலகி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.

    இதனை தொடர்ந்து நெய்வேலி என்.எல்.சி. விருந்தினர் இல்லத்தில் தங்கிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று 9 மணி அளவில் வேப்பூர் திருப்பெயரில் நடைபெறும் பெற்றோர்களை கொண்டாடுவோம் மாநாட்டிற்கு புறப்பட்டு சென்றார். அப்பொழுது நேரு சிலை அருகில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மாற்றத்திறனாளிகள் தமிழக முதலமைச்சருக்கு வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் அவர்களிடம் இருந்த மனுக்களை முதலமைச்சர் பெற்றுக் கொண்டார். விருந்தினர் மாளிகையில் இருந்து காரில் சென்ற மு.க.ஸ்டாலினுக்கு நேரு சிலை, பெரியார் சதுக்கம், எம்.ஜி.ஆர். சிலை, மத்திய பஸ் நிலையம், 8 ரோடு சந்திப்பு ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் மாணவ-மாணவிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கையில் பதாகைகள் ஏந்தி பலூன்கள் வைத்துக்கொண்டு வரவேற்பு அளித்தனர்.

    இதனை தொடர்ந்து சாலையில் செல்லும்போது பொதுமக்களை பார்த்ததும் உடனடியாக காரில் இருந்து இறங்கி சாலையில் நடந்து சென்றார். அப்போது வழி நெடுகிலும் நின்றிருந்த பெண்கள், குழந்தைகள், தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். சாலையில் 2 1/2 கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று வழிநெடுகிலும் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்களை முதலமைச்சர் சந்தித்தார். ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் முதலமைச்சருடன் கைகுலுக்கி மகிழ்ந்தனர். அவர்களை பார்த்து முதல்வர் உற்சாகமாக கையசைத்தார்.

    இதனால் தொண்டர்கள் மக்களின் முதல்வர் என ஆரவாரம் எழுப்பினர். முதல்வர் பாதுகாப்பு பணிக்காசு போலீசார் கயிறு கட்டி கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தினர். நடந்தே சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழி முழுவதும் பொதுமக்கள் திரண்டு நின்று அளித்த வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.

    • ரூ.385 கோடி மதிப்பீட்டில் 178 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
    • மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    கடலூர் மஞ்சக்குப்பத்தில் ரூ.704.89 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    மேலும், ரூ.385 கோடி மதிப்பீட்டில் 178 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

    தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 44,690 பயனாளிகளுக்கு ரூ.387 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கினார்.

    பிறகு, உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடலூர் மாவட்டத்திற்கு திமுக அரசு கொண்டு வந்த திட்டங்களை சுட்டிக் காட்டினார்.

    மேலும், அவர் கூறியதாவது:-

    சிதம்பரத்தில் புதிய பேருந்து நிலையம், பிச்சாவரம் சுற்றுலா மேம்பாட்டு பணி நடைபெறுகிறது. சிதம்பரம் கூட்டுக் குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

    ரூ.130 கோடி செலவில் வெலிங்டன் ஏரி கரை மேம்படுத்தப்பட்டு வாய்க்கால்கள் புனரமைக்கப்படும். ரூ.50 கோடி மதிப்பீட்டில் மஞ்சக்குப்பம் மைதானம் பொது மக்கள் பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தப்படும்.

    பன்ருட்டி தொகுதியில் ரூ.15 கோடி செலவில் அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைக்கப்படும். புவனகிரி, சிதம்பரம் மக்களுக்கு பயன்தரும் வகையில் 2 வழிச்சாலை 4 வழிச்சாலையாக மாற்றப்படும்.

    திருவந்திபுரம் கோவில் பக்தர்களுக்காக ரூ.7 கோடி மதிப்பில் சாலை மேம்படுத்தப்படும். குறிஞ்சிப்பாடியில் ரூ.6.50 கோடி செலவில் புதிய வட்டாட்சியர் அலுவலக கட்டடம் கட்டப்படும்.

    கடலூரில் தென் பெண்ணை ஆற்றில் ரூ.57 கோடியில் வெள்ளத் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். கெடிலம் ஆற்றில் ரூ.36 கோடி செலவில் வெள்ளத்தடுப்பு மற்றும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். வீராணம் ஏரி ரூ.63.50 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

    மகளிர் உரிமைத் தொகையை அண்ணன் தரும் சீர் என பெண்கள் கூறுகின்றனர். முன்னோடி திட்டங்களால் நமது நாட்டிற்கே முன் மாதிரியான அரசாக திராவிட மாடல் அரசு திகழ்ந்து வருகிறது.

    மாநிலங்கள் வளர்ந்தால் அதன் மூலம் நாடு வளரும், ஆனால் மத்திய பாஜக அரசு தமிழக வளர்ச்சியை தடுக்கிறது.

    மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டிற்கான நிதி தர மறுப்பதுடன் நமது பிள்ளைகள் படிப்பதை தடுக்கிறது.

    புதிய தேசியக் கல்விக் கொள்கையின் மூலமாக தமிழ்நாட்டு மாணவர்கள் படிப்பதை மத்திய அரசு தடுக்கிறது. சமுகநீதியை சிதைப்பதற்கு தான் தேசியக்கல்வி கொள்கையை மத்திய பாஜக அரசு கொண்டு வருகிறது.

    முன்னோடி திட்டங்களால் நமது நாட்டிற்கே முன் மாதிரியான அரசாக திராவிட மாடல் அரசு திகழ்ந்து வருகிறது. மத்திய அரசின் எத்தனையோ தடைகளையும் சிக்கல்களையும் தாண்டி தமிழ்நாடு வளர்ந்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மாற்றுக்கட்சியினர் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைய உள்ளனர்.
    • பெற்றோரைக் கொண்டாடுவோம் என்ற மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்.

    கடலூர்:

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டங்கள் தோறும் சென்று அரசு விழாவில் பங்கேற்று பயனாளிகளுக்கு பல்வேறு திட்டங்களில் இருந்து நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார். மேலும் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தும் வருகிறார்.

    அந்த வகையில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை திறந்து வைக்கவும், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) கடலூருக்கு வருகை தருகிறார்.

    இதையொட்டி சென்னையில் இருந்து காலை 9.30 மணிக்கு காரில் புறப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதியம் 12.30 மணிக்கு புதுச்சேரிக்கு வருகிறார். அங்கு மதிய உணவு சாப்பிட்டு முடித்ததும், மாலை 4.30 மணிக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக கடலூர் புறப்படுகிறார். பின்னர் மாலை 5.15 மணி அளவில் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்று பல்வேறு துறைகளின் சார்பில் சுமார் 44,689 பயனாளிகளுக்கு ரூ.387 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.

    இந்த நிகழ்ச்சி முடிந்ததும் வடலூர் வழியாக நெய்வேலி புறப்பட்டு செல்கிறார். அங்கு மாற்றுக்கட்சியினர் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைய உள்ளனர்.

    இதையடுத்து நெய்வேலியில் உள்ள விருந்தினர் மாளிகையில் இரவில் தங்குகிறார். பின்னர் நாளை (சனிக்கிழமை) காலை 8.30 மணிக்கு நெய்வேலி விருந்தினர் மாளிகையில் இருந்து வேப்பூர் அருகே உள்ள திருப்பெயருக்கு புறப்பட்டு செல்கிறார். அங்கு காலை 9.30 மணிக்கு நடக்கும் மாநில அளவிலான பெற்றோரைக் கொண்டாடுவோம் என்ற மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். தொடர்ந்து காலை 10.30 மணிக்கு வேப்பூரில் இருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.

    முன்னதாக புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லைகளில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன் ஆகியோர் தலைமையில் தி.மு.க.வினர் சிறப்பான வரவேற்பு அளிக்க உள்ளனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி கடலூர் மாவட்டத்தில் வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.அஸ்ரா கார்க் மேற்பார்வையில் கடலூர், நெய்வேலி, வேப்பூர் பகுதியில் 2 ஆயிரம் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதனிடையே நேற்று மதியம் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. திஷா மித்தல் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் முதலமைச்சரின் வருகைக்காக செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கடலூர் மாவட்ட போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதுடன் பாதுகாப்பை பலப்படுத்தும்படி அறிவுறுத்தினார்.

    • ஏரியில் இருந்து சென்னைக்கு தினமும் 74 கன அடி குடிநீர் அனுப்பி வைக்கப்படுகிறது.
    • வீராணம் ஏரியின் நீர் மட்டம் குறைந்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    காட்டுமன்னார் கோவில்:

    கடலூர் மாவட்டத்தில் அதிக நீர் பிடிப்பு கொண்ட ஏரி வீராணம் ஏரியாகும்.

    இந்த ஏரி சேத்தியாதோப்பு பூதங்குடியில் தொடங்கி லால்பேட்டை வரை 14 கி.மீ. நீளத்துடன், 5 கிலோ மீட்டர் அகல பரப்பளவு கொண்டது. ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும். 1465 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்கி வைக்க முடியும்.

    ஏரியில் இருந்து சம்பா பருவத்தில் கீரப்பாளையம், காட்டுமன்னார் கோவில், குமராட்சி, புவனகிரி, சிதம்பரம், பரங்கிப்பேட்டை உள்ளிட்ட காவிரி கடைமடை டெல்டா பகுதிகள் பாசன வசதி பெறுகின்றன.

    தற்போது அறுவடை நடைபெற்று வருவதால் தண்ணீர் தேவை குறைந்துள்ளது. இதனால் ஏரியின் அனைத்து மதகுகளும் அடைக்கப்பட்டு தண்ணீர் தேக்கி வைத்து பராமரிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் ஏரியில் இருந்து சென்னைக்கு தினமும் 74 கன அடி குடிநீர் அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக வெயில் அதிகரித்துள்ளதால் ஏரியில் 1465 மில்லியன் கன அடியாக இருந்த தண்ணீர் தற்போது 1,011 மில்லியன் கன அடியாக குறைந்துள்ளது.

    ஏரியில் தண்ணீர் குறைந்து வருவதால் மார்ச் முதல் ஜூன் வரையிலான கோடையில் விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்குமா என விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினிலாரி நிற்காமல் ஆடுகளின் மீது மோதியது.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை.

    திட்டக்குடி:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ராமநத்தம் கொரக்கவாடி கிராம சாலையில் கொரக்கவாடி நோக்கி ராமநாதபுரம் மாவட்டம் அரியாங்குடியைச் சேர்ந்த முருகேசன் (45), இன்று காலை 5 மணி அளவில் செம்மறி ஆடுகளை ஓட்டிச் சென்றார். அப்போது பின்னால் மினி லாரி வந்தது.

    இதனை காட்டுக்கொட்டகை,கொரக்கவாடி கிராமத்தை சேர்ந்த டிரைவர் கார்த்திக் (28) ஓட்டி வந்தார். திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினிலாரி நிற்காமல் ஆடுகளின் மீது மோதியதில் 30 ஆடுகள் சம்பவ இடத்திலேயே இறந்தது.

    இது குறித்து ராமநத்தம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • கிராம காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் எம்.பி வந்தார்.
    • தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரம் போராடி லிப்டில் சிக்கியவர்களை மீட்டனர்.

    கடலூர்:

    கடலூர் தொகுதியின் காங்கிரஸ் எம்.பி.யான விஷ்ணு பிரசாத் வடலூரில் நடந்த கிராம காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்தார்.

    அங்கிருந்த விடுதி லிப்டில் அவரும், கட்சி மூத்த நிர்வாகிகளும் இரண்டாம் தளத்துக்கு சென்றனர். அப்போது லிப்ட் பாதி வழியில் பழுதாகி நின்றுவிட்டது. இதனால் விடுதி ஊழியர்களும், காங்கிரஸ் கட்சியினரும் அதிர்ச்சி அடைந்தனர்.

    விடுதி ஊழியர்கள் அவசர கால சாவியைப் பயன்படுத்தி லிப்டை திறக்க முயற்சித்தனர். அது பலனளிக்கவில்லை என்பதால் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி கதவை உடைத்து திறந்து லிப்டின் உள்ளே சிக்கியவர்களை மீட்டனர். விஷ்ணு பிரசாத் உள்பட காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    விசாரணையில் 3 பேர் மட்டும் செல்லக்கூடிய லிப்டில் 6 பேர் சென்றதே பழுதுக்கு காரணம் என தெரிய வந்தது.

    ×