என் மலர்
கோயம்புத்தூர்
- காலை 9 மணிமுதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும்
- சாஜ் கார்டன், ஆசிரியர் காலனி, வி.எம்.டி.நகர், நமீதா கார்டன், அப்துல்கலாம் காலனி, மேகலாமணி ரோடு.
கோவை:
சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் நாளை (10-ந்தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் அந்த மின்வழித்தடத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளில் அன்றைய தினம் காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை மின்தடை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சோமையம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரம் வருமாறு:-
யமுனா நகர், காளப்பநாயக்கன்பாளையத்தின் ஒரு பகுதி, ஜி.சி.டி. நகர், லூனா நகர், கணுவாய், தடாகம் ரோடு, சோமையம்பாளையம், அகர்வால் பள்ளி சாலை, சேரன் தொழிற்பேட்டை, கே.என்.ஜி.புதூர், வித்யா காலனி, சாஜ் கார்டன், ஆசிரியர் காலனி, வி.எம்.டி.நகர், நமீதா கார்டன், அப்துல்கலாம் காலனி, மேகலாமணி ரோடு.
மேற்கண்ட தகவலை சீரநாயக்கன்பாளையம் மின்வாரிய செயற்பொறியாளர் தமிழ்ச்செல்வன் தெரிவித்து உள்ளார்.
- தமிழக கவர்னர் ரவி, தி.மு.க.வின் ஊழல்களுக்கு ஒரு மிகப்பெரிய தடையாக இருக்கிறார்.
- கரூர் நிகழ்வு குறித்து அறிக்கை வந்த பின் பேசுகிறேன்.
மேட்டுப்பாளையம்:
கோவை மேட்டுப்பாளையத்தில் மத்திய மந்திரி எல்.முருகன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மேட்டுப்பாளையம்-அவிநாசி நான்கு வழிச்சாலை பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இது மத்திய அரசின் நிதி. பிரதமர் நரேந்திர மோடி 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு, இந்த நாட்டின் வளர்ச்சி வேகத்தை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
மேட்டுப்பாளையத்தை பொறுத்தவரை ஒரு பைபாஸ் சாலை வேண்டும், அதற்கான வேலைகள் தயார் செய்து கொண்டிருக்கிறோம். இதுதொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சரை சந்தித்து பேசியுள்ளேன்.
தமிழக கவர்னர் ரவி, தி.மு.க.வின் ஊழல்களுக்கு ஒரு மிகப்பெரிய தடையாக இருக்கிறார்.
தி.மு.க. எப்போது பார்த்தாலும், ஏதாவது ஒரு பைலை அவருக்கு அனுப்புகிறது. அதுக்கு அவர் ஒப்புதல் கொடுக்கவில்லை என்றால், உடனே அவரை ஒரு மிகப்பெரிய ஒரு எதிரியாக சித்தரித்துக் கொண்டிருக்கிறார்கள். கவர்னர் ரவி சிறப்பாக பணி செய்து கொண்டிருக்கிறார். தமிழக அரசு அவர் மீது வன்மம் கொண்டுள்ளது.
கரூர் சம்பவத்தை பொறுத்த அளவுக்கு விசாரணைகள் நடந்து கொண்டிருக்கிறது. எங்களுடைய என்.டி.ஏ. கூட்டணி எம்.பிக்கள் குழு அவர்களுடைய அறிக்கைகளை கொடுத்து இருக்கிறார்கள். அந்த அறிக்கை வெளிவந்த பிறகு அதை பத்தி பேசுகிறேன்.
ஊடகங்கள் முடக்கப்படுவது தமிழக அரசின் மிகப்பெரிய அராஜகத்தை தான் காட்டுகிறது. தி.மு.க., எப்போதுமே பத்திரிகையாளர்கள், மீடியாக்களை நசுக்குவதில் கைதேர்ந்தவர்கள். அவர்களுக்கு ஆதரவாக செய்திகள் வெளியிட்டால் அவர்கள் நல்லவர்கள். எதிராக வெளியிட்டால் உடனே அவர்கள் கெட்டவர்கள்.
சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது எமர்ஜென்சி காலகட்டத்தை நினைவுப்படுத்துகிறது. கரூர் நிகழ்வு குறித்து அறிக்கை வந்த பின் பேசுகிறேன்.
தமிழக பா.ஜ.க. கட்சியின் சார்பில் பூத்களை வலிமைப்படுத்தும் பணி ஒவ்வொரு சட்டமன்றம் வாரியாக நடந்து கொண்டிருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியான எங்களது கூட்டணியின் வெற்றியை உறுதிப்படுத்தும் விதமாக கூட்டணி கட்சித் தலைவர்கள் உடன் இணைந்து, வேலைகளை வேகப்படுத்தி செய்து கொண்டிருக்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
பேட்டியின்போது கோவை வடக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர்கள் கரு.மாரிமுத்து (கோவை வடக்கு), தர்மண் (நீலகிரி), செந்தில்குமார் (ஈரோடு வடக்கு), மாநில செயற்குழு உறுப்பினர் சதீஷ்குமார், கோவை வடக்கு மாவட்ட பொது செயலாளர் விக்னேஷ், மாவட்டசெயலாளர்கள் உமாசங்கர், விவசாய அணி மாவட்ட பொது செயலாளர் ஆனந்தகுமார் சாமிநாதன், காரமடை நகர தலைவர் சதீஸ்குமார், மேட்டுப்பாளையம் நகர தலைவர் கே.ஆர்.எஸ்.சரவணன் உள்பட பலர் உடனிருந்தனர்.
- விசாரணை முடிந்த பின்பு இறுதி அறிக்கையில் என்ன வருகின்றது என்பதை பார்த்து பேசுவோம்.
- டிசம்பரில் நடத்த வேண்டிய கூட்டத்தை ஏன் முன்கூட்டியே நடத்தினீர்கள் என பல கேள்விகள் உள்ளது.
கோவையில் இன்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கரூர் சம்பவம் தொடர்பாக அரசின் சார்பில் முழு விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கின்றன. மாவட்டத்தில் நடந்த நிகழ்வு குறித்து, கரூரிலிருந்து நான் முழு விளக்கம் கொடுத்துள்ளேன். தற்போது இது தொடர்பாக எஸ்.ஐ.டி. நிறுவப்பட்டு, விசாரணை சென்று கொண்டிருக்கிறது.
விசாரணை முடிந்த பின்பு இறுதி அறிக்கையில் என்ன வருகின்றது என்பதை பார்த்து பேசுவோம். அதுதான் சரியாக இருக்கும்.
உங்களைப் போன்ற ஒரு பத்திரிகையாளரிடம் நான் கேட்டேன். அரசின் மீது கேட்கக்கூடிய கேள்விகள், இன்னொரு பக்கம் ஏன் திரும்பி போகவில்லை என்று கேட்டேன். அதனை தான் உங்களிடமும் கூறுகிறேன். யாரை நோக்கி நீங்கள் கேட்க வேண்டிய கேள்வி இருக்கிறதோ, அதை நீங்கள் தவிர்த்து விடுகிறீர்கள். நீங்களே உங்களை சுய பரிசோதனை செய்து பாருங்கள்.
ஏன் 2 மணி நேரம் லேட் ஆக வந்தீர்கள். 500 மீட்டருக்கு முன்பாக ஸ்கிரீன் போட்டு லைட்டை ஏன் ஆப் செய்தீர்கள் என்று கேட்க வேண்டும். 12 மணிக்கு அறிவித்துவிட்டு ஏன் 7 மணிக்கு வந்தீர்கள்.
டிசம்பரில் நடத்த வேண்டிய கூட்டத்தை ஏன் முன்கூட்டியே நடத்தினீர்கள் என பல கேள்விகள் உள்ளது. இதெல்லாம் பத்திரிகைகள், சமூக வலைதளங்களில் வருவதில்லை விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதில்லை.
யாரை நோக்கி நீங்கள் கேட்க வேண்டிய கேள்வி இருக்கிறதோ அதை எல்லாம் தவிர்த்து விடுகிறீர்கள். ஒரு கணம் நீங்களே உங்களை சுய பரிசோதனை செய்து பாருங்கள்.
எதார்த்த சூழ்நிலையை எடுத்துச் சொல்ல வேண்டிய கடமை நம்மிடம் இருக்கிறது. என்ன நடந்தது?. எப்படி நடந்தது?. இதில் யாரெல்லாம் இருக்கிறார்கள். ஒரு கேள்வி என்னிடம் கேட்டால் எதிர் முகாமிலும் ஒரு கேள்வி கேட்க வேண்டும் அல்லவா?.
அதற்கு கேள்விகள் வந்தால் பரவாயில்லை. ஒரே தரப்பில் உங்களுடைய கேள்விகள் இருக்கிறது. கரூர் சம்பவம் சம்பந்தமாக எந்த கேள்வியும் வேண்டாம். விசாரணை முடிந்த பின்பு அறிக்கை வந்த பிறகு மீண்டும் சந்திப்போம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் சம்பவ இடத்தையும் நேரில் பார்வையிட்டார்.
- த.வெ.க. தரப்பினர் மீதும் குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.
கோவை:
தமிழக பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று காலை கோவையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார்.
டெல்லியில் அவர் பா.ஜ.க. தேசிய தலைவர்கள் மற்றும் மத்திய மந்திரிகளை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். தமிழக அரசியல் நிலவரங்கள் மற்றும் கரூர் சம்பவம் குறித்து அவர் பேச உள்ளதாக கூறப்படுகிறது.
கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான சம்பவம் நடந்தபோது அண்ணாமலை, இலங்கையில் சுற்றுப்ப யணம் மேற்கொண்டு இருந்தார்.
தகவல் அறிந்து அவர் உடனடியாக இலங்கையில் இருந்து கரூர் திரும்பினார். பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் சம்பவ இடத்தையும் நேரில் பார்வையிட்டார்.
உரிய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படாததே கூட்ட நெரிசலுக்கு காரணம் என தமிழக அரசு மீது அண்ணாமலை குற்றம்சாட்டி இருந்தார். மேலும் த.வெ.க. தரப்பினர் மீதும் குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். மேலும் கரூர் வருகை தந்த பா.ஜ.க. விசாரணை குழுவுடனும் அண்ணாமலை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்தநிலையில் அண்ணாமலை திடீரென டெல்லி செல்வது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
- அனைத்து மாவட்டங்களிலும் சராசரி மழையளவும் எதிர்பார்க்கப்படுகிறது.
- சேலத்தில் 12 சதவீதம் குறைவாக மழை பொழியும்.
கோவை:
கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வடகிழக்கு பருவமழை முன்னறிவிப்பு தொடர்பான ஆய்வு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உள்ள வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம், பயிர் மேலாண்மை இயக்கத்தில் மேற்கொள்ளப்பட்டது.
இதற்காக ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் பசிபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகையையொட்டி உள்ள கடற்பகுதியின் மேற்பரப்பு நீரின் வெப்பநிலை மற்றும் தென்மண்டல காற்றழுத்த குறியீடு ஆகியவற்றை உபயோகித்து, ஆஸ்திரேலிய நாட்டில் இருந்து பெறப்பட்ட மழை மனிதன் எனும் கணினி கட்டமைப்பை கொண்டு இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை முன்னறிவிப்பு பெறப்பட்டது.
அதன்படி சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் கரூர் மாவட்டங்களில் சராசரிக்கு ஒட்டிய மழையும், பிற அனைத்து மாவட்டங்களிலும் சராசரி மழையளவும் எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையின் சராசரி மழையளவு 810 மி.மீ. எதிர்பார்க்கப்படும் மழையளவு 890 மி.மீ. கரூர் மாவட்டத்தில் 15 சதவீதம், கிருஷ்ணகிரியில் 14 சதவீதம், சேலம் 12 சதவீதம் குறைவாக மழை பொழியும்.
விழுப்புரம், திருப்பத்தூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, திண்டுக்கல் மாவட்டங்களில் சராசரியை விட 10 சதவீதம் குறைவாக பொழியும்.
இதர மாவட்டங்களில் 4 முதல் 9 சதவீதம் வரை மழை குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கார் ஒன்றன்பின் ஒன்றாக சாலையில் சென்று கொண்டு இருந்தது.
- ஹேமமாலினி இருந்த கார் முன்னாள் நின்ற காரின் மீது மோதியது.
கோவை:
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஹேமமாலினி எம்.பி தலைமையில் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவினர் இன்று காலை கோவைக்கு விமானத்தில் வந்தனர். பிறகு அவர்கள் 10 காரில் கோவையில் இருந்து கரூருக்கு புறப்பட்டு சென்று கொண்டு இருந்தனர்.
ஒரு காரில் ஹேமமாலினி எம்.பி அனுராக் தாக்கூர் எம்.பி மற்றும் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் சென்று கொண்டிருந்தனர். இவர்களது கார் ஒன்றன்பின் ஒன்றாக சாலையில் சென்று கொண்டு இருந்தது.
கோவை அருகே கே.ஜி.புதூர் சின்னியம்பாளையம் என்ற இடத்தில் சென்றபோது முன்னாள் சென்று கொண்டிருந்த கார் டிரைவர் திடீர் என பிரேக் பிடித்ததால் மற்ற கார்களும் அடுத்தடுத்து நிற்கத் தொடங்கின. அப்போது ஹேமமாலினி இருந்த காரின் பின்னால் ஒரு கார் லேசாக மோதியது.
இதில் ஹேமமாலினி இருந்த கார் முன்னாள் நின்ற காரின் மீது மோதியது. இதனால் காரின் இரண்டு புறமும் சிறிது சேதமடைந்தது. ஆனால் காரில் இருந்தவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த விபத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பிறகு அவர்கள் அனைவரும் மாற்று கார் ஏற்பாடு செய்து கரூர் புறப்பட்டு சென்றனர்.
- கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
- அரசியல் கட்சி தலைவர்கள் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து அறுதல் கூறி வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், கரூரில் மக்களை சந்தித்து உரையாற்றியபோது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்தியாவையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களை அரசியல் கட்சித் தலைவர்கள் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். மேலும், சம்பவம் நடைபெற்றது எப்படி என ஆராய தமிழக அரசு சார்பில் ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் குழுவை கரூருக்கு அனுப்பி வைத்துள்ளது. மத்திய அரசும் அறிக்கை கேட்டுள்ளது.
இந்த நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் (அமைப்பு) மற்றும் எம்.பி.யுமான கே.சி. வேணுகோபால் இன்று கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூற இருக்கிறார். சம்பவம் நடைபெற்ற இடத்திற்கும் செல்ல இருக்கிறார். இதற்கான கோவை விமான நிலையம் வந்தடைந்துள்ளார். அங்கிருந்து கரூர் விரைகிறார்.
- ஹேமமாலினி தலைமையிலான எம்.பி.க்கள் குழு கோவை விமான நிலையம் வந்தனர்.
- இன்று மாலை வரை கரூரில் இருந்து அனைவரையும் சந்தித்து விசாரணை நடத்த உள்ளோம்.
த.வெ.க. தலைவர் விஜய் கரூரில் கடந்த 27-ந் தேதி தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு விசாரணைகளும் நடந்து வருகின்றன.
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆலோசனையின்படி இந்த சம்பவத்தை நேரில் விசாரிக்க எம்.பி.க்கள் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த சம்பவத்துக்கு வழிவகுத்த சூழ்நிலைகளை கரூர் சென்று ஆராயவும், இந்த துயரத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து விரைவில் தனது அறிக்கையை சமர்ப்பிக்கவும் தேசிய ஜனநாயக கூட்டணியின் குழுவை அவர் அமைத்துள்ளார்.
இந்த குழுவில் பிரபல நடிகையும், ஹேமமாலினி எம்.பி. ஒருங்கிணைப்பாளராகவும், எம்.பி.க்கள் அனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா, பிரஜ் லால், ஸ்ரீகாந்த் ஷிண்டே (சிவசேனா), அப்ரஜிதா சாரங்கி, ரேகா சர்மா, புட்டா மகேஷ் குமார்(தெலுங்கு தேசம்) ஆகியோர் உறுப்பினர்களாகவும் உள்ளனர்.
இந்த நிலையில் ஹேமமாலினி தலைமையிலான எம்.பி.க்கள் குழு கோவை விமான நிலையம் வந்தனர். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அனுராக் தாக்கூர் எம்.பி. கூறுகையில்,
இன்று மாலை வரை கரூரில் இருந்து அனைவரையும் சந்தித்து விசாரணை நடத்த உள்ளோம். உயிரிழந்த 41 நபர்களின் குடும்பங்களை தனித்தனியாக சந்தித்து பேச உள்ளோம் என்று கூறினார்.
- வடமாநில பெண்கள் பற்றி தி.மு.க. அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசியது கண்டனத்திற்குரியது.
- கல்விக்காக தி.மு.க. நடத்திய விழா ஒரு நாடகம் போன்று இருந்தது.
கோவை:
கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பிரதமர் மோடி தமிழகத்திற்கு பெருமையும், சிறப்பும் சேர்த்து இருக்கிறார். துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் 5-ந் தேதி கோவை வருகிறார். 4-ந் தேதி சென்னைக்கு வருகிறார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு நடக்கிறது.
வடமாநில பெண்கள் பற்றி தி.மு.க. அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசியது கண்டனத்திற்குரியது. டி.ஆர்.பி. ராஜா மட்டுமின்றி, தி.மு.க. மூத்த தலைவர்களும் வட இந்திய தொழிலாளர் பற்றி அவமரியாதையாக பேசி வருவது என்பது முதல் முறையல்ல.
வேத காலத்தில் இருந்து பெண்களுக்கு என்று சிறப்பான தனி இடம் இந்தியாவில் உள்ளது. இந்திய சுதந்திரம் மறுமலர்ச்சி ஆகியவற்றில் வட இந்திய பெண்களும் பங்களித்து உள்ளனர்.
வட இந்தியாவில் பெண்களில் கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவை பின்தங்கி உள்ளது என்றால் காங்கிரஸ் கட்சியிடம் தான் கேள்வி எழுப்ப வேண்டும். ஏனென்றால் நீண்ட காலம் ஆட்சியில் இருந்து கல்வி ஆகியவற்றுக்கு அடித்தளம் இடுவதற்கு தவறியது காங்கிரஸ் கட்சி தான்.
கடந்த 11 வருடங்களாக அனைவருக்கும் வீடு, அனைவருக்கும் வங்கி கணக்கு, தொழில் துவங்குவதற்கு பெண்களுக்கான சிறப்பு திட்டம் என இந்திய பெண்கள் அடுத்த தளத்திற்கு வேகமாக பயணித்துக் கொண்டிருக்கின்றனர். இப்படி இருக்கும் போது அரசியலுக்காக வடக்கு, தெற்கு என்று அவமானப்படுத்த வேண்டாம் என்பது எங்களுடைய கோரிக்கை ஆகும்.
கல்விக்காக தி.மு.க. நடத்திய விழா ஒரு நாடகம் போன்று இருந்தது. அவர்களுக்கு தேவைப்படக் கூடிய முக்கியமான நபர்களை அழைத்து கல்வியை பற்றி பேச வைத்துள்ளனர்.
பள்ளிக்கூடங்களில் அடிப்படை வசதிகள் இல்லை. ஆசிரியர் பற்றாக்குறை, வகுப்பறைகள் இல்லாமல், மரத்தடியில் பாடம் நடத்தும் நிலை தான் உள்ளது.
பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல், ஜாதி ரீதியான மோதல்கள் இதையும் அவர்கள் சாதனையில் சேர்த்துக் கொள்வார்களா?. இதையெல்லாம் மக்களை ஏமாற்றுவதற்காக துறைக்கு சம்பந்தம் இல்லாதவர்களை கூப்பிட்டு விளம்பரத்திற்காக நாடகத்தை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்..
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து அவரிடம் நிருபர்கள், சிவகார்த்திகேயன் தி.மு.க. அரசை புகழ்ந்து பேசியது தொடர்பாக கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளித்து கூறும்போது, தங்கள் மீதான விமர்சனங்களுக்கு இது போன்ற சினிமா பிரபலங்களை வைத்து பதில் சொல்வது தி.மு.க. அரசிற்கு புதிதல்ல. காலம் காலமாக அவர்கள் இதை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள் என்றார்.
- காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்தடை செய்யப்படும்.
- பாப்பம்பாள் லேஅவுட், பார்க்டவுன், கருணாநிதி நகர், அங்கண்ணன் வீதி.
கோவை:
ரேஸ்கோர்ஸ் துணை மின்நிலையத்தில் நாளை (26ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் அந்த மின்வழித்தடத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்தடை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ரேஸ்கோர்ஸ் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரம் வருமாறு:-
தாமஸ் பார்க், காமராஜர் ரோடு, பந்தய சாலை, அவினாசி ரோடு (அண்ணா சிலை முதல் கலெக்டர் அலுவலகம் வரை), திருச்சி ரோடு (கண்ணன் டிபார்ட்மெண்ட் முதல் ராமநாதபுரம் சிக்னல் வரை), புலியகுளம் ரோடு (சுங்கம் முதல் விநாயகர் கோவில் வரை), ராமநாதபுரம் 80 அடி ரோடு, ஸ்ரீபதி நகர், சுசீலா நகர், ருக்மணி நகர், பாரதி நகர் 1 முதல் 6 வரை, பாப்பம்பாள் லேஅவுட், பார்க்டவுன், கருணாநிதி நகர், அங்கண்ணன் வீதி. மேற்கண்ட தகவலை ரேஸ்கோர்ஸ் மின்வாரிய செயற்பொறியாளர் சுரேஷ் தெரிவித்து உள்ளார்.
- வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
- பூ மார்க்கெட்டில் ரீல்ஸ் எடுப்பதற்காக இளம்பெண்ணும், வீடியோகிராபரும் வந்தனர்.
கோவை:
கோவை நரசிம்ம நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். இவர் ஆந்திராவில் உள்ள சட்டக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
கடந்த 21-ந்தேதி இவர் சிலீவ் லெஸ் சுடிதார் அணிந்து கோவை பூ மார்க்கெட்டிற்கு வந்தார். அவரிடம் அங்கிருந்த பூ கடை உரிமையாளர் ஒருவர் அரைகுறை ஆடை அணிந்தபடி பூ மார்க்கெட்டிற்கு வரக்கூடாது என கூறியதாக தெரிகிறது. இதனால் இளம்பெண்ணுக்கும், வியபாரிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது அந்த இளம்பெண், ஆடை சரியாக தான் இருக்கிறது. உங்களது பார்வையை சரியாக வைத்துக்கொள்ளுங்கள் என வியாபாரியிடம் தெரிவித்தார்.
பூ மார்க்கெட்டில் இருந்த சில வியாபாரிகளும் அந்த இளம்பெண்ணுடன் வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து இளம்பெண் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், ஆடைகுறித்து ஆபாசமாக பேசிய வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் தெரிவித்தார். அதேபோன்று பூ வியாபாரிகள் சங்கத்தினரும் இளம்பெண் மீது புகார் அளித்துள்ளனர். அதில், பூ மார்க்கெட்டில் ரீல்ஸ் எடுப்பதற்காக இளம்பெண்ணும், வீடியோகிராபரும் வந்தனர். வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக இருந்ததால் வீடியோ எடுக்க வேண்டாம் என்றோம். வியாபாரிகளை தவறாக சித்தரித்து உள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை கோவை அண்ணாசிலை பகுதியில் நடந்த மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற கலெக்டர் பவன்குமாரிடம் நிருபர்கள் இதுதொடர்பாக கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறும்போது,
போலீசார் இதுதொடர்பாக புகார் பெற்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
- வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
- விசாரணை முடிந்ததும் சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.
கோவை:
கோவை மாவட்டம் சர்க்கார் சாமக்குளம் அடுத்த கோட்டைபாளையத்தில், தனியார் குழந்தைகள் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த காப்பகத்தில் தாய், தந்தை இல்லாத ஆதரவற்ற 26 குழந்தைகள் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று இந்த காப்பகத்தில் சிறுவர்கள் அனைவரும் அமர்ந்து படித்து கொண்டிருக்கிறார்கள். அப்போது அங்கு வரும் காப்பகத்தில் உள்ளவர், அங்கு படித்து கொண்டிருக்கும் சிறுவர்களில் ஒரு சிறுவனை எழுப்பி விசாரிக்கிறார். பின்னர் அந்த சிறுவனை தனது பெல்ட்டை எடுத்து தாக்குகிறார்.
வலி தாங்க முடியாத அந்த சிறுவனோ நான் எதுவும் செய்யவில்லை என கூறியபடியே ஐயோ.. ஐயோ என கத்துகிறார். ஆனாலும் கொடூர நெஞ்சம் கொண்ட அந்த நபர், சிறுவனின் அலறல் சத்தத்தை பொருட்படுத்தாமல் தொடர்ந்து சிறுவனை தாக்கி கொண்டே இருக்கிறார்.
வலியால் துடித்த சிறுவன் அவரிடம் இருந்து தப்பி கீழே சென்று அமர்ந்துள்ளார். அப்போதும் அந்த நபர், சிறுவனை பெல்ட்டால் சரமாரியாக தாக்குகிறார். இதனை அங்கு இருந்த மற்ற சிறுவர்கள் பார்த்து அச்சத்தில் உறைந்து போய் உள்ளனர்.
இப்படி சிறுவனை அந்த நபர் கொடூரமாக தாக்குவதும், சிறுவன் வலி தாங்க முடியால் அலறி கொண்டும் இருப்பதை அங்கு பணியில் இருந்த மற்றவர்கள் பார்த்து அதனை தடுக்காமல், ஓரமாக நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் காப்பகத்தில் சிறுவனை நபர் ஒருவர் பெல்ட்டால் கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது பொதுமக்களிடையே மிகுந்த அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் உரிய விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், விசாரணையின் முடிவில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கலெக்டர் பவன்குமார் கூறும்போது, சர்க்கார் சாமகுளம் பகுதியில் உள்ள தனியார் காப்பகத்தில் சிறுவன் பெல்டால் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக காவல்துறை மற்றும் கோவை மாவட்ட குழந்தைகள் நலத்துறை இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. விசாரணை முடிந்ததும் சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.






