என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அஜித்தும், ரஜினியும் தன்னுடைய புகழை வியாபாரம் செய்யவில்லை... விஜயை ஒருமையில் விமர்சித்த சீமான்
- கரியரின் உச்சத்தையும், வருமானத்தையும் விட்டுவிட்டு அரசியலுக்கு வர சொன்னது யார்?
- இவரால் மழையில் பேசமுடியாது காகிதம் நனைந்திடும்
தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள விஜய் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். தனது கரியரின் உச்சத்தையும், வருமானத்தையும் உதறிவிட்டு அரசியலுக்கு வந்ததாக விஜய் தெரிவித்தார்.
இந்நிலையில், கோவை ராஜவீதி தேர்நிலை திடலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் "நிலத்தை இழந்தால் பலத்தை இழப்போம்" என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.
தெற்கு ஆசியா முழுவதும் பரவி வாழ்ந்தவர்கள் தமிழர்கள். உலகத்தின் முதல் மொழி தமிழ், முதல் மானுடன் தமிழன். இந்தியாவை இந்துக்கள் நாடு என்று கூறுவை ஏற்க இயலாது. மொழியை இழந்து விட்டால் உன் இனத்தை, அடையாளத்தை இழந்து விடுவாய்.
எல்லா மொழியும் மனிதர்களால் பேசப்பட்டது. ஆனால் தமிழ்மொழி இறைவனால் பேசப்பட்டது. கோவில்களில் இருந்து தமிழ் இன்று வெளியேற்றப்பட்டுள்ளது. குடமுழுக்கை தமிழில் நடத்த போராட வேண்டிய நிலை உள்ளது.
நாங்கள் தளபதி, தளபதி என்று கத்த வந்த கூட்டம் அல்ல. இந்த தமிழ்நாட்டின் தலைவிதியை மாற்ற வந்த கூட்டம் என்று சொல்ல வேண்டும். நாங்கள் கூடி கலைகிற காகங்கள் அல்ல. கூடி பெய்கிற மேகங்கள் என்று காட்ட வேண்டும்.
தம்பி விஜய் தனது கரியரின் உச்சத்தை விட்டுவிட்டு, வருமானத்தை விட்டுவிட்டு வருகிறேன் என கூறுகிறார். யார் அவரை அரசியலுக்கு அழைத்தார்கள்?. வீட்டு வாட்ச்மேன் கூட அரசியலுக்கு அழைக்கவில்லை.
என் அன்பு சகோதரர் அஜித்தும், ரஜினிகாந்தும் தங்கள் புகழை வியாபாரம் செய்ய விரும்பவில்லை. சேவை செய்ய வந்தால் சேவை செய்.
எம்.ஜி.ஆர். 1½ மணி நேரமானாலும் எழுதி வைக்காமல் படிப்பார். விஜயகாந்த் மனதில் இருந்து மக்களின் மொழியின் பேசுவார். ஸ்டாலின் கூட துண்டு சீட்டு தான். ஆனால் எடப்பாடியும், தம்பி விஜயும் தான் முழு சீட்டு. இவர்களால் மழையில் பேச முடியாது. ஏனெனில் சீட் நனைந்து விடும். பார்த்து எழுதும் மாணவன், படித்து எழுதும் மாணவன் இருவரில் யார் சிறந்தவரென நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்.
தமிழகத்திற்கு 1½கோடி வட மாநிலத்தவர்கள் வந்து விட்டனர். இவர்கள் ஒருவருக்கு ரூ.10 ஆயிரம் சம்பளம் என்றாலும், ஒரு மாதத்திற்கு ரூ.15 ஆயிரம் கோடி அவர்களின் மாநிலத்திற்கு செல்கிறது. ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கோடியாகும். ஆனால் தமிழகத்தில் ஒரு ஆண்டுக்கு டாஸ்மாக் வருமானம் ரூ.50 ஆயிரம் கோடி தான்.
நீ உழைப்பில் இருந்து வெளியேறி விட்டதால் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கோடி வெளிமாநிலத்திற்கு செல்கிறது. பீகாரை சேர்ந்தவர்களுக்கு மட்டும் 6½ லட்சம் ஓட்டு உள்ளது. இவர்கள் எல்லாம் பாஜக ஆதரவாளர்கள். இதை ஓட்டுக்காக கூறவில்லை. இதை சொல்வது எனது கடமை.
விஜய் தமிழர் என்றோ, தமிழ் என்றோ, தமிழர் உரிமை, தமிழ் வளம் என்று பேசியுள்ளாரா?. பேசமாட்டார். எல்லோரும் ஒன்று என்பவர், ஆந்திராவில் கட்சியை ஆரம்பிக்க வேண்டியது தானே?. எதையாவது பேச வேண்டியது. ஏனென்றால் விஜய் பிரசாரத்தில் தனக்கு எழுதி கொடுப்பதை பேசுகிறார். அவருக்கு ஆந்திராக்காரர் தான் எழுதி கொடுக்கிறார்.
விஜய் சாத்தியமில்லாததை சொல்லமாட்டோம் என்கிறார். எதை செய்வார். ஒன்றும் செய்யமாட்டார். அவரது பேச்சு தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா பகவந்த் கேசரி என்ற படத்தில் பெண்கள் பாதுகாப்பு நோ காம்பரமைஸ் என்பார். அந்த படத்தை டப்பிங் செய்து ஜனநாயகன் எடுத்து வரும் விஜய், பாலகிருஷ்ணா வசனம் பேசுவது போன்று இப்போது தமிழக மக்கள் மத்தியில் ஆவேசமாக பேசிவருகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து கோவையில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை சீமான் அறிவித்தார். அதன்படி கோவை தெற்கு தொகுதியில் பேரறிவாளன், கவுண்டம்பாளையம்-கலாமணி ஜெகநாதன், சிங்காநல்லூர்-நேரு, வால்பாறை-உமாதேவி, மேட்டுப்பாளையம்-கோபாலகிருஷ்ணன், தொண்டாமுத்தூர்-ரஜிப்பூர் நிஷா ஆகியோரை அறிமுகம் செய்து வைத்தார். நிகழ்ச்சியின் முடிவில் கட்சியின் தொண்டரின் பெண் குழந்தைக்கு ஈழ துவாரகா என பெயர் சூட்டினார்.






