என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • 30 ஆண்டுகள் தி.மு.க.விற்காகவும், 31 ஆண்டுகள் ம.தி.மு.க.விற்காகவும் உழைத்துள்ளேன்.
    • துரை வைகோவுக்கு வாக்கெடுப்பு நடத்திய பிறகே கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்டது.

    கோவை:

    கோவை சூலூரில் ம.தி.மு.க சார்பில், இந்தி ஏகாதிபத்தியம் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    இதில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-

    இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கோவை மாவட்டத்தின் பங்கு மிக முக்கியமானது. கல்லூரி காலத்திலேயே இந்தி எதிர்ப்புக்காக களம் கண்டு சிறை சென்றவன் நான்.

    30 ஆண்டுகள் தி.மு.க.விற்காகவும், 31 ஆண்டுகள் ம.தி.மு.க.விற்காகவும் உழைத்துள்ளேன். மீதி மூச்சு உள்ளவரை திராவிட முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடுபடுவேன். தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பது என்பது 8 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட முடிவு. அந்த முடிவில் தான் தொடர்ந்து பயணிக்கிறேன்.

    உடல்நிலை சரியில்லாதபோது கலைஞரை நேரில் சென்று சந்தித்தேன். அப்போது, தி.மு.க.வில் உங்களுக்கு உறுதுணையாக இருந்தது போல, ஸ்டாலினுக்கும் பக்க பலமாக இருப்பேன் என்று கண்ணீர் மல்க கூறினேன். அதனை நான் தொடர்ந்து செய்வேன். இந்த நிகழ்வை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் குறிப்பிட்டுள்ளார்.

    ஒருமுறை பாராளுமன்றத்தில் நான் பேசியபோது, எங்கள் வீரத்தை பார்க்க வேண்டும் என்றால் பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் ஆகியோர் அடங்கிய படத்தை பார்த்து விட்டு வாருங்கள் என கூறினேன். ஆனால் அதன் பிறகு அந்த படம் அங்கு இருந்தே அகற்றப்பட்டு விட்டது.

    தமிழகத்தில் வந்து ராஜேந்திர சோழன் பற்றியும் ராஜராஜன் பற்றியும் பேசிவிட்டு செல்லும் பிரதமர் மோடி, மீண்டும் பாராளுமன்றத்தில் அந்தப் படத்தை வைக்க முடியுமா? என கேள்வி எழுப்பினார்.

    பிரதமர் மோடி ஆர்.எஸ்.எஸ்சை தூக்கிப் பிடித்து பேசி வருகிறார். அம்பேத்கர் படத்தை பாராளுமன்றத்திற்கு கொண்டு வர அப்போதைய பிரதமர் வி.பி.சிங்கிடம் பேசி அதனை கொண்டு வந்தவன் நான்.

    நாடாளுமன்றத்தில் என் குரல் ஒலிக்கவில்லை என்றாலும், தமிழகத்தின் தெருக்களிலும் மக்கள் மன்றத்திலும் தொடர்ந்து பாடுபடுவேன். ம.தி.மு.க.வுக்காக என் குடும்பத்திலிருந்து தாய், தம்பி என பலரை இழந்துள்ளேன். அவர்களை இதுவரை கட்சிக்காகவோ, பதவிக்காகவோ பயன்படுத்தவில்லை.

    அமைச்சர் பதவிக்காக மாற்றுக் கூட்டணியில் பேசி வருவதாக கூறுகின்றனர். அப்படிப்பட்ட நோக்கம் ம.தி.மு.கவுக்கு இல்லை. அமைச்சர் பதவி கொடுத்தபோது அதை வேண்டாம் என்று மறுத்து கட்சி தொண்டர்களுக்கு அதை வாங்கி கொடுத்தவன் இந்த வைகோ.

    துரை வைகோவுக்கு வாக்கெடுப்பு நடத்திய பிறகே கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்டது. அதற்கு முன்பு அதை எதிர்த்தவன் நான்.

    கட்சியில் இருந்து வெளியே சென்று, கட்சிக்கு எதிராக துரோகம் செய்தவர்கள் குறித்து இதுவரை விமர்சனமோ, கருத்தோ நான் கூறவில்லை.

    அவர்கள் எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும், நன்றாக வாழுங்கள். உயிர் மூச்சு உள்ளவரை இந்த மக்களுக்காகவும், தமிழுக்காகவும், திராவிடத்துக்காகவும் பேசிக்கொண்டே இருப்பேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கடைசியாக பேசியபோது வைகோ திடீரென கண்கலங்கினார். அவர் கண்கலங்கி பேசியதை பார்த்த கட்சியினரும் உணர்ச்சிவசப்பட்டனர்.

    • தேவ் ஆதிரன் என்ற 2 வயது சிறுவன் தவறுதலாக விழுங்கியதில் மிட்டாய் தொண்டையிலேயே சிக்கிக் கொண்டது.
    • உயிரை காத்த ரெயில்வே காவலர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

    கோவை மேட்டுப்பாளையம் – போத்தனூர் இடையேயான இயங்கி வரும் ரெயிலை நாள்தோறும் பள்ளி, கல்லூரி வேலைக்கு செல்பவர்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று ரெயிலில் பயணித்த தேவ் ஆதிரன் என்ற 2 வயது சிறுவன் தவறுதலாக விழுங்கியதில் மிட்டாய் தொண்டையிலேயே சிக்கிக் கொண்டது.

    இதனால் சிறுவனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கம் வரும் சூழல் ஏற்பட்டது. அப்போது ரெயிலில் பணியில் இருந்த ஆர்.பி.எப் போலீசார் துரிதமாகச் செய்யப்பட்டு மிட்டாயை அகற்றி சிறுவனை காப்பாற்றினர்.

    ரெயில் கோவையை அடைந்ததும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    சிறுவனின் தொண்டையில் இருந்து காவலர்கள் மிட்டாயை அகற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சிறுவனின் உயிரை காத்த ரெயில்வே காவலர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

    • ஆழியாறு ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
    • தற்போது 2-வது முறையாக நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் உள்ள தொகுப்பு அணைகளில் ஆழியாறு அணையும் ஒன்று.

    இந்த அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு, பழைய ஆயக்கட்டு மற்றும் கேரள மாநிலத்தில் சித்தூர் தாலுகா பகுதிகளுக்கு பாசனத்திற்கு நீர் வழங்கப்படுகிறது.

    ஆழியார் ஆறு பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, கோவை பகுதிகளில் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. இந்த நிலையில் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது.

    ஆழியார் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான மேல் ஆழியாறு, நவமலை, காடம்பாறை மற்றும் சர்க்கார்பதி பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் நவமலை ஆறு, கவியருவி மற்றும் வனப்பகுதியில் உள்ள சிற்றாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதனால் ஆழியார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. அணையின் நீர்மட்டம் கடந்த சில நாட்களாக வேகமாக உயர்ந்து வந்தது. நேற்று காலை அணைக்கு வினாடிக்கு 1600 கனஅடி நீர் வரத்து இருந்ததால் அணையின் நீர்மட்டம் 119 அடியாக உயர்ந்தது.

    தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால் பாதுகாப்பு கருதி அணையின் 5 மதகுகளும் திறக்கப்பட்டு வினாடிக்கு 1000 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது.

    இதையடுத்து ஆழியாறு ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. மேலும் மக்கள், கால்நடைகளை ஆற்றின் கரையோரத்தில் மேய்ச்சலுக்கு விடுவது, ஆற்றில் இறங்கி குளிப்பது மற்றும் துணி துவைப்பது ஆகியவற்றில் ஈடுபடக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    நீர்வளத்துறை அதிகாரிகள் அணையின் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஏற்கனவே கடந்த மாதம் ஆழியார் அணை நிரம்பி 11 மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்ட நிலையில் தற்போது 2-வது முறையாக நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
    • விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.

    சூலூர்:

    கோவை சூலூர் அருகே காசிகவுண்டன்புதூர் பகுதி உள்ளது. வடமாநில பெண் இங்குள்ள தனியார் உணவு நிறுவனத்தில் வடமாநிலத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் விடுதியில் தங்கி இருந்து வேலை பார்த்து வருகிறார்கள்.

    இங்கு ஒடிசாவை சேர்ந்த லம்போதர் மகிந்தா என்பவர் தனது 4 பிள்ளைகளுடன் வேலை செய்கிறார். இவரது 3-வது மகள் மீத்து மகிந்தா(வயது18).

    இந்த நிலையில் ஒடிசாவை சேர்ந்த அஜித் (20) என்ற வாலிபருடன் மீத்து மகிந்தாவுக்கு நிச்சயமானது. திருமணத்திற்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால் திருமண ஏற்பாடுகள் விறு, விறுப்பாக நடந்து வந்தன.

    இந்த நிலையில் மீத்து மகிந்தா வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சியான பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீத்து மகிந்தாவை மீட்டு பார்த்தனர். அப்போது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அறிந்ததும் சூலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. மீத்து மகிந்தாவும், இதே கம்பெனியில் வேலை பார்க்கும் ஒடிசாவை சேர்ந்த பப்லு(20) என்ப வரும் காதலித்து வந்தனர். கடந்த ஒராண்டுக்கு முன்பு பப்லு தனது சொந்த ஊருக்கு சென்றார். அதன் பின்னர் அவர் திரும்பி வரவில்லை.

    இந்த நிலையில் தான் மீத்துவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயமானது. இதனை ஊருக்கு சென்ற முன்னாள் காதலன் பப்லு அறிந்து கொண்டார். அவர், கடந்த 15-ந் தேதி மீத்துவை திருமணம் செய்ய இருந்த அஜித்தின் செல்போனுக்கு, புதுப்பெண் மீத்துவுடன் தான் இருந்த புகைப்படத்தை அனுப்பி வைத்துள்ளார்.

    இதை பார்த்ததும் அதிர்ச்சியான அஜித், தனக்கு இந்த திருமணம் வேண்டாம் என கூறி திருமணத்தை நிறுத்தி விட்டார். இதனால் மீத்துவுக்கு வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டது. வீட்டில் இருந்த நீத்து யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

    • கோவை மத்தம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
    • சாமநாயக்கன்பாளையம் ரோடு, கண்ணார்பாளையம்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    கோவை:

    கோவை மத்தம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதன் காரணமாக இங்கிருந்து மின் வினியோகம் பெறும் பெட்டதாபுரம், தண்ணீர்பந்தல், கோட்டைப்பிரிவு, ஒன்னியம்பாளையம் ரோடு, அறிவொளிநகர், சின்னமத்தம்பாளையம், மத்தம்பாளையம், செல்வபுரம், சாந்திமேடு, பாரதிநகர், சாமநாயக்கன்பாளையம் ரோடு, கண்ணார்பாளையம்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை கு.வடமதுரை செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

    • நீண்ட நேரமாகியும் நூர்சல் ஹக் வீடு திரும்பாததால் பெற்றோர் தேட தொடங்கினர்.
    • தகவல் அறிந்து வால்பாறை வனத்துறையினர், காடம்பாடி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    வால்பாறை:

    கோவை மாவட்டம் வால்பாறை அருகே வேவர்லி எஸ்டேட் பகுதி உள்ளது. இங்கு அசாம் மாநிலத்தை சேர்ந்த சொர்பத் அலி மற்றும் அவருடைய மனைவி ரோகமாலா ஆகியோர் தங்கியிருந்து தோட்ட தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.

    இவர்களது மகன் நூர்சல் ஹக்(வயது 8). இவன் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான்.

    இந்த நிலையில் நேற்று மாலை 6.45 மணியளவில் நூர்சல் ஹக் தனது வீட்டின் அருகில் உள்ள மற்றொருவரின் வீட்டுக்கு பால் வாங்க சென்றான். அங்கு பால் வாங்கிவிட்டு திரும்பி வந்தான்.

    வீட்டுக்கு நடந்து வந்து கொண்டு இருந்தபோது, திடீரென அங்கு வந்த கரடி ஒன்று, அவனை தாக்கி அருகில் உள்ள தேயிலை தோட்டத்துக்குள் இழுத்து சென்றது. அங்கு அவனை கடித்துக்கொன்றுவிட்டு அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றது.

    இதற்கிடையில் நீண்ட நேரமாகியும் நூர்சல் ஹக் வீடு திரும்பாததால் பெற்றோர் தேட தொடங்கினர். அப்போது அந்த பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தின் அருகில் பாலும், ரத்தமும் சிதறி கிடந்தது.

    உடனே தோட்டத்துக்குள் சென்று பார்த்தபோது உடலில் பலத்த காயங்களுடன் நூர்சல் ஹக் பிணமாக கிடந்தான். இதை கண்டு அவர்கள் கதறி துடித்தனர். தகவல் அறிந்து வால்பாறை வனத்துறையினர், காடம்பாடி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    பின்னர் அவனது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஏற்கனவே வால்பாறை பகுதியில் குழந்தைகளை சிறுத்தைகள் தாக்கிய சம்பவங்கள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது கரடி ஒன்று சிறுவனை தாக்கி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    • பயணிகள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அறைக்கு அழைத்து சென்றனர்.
    • ஜெயிலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    கோவை:

    கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று இரவு சிங்கப்பூரிலிருந்து விமானம் ஒன்று வந்தது. இந்த விமானத்தில் 200-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.

    இந்த விமானத்தில் கோடிக்கணக்கான மதிப்பிலான உயர்ரக போதை பொருட்கள் பயணிகள் மூலம் கடத்தி வரப்படுவதாக கோவை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து கோவை விமான நிலையத்தில் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் மற்றும் வான் சுங்க இலாகா துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்த உத்தரவிட்டனர்.

    இதனை தொடர்ந்து அந்த விமானம் கோவை விமான நிலையத்தில் தரையிறங்கியதும், அந்த விமானத்தில் வந்த பயணிகள் அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

    பயணிகள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அறைக்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து அவர்கள் வைத்திருந்த பைகள் உள்ளிட்ட உடைமைகளில் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது 2 பயணிகள் கொண்டு வந்த பைகளில் 6.713 கிலோ கிராம் எடையுள்ள உயர்ரக கஞ்சா(தண்ணீரில் வளரக்கூடியது) போதை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து கஞ்சாவை கடத்தி வந்த கேரளா மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த பகத்மான் முஜீப் மற்றும் சுகைல் உபயதுல்லா ஆகிய 2 பேரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்த ஹைட்ரோபோனிக்ஸ் எனப்படும் போதை பொருள் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து கைதான கேரள பயணிகள் 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை ஜெயிலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.



    இந்த சம்பவம் நடைபெற்ற சில நிமிடத்தில் அதே விமானத்தில் புதுக்கோட்டையை சேர்ந்த தமிழரசி ஜெயமாணிக்கம், பாண்டித்துரை சுப்பையா என்ற 2 பயணிகள் ரூ.18.67 லட்சம் மதிப்பிலான எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை கடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்கள் சுங்க இலாகாவிற்கு வரி செலுத்தாமல் அவற்றை ரகசியமாக கடத்தி வந்தது தெரிய வந்தது.

    இந்த 2 சம்பவங்களால் நேற்று இரவு கோவை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. இதைத்தொடர்ந்து அனைத்து விமான பயணிகளும் தீவிர சோதனைக்கு பிறகு பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    அதேபோன்று வெளிநாடுகளில் இருந்து வந்த அனைத்து விமான பயணிகளும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.
    • முதலமைச்சர் கார் மூலம் திருப்பூர் மாவட்டம் உடுமலை செல்கிறார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் இன்றும், நாளையும் கள ஆய்வுப்பணி மேற்கொள்கிறார்.

    இதற்காக இன்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இதனையடுத்து கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ சென்றார். வழிநெடுக பொதுமக்கள் கூடிநின்று அவரை வரவேற்றனர்.

    இதனையடுத்து முதலமைச்சர் கார் மூலம் திருப்பூர் மாவட்டம் உடுமலை செல்கிறார்.

    2026 சட்டமன்ற தேர்தல் வியூகம் தொடர்பாக திருப்பூர் மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ள பணிகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர்கள் சேர்க்கை, உங்களுடன் ஸ்டாலின் திட்டப்பணிகள் குறித்து கட்சியினருடன் ஆலோசனை நடத்துகிறார். இரவு உடுமலை அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.

    • பல்வேறு இடங்களில் யானைகள் கூட்டம் தனித்தனியாக முகாமிட்டு சுற்றி திரிகின்றன.
    • சுற்றுலா வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    வால்பாறை:

    கோவை மாவட்டம் வால்பாறையில் யானைகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. அதிலும் குறிப்பாக கருமலை, சிறுகுன்றா, வெள்ளமலை, புதுத்தோட்டம், தாய்முடி, நடுமலை அம்மையப்பன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் முகாமிட்டு உள்ளன.

    மேலும் வால்பாறை-பொள்ளாச்சி ரோட்டின் பல்வேறு இடங்களில் யானைகள் கூட்டம் தனித்தனியாக முகாமிட்டு சுற்றி திரிகின்றன. இந்த நிலையில் பொள்ளாச்சியில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் ஒரு அரசு பஸ் வால்பாறைக்கு புறப்பட்டு சென்றது.

    அப்போது 3-வது கொண்டை ஊசி வளைவு அருகே குட்டியுடன் நின்ற 3 யானைகள் சாலையை வழிமறித்து நின்றன. இதனை பார்த்த அரசு பஸ் டிரைவர் அதிர்ச்சி அடைந்தார். பயணிகளும் பீதி அடைந்தனர்.

    அரசு பஸ் டிரைவர் உடனடியாக வாகனத்தை பின்னோக்கி இயக்கினார். தொடர்ந்து பஸ்சின் பின்னால் வந்த வாகனங்களும் நிறுத்தப்பட்டன.

    வால்பாறை-பொள்ளாச்சி ரோட்டில் சிறிது நேரம் சுற்றி திரிந்த யானைகள் பின்னர் சாலையோரம் ஒதுங்கி சென்றன. அதன்பிறகு அந்த பகுதியில் வாகன போக்குவரத்து இயல்பு நிலைக்கு வந்தது.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், பருவமழைக்கு பிறகு மலைப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அதனால் வால்பாறை-பொள்ளாச்சி ரோட்டில் மாலை 6 மணிக்கு மேல் சுற்றுலா வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இந்த ரோட்டில் இரவு நேரத்தில் செல்வோர் வாகனங்களை மிகவும் கவனமாக இயக்க வேண்டும். மேலும் யானைகள் எதிரில் தென்பட்டால், சிறிது நேரம் அமைதியாக இருந்தாலே அவை விலகி சென்று விடும். ஹாரன் ஒலித்து யானைகளுக்கு இடையூறு செய்யக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்து உள்ளனர். 

    • சென்னை தனியார் நிறுவனத்தில் ஜெயராமன் பண ஏய்ப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
    • போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    கோவை:

    கோவை மலுமிச்சம்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது45). நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்தவர் முருகப்பெருமாள்(26).

    இவர்கள் 2 பேரும் கோவை செட்டிப்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு சென்று, நாங்கள் குடிபோதையில் ஜெயராமன் என்பவரை கொன்று கிணற்றில் வீசியதாக கூறி சரண் அடைந்தனர்.

    போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று கிணற்றில் கிடந்த ஜெயராமனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தினர்.

    இதற்கிடையே செட்டிப்பாளையம் போலீசார் ஜெயராமன் படுகொலை தொடர்பாக சரண் அடைந்த 2 பேரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக தகவல்களை கூறினர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் மேலும் தீவிர விசாரணை நடத்தினர்.

    போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    கோவை கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட ஜெயராமன் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    அப்போது இதே நிறுவனத்தில் டிரைவர்களாக வேலை பார்த்த பாலமுருகன், முருகப்பெருமாள் ஆகியோரிடம் ஜெயராமனுக்கு பழக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து அவர்கள் இரவு நேரங்களில் ஒன்றாக அமர்ந்து மது குடிப்பதை வாடிக்கையாக கொண்டு இருந்தனர்.

    இதற்கிடையே சென்னை தனியார் நிறுவனத்தில் ஜெயராமன் பண ஏய்ப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவரிடம் சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் ஜெயராமன் தனது சக நண்பர்களான பாலமுருகன், முருகப்பெருமாள் ஆகியோருடன் சம்பவத்தன்று ஒன்றாக அமர்ந்து மது குடித்தார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது.

    ஜெயராமனுக்கு ஏற்கனவே வலிப்பு நோய் இருக்கிறது. இந்த நிலையில் அவர் சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதனால் பயந்து போன 2 பேரும் தனியார் நிறுவனத்தினரை தொடர்பு கொண்டு பேசிவிட்டு பின்னர் ஜெயராமன் உடலை காரில் கோவைக்கு கொண்டுவந்து கிணற்றில் வீசியது போலீசாரின் விசாரணையில் தெரியவந்து உள்ளது.

    கோவை கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட ஜெயராமன் படுகொலையில் நுங்கம்பாக்கம் தொழில் அதிபர் ஒருவருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தே கிக்கின்றனர்.

    இதுதொடர்பாக விசாரணை நடத்த தனிப்படை போலீசார் சென்னைக்கு விரைந்து உள்ளனர். விசாரணைக்கு பிறகு தான் ஜெயராமன் எப்படி இறந்தார் என்பது பற்றிய உண்மையான விவரம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    • பரிதாபங்கள் சேனலில் வெளியான 'சொசைட்டி பாவங்கள்' வீடியோ இணையத்தில் வைரலானது.
    • 'பரிதாபங்கள்' யூடியூப் சேனல் மீது வழக்கறிஞர் தனுஷ்கோடி புகார் கொடுத்துள்ளார்.

    யூடியூப் தளத்தில் நகைச்சுவை வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர்கள் கோபி - சுதாகர். இவர்களின் பரிதாபங்கள் சேனலுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

    அண்மையில் பரிதாபங்கள் சேனலில் வெளியான 'சொசைட்டி பாவங்கள்' வீடியோ இணையத்தில் வைரலானது. நெல்லை கவின் ஆணவக் கொலை தொடர்பாக இந்த வீடியோவை அவர்கள் வெளியிட்டிருந்தனர். இந்த வீடியோவில் சாதிவெறிக்கு எதிராக நகைச்சுவையுடன் சமூக கருத்துக்களை பேசியிருந்தது அனைவரையும் ஈர்த்தது.

    அதே சமயம் இந்த் வீடியோ டெலிட் ஆவதற்குள் பார்த்துவிடுங்கள் என்று நெட்டிசன்கள் இந்த வீடியோவை இணையத்தில் வைரலாக்கினர். ஏற்கனவே திருப்பதி லட்டு தொடர்பான வீடியோ மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றநிலையில், சில மணிநேரங்களிலேயே அந்த வீடியோ நீக்கப்பட்டது. பாஜக கொடுத்த அழுத்தத்தின் விளைவாக அந்த வீடியோ நீக்கப்பட்டது என்று கூறப்பட்டது.

    இந்நிலையில், 'பரிதாபங்கள்' யூடியூப் சேனல் மீது கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் தனுஷ்கோடி இந்த புகாரை கொடுத்துள்ளார்.

    அந்த புகார் மனுவில், பரிதாபங்கள் யூடியூப் சேனலில் இரு சமூகத்தினர் இடையே பிரச்சினையை உருவாக்கும் வகையில் பல்வேறு கருத்துக்கள் இருப்பதாகவும் குறிப்பிட்ட சமூகத்தின் அடையாளங்களை குறிப்பிட்டு அந்த சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருக்கிறார்கள். அந்த வீடியோவை யூடியூப் தளத்தில் இருந்து நீக்க வேண்டும். பரிதாபங்கள் சேனலை தடை செய்யவேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பரிதாபங்கள் கோபி - சுதாகருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று திராவிடர் விடுதலை கழகத்தினர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

    இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய திராவிடர் விடுதலை கழகத்தினர், " சவுத்ரி தேவர் என்பவர் கோபி சுதாகருக்கு மிரட்டல் எடுக்கும் வகையில் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதி வெறி கும்பல்கள் கோபி, சுதாகரை மிரட்டி வருவதால் அவர்களுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்" என்று தெரிவித்தனர்.

    மேலும், பெரியார் ,அண்ணா விருது போல் சமூக நலன் கொண்டு செயல்படும் கோபி - சுகாதருக்கு தமிழக அரசு எம்.ஆர்.ராதா விருது வழங்கி கெளரவிக்க வேண்டும் என திராவிடர் விடுதலை கழகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பரிதாபங்கள் சேனலில் வெளியான 'சொசைட்டி பாவங்கள்' வீடியோ இணையத்தில் வைரலானது.
    • நெல்லை கவின் ஆணவக் கொலை தொடர்பாக இந்த வீடியோவை அவர்கள் வெளியிட்டிருந்தனர்.

    யூடியூப் தளத்தில் நகைச்சுவை வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர்கள் கோபி - சுதாகர். இவர்களின் பரிதாபங்கள் சேனலுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

    அண்மையில் பரிதாபங்கள் சேனலில் வெளியான 'சொசைட்டி பாவங்கள்' வீடியோ இணையத்தில் வைரலானது. நெல்லை கவின் ஆணவக் கொலை தொடர்பாக இந்த வீடியோவை அவர்கள் வெளியிட்டிருந்தனர். இந்த வீடியோவில் சாதிவெறிக்கு எதிராக நகைச்சுவையுடன் சமூக கருத்துக்களை பேசியிருந்தது அனைவரையும் ஈர்த்தது.

    அதே சமயம் இந்த் வீடியோ டெலிட் ஆவதற்குள் பார்த்துவிடுங்கள் என்று நெட்டிசன்கள் இந்த வீடியோவை இணையத்தில் வைரலாக்கினர். ஏற்கனவே திருப்பதி லட்டு தொடர்பான வீடியோ மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றநிலையில், சில மணிநேரங்களிலேயே அந்த வீடியோ நீக்கப்பட்டது. பாஜக கொடுத்த அழுத்தத்தின் விளைவாக அந்த வீடியோ நீக்கப்பட்டது என்று கூறப்பட்டது.

    இந்நிலையில், 'பரிதாபங்கள்' யூடியூப் சேனல் மீது கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் தனுஷ்கோடி இந்த புகாரை கொடுத்துள்ளார்.

    அந்த புகார் மனுவில், பரிதாபங்கள் யூடியூப் சேனலில் இரு சமூகத்தினர் இடையே பிரச்சினையை உருவாக்கும் வகையில் பல்வேறு கருத்துக்கள் இருப்பதாகவும் குறிப்பிட்ட சமூகத்தின் அடையாளங்களை குறிப்பிட்டு அந்த சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருக்கிறார்கள். அந்த வீடியோவை யூடியூப் தளத்தில் இருந்து நீக்க வேண்டும். பரிதாபங்கள் சேனலை தடை செய்யவேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×