என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • வேறு வேறு இ-மெயில் முகவரி மூலம் அந்த நபர் மிரட்டல் அனுப்பி வருகிறார்.
    • போலீசார் சென்று 4 முறை சோதனை நடத்தினர்.

    கோவை:

    கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் இமெயில் மூலம் அனுப்பப்பட்டு வந்தது. இதுகுறித்து கோவை வெடி குண்டு தடுப்பு மற்றும் செயல் இழப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையிலான போலீசார் சென்று 4 முறை சோதனை நடத்தினர்.

    இதைத்தொடர்ந்து கோவை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சைபர் கிரைம் போலீசில் இ-மெயில் கடிதம் அனுப்பியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்து உள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று மதியம் மீண்டும் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வேறு ஒரு இ-மெயில் முகவரி மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. உடனே போலீசார் சென்று சோதனை நடத்தினர்.

    தொடர்ந்து வரும் வெடிகுண்டு மிரட்டல்களால் கோவை வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் ஓய்வு இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    நேற்று மாலை கோவை விமான நிலையம் அருகே விளாங்குறிச்சி ரோட்டில் உள்ள டைட்டல் பார்க் கட்டிடத்திற்கும் வெடி குண்டு மிரட்டல் இ-மெயில் மூலம் விடப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அங்கு வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவி உதவியுடன் அங்கு சென்று சோதனை நடத்தினர். டைடல் பார்க் பகுதியில் 2 கட்டிடங்களில் ஏராளமான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    அங்கு வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் மோப்ப நாய்கள் மலர் மற்றும் அயன் ஆகிய மோப்ப நாய்கள் கொண்டு போலீசார் ஒவ்வொரு அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர்.

    கட்டிடங்களின் கார் பார்க்கிங் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் என அனைத்து பகுதிகளிலும் சோதனை நடந்தது. 2 மணி நேர சோதனைக்கு பிறகு வெடிகுண்டு மிரட்டல் மீண்டும் புரளி என்றுதெரிய வந்தது. இந்த சோதனையால் அங்கு பரபரப்பு நிலவியது.

    கலெக்டர் அலுவலகம் மற்றும் கோவை பாஸ்போர்ட் அலுவலகம் ஆகியவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் அனுப்பிய அதே நபர்தான் டைட்டல் பார்க்கிற்கும் அனுப்பியதாக கூறப்படுகிறது. வேறு வேறு இ-மெயில் முகவரி மூலம் அந்த நபர் மிரட்டல் அனுப்பி வருகிறார்.

    அவரை பிடிக்க போலீ சார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    • சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
    • உடையாம்பாளையம், வெள்ளக்கிணறு ஹவுசிங் யூனிட் பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.

    கோவை:

    சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (4-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதையொட்டி அங்கிருந்து மின் வினியோகம் செய்யப்படும் பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது.

    அதன்படி சரவணம்பட்டி, அம்மன் கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணறு, உருமாண்டம்பாளையம், கவுண்டர்மில், சுப்பிரமணியம் பாளையம், கே.என்.ஜி. புதூர், மணியகாரம்பாளையம் (பகுதி), லட்சுமி நகர், நாச்சிமுத்து நகர், ஜெயபிரகாஷ் நகர், கணபதிபுதூர், உடையாம்பாளையம், வெள்ளக்கிணறு ஹவுசிங் யூனிட் பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.

    • வழிபாட்டின் முடிவில் பார்வதிக்கு காட்சி தந்தார், சிவபெருமான்.
    • சிவராத்திரி விரதத்தை யார் வேண்டுமானாலும் கடைப்பிடிக்கலாம்.

    மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவில் மலையில் இருப்பதாலும், மலையை சுற்றி வனப்பகுதி என்பதாலும் வனவிலங்குகளின் நடமாட்டம் இருக்கும். இதை கருத்தில் கொண்டு பக்தர்களுக்கு வனத்துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறார்கள்.

    அதன்படி தினந்தோறும் மாலை 4 மணிக்கு மேல் சாமியை தரிசிக்க மலையேற அனுமதி இல்லை. மாலை 4.30 மணிக்கு நடை அடைக்கப்படும் வரை மட்டுமே பக்தர்கள் சிவனை தரிசனம் செய்ய முடியும். இரவு நேரங்களில் சுவாமியை தரிசிக்க முடியாது.

    அதற்கு ஒரே ஒரு நாள் மட்டும் விலக்காக உள்ளது. அதுதான் மகா சிவராத்திரி அன்று மட்டும் விடிய, விடிய பக்தர்கள் மலையேறி கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். அன்று இரவு விடிய, விடிய கோவிலில் பூஜைகள் நடக்கிறது. மொத்தம் 4 கால பூஜைகள் நடக்கின்றன. கடந்த மகாசிவராத்திரி அன்று 12 ஆயிரம் பக்தர்கள் இரவில் மலையேறி தர்மலிங்கேஸ்வரரை தரிசனம் செய்துள்ளனர்.

    மகத்துவம் வாய்ந்த மகா சிவராத்திரி

    மகா சிவராத்திரி நாளில் சிந்தையில் அமைதியுடன் ஐந்தெழுத்து மந்திரமான 'சிவாய நம' என்ற மந்திரத்தை உச்சரித்து பூஜிக்க வேண்டும்.; ஒரு பிரளய காலத்தின்போது பிரம்மனும், அவரால் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் பரம்பொருளுக்குள் அடங்கின. இதையடுத்து அன்றைய இரவுப் பொழுதில் பார்வதி தேவி, சிவபெருமானை நினைத்து பூஜை செய்தாள். அதோடு நான்கு ஜாமங்களிலும் ஆகம விதிப்படி அர்ச்சனையும் செய்தாள். சூரிய அஸ்தமன நேரம் முதல் மறுநாள் சூரிய உதயம் வரை, பார்வதிதேவி பூஜை செய்த காலமே, 'மகா சிவராத்திரி' என்று அழைக்கப்படுகிறது.

     

    வழிபாட்டின் முடிவில் பார்வதிக்கு காட்சி தந்தார், சிவபெருமான். அவரிடம் பார்வதிதேவி, "ஐயனே.. சிவராத்திரி தினத்தில் நான்கு ஜாமம் முழுவதும் தங்களை (சிவன்) நினைத்து வழிபடுபவர்களுக்கு, சகல சவுபாக்கியங்களும் தந்தருள வேண்டும். மேலும் அவர்களின் வாழ்நாள் இறுதியில் முக்தியையும் அளிக்க வேண்டும்" என்றாள். ஈசனும், அதன்படியே பார்வதிக்கு அருள் செய்தார்.

    மாதம்தோறும் சிவராத்திரி தினம் வந்தாலும், அம்பிகையால் வழிபடப்பட்ட மாசி மாதத்தில் வரும் சிவராத்திரியை 'மகா சிவராத்திரி' என்று கொண்டாடுகிறோம்.

    ஒரு முறை மகாவிஷ்ணுவுக்கும், பிரம்மனுக்கும் இடையே 'தங்களில் யார் பெரியவர்?' என்ற போட்டி உருவானது. அப்போது சிவபெருமான், அடிமுடி காண முடியாத ஜோதிப் பிளம்பாக விண்ணுக்கும், மண்ணுக்குமாக உயர்ந்து நின்றார். 'ஈசனின் முடியையோ, அடியையோ யார் முதலில் காண்கிறார்களோ, அவர்களே பெரியவர்' என்று சொல்லப்பட்டது.

    இதையடுத்து அன்னப் பறவை உருவம் எடுத்த பிரம்மன், ஈசனின் முடியைத் தேடியும், வராக வடிவம் எடுத்த மகாவிஷ்ணு, பாதாளத்தைத் தோண்டியபடி ஈசனின் அடியைத் தேடியும் புறப்பட்டனர். இந்த கோலத்தையே, 'லிங்கோத்பவர் கோலம்' என்பார்கள். மகாசிவராத்திரி நாளில்தான், இந்த திருக்காட்சி காணக் கிடைத்தது என்கிறார்கள்.

    சிவராத்திரி விரதம் இருப்பதால், தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே செய்த பாவங்களும் நம்மை விட்டு நீங்கும் என்பது ஐதீகம். சிவராத்திரி விரதத்தை யார் வேண்டுமானாலும் கடைப்பிடிக்கலாம். வருடம் முழுவதும் விரதம் மேற்கொள்வது, நூறு அஸ்வமேத யாகம் செய்வது, பலமுறை கங்கையில் நீராடுவது ஆகியவை கூட, ஒரு மகா சிவராத்திரி விரதத்திற்கு ஈடாகாது. அந்த அளவுக்கு மகாசிவராத்திரி விரதம், மகத்துவம் வாய்ந்தது.

    விரதம் இருப்பது எப்படி?

    சிவராத்திரிக்கு முன்தினம் ஒரு வேளை மட்டுமே உணவருந்த வேண்டும். சிவராத்திரி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி, சூரிய உதயத்தின் போது வீட்டில் பூஜையை முடிக்க வேண்டும். அதன் பின் அருகில் இருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று, மூலவர் சிவலிங்கத்தை வணங்கிவர வேண்டும். மாலையில் வீட்டில் பூஜை செய்யும் இடத்தை மலர்களால் அலங்கரித்து, சிவனுக்கு அர்ச்சனை செய்வதற்கான பொருட்களுடன் சிவன் கோவிலுக்குச் செல்ல வேண்டும்.

    அங்கு நான்கு கால பூஜையிலும் கலந்து கொண்டு, சிவபெருமானுக்கு நடைபெறும் அபிஷேகம், அலங்காரங்களை கண்டுகளிக்க வேண்டும். அப்போது இறைவனின் திருநாமத்தைத் தவிர வேறு எதையும் உச்சரிக்கக் கூடாது. இரவு முழுவதும் கண் விழித்து இருக்க வேண்டும். ஆலயத்திற்குச் சென்றுதான் கண்விழித்து இருக்க வேண்டும் என்று கிடையாது.

    வீட்டிலும் கூட மகா சிவராத்திரி அன்று, நான்கு ஜாமங்களிலும் முறைப்படி பூஜை செய்து, ஈசனுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்வது உரிய பலனைத் தரும். இந்த விரதத்தை மேற்கொள்பவர்கள், கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். சிந்தையில் அமைதியுடன், சிவபுராணத்தை பாடிக் கொண்டிருக்க வேண்டும்.

    பற்றற்று இருப்பதுடன், பேராசைகளைக் கைவிட்டு, பிறருக்குத் தீங்கிழைக்காமல் இருக்க வேண்டும். ஐந்தெழுத்து மந்திரமான 'சிவாய நம' என்ற சொல்லை உச்சரித்து பூஜிக்க வேண்டும். கலச பூஜையுடன் லிங்கத்தை வைத்தும் பூஜை செய்யலாம். பூக்கள் மற்றும் அபிஷேகப் பொருட்களை கோவில்களுக்கு வாங்கிக் கொடுப்பதும் நன்மையை அளிக்கும்.

    வீட்டில் மகா சிவராத்திரி பூஜை செய்யும் போது, சிவ, ருத்ர, பசுபதி, நீலகண்டா, மகேஸ்வரா, ஹரிகேசா, விருபாக்ஷா, சாம்பு, சூலினா, உக்ரா, பீமா, மகாதேவா ஆகிய 12 பெயர்களை உச்சரித்து, இறைவனை பூக்களால் அர்ச்சிக்க வேண்டும். கோவிலுக்குச் சென்று வழிபடுபவர்கள், ஆலயத்தை வலம் வந்து, சிவபெருமானின் மூல மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும்.

    நான்கு ஜாம பூஜைகளும் முடிந்த பிறகு, மறுநாள் காலையில் நீராடி, காலையில் செய்யும் காரியங்களையும், உச்சிகாலத்தில் முடிக்க வேண்டிய காரியங்களையும் அப்போதே முடிக்க வேண்டும். பின்னர் இறைவனுக்கு படைத்த நைவேத்தியங்களை தானம் அளித்து, விரதம் இருப்பவர்களும் சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.

    சிவராத்திரி நாள் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதவர்கள், ஒவ்வொரு ஜாமப் பூஜை முடித்த பிறகும் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம். பூஜை செய்ய முடியாதவர்கள் நான்கு ஜாமத்திலும் சிவபுராணம் கேட்டும், சிவத் துதிகளைச் சொல்லியும், சிவன் கோவிலுக்குச் சென்று வழிபட்டும், அந்த இரவை கழிக்கலாம். தொடர்ச்சியாக 24 வருடங்களுக்கு சிவராத்திரி விரதம் இருப்பவர்கள், சிவகதி அடைவார்கள் என்பது ஐதீகம். அத்துடன் அவர்களின் 21 தலைமுறைகளும் நற்கதி அடைந்து, முக்தி கிடைக்கப்பெறும் என்கிறார்கள்.

    நான்கு கால பூஜைகள்

    மகாசிவராத்திரி நாளில், இரவு முழுவதும் கண் விழித்து, நான்கு கால பூஜைகள் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு கால பூஜையிலும், சிவபெருமானுக்கு அபிஷேகம், ஆராதனை, நெய்வேத்தியம் போன்றவை செய்யப்படும்.

    முதல் காலம்:மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை, இரண்டாம் காலம்:இரவு 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை, மூன்றாம் காலம்:நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரை, நான்காம் காலம்:அதிகாலை 3 மணி முதல் காலை 6 மணி வரை இந்த நான்கு கால பூஜைகளும் சிவபெருமானின் அருளைப் பெறவும், பாவங்கள் நீங்கவும், முக்தி அடையவும் செய்யப்படுகின்றன.

    • விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை பொறுத்த வரை அரசினுடைய அடக்குமுறை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
    • ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சிலை வைப்பது என்பது பெரும்பாடாக உள்ளது.

    கோவை மேட்டுப்பாளையம் கோ-ஆப்ரேடிவ் காலனியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தையொட்டி இந்து முன்னணி சார்பில் சிறப்பு பொது கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தமிழக முன்னாள் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேசியதாவது:-

    தமிழகத்தில் 25 ஆயிரம் ஊராட்சிகளில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். வீடுகள் தோறும் விநாயகர் சிலைகளுக்கு பூஜைகள் நடத்தப்படுகிறது.

    தமிழகத்தில் விநாயகர் சிலை வைக்க அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதனை படிப்படியாக தளர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை பொறுத்த வரை அரசினுடைய அடக்குமுறை தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சிலை வைப்பது என்பது பெரும்பாடாக உள்ளது.

    இதையெல்லாம் தமிழக மக்கள் படிப்படியாக எதிர்த்து தமிழக அரசுக்கு பாடம் புகட்ட தயாராகிவிட்டனர். இதற்காக 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி ஆர்வமுடன் மக்கள் காத்து கொண்டிருக்கின்றனர்.

    மகாராஷ்டிராவில் 1½ லட்சம் விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்படுகின்றன. 9 நாட்களில், அங்கு போலீசாரின் அடக்குமுறை இல்லை.

    இவ்வாறு பேசினார்.

    • சத்குருவிற்கு அண்மையில் 2 பெரிய மூளை அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது.
    • மோட்டார் சைக்கிளில் கைலாய யாத்திரை மேற்கொண்டது யோக விஞ்ஞானத்தின் சக்தியை காட்டுகிறது என்றார் சத்குரு.

    சத்குரு புனித கைலாய யாத்திரையை நிறைவு செய்து இன்று தமிழகம் திரும்பினார். கோவை விமான நிலையத்தில், பத்திரிகையாளர்களின் கேள்விக்கு சத்குரு பதிலளிக்கையில், "மூளை அறுவை சிகிச்சைக்கு பிறகு, மோட்டார் சைக்கிளில் கைலாய யாத்திரை மேற்கொண்டது யோக விஞ்ஞானத்தின் சக்தியை காட்டுகிறது" எனக் கூறினார்.

    சத்குருவிற்கு அண்மையில் 2 பெரிய மூளை அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு, முதன்முறையாக 17 நாட்கள் தொடர் மோட்டார் சைக்கிள் பயணம் மூலம் அவர் கடினமான கைலாய மலை யாத்திரையை மேற்கொண்டு நிறைவு செய்துள்ளார்.

    இன்று மாலை கோவை விமான நிலையம் வந்தடைந்த அவர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

    அப்போது பேசிய சத்குரு, "கடந்த ஆண்டு தலையில் அடிப்பட்டதால், இரண்டு முறை மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு 2 வருடம் மோட்டார் சைக்கிள் பயணம் கூடாது என்றார்கள். 5 வருடங்களுக்கு பிறகு இந்தாண்டு கைலாய யாத்திரை செல்வதற்கான பாதை திறக்கப்பட்டு உள்ளதால் மோட்டார் சைக்கிளில் கைலாய யாத்திரை போக வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

    ஏனென்றால் யோக விஞ்ஞானத்தின் சக்தியை என்ன என்பதை காட்டவே இந்த யாத்திரையை மேற்கொண்டேன். யோகா என்றால் உடலை வளைப்பது, மூச்சை பிடித்துக்கொள்வது அல்ல, உயிர் மூலத்துடன் தொடர்பு கொள்வது. அந்த சக்தியை கையில் எடுத்துக்கொள்வது.

    மருத்துவ ரீதியாக இது முடியவே முடியாது என்று சொல்கிறார்கள், இதை அதிசயம் என்று சொல்லவில்லை, உயிரே அதிசயமானது தான். அந்த உயிருக்கு மூலமானது அதை விட பெரிய அதிசயம். யோகா என்பது அதனுடன் இணைந்து வாழும் தன்மை. ஆகையால் இது யோகாவின் சக்திக்கு ஒரு சாட்சி என்று வைத்துக் கொள்ளுங்கள்" என்று கூறினார்.

    அமெரிக்காவின் 50 சதவீத வரி குறித்த கேள்விக்கு, "இது நமக்கு பாதிப்பு தான். ஆனால் நம் நாட்டின் மதிப்பு மற்றும் மரியாதையை நாம் இழந்து விட முடியாது. சாவல்கள் வரும் போது தோல்வி என எண்ணக் கூடாது. நம் நாட்டு மக்கள் உறுதியாக நிற்க வேண்டும்.

    நாம் சக்தி வாய்ந்த நாடு என்பதைக் காட்ட இது ஒரு வாய்ப்பு. இது எதிர்காலத்தில் எப்படி செல்லும் என்று நான் கணிக்க விரும்பவில்லை. யார் எதை செய்தாலும் நம் நாட்டை செழிப்பாக நடத்திக் கொள்ள நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

    நமக்கு சாதகமான சூழல் இருந்தால் மட்டுமே செழிக்க முடியும் என்றில்லாமல் எப்படிபட்ட சூழலிலும் செழிப்பாக நம் தொழில்களை நடத்திக்கொள்ளும் திறன்களை நாம் மேம்படுத்திக்கொள்ள வேண்டும்." எனக் கூறினார்.

    ஈஷா கிராமோத்சவம் திருவிழாவிற்கு கிடைக்கும் வரவேற்பு குறித்த கேள்விக்கு, "ஒரிசா உள்ளிட்ட மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஈஷா கிராமோத்சவத்தை 2026-2027-க்குள் நாடு முழுவதும் நடத்த வேண்டும் என்ற நோக்கம் இருக்கின்றது. 2027ஆம் ஆண்டுக்குள் கட்டாயமாக 20 மாநிலங்களுக்கு மேல் இது நடைபெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது." எனக் கூறினார்

    நம் கலாச்சாரத்தில் கைலாய யாத்திரை என்பது மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. கைலாய மலையை தரிசித்து திரும்பி வருபவர்களை ஊரெங்கும் மக்கள் பெரும் பக்தியுடன் வணங்கி வரவேற்பர்.

    அந்த வகையில் புனித கைலாய யாத்திரையை நிறைவு செய்து தமிழகம் திரும்பிய சத்குருவை, கோவை விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு பக்தியுடன் வரவேற்றனர்.

    விமான நிலையத்தில் அளிக்கப்பட்ட வரவேற்பை போலவே மாதம்பட்டி, பூலுவப்பட்டி, ஆலாந்துறை, செம்மேடு ஆகிய கிராமங்களில் உள்ள மக்கள் வழிநெடுங்கிலும் நின்று சத்குருவிற்கு வரவேற்பு அளித்தனர்.

    ஈஷாவின் நுழைவாயிலான மலைவாசல் முதல் ஆசிரம வளாகம் வரை ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் வரிசையாக நின்று சத்குருவை வரவேற்றனர்.

    சத்குரு உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர்-இல் இருந்து கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் தனது யாத்திரையை தொடங்கினார். அங்கிருந்து நேபாளத்தின் காத்மாண்டு, பக்தபூர், துளிகேல் ஆகிய பகுதிகள் வழியாக நேபாள-திபெத் எல்லை பகுதியை அடைந்தார்.

    அதன் பின்பு திபெத்தின் ஜாங்மு, நாயலம், சாகா வழியாக மானசரோவர் ஏரியை அடைந்து அங்கிருந்து பாதயாத்திரையாக சென்று கைலாய மலை தரிசனம் செய்தார். சத்குரு யாத்திரை மேற்கொண்ட பாதையானது, மண் சரிவு, தொடர் மழை உள்ளிட்ட ஆபத்துகள் நிறைந்த, கரடுமுரடான பாதை மற்றும் கடல் மட்டத்தில் இருந்து தோராயமாக 15,000 இருந்து 20,000 அடி வரையுள்ள உயரமானப் பகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த யாத்திரையின் இடையில் சத்குரு நடிகர் மாதவன், கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி, பிரபல இயக்குனர் நாக் அஸ்வின் உள்ளிட்ட பிரபலங்களுடன் ஆன்லைன் மூலம் கலந்துரையாடினர். இந்தியா - சீனா மோதல்கள் தொடர்ந்து வந்ததால் கடந்த 5 வருடங்களாக நேரடியாக கையலாய யாத்திரை செல்ல முடியாமல் இருந்தது.

    ஆனால் தற்போது உருவாகி வரும் இணக்கமான உறவினால் கடந்த ஜூன் மாதம் முதல் திபெத் வழியாக கைலாய யாத்திரைக்கான பாதை மீண்டும் திறக்கப்பட்டது. ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு இந்திய யாத்ரீகர்கள் மீண்டும் கைலாஷ் மலைக்கு ஆன்மீக பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.

    • ஓணம் பண்டிகை வருகிற 5-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
    • ஒரு கிலோ நேந்திரன் வாழை ரூ.45 முதல் ரூ.50 வரை விலைக்கு விற்பனையாகும்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் வாழை விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது.

    இங்கு விளைவிக்கப்படும் நேந்திரன், செவ்வாழை, ரஸ்தாளி, ரோபஸ்டா போன்ற வாழை ரகங்கள் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.

    குறிப்பாக நேந்திரன் வாழைத்தார்கள் 80 சதவீதம் வரை கேரள வியாபாரிகளால் வாங்கப்படுகிறது.

    மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் விளைவிக்கப்படும் வாழைத்தார்கள் நால்ரோடு பகுதியில் செயல்படும் ஏல மையத்துக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கு மொத்த வியாபாரிகள் ஏலம் மூலம் வாழைத்தார்களை வாங்கி செல்கிறார்கள்.

    ஆண்டுதோறும் கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தை கணக்கிட்டு இங்குள்ள வாழை விவசாயிகள் நேந்திரன் வாழையை அதிகளவில் பயிரிடுவது வழக்கம். இந்த ஆண்டும் அதுபோன்று வாழைகள் பயிரிட்டு இருந்தனர்.

    ஆனால் கடந்த மாதம் வீசிய கடும் சூறாவளி காற்றின் காரணமாக மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த பல்லாயிரக்கணக்கான வாழை மரங்கள் சாய்ந்து சேதம் அடைந்தன.

    இதனால் வாழைத்தார் வளர்ச்சி பாதிக்கப்பட்டது. முழுமையாக வளராத வாழைத்தார்கள் பெருமளவில் ஏல மையங்களுக்கு வந்ததால் உரிய விலை கிடைக்கவில்லை.

    கேரள வியாபாரிகளின் வருகையும் குறைந்து விட்டது. இதனால் சராசரி விலை கூட கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து வாழை விவசாயிகள் கூறியதாவது:-

    ஓணம் பண்டிகை வருகிற 5-ந்தேதி கொண்டாடப்படுகிறது. ஓணம் விழா காலங்களில் போட்டி போட்டுக்கொண்டு நேந்திரன் வாழைத்தார்களை கேரள வியாபாரிகள் வாங்கி செல்வார்கள்.

    ஆனால் இந்த ஆண்டு கேரள வியாபாரிகள் வரவில்லை. இதனால் வாழைத்தார்களின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. ஓணம் பண்டிகை மாதத்தில் ஒரு கிலோ நேந்திரன் வாழை ரூ.45 முதல் ரூ.50 வரை விலைக்கு விற்பனையாகும். ஆனால் தற்போது ரூ.25-ல் இருந்து ரூ.35க்கு மட்டுமே விற்பனையாகிறது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • 2 பேரும் வேலைக்கு சென்று விட்டதால் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
    • மணமகள் சாரா குடும்பத்தினர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு கோவைக்கு வந்தனர்.

    கோவை:

    கோவை நவ இந்தியா பகுதியை சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி பிரேமலதா. இவர்களது மகன் கவுதம்(வயது30). இவர் கனடாவில் பள்ளி, கல்லூரி படிப்பை முடித்தார்.

    கவுதம் கல்லூரியில் படித்தபோது அவருக்கு அமெரிக்கா வாஷிங்டன் டி.சி. பகுதியை சேர்ந்த ராபர்ட் டக்ளஸ் பிராட்-எலினிட்டா யசன்யா பிராட் தம்பதி மகள் சாரா(30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு கல்லூரி பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் கவுதம் மற்றும் சாரா ஆகியோரின் பெற்றோர் பங்கேற்றனர். அப்போது கவுதமும், சாராவும் தங்களது பெற்றோரிடம், தங்களுக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டனர்.

    அதற்கு அவர்கள் மேற்படிப்பு முடித்த பிறகு திருமணம் செய்து வைப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து கவுதமும், சாராவும் பட்ட மேற்படிப்பு முடித்து தற்போது கனடாவில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.

    2 பேரும் வேலைக்கு சென்று விட்டதால் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

    மணமகள் சாராவின் பெற்றோர் தமிழ் கலாசாரத்தின் மீது பற்று கொண்டவர்கள் என்பதால் அவர்கள் தமிழ்நாட்டில் தங்கள் மகள் திருமணத்தை நடத்த விரும்பினர்.

    இதையடுத்து மணமகள் சாரா குடும்பத்தினர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு கோவைக்கு வந்தனர். பின்னர் இங்கு திருமண ஏற்பாடுகளை இரு வீட்டு பெற்றோரும் செய்து வந்தனர்.

    நேற்று கொடிசியா வளாகத்தில் கவுதம்-சாரா திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணம் தமிழ்முறைப்படி நடந்தது. மணமகள் சாராவின் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்து மணமகன் கவுதம் திருமணம் செய்து கொண்டார்.

    இந்த திருமண விழாவில் மணமக்களின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் கனடா, அமெரிக்காவை சேர்ந்த உறவினர்கள் என பலர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். 

    • தொடர்ந்து சாரல் மழை பெய்து கொண்டே இருந்ததால் வேலைக்கு செல்வோர், பள்ளி செல்லும் குழந்தைகள் சிரமம் அடைந்தனர்.
    • குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழையுடன் கடும் குளிரும் மக்களை வாட்டி வதைக்கிறது.

    கோவை:

    கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து பரவலாக மழை பெய்தது.

    இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து இதமான காலநிலையே நிலவி வந்தது. நேற்றும் 2 மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. குறிப்பாக மலைப்பகுதியை ஓட்டிய இடங்களில் மழை கொட்டியது.

    இந்த நிலையில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதனை தொடர்ந்து இன்று அதிகாலை முதலே கோவை மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. மாநகர் பகுதிகளான காந்திபுரம், ரெயில் நிலையம், டவுன்ஹால், உக்கடம், சிங்காநல்லூர் பகுதிகளில் சாரல் மழை பெய்தது. தொடர்ந்து சாரல் மழை பெய்து கொண்டே இருந்ததால் வேலைக்கு செல்வோர், பள்ளி செல்லும் குழந்தைகள் சிரமம் அடைந்தனர்.

    புறநகர் பகுதிகளான மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர், சிறுமுகை, பேரூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது. மழையுடன் கடும் குளிரும் நிலவுகிறது. இந்த திடீர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    நீலகிரி மாவட்டத்திலும் மழை பெய்து வருகிறது. நேற்று ஊட்டி, கோத்தகிரி, குன்னூர், கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

    குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளான வண்டிச்சோலை, வெலிங்டன், அருவங்காடு, காட்டேரி, சேலாஸ், கொலக்கம்பை, தூதூர்மட்டம், எடப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.

    இந்த மழையால் குன்னூரில் உள்ள முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அவ்வழியாக சென்ற வாகனங்கள் மெதுவாக ஊர்ந்தபடியே சென்றன. இதன் காரணமாக வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமம் அடைந்தனர்.

    குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழையுடன் கடும் குளிரும் மக்களை வாட்டி வதைக்கிறது. சுற்றுலாவுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் பலரும், கடும் குளிரால் வெளியில் வர முடியாமல் விடுதிகள், லாட்ஜ்களிலேயே முடங்கி போய் உள்ளனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    ஊட்டி மற்றும் சுற்றுவட்டாரத்திலும், மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் இன்று காலை பரவலாக மழை பெய்தது.

    • சிலைகளை வடிப்பது - பார்வதி பிள்ளையாரை படைத்த நிகழ்வை குறிக்கிறது.
    • உயிர்த்தன்மையின் சமநிலையை குறிக்கும் புத்திசாலித்தனத்தை நமக்குள் உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

    கோவை:

    விநாயகர் சதுர்த்தி திருநாளில் தடைகள் நீங்கட்டும், புத்தி மலரட்டும் என சத்குரு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    விநாயகர் சதுர்த்தி வாழ்த்து செய்தியில் சத்குரு கூறியிருப்பதாவது, "விநாயகர் ஞானத்திற்கான கடவுள், கல்வியும் அறிவும் அருள்பவர், தடைகளை நீக்குபவர். விநாயகர் சதுர்த்தி பண்டிகையை நம் தேசத்தில் கோலாகலமாக கொண்டாடுகிறோம். ஒவ்வொரு வருடமும் பருவமழை பொழிந்து முடித்து, கார்மேகங்கள் மறைய தொடங்கியவுடன், நாடெங்கும் உற்சாகமும் எதிர்பார்ப்பும் காற்றில் பரவ, லட்சக்கணக்கானவர்கள் அன்பிற்குரிய ஆனைமுகத்தானை கொண்டாட தயாராகிக் கொண்டிருப்பார்கள். இப்படி விழாக்கோலமும், பலகாரங்களும் ஒரு பக்கம் இருந்தாலும், இதன் பின்னணியில் இருக்கும் கதை ஒன்று வெறும் புராணமாக இருந்துவிடாமல், புத்தி, படைப்பாற்றல் மற்றும் மாற்றத்திற்கான மகத்தான அறிகுறியாக திகழ்கிறது.

    கதை இப்படி ஆரம்பிக்கிறது. சிவன் - அவர் பரமயோகி - தன் இல்லத்தையும், மனைவி பார்வதியையும் விட்டு நீண்ட காலம் சென்றிருக்கிறார். தனிமையும், தாய்மைக்கான ஏக்கமும் அதிகரித்ததால் அவள் அசாதாரண படி ஒன்றை எடுக்கிறாள். தன் உடலில் பூசியிருந்த சந்தனத்தை சேகரித்தாள். தனது தோலின் அம்சங்களை கொண்டிருந்த அந்த சந்தனத்தை மண்ணுடன் கலந்தாள், அதை ஒரு பிள்ளை வடிவத்தில் பிடித்து வைத்தாள். அவள் வடித்த இந்த உருவத்திற்கு உயிர் ஊட்டினாள்.

    சிவன் பல வருடங்கள் கழித்து வீடு திரும்புகிறார். தன் தாய்க்கு காவலாக வாசலில் ஒரு பாலகன் நின்று கொண்டிருந்தான். இருவரும் நேருக்கு நேர் நின்றுகொண்டிருக்கிறார்கள், ஒருவரையொருவர் அறிந்திருக்கவில்லை. கோபத்தில் சிவன் பாலகனின் தலையை துண்டித்துவிடுகிறார். பார்வதியின் துக்கமும் ஆத்திரமும் தீவிரமாக இருந்தது. இந்த துன்பத்தை சரிசெய்ய நினைக்கிறார் சிவன். அவருடன் எப்போதும் கூடவே இருக்கும் கணங்கள், அந்த கணங்களின் தலைவரான ஒருவரின் தலையை எடுத்து பாலகனின் தலைக்கு பதிலாக மாற்றிவைத்தார் சிவன்.

    சிவ கணங்கள் - அவர்கள் விசித்திரமான வேற்றுகிரக வாசிகள் - இவர்களின் உடல் அமைப்பு மனிதர்களைப் போல் அல்லாமல் எலும்புகளற்ற கைகள் கொண்டவர்களாக கூறப்படுகிறார்கள். இதுவே ஓவியர்கள் விநாயகரை தும்பிக்கை கொண்டவராக, ஆனைமுகத்தானாக சித்தரிக்க காரணமானது. ஆனாலும், இன்றும் ஒவ்வொரு மந்திரமும், ஒவ்வொரு பக்திப் பாடலும், அவரை கணபதி என்றுதான் சொல்கிறதே தவிர, கஜபதி என்று அல்ல.

    விநாயகர் தோன்றியது இப்படித்தான்: பார்வதியின் உயிர்-படைக்கும் ஆற்றல் மூலம் தோன்றி, சிவகணத்தின் தலையை கொண்டவர் ஆனார் - புத்திசாலித்தனம், உயிர்மூலம் ஆகியவற்றின் அறிகுறி ஆனார். சமநிலையான புத்திசாலித்தனத்தின் வடிவமானவர் கணபதி.

    விக்னங்களை, அதாவது தடைகள் அனைத்தையும் தகர்ப்பவர் - அதனால் விக்னேஸ்வரன் என்று வணங்கப்படுகிறார். அப்படியென்றால், கஷ்டங்களை மாயமாக மறையச் செய்துவிடுவார் என்று அர்த்தம் அல்ல. அவர் கூறும் ஞானம் சூட்சுமமானது: அதாவது, நமக்குள் புத்திசாலித்தனம், சமநிலை, தெளிவு ஆகியவற்றை நாம் வளர்த்துக்கொள்ளும் போது, தடைகள் தாமாகவே கரைந்து போய்விடும். அவை இனி தடைகளாக இல்லாமல் படிக்கற்களாக மாறிவிடும். இங்கு புத்திசாலித்தனம் என்பது தந்திரமாக இருப்பதையோ, சாமர்த்தியமான கணக்குகளையோ குறிக்கவில்லை - இந்த பிரபஞ்சத்துடன் ஒத்திசைவில் இருப்பதையே குறிக்கிறது - உள்ளுக்குள் அமையும் சமநிலை காரணமாக நமக்குள்ளும், வெளிபுறத்திலும் வாழ்க்கையை சுகமாக கடக்க முடிகிறது.

    இந்த புரிதலே விநாயகர் சதுர்த்தியின் ஐதீகமாக வெளிப்படுகிறது. பல நாட்களுக்கு பக்தர்கள் விநாயகர் சிலைகளை வடிப்பார்கள், ஆடல் பாடலுடன் அவரை ஆராதிப்பார்கள், அவருக்கு உணவு படைப்பார்கள், பக்திப் பரவசத்துடன் அவரை கொண்டாடுவார்கள். அதேசமயம், அந்த மூர்த்தியை நீரில் கரைப்பதுடன் விழா நிறைவு பெறும். சிலைகளை வடிப்பது - பார்வதி பிள்ளையாரை படைத்த நிகழ்வை குறிக்கிறது. நீரில் அமிழ்த்துவது - சிவன் நிகழ்த்திய செயலான அழித்தலையும், புதுப்பித்தலையும் குறிக்கிறது. இவை இரண்டும் சேர்ந்து ஒரே சுழற்சியை குறிக்கின்றன - உருவத்தைப் படைப்பது, அதன் மூலம் கற்றுக்கொள்வது, கடைசியில் அதை விடுவிப்பது.

    விநாயகர் சதுர்த்தி மூலம் நாம் இதைத்தான் கற்றுக்கொள்கிறோம். அதாவது, உண்மையான புத்திசாலித்தனம் என்பது ஒருபோதும் இறுக்கமானது அல்ல, பற்றுகள் சார்ந்தது அல்ல. அது நீர் போல இளகிய தன்மை கொண்டது, கட்டுகள் அற்றது - அதாவது, தொடர்ச்சியாக படைப்பிற்கு உள்ளாகி, அதன்பின் கரைந்துபோகும் உயிர்த்தன்மையை போன்றதே புத்திசாலித்தனமும்.

    பிள்ளையார் வடிவத்தை உருவாக்கி அதன்பின் அதை நீரில் கரைக்கும் வழக்கம் ஒருவிதத்தில் இந்த பிரபஞ்சத்தின் அறுதியற்று மாறக்கூடிய இயல்பை குறிக்கிறது - சும்மா கண்மூடித்தனமாக உருவங்களை பற்றிப்பிடித்துக் கொண்டிருக்காமல், அந்த உருவத்தின் குணங்களை உள்வாங்கிக்கொண்டு, அவற்றை விட்டுவிட வேண்டும் என்கிறது.

    மொத்தத்தில், விநாயகர் சதுர்த்தி என்பது உருவத்திலிருந்து உருவமற்ற தன்மைக்கு நகர்வதைக் கொண்டாடும் விழாவாக உள்ளது. உண்மையான புத்திசாலித்தனம் என்பது அறிவை சேகரிப்பது அல்ல, சாமர்த்தியமாக இருப்பதும் அல்ல; இந்த பிரபஞ்சத்துடன் ஒன்றாக இசைந்து வாழும் திறனாகும் - எதிர்ப்பில்லாமல் மிதந்து வாழ்ந்து, தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றி, நம் கட்டுப்பாடுகளை கடந்து விரிவடைவது ஆகும்.

    இப்படியாக, இந்த கோலாகலமான பண்டிகையை கொண்டாடுங்கள், கொழுக்கட்டைகளை உள்ளே தள்ளுங்கள், அழகு அழகான விநாயகர் சிலைகளின் கலைவண்ணத்தை கண்டுகளியுங்கள். கூடவே கணபதி என்பவர் உணர்த்தும் ஆழ்ந்த உட்பொருளை கருத்தில் கொள்ளுங்கள் - தடைகளை கரைந்துபோகச் செய்யும், ஒற்றுமையைக் கொண்டாடும், உயிர்த்தன்மையின் சமநிலையை குறிக்கும் புத்திசாலித்தனத்தை நமக்குள் உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

    படைப்பின் சமநிலையை, எல்லையற்ற புத்திசாலித்தனத்தை, இந்த விநாயகர் சதுர்த்தி திருநாள் உங்களுக்குள் உயிர்த்தெழச் செய்யட்டும்! வாழ்த்தும் ஆசியும்!" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • விநாயகருக்கு 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது.
    • காலை முதலே ஏராளமான பக்தர்கள் திரண்டு விநாயகரை வழிபட்டனர்.

    கோவை:

    விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. அதிகாலை முதலே பக்தர்கள் கோவில்களில் திரண்டு வழிபாடு செய்தனர்.

    கோவை புளியகுளத்தில் பிரசித்தி பெற்ற முந்தி விநாயகர் கோவில் உள்ளது. இங்குள்ள விநாயகர் சிலை ஆசியாவிலேயே மிகப்பெரியது ஆகும். 19 அடி உயரத்தில் 190 டன் எடை கொண்டது.

    இந்த கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான சதுர்த்தி விழா தொடங்கி நடந்து வந்தது. இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அதிகாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி ஹோம பூஜை நடந்தது. 4.30 மணிக்கு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அரிசி மாவு, திருமஞ்சனப்பொடி, மஞ்சள், பஞ்சாமிர்தம், நெய், தேன், பால், தயிர், இளநீர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் 4 டன் மலர்களால் விநாயகருக்கு ராஜஅலங்காரம் செய்யப்பட்டது. முகத்தில் மட்டும் 40 கிலோ சந்தனத்தை கொண்டு சந்தனக்காப்பு அலங்காரம் செய்திருந்தனர்.

    மேலும் விநாயகருக்கு கொழுக்கட்டை, லட்டு, அதிரசம், வடை, எள் உருண்டை, முறுக்கு என 36 வகையான நைவேத்ய பிரசாதங்கள் படைக்கப்பட்டு பூஜை நடந்தது. 5.45 மணிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். காலை முதலே ஏராளமான பக்தர்கள் திரண்டு விநாயகரை வழிபட்டனர். நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்தது. இதனால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று தரிசனம் செய்தனர்.

    இதேபோல ஈச்சனாரி விநாயகர் கோவில், ரேஸ்கோர்ஸ் 108 விநாயகர் கோவில் உள்பட கோவையில் உள்ள அனைத்து விநாயகர் கோவில்களிலும் இன்று சிறப்பு பூஜைகள் நடந்தன. 

    • 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவிகளிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
    • வீடியோவில் இருந்த மாணவிகளிடம் விசாரணை நடத்தப்படும்.

    கிணத்துக்கடவு:

    3 பெண்கள் முகத்தை துணியால் மூடியபடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், தாங்கள் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருவதாவும், அங்கு பணியாற்றும் 2 ஆசிரியர்கள் தங்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாகவும், மாணவிகளுக்கு நடனம் கற்றுக் கொடுக்கும்போது தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதாகவும், இதுகுறித்து யாரிடம் சொல்வது என தெரிவதில்லை.

    இதில் இருந்து மாணவிகளை காப்பாற்ற வேண்டும் என்றும், அந்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பேசியிருந்தனர்.

    இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    இதையடுத்து போலீஸ் துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, பேரூர் டி.எஸ்.பி சிவக்குமார், பேரூர் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி, கருமத்தம்பட்டி, பெரிய நாயக்கன் பாளையம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் பள்ளிக்கு வந்தனர்.

    அங்கு 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். அதன்பின்னர் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையின்போது, வீடியோவில் வெளியிட்டுள்ள ஆசிரியர்கள், மாணவ, மாணவிகளிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள். மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுகிறார்களா? என விசாரணை நடத்தினர்.

    ஆனால் அதுபோல் ஆசிரியர்கள் நடந்து கொள்வதில்லை. பாலியல் சீண்டல் எதுவும் நடக்கவில்லை என்று கூறினார்.

    போலீஸ் விசாரணையை தொடர்ந்து அரசு மேல்நிலைப் பள்ளியின் முன்பக்க நுழைவு வாயில் மூடப்பட்டது. வெளி நபர்கள் அனுமதிக்கப்படவில்லை.

    வழக்கமாக மாலை 4.10 மணிக்கு பள்ளி விடப்பட்டு விடும். ஆனால் நேற்று போலீஸ் விசாரணை தொடர்ந்து நடைபெற்றதால் 4.10 மணிக்கு பள்ளிக்கூடம் விடப்படவில்லை. இதனால் மாணவ- மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளிக்கு வந்தனர்.

    அவர்கள் பள்ளிக்குள் போலீஸ் வாகனம் நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பள்ளிக்குள் என்ன நடக்கிறதோ என்ற அச்சத்தில் பள்ளி கேட் முன்பு காத்திருந்தனர். விசாரணை முடிந்து மாணவ, மாணவிகள் 5.30 மணிக்கு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இதற்கிடையே பாதிக்கப்பட்ட மாணவியின் தாயாரிடம் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக அவருக்கு சம்மன் அனுப்பி உள்ளனர். அவர் இன்று பேரூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக உள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

    இது தொடர்பாக 9, 10, 11, 12-ம் வகுப்புகளை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    இதில் மாணவ, மாணவிகள் யாரும் பாலியல் சீண்டலால் பாதிக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. தற்போது வீடியோவில் வெளியாகி உள்ள 3 மாணவிகளில் ஒருவர் இந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவி என்பதும், மற்ற 2 பேர் தற்போது இந்த பள்ளியில் படிப்பதும் தெரியவந்தது.

    வீடியோவில் இருந்த மாணவிகளிடம் விசாரணை நடத்தப்படும். இந்த சம்பவம் தொடர்பாக 2 வீடியோ, ஒரு ஆடியோ வெளியாகியிருந்தது. இதில் மாணவியின் தாயார் மாணவிகளிடம் கேள்வி கேட்பதும் அதற்கு அவர்கள் பதில் கூறுவது போல் ஒரு வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.

    இதையடுத்து அந்த வீடியோவை வெளியிட்ட பாதிக்கப்பட்ட மாணவியின் தாயாரிடம் இன்று விசாரணை நடத்த உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • கோவை கீரணத்தம் துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • சேரன்மாநகர் ரோடு, விளாங்குறிச்சி ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் நாளை மின்வினியோகம் இருக்காது.

    கோவை:

    கோவை கீரணத்தம் துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின்வினியோகம் பெறும் கீரணத்தம், வரதைய்யங்கர்பாளையம், இடிகரை, அத்திப்பாளையம், சரவணம்பட்டி ஒரு பகுதி, விஸ்வாசபுரம், ரெவின்யூ நகர், கரட்டுமேடு, விளாங்குறிச்சி ஒரு பகுதி, சிவானந்தபுரம், சத்தி ரோடு,

    சங்கராவீதி, ரவிதியேட்டர், விநாயகபுரம், எல்.ஜி.பி.நகர், உதயாநகர், ஹவுசிங் காலனி, அன்னை வேளாங்கன்னி நகர், சாவித்திரி நகர், கணபதிமாநகர், குறிஞ்சி நகர், சேரன்மாநகர் ரோடு, விளாங்குறிச்சி ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை கு.வடமதுரை செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

    ×