என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கள்ளநோட்டு அச்சடிப்பு வழக்கு- வி.சி.க. பிரமுகரை பிடிக்க 3 தனிப்படை அமைப்பு
    X

    கைது செய்யப்பட்ட நவீன்ராஜ், கார்த்திகேயன்.

    கள்ளநோட்டு அச்சடிப்பு வழக்கு- வி.சி.க. பிரமுகரை பிடிக்க 3 தனிப்படை அமைப்பு

    • போலீசார் வருவதை அறிந்த செல்வம் மற்றும் ஒரு கும்பல் தப்பி ஓடியது.
    • முக்கிய குற்றவாளியான செல்வம் உள்பட 11 பேர் தலைமறைவாகி விட்டனர்.

    திட்டக்குடி:

    கள்ளநோட்டு அச்சடித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்த அதர் நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது39). இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட பொருளாளராக இருந்து வந்தார்.

    இவருக்கும் ஆவட்டி கிராமத்தை சேர்ந்த சங்கருக்கும் முன் விரோத வழக்கு ராமநத்தம் போலீஸ் நிலையத்தில் இருந்து வருகிறது.

    இது தொடர்பாக விசாரணை நடத்த நேற்று அதிகாலை 5.15 மணிக்கு செல்வம் வீட்டிற்கு ராமநத்தம் போலீசார் சென்றனர். அங்கு செல்வம் இல்லாததால் வயலில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றனர்.

    போலீசார் வருவதை அறிந்த செல்வம் மற்றும் ஒரு கும்பல் தப்பி ஓடியது. சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வீட்டை சோதனை செய்தனர்.

    அங்கு கள்ள நோட்டுகள் அச்சடிக்கும் எந்திரம், துப்பாக்கி, போலீஸ் சீருடை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதையடுத்து செல்வத்தின் வயலில் உள்ள வீட்டிற்கு வந்த ஒருவரையும், அதர்நத்தம் வீட்டிற்கு வந்த மற்றொருவரையும் போலீசார் பிடித்து விசாரித்தனர்.

    அவர்கள் திட்டக்குடி ஆலந்தூர் நவீன் ராஜா (29), அதர்நத்தம் கார்த்திகேயன் (28) என்பதும் இவர்ககள் இருவரும் 2 ஆண்டுகளாக செல்வத்திடம் கார் டிரைவராக வேலை செய்ததும் தெரிய வந்தது.

    அவர்களிடமிருந்து ரூ. 85 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 4 வாக்கி டாக்கி, 2 ஏர் கன், லேப்டாப், போலீஸ் சீருடை, ரிசர்வ் வங்கி முத்திரரை, கார், லாரிகள், ஜே.சி.பி.எந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் நவீன் ராஜா, காரத்திகேயன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான செல்வம் உள்பட 11 பேர் தலைமறைவாகி விட்டனர். கள்ள நோட்டு அச்சடிப்பு வழக்கில் செல்வம் தொடர்பில் இருந்ததால் அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட பொருளாளர் மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி பொருளாளர் செல்வத்துக்கு சென்னையிலும் ஒரு தனியார் கம்பெனி உள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கும் சோதனை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    கள்ள நோட்டு அச்சடித்த கும்பலை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×