என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • நேற்று கோவையில் உள்ள மாலில் இட்லி கடை படத்தின் டிரைலர் வெளியானது.
    • இந்த விழாவில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

    தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை படம் அக்டோபர் 1ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதில் நித்யா மேனன், சத்யராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை படத்தின் இசை வெளியீடு விழா நடைபெற்றது.

    நேற்று கோவையில் உள்ள மாலில் இப்படத்தின் டிரைலர் வெளியானது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் நடிகர் தனுஷ் பேசிக்கொண்டிருக்கும்போதே பாதுகாப்பை மீறி ரசிகர் ஒருவர் மேடையில் ஏறி தனுஷை கட்டிபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    அப்போது 'ஒரே ஒரு ஃபோட்டோ..' என ரசிகர் வைத்த கோரிக்கையை ஏற்று தனுஷ்அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார் . பின்னர், பவுன்சர்கள் அந்த ரசிகரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் நிகழ்ச்சியில் சிறுதிநேரம் சலசலப்பு ஏற்பட்டது. 

    • இறுதிப் போட்டிகள் சத்குரு முன்னிலையில் ஆதியோகி வளாகத்தில் நடைபெற உள்ளன.
    • போட்டிகளின் மூன்று நிலைகளிலும் சேர்த்து மொத்த பரிசுத் தொகையாக ₹67 லட்சம் வழங்கப்படுகின்றன.

    ஈஷா கிராமோத்சவத்தின் இறுதிப் போட்டிகள் கோவை ஆதியோகி வளாகத்தில் வரும் 21ம் தேதி, சத்குரு முன்னிலையில் நடைபெற உள்ளன. இதில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், சதுரங்க விளையாட்டு வீராங்கனை கிராண்ட் மாஸ்டர் வைஷாலி மற்றும் பாரா ஒலிம்பிக் வீராங்கனை பவினா படேல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளனர்.

    இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று கோவை பிரஸ் கிளப்பில் நடைபெற்றது. இதில் ஈஷா தன்னார்வலரும் பிரபல கவிஞருமான கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் பங்கேற்று பேசினார். 

    ஈஷா கிராமோத்சவம் வாழ்க்கையில் முழுமையான ஈடுபாடு, அடையாளங்களை கடந்து செல்லும் தன்மை மற்றும் தோல்விகளை ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை ஆகிய பலன்களை விளையாட்டுகளில் ஈடுபடுவதன் மூலம் மக்கள் பெற முடியும்.

    இதன் அடிப்படையில் கிராமப்புற மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக விளையாட்டை கொண்டு வரும் நோக்கில், ஈஷா கிராமோத்சவம் விளையாட்டுத் திருவிழா சத்குருவால் 2004-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

    ஈஷா கிராமோத்சவம்-2025:- 6 மாநிலங்கள், 1 யூனியன் பிரதேசம்

    ஈஷா கிராமோத்சவ திருவிழாவின் 17-ஆவது பதிப்பான "ஈஷா கிராமோத்சவம்-2025" தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா மற்றும் முதல் முறையாக ஒடிசா உள்ளிட்ட 6 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான கைப்பந்து (வாலிபால்) மற்றும் பெண்களுக்கான எறிபந்து (த்ரோபால்) போட்டிகள் நடத்தப்பட்டன.

    இவ்விளையாட்டு போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி தொடங்கி மொத்தம் 183 இடங்களில் நடைபெற்றது. இதில் 35,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 5,472 அணிகள் மூலம் 12,000-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 63,000-க்கும் மேற்பட்ட கிராமப்புற மக்கள் கலந்து கொண்டனர்.

    இந்த விளையாட்டுப் போட்டிகள் தொழில்முறை விளையாட்டு வீரர்களுக்கானதாக இல்லாமல் விவசாயிகள், தூய்மை பணியாளர்கள், மீனவர்கள், தினக்கூலித் தொழிலாளர்கள், இல்லத்தரசிகள் ஆகிய எளிய கிராம மக்களுக்காக நடத்தப்பட்டது.

    ஈஷா கிராமோத்சவம் இறுதிப் போட்டிகள்

    ஈஷா கிராமோத்சவ போட்டிகள் 3 நிலைகளில் நடைபெறும். இதில் கிளஸ்டர் அளவிலான முதற்கட்ட மற்றும் மண்டல அளவிலான இரண்டாம் கட்டப் போட்டிகள் நிறைவடைந்து உள்ளன.

    இந்நிலையில் 6 மாநிலங்களுக்கு இடையேயான மூன்றாம் கட்ட இறுதிப் போட்டிகள் வரும் 21-ஆம் தேதி சத்குரு முன்னிலையில் ஆதியோகி வளாகத்தில் நடைபெற உள்ளன. இதில் 24 வாலிபால் அணிகளும், 18 த்ரோபால் அணிகளும் பங்கேற்க உள்ளன.

    முன்னதாக அரையிறுதிப் போட்டிகள் வரும் 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் நடைபெறும். இதனுடன் மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா கைப்பந்து (வாலிபால்) போட்டியும் நடைபெற உள்ளது.

    சிறப்பு விருந்தினர்கள்

    இதில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், சதுரங்க விளையாட்டு வீராங்கனை கிராண்ட் மாஸ்டர் வைஷாலி மற்றும் பாரா ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவினா படேல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளனர்.

    பரிசுத்தொகை

    ஈஷா கிராமோத்சவ விளையாட்டுப் போட்டிகளின் முதல் 2 நிலைகளிலும் பரிசுத் தொகைகள் வழங்கப்பட்டன. அதே போன்று இறுதிப்போட்டியில் முதல் நான்கு இடங்களில் வெற்றி பெறும் அணிகளுக்கு முறையே ₹ 5,00,000, ₹ 3,00,000, ₹ 1,00,000, ₹ 50,000 பரிசுத்தொகையாக வழங்கப்பட உள்ளன. போட்டிகளின் மூன்று நிலைகளிலும் சேர்த்து மொத்த பரிசுத் தொகையாக ₹67 லட்சம் வழங்கப்படுகின்றன.

    கிராமிய கலை நிகழ்ச்சிகள்

    இந்த திருவிழாவில் விளையாட்டுப் போட்டிகளுடன், நம் தமிழ்நாட்டின், வள்ளி கும்மி, ஒயிலாட்டம், தெருக்கூத்து கேரளாவின் பஞ்சரி மேளம், செண்ட மேளம், தெலுங்கானா பழங்குடி மக்களின் குசாடி நடனம், கர்நாடகாவின் புலி வேஷம் போன்ற பாரம்பரிய கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதனுடன் 30-க்கும் மேற்பட்ட தென்னிந்திய பாரம்பரிய உணவுகளின் பிரத்யேக அரங்குகளும் இடம்பெறவுள்ளன.

    வண்ண கோலப் போட்டி

    மேலும் பொது மக்களுக்கான வண்ண கோலப் போட்டி மற்றும் பல்லாங்குழி, மணி நடை, வழுக்கு மரம் ஏறுதல், பானை உடைத்தல் உட்பட 25க்கும் மேற்பட்ட கேளிக்கை விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற உள்ளன.

    இதில் அனைவரும் கலந்து கொள்ளலாம், அனுமதி இலவசம். கோலப் போட்டியில் முதல் பரிசு பெறுவோருக்கு சத்குருவிடமிருந்து 33,000 ரொக்கப் பரிசு பெறும் வாய்ப்பு உள்ளது கலந்து கொள்ளும் அனைவருக்கும் ஒரு புடவை பரிசாகவும் வழங்கப்பட உள்ளன.

    • தி.மு.க எத்தனை கூட்டங்கள் போட்டாலும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது.
    • பா.ஜ.க அடக்குமுறை செய்கிறது என தேவையில்லாத குற்றச்சாட்டை சுமத்துகிறார்கள்.

    கோவை:

    முன்னாள் கவர்னரும், பா.ஜ.க முன்னாள் தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன், கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாட்டின் துணை ஜனாதிபதியாக, ஒரு தமிழர் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பது தமிழகத்திற்கும், தமிழர்களுக்கும் பெருமை.

    தி.மு.க தமிழருக்கு எந்த ஒரு ஆதரவையும் கொடுக்காததை வரலாறு மன்னிக்காது. முப்பெரும் விழா நடத்தினாலும் நாப்பெரும் விழா நடத்தினாலும் இனிமேல் உங்களுக்கு வெளியேற்றம் தான்.

    தி.மு.க எத்தனை கூட்டங்கள் போட்டாலும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது. நோ ரீ என்ட்ரி தி.மு.க.



    எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவை சந்தித்தது தி.மு.க.வுக்கு பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. அதனால் தான் தி.மு.க.வின் முப்பெரும் விழாவில் ஒரு பதற்றம் தெரிந்தது.

    பா.ஜ.க அடக்குமுறை செய்கிறது என தேவையில்லாத குற்றச்சாட்டை சுமத்துகிறார்கள்.

    உங்கள் அமைச்சரவையில் உள்ள ஊழலை முதலில் பாருங்கள். செந்தில்பாலாஜி எத்தனை நாள் வெளியே இருக்க போகிறார் என்று பார்ப்போம்.

    2026 தேர்தலில் எங்கள் கூட்டணி வெற்றி பெற்று பலமாக ஆட்சி அமைப்போம். தி.மு.க.வின் முப்பெரும் விழாவில் ஏதாவது மக்கள் நலன் சார்ந்த விஷயங்களை பேசினார்களா. ஒன்றும் இல்லை.

    இதுவரை தி.மு.க. குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பதவி கொடுத்து வந்தார்கள். இப்போது விருதையும் அவர்களே பெற்றுக் கொள்கிறார்கள். வாக்கு திருட்டு என காங்கிரஸ் கட்சி சொல்வதே ஒரு நகைச்சுவை தான்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    பேட்டியின் போது, கோவை மாநகர் மாவட்ட பா.ஜ.க தலைவர் ரமேஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • ஈஷா கிராமோத்சவ திருவிழா விளையாட்டுகள் மூலம் கிராமங்களில் ஒற்றுமையை உருவாக்கி வருகிறது.
    • விளையாட தெரியாதவர்களையும் ஈஷா ஊக்குவிக்கிறது.

    மக்கள் இடையே இருக்கும் சாதி, மத மற்றும் இன அடையாளங்களை அழித்து ஒற்றுமையை கொண்டு வர விளையாட்டை ஒரு கருவியாக சத்குரு பயன்படுத்துகிறார் என்றால் அது மிகையல்ல. ஆமாம் சத்குருவால் துவங்கப்பட்ட ஈஷா கிராமோத்சவ திருவிழா விளையாட்டுகள் மூலம் கிராமங்களில் ஒற்றுமையை உருவாக்கி வருகிறது.

    இது குறித்து முன்பு ஒரு முறை சத்குரு கூறுகையில், "ஈஷா கிராமோத்சவம், விளையாட்டின் மூலம் வாழ்க்கையை கொண்டாடும் ஒரு திருவிழா. விளையாட்டு, சமூகப் பிரிவுகளைத் தாண்டி மக்களை ஒன்றிணைக்கும்; இதுதான் விளையாட்டின் சக்தி. ஜாதி, மதம் மற்றும் பிற அடையாளங்களின் எல்லைகளை, உற்சாகமான விளையாட்டு மூலம் அழிக்க முடியும்." எனக் கூறியுள்ளார்.

    அந்த வகையில் இதுகுறித்து, ஈஷா கிராமோத்சவ போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வரும் தஞ்சாவூர் மாவட்டம், பட்டீஸ்வரத்தைச் சேர்ந்த மிதுன் என்ற இளைஞரிடம் பேசினோம்.

    அவர் கூறியதாவது:-

    ஒவ்வொரு வருடமும் ஈஷா கிராமோத்சவம் விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வமாகக் கலந்து கொள்கிறோம். இந்த வருடம் நாங்கள் இரண்டு அணிகள் மூலம் பங்கேற்றோம்.

    ஆனால், ஒரு அணி முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறிவிட்டது. மற்றொரு அணி கிளஸ்டர் அளவில் வெற்றி பெற்று, தஞ்சாவூரில் நடந்த டிவிஷனல் போட்டிக்குத் தகுதி பெற்றது. ஆனால், தஞ்சாவூரில் சில தவிர்க்க முடியாத காரணங்களினால், நாங்கள் அந்தப் போட்டியிலிருந்து வெளியேற வேண்டியதாயிற்று.

    எங்கள் அணியில் விளையாடிய இருவர் காவல்துறையில் வேலை பெற்றுள்ளார்கள். இதனால், விளையாட்டில் ஈடுபடுவது அரசு வேலைவாய்ப்புக்கு உதவும் என்ற நம்பிக்கையில் பல இளைஞர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். வெளியூர்களுக்கு விளையாடச் சென்றாலும், எங்கள் அணியில் வேறு அணியைச் சேர்ந்த வீரர்களைச் சேர்த்து விளையாடுவதில்லை.

    ஈஷா கிராமோத்சவப் போட்டிகளைப் பொறுத்தவரை, ஒரே கிராமத்தைச் சேர்ந்த வீரர்களை ஒன்றிணைத்து விளையாட வைப்பது விதிமுறையாக உள்ளது. இது கிராம இளைஞர்களிடையே ஒற்றுமையை வளர்க்கிறது. விளையாட தெரியாதவர்களையும் ஈஷா ஊக்குவிக்கிறது, இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

    விளையாட்டை நாங்கள் மிகவும் மதிக்கிறோம். அதனால், மது, பாக்கு, புகையிலை, போதைப் பொருட்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதில்லை. எங்கள் அணியில் மூன்று மூத்த வீரர்கள் மட்டுமே உள்ளனர்.

    நாங்கள் மூவரும் இணைந்து, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கைப்பந்து பயிற்சி அளித்து, புதிய வீரர்களை உருவாக்கி வருகிறோம். முன்பு எங்கள் ஊரில் விளையாடுவதற்கு மைதானம் இல்லை. அருகிலுள்ள ஊருக்கு சென்று விளையாடி வந்தோம்.

    எல்லா இளைஞர்களும் ஒற்றுமையாக விளையாட வேண்டும் என்று எங்கள் ஊர்மக்கள் இணைந்து எங்களுக்கு மைதானம் அமைத்துத் தந்துள்ளனர். மைதானத்தில் மின்விளக்கு வசதியும் செய்து தந்துள்ளனர்.

    இதனால், இரவு நேரத்திலும் விளையாட முடிகிறது. அவ்வப்போது போட்டிகளையும் நடத்தி வருகிறோம். எந்தவித பாகுபாடும் பார்க்காமல், விளையாட்டில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம். இதனால், வீரர்கள் மட்டுமல்லாமல், ஊரே ஒற்றுமையாக உள்ளது.

    வெளியிடங்களில் விளையாடச் சென்றால், நுழைவுக் கட்டணமாக ஐநூறு முதல் ஆயிரம் வரை வசூலிக்கிறார்கள். ஆனால், ஈஷா கிராமோத்சவப் போட்டிகளுக்கு ஒரு பைசா கூட கட்டணம் வாங்குவதில்லை. இலவசமாக விளையாட வைக்கிறார்கள். மேலும், வீரர்களுக்கு உணவு ஏற்பாடும் செய்கிறார்கள்.

    இவையெல்லாம் ஈஷாவின் மீது எங்களுக்கு பெரும் மரியாதையை ஏற்படுத்துவதற்கு முக்கியக் காரணம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாம் தமிழர் கட்சி மற்றும் த.வெ.க கட்சி நிர்வாகிகள் இடையே மோதலை உருவாக்கும் வகையில் பேசியதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
    • தொடர்ந்து எங்களது கட்சித் தலைவரை அவமரியாதையாக பேசி வரும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேட்டுப்பாளையம்:

    கோவையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நாம் தமிழர் கட்சி சார்பில் நிலத்தை இழந்தால் பலத்தை இழப்போம் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசினார். அப்போது சீமான், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்து பேசினார். இதற்கு த.வெ.கவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் த.வெ.க தலைவர் விஜய் குறித்து அவதூறாக பேசிய நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் மேட்டுப்பாளையம் நகர செயலாளர் காஜா தலைமையில் நிர்வாகிகள் புகார் மனு அளித்தனர். அந்த புகார் மனுவில் அவர்கள் கூறியிருப்பதவாது:-

    கோவையில் அண்மையில் நடந்த நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில், அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான், த.வெ.க கட்சி தலைவரான நடிகர் விஜய்யை தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தியும், ஒருமையிலும் பேசியதாகவும், இதனால் நாம் தமிழர் கட்சி மற்றும் த.வெ.க கட்சி நிர்வாகிகள் இடையே மோதலை உருவாக்கும் வகையில் பேசியதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

    தொடர்ந்து எங்களது கட்சித் தலைவரை அவமரியாதையாக பேசி வரும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மோதல் போக்கை உருவாக்கும் வகையில் பேசி வரும் அவர் மீது சட்டம் ஒழுங்கு சீர்குலைவு பிரச்சனை ஏற்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ஒரு சமூகமாக நாம் பல்வேறு செயல்களை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
    • ஈரோடு அருகே இளைஞர்கள் சிலர் குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட்டுள்ளனர்.

    இளைஞர்கள் போதை பழக்கங்களுக்கு பின்னால் செல்வது என்பது தான், இன்று நம் சமூகத்திற்கு முன் இருக்கும் மாபெரும் சவால். சட்டங்கள் மற்றும் காவல்துறை மூலம் போதை வஸ்துக்களின் புழக்கத்தை வேண்டுமானால் ஓரளவிற்கு கட்டுப்படுத்த முடியும்.

    ஆனால் இது முழுமையான தீர்வாக இருக்க முடியாது. இளைஞர்கள் அதனை நாடாமல் இருக்க செய்வதே, சரியான தீர்வாக இருக்க முடியும். இதற்கு ஒரு சமூகமாக நாம் பல்வேறு செயல்களை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

    இந்நிலையில், போதை வஸ்துக்களை இளைஞர்கள் நாடாமல் இருக்க, விளையாட்டை ஒரு தீர்வாக ஈஷாவின் கிராமோத்சவம் முன்னெடுப்பு முன் வைக்கிறது. போதையில் இருந்து விடுபட, ஈடுபடாமல் இருக்க விளையாட்டு எப்படி தீர்வாக இருக்க முடியும் என்ற பொதுவான கேள்வி நம் எல்லாருக்கும் எழ வாய்ப்பு உள்ளது. ஆனால் ஈஷா கிராமோத்சவம் விளையாட்டுப் போட்டிகளால், ஈரோடு அருகே இளைஞர்கள் சிலர் குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட்டுள்ளனர்.

    இதுகுறித்து, ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே ஒருசேரிபுதூரைச் சேர்ந்த வாலிபால் வீரர் பூபதி என்ற இளைஞரிடம் பேசினோம். "எங்கள் ஊரில் இரண்டு வாலிபால் அணி உருவாக்கினோம். அதில் ஒரு அணிக்கு நான் கேப்டனாக உள்ளேன்.

    15 வருஷமாக வாலிபால் விளையாடுகிறேன். நான் சிவில் சைட் இன்ஜினியராக வேலை செய்கிறேன். எங்க அப்பா வாலிபால் விளையாண்டு வந்தாங்க. அதை நானும் பின்பற்றி விளையாடி வருகிறேன். விளையாடுவதால் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியுது.

    ஈஷா கிராமோத்சவம் போட்டிகளுக்கு முன்பு எங்க ஊர்ல ரொம்ப காலமாக விளையாட்டில் ஆர்வமில்லாம இருந்தோம். அந்த சமயத்துல எங்க பசங்க சிலர் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகிட்டாங்க. ஈஷா கிராமோத்சவம் போட்டி அறிவிப்புக்கு பிறகு, எங்க ஊர் இளைஞர்களைத் திரட்டி 2 வாலிபால் டீம் அமைத்தோம். அதுல ஒரு டீமுக்கு நான் கேப்டனானேன்.

    ஈஷா கிராமோத்சவம் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள எங்க ஊர் இளைஞர்கள் ரொம்ப ஆர்வம் காட்டுனாங்க. இந்தப் போட்டிகளில் கலந்து கொள்வதால், நிறைய பசங்க குடிப்பழக்கத்தில் இருந்து வெளியில் வந்துட்டாங்க. ஈஷா விளையாட்டுப் போட்டி இளைஞர்களின் வாழ்க்கையை மாத்திடுச்சு. இதற்கு ஈஷாவுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறோம்.

    இந்த வருஷம் அந்தியூரில் நடைபெற்ற கிளஸ்டரில் ஜெயித்து விட்டோம். அதன் பிறகு, கோவையில் நடந்த மண்டல அளவிலான போட்டியில் தோற்று விட்டோம். போன வருஷம் மண்டல அளவில் ரன்னர் வந்த நாங்க, இந்த வருஷம் காலிறுதியில் தோற்றது வருத்தமா இருக்கு.

    ஆனாலும், என்ட்ரன்ஸ் பீஸ் இல்ல. போக்குவரத்து செலவுக்கு ஈஷா பணமும் தர்றாங்க. ஈஷாவோட இதுபோன்ற சேவைகள் தான், மக்கள் கிட்ட ஈஷாவை கொண்டு போய் சேர்க்குதுன்னு நினைக்கிறேன்.

    தொடர்ந்து கிளஸ்டர் போட்டிகளில் ஜெயிக்கும் எங்கள் ஊரில் கிளஸ்டர் போட்டிகள் நடத்த வேண்டும். அப்படி நடத்தும் போது, எங்க ஊர்ல இருக்கும் விளையாட்டு ஆர்வமுள்ள பெண்களும் த்ரோபால் போட்டிகளில் பங்கேற்பாங்க. அதேபோல், ஆண்டுதோறும், ஒவ்வொரு கிராமத்தில் கிளஸ்டர் போட்டிகள் நடத்துனா, கிராமப்புற மக்களிடையே ஈஷா கிராமோத்சவம் பல மாற்றங்களை கொண்டு வரும். என் அனுபவத்தில் மற்ற போட்டிகளுக்கு போனால் வீட்டில் அனுமதிப்பதில்லை.

    ஈஷா போட்டிகளுக்கு வீட்டில் மட்டுமில்ல. சமுதாயத்திலும் நல்ல பெயர் உள்ளது. அதனால, ஈஷா கிரோமத்சவம் போட்டிகளில் விளையாட எங்களுக்கு நிறைய ஆதரவு கிடைக்குது." என்றார்.

    • கரியரின் உச்சத்தையும், வருமானத்தையும் விட்டுவிட்டு அரசியலுக்கு வர சொன்னது யார்?
    • இவரால் மழையில் பேசமுடியாது காகிதம் நனைந்திடும்

    தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள விஜய் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். தனது கரியரின் உச்சத்தையும், வருமானத்தையும் உதறிவிட்டு அரசியலுக்கு வந்ததாக விஜய் தெரிவித்தார்.

    இந்நிலையில், கோவை ராஜவீதி தேர்நிலை திடலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் "நிலத்தை இழந்தால் பலத்தை இழப்போம்" என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    இந்த பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.

    தெற்கு ஆசியா முழுவதும் பரவி வாழ்ந்தவர்கள் தமிழர்கள். உலகத்தின் முதல் மொழி தமிழ், முதல் மானுடன் தமிழன். இந்தியாவை இந்துக்கள் நாடு என்று கூறுவை ஏற்க இயலாது. மொழியை இழந்து விட்டால் உன் இனத்தை, அடையாளத்தை இழந்து விடுவாய்.

    எல்லா மொழியும் மனிதர்களால் பேசப்பட்டது. ஆனால் தமிழ்மொழி இறைவனால் பேசப்பட்டது. கோவில்களில் இருந்து தமிழ் இன்று வெளியேற்றப்பட்டுள்ளது. குடமுழுக்கை தமிழில் நடத்த போராட வேண்டிய நிலை உள்ளது.

    நாங்கள் தளபதி, தளபதி என்று கத்த வந்த கூட்டம் அல்ல. இந்த தமிழ்நாட்டின் தலைவிதியை மாற்ற வந்த கூட்டம் என்று சொல்ல வேண்டும். நாங்கள் கூடி கலைகிற காகங்கள் அல்ல. கூடி பெய்கிற மேகங்கள் என்று காட்ட வேண்டும்.

    தம்பி விஜய் தனது கரியரின் உச்சத்தை விட்டுவிட்டு, வருமானத்தை விட்டுவிட்டு வருகிறேன் என கூறுகிறார். யார் அவரை அரசியலுக்கு அழைத்தார்கள்?. வீட்டு வாட்ச்மேன் கூட அரசியலுக்கு அழைக்கவில்லை.

    என் அன்பு சகோதரர் அஜித்தும், ரஜினிகாந்தும் தங்கள் புகழை வியாபாரம் செய்ய விரும்பவில்லை. சேவை செய்ய வந்தால் சேவை செய்.

    எம்.ஜி.ஆர். 1½ மணி நேரமானாலும் எழுதி வைக்காமல் படிப்பார். விஜயகாந்த் மனதில் இருந்து மக்களின் மொழியின் பேசுவார். ஸ்டாலின் கூட துண்டு சீட்டு தான். ஆனால் எடப்பாடியும், தம்பி விஜயும் தான் முழு சீட்டு. இவர்களால் மழையில் பேச முடியாது. ஏனெனில் சீட் நனைந்து விடும். பார்த்து எழுதும் மாணவன், படித்து எழுதும் மாணவன் இருவரில் யார் சிறந்தவரென நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்.

    தமிழகத்திற்கு 1½கோடி வட மாநிலத்தவர்கள் வந்து விட்டனர். இவர்கள் ஒருவருக்கு ரூ.10 ஆயிரம் சம்பளம் என்றாலும், ஒரு மாதத்திற்கு ரூ.15 ஆயிரம் கோடி அவர்களின் மாநிலத்திற்கு செல்கிறது. ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கோடியாகும். ஆனால் தமிழகத்தில் ஒரு ஆண்டுக்கு டாஸ்மாக் வருமானம் ரூ.50 ஆயிரம் கோடி தான்.

    நீ உழைப்பில் இருந்து வெளியேறி விட்டதால் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கோடி வெளிமாநிலத்திற்கு செல்கிறது. பீகாரை சேர்ந்தவர்களுக்கு மட்டும் 6½ லட்சம் ஓட்டு உள்ளது. இவர்கள் எல்லாம் பாஜக ஆதரவாளர்கள். இதை ஓட்டுக்காக கூறவில்லை. இதை சொல்வது எனது கடமை.

    விஜய் தமிழர் என்றோ, தமிழ் என்றோ, தமிழர் உரிமை, தமிழ் வளம் என்று பேசியுள்ளாரா?. பேசமாட்டார். எல்லோரும் ஒன்று என்பவர், ஆந்திராவில் கட்சியை ஆரம்பிக்க வேண்டியது தானே?. எதையாவது பேச வேண்டியது. ஏனென்றால் விஜய் பிரசாரத்தில் தனக்கு எழுதி கொடுப்பதை பேசுகிறார். அவருக்கு ஆந்திராக்காரர் தான் எழுதி கொடுக்கிறார்.

    விஜய் சாத்தியமில்லாததை சொல்லமாட்டோம் என்கிறார். எதை செய்வார். ஒன்றும் செய்யமாட்டார். அவரது பேச்சு தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா பகவந்த் கேசரி என்ற படத்தில் பெண்கள் பாதுகாப்பு நோ காம்பரமைஸ் என்பார். அந்த படத்தை டப்பிங் செய்து ஜனநாயகன் எடுத்து வரும் விஜய், பாலகிருஷ்ணா வசனம் பேசுவது போன்று இப்போது தமிழக மக்கள் மத்தியில் ஆவேசமாக பேசிவருகிறார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து கோவையில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை சீமான் அறிவித்தார். அதன்படி கோவை தெற்கு தொகுதியில் பேரறிவாளன், கவுண்டம்பாளையம்-கலாமணி ஜெகநாதன், சிங்காநல்லூர்-நேரு, வால்பாறை-உமாதேவி, மேட்டுப்பாளையம்-கோபாலகிருஷ்ணன், தொண்டாமுத்தூர்-ரஜிப்பூர் நிஷா ஆகியோரை அறிமுகம் செய்து வைத்தார். நிகழ்ச்சியின் முடிவில் கட்சியின் தொண்டரின் பெண் குழந்தைக்கு ஈழ துவாரகா என பெயர் சூட்டினார்.

    • ரஜினி, அஜித் வந்தாலும் கூட்டம் வரத்தான் செய்யும்.
    • நான் இப்போது போதிப்பது உங்களுக்கு புரியாது, பாதிக்கும்போது உங்களுக்கு தெரியும்.

    கோவை:

    கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * விஜய்க்கு வரும் கூட்டத்தை விட நயன்தாராவுக்கு இன்னும் அதிக கூட்டம் வரும்.

    * ரஜினி, அஜித் வந்தாலும் கூட்டம் வரத்தான் செய்யும்.

    * நான் இப்போது போதிப்பது உங்களுக்கு புரியாது, பாதிக்கும்போது உங்களுக்கு தெரியும்.

    * நான் இப்போது பேசுவது உங்களுக்கு வேடிக்கையாகத்தான் தெரியும்.

    * உங்கள் பிள்ளைகளுக்கு மலையை வெட்டி, மணலாக்கி, கல்லாக்கி, பெரிய வீட்டை வைத்துவிட்டு போகணும்னு நினைக்கிறீர்கள். நான் இந்த நாட்டை என் பிள்ளைகளுக்கு வாழறதுக்காக வைத்துவிட்டு போகணும்னு நினைக்கிறேன்.

    * நீங்க காசை சேர்த்துவைத்துவிட்டு போகணும்னு நினைக்கிறீங்க. நான் சுவாசிக்க நல்ல காற்றை வைத்துவிட்டு சாகணும்னு நினைக்கிறேன்.

    * கனிம கொள்ளையை தடுக்க ஒரே வழி என்னை அதிகாரத்தில் அமர வைப்பதுதான். வேறு வழியே கிடையாது

    * கனிம கொள்ளை குறித்து என்கிட்ட கேட்குறீங்க.. நேற்று ரொம்ப கூட்டம் வந்ததுல அவர் கிட்ட கேட்க வேண்டியதுதானே என்றார்.

    • ஈஷா கிராமோத்சவத்தில் மிகவும் பாதுகாப்பான சூழல் இருக்கிறது.
    • ஒரு பந்து உலகையே மாற்றும் என சத்குரு கூறி இருப்பார்கள்.

    ஒரு பந்து உலகை மாற்றும் என்ற சத்குருவின் வார்த்தைகள், எனக்குள் மற்றும் என்னை சுற்றி இருக்கும் பெண்களுக்குள் ஏற்படுத்திய மாற்றத்தைக் கண்ட பிறகு, இது உலகையே மாற்றும் வல்லமை உடையது என்பதை உணர்ந்தேன் என ஈஷா கிராமோத்சவ அனுபவம் பகிர்கிறார் ஆயிஷா.

    ஈஷா கிராமோத்சவம் தன்னுடைய வாழ்விலும், கிராமத்திலும் உருவாக்கிய மாற்றங்கள் குறித்து நெல்லூர் மாவட்டம், கோட்டால் கிராமத்தை சேர்ந்த ஆயிஷா நம்மிடம் கூறுகையில், "ஈஷாவில் இருந்து விளையாட வாருங்கள் என்று அழைத்த போது, நான் மிகவும் தயங்கினேன், சின்ன வயதில் விளையாடியது பிறகு விளையாட்டு என்பதே என் வாழ்வில் இருந்தது கிடையாது.

    ஆனால் இது கிராம மக்களுக்கான குறிப்பாக பெண்களுக்கானது எனக் கூறிய போது, என் வீட்டில் இருந்த அம்மா, பெரியம்மா, அண்ணி ஆகியோர் இணைந்து விளையாடத் துவங்கினோம். முதல் நாள் அந்த பந்து என் கைகளுக்கு வந்த உடனே விளையாட்டின் உற்சாகம் தொற்றிக் கொண்டது. நேரம் சென்றது தெரியாமல் நாங்கள் விளையாடினோம்.

    எங்களின் கிராமத்தில் இருந்து முதலில் என்னுடைய குடும்பத்தில் இருந்து மட்டும் போட்டிகளில் கலந்து கொண்டோம். அதில் 13 வயது முதல் கிட்டத்தட்ட 60 வயது வரை உள்ளவர்கள் இருந்தனர். என் அம்மாவுக்கு 50 வயது, பெரியம்மாவிற்கு 60 வயது, என் உறவுக்கார சிறுமிக்கு 18 வயது. நாங்கள் அனைவரும் சேர்ந்து விளையாடினோம். நாங்கள் போட்டிகளில் தோற்றாலும் இப்படி விளையாடியது எங்களுக்குள் பெரிய மகிழ்ச்சியை தந்தது.

    என் பெரியம்மாவிற்கு ஒரு டிபன் கடை உள்ளது, அவரின் வாழ்க்கை முழுவதும் கடையில் வேலை செய்வது, பிறகு வீட்டில் வேலை செய்வது என்றே பார்த்து இருக்கிறேன். நாங்கள் விளையாடிய போது அவரின் முகத்தில் பெரிய புத்துணர்ச்சியையும், உற்சாகத்தையும் பார்த்தேன்.

    பெண்கள் வீட்டை விட்டு வெளியே விளையாடும் போது பாதுகாப்பு ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கும், அதனாலேயே வெளியே விளையாட அனுமதிப்பதில்லை. ஆனால் ஈஷா கிராமோத்சவத்தில் மிகவும் பாதுகாப்பான சூழல் இருக்கிறது.

    நாங்கள் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள், எங்கள் கிராமத்தில் இருந்து எங்கள் உறவினர்கள் இணைந்து ஒரு அணியை உருவாக்கி விளையாடினோம். ஆனால் அடுத்த ஆண்டே மற்ற சமூகத்தை சேர்ந்த பெண்களும் எங்கள் அணியில் இணைந்தனர். சமூக வேற்றுமை என்பது எல்லாம் கடந்து நாங்கள் அனைவரும் ஒரே அணியாக விளையாடினோம்.

    தனிப்பட்ட வகையில் நான் உணர்ச்சி ரீதியான கஷ்டங்களைச் சந்தித்தேன். ஆனால் விளையாட ஆரம்பித்தவுடன், அப்படி ஒரு பிரச்சனை இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டது. தற்போது வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் இலகுவாகவும் மாறி உள்ளது.

    ஒரு பந்து உலகையே மாற்றும் என சத்குரு கூறி இருப்பார்கள். அந்த பந்து என் கைகளுக்கு வருவதற்கு முன்பு அது எனக்கு புரியவில்லை, ஆனால் தற்போது ஒரு விளையாட்டு எப்படி எனக்குள் மாற்றத்தையும் மகிழ்ச்சியையும் தருகிறது, சமூக பிரிவினைகளை கடந்து மக்களை ஒன்றிணைக்கிறது, உடல் ரீதியாக நம்மை உறுதியாக வைக்க உதவுகிறது என்பதை எல்லாம் பார்க்கும் போது, பந்து உலகை மாற்றும் என்ற சத்குருவின் வார்த்தைகள் எவ்வளவு உண்மை என்பதை நிஜத்தில் அனுபவபூர்வமாக பார்த்துக் கொண்டிருகிறேன்." எனக் கூறினார்.

    • தமிழகத்தில் கடந்த 6 மாதத்தில் 6 காவலர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
    • திமுக ஆட்சியில் கோவைக்கு பெரிய திட்டம் எதுவும் வரவில்லை.

    கோவை மாவட்டம், சிங்காநல்லூர் தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர், தமிழ்நாட்டில் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லை" என்றார்.

    இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு கூறியதாவது:-

    தமிழகத்தில் கடந்த 6 மாதத்தில் 6 காவலர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் காலவர்களுக்கே பாதுகாப்பு இல்லை.

    திமுக ஆட்சியில் கோவைக்கு பெரிய திட்டம் எதுவும் வரவில்லை. மக்கள், தொழிலை பற்றி கவலை இல்லாத அரசாக திமுக உள்ளது.

    போதைப் பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்த திமுக அரசு தவறி விட்டது. மின் கட்டண உயர்வை கேட்டாலே ஷாக் அடிக்கிறது. தொழில் துறையினர் வேதனை தெரிவிக்கின்றனர்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

    • சத்குருவின் ஈஷா அறக்கட்டளை ஆண்டுதோறும் கிராம மக்களுக்கான விளையாட்டுத் திருவிழாவை ஈஷா கிராமோத்சவம் என்ற பெயரில் நடத்தி வருகிறது.
    • ஈஷா கிராமோத்சவம், கிராமத்து மண்ணில் இளைய மனங்களில் கனவுகளை விதைத்து, இளைஞர்களின் திறமையை வெளிக்கொணர்கிறது.

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் கூக்கால் கிராமம் அமைந்துள்ளது. சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் பலருக்கும் பரீட்சையமான இடம். சுற்றுலா சார்ந்த தகவல்களையும் பயண அனுபவங்களையும் புது இடங்களையும் பகிரும் 'டிராவல் வீ-லாகர்ஸ்' மூலம் இந்த கிராமம் பிரபலமானது. இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் கூக்கால் கிராமத்து இளைஞரின் ஆசையை விவரிக்கிறது இந்தக் கட்டுரை.

    விளையாட்டு மூலம் கிராம மக்கள் மத்தியில் உற்சாகம், கொண்டாட்டம், ஈடுபாடு, ஒற்றுமை, உடல் உறுதி மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றை உருவாக்கும் நோக்கில், சத்குருவின் ஈஷா அறக்கட்டளை ஆண்டுதோறும் கிராம மக்களுக்கான விளையாட்டுத் திருவிழாவை ஈஷா கிராமோத்சவம் என்ற பெயரில் நடத்தி வருகிறது.

    அடிப்படையாக மக்களின் தினசரி வாழ்க்கையில் விளையாட்டை ஒரு அங்கமாக கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில் இந்த கிராமோத்சவம் நடத்தப்படுகிறது.

    இந்த ஈஷா கிராமோத்சவ விளையாட்டுப் போட்டிகளில் கடந்த 3 வருடங்களாக விளையாடி வரும் மணி என்ற கூக்கால் கிராமத்து இளைஞர் இது குறித்து நம்மிடம் கூறுகையில், "கொடைக்கானலில் இருந்து 48 கிலோ மீட்டர் தாண்டி கூக்கால் ஊராட்சியைச் சேர்ந்தவன் நான். கொடைக்கானல் சுற்றுவட்டாரத்துல ஒரு ஊருக்கு 3 டீம் இருக்கு. 4 வயசுல இருந்து நான் வாலிபால் விளையாடுறேன்.

    திண்டுக்கல் சின்னாளப்பட்டியில பிளஸ் 2 முடிச்சேன். இப்ப விவசாயம் பாக்குறேன். தினமும் தீவிரமா பிராக்டிஸ் பண்ணுவேன். எனக்கு இப்போ 37 வயசாச்சு, திருமணமாகி 3 குழந்தைகள் இருக்காங்க. என் வயசு உடையவங்க எல்லாரும் விளையாடுறத நிறுத்திட்டாங்க. நான், சின்ன பசங்களுக்கு வாலிபால் சொல்லித் தந்துட்டு, அப்டியே விளையாடிட்டு வறேன்.

    எங்க டீம் சின்னாளப்பட்டியில் கிளஸ்டர்ல ஜெயிச்சோம். ஆனா, மதுரைல நடந்த டிவிஷனல் மேட்ச்ல தோத்துட்டோம். கிராமத்துல உள்ளவங்கள ஊக்குவிச்சு, விளையாட்டு வீரர்கள உருவாக்கும் நோக்கத்துல ஈஷா கிராமோத்சவம் விளையாட்டுப் போட்டிகள் நடத்துறது நல்ல விஷயம். குறிப்பா, என்ட்ரன்ஸ் பீஸ், வேற பீஸ்ன்னு எதுவுமே எங்ககிட்ட எதுவும் அவங்க வாங்கல.

    எங்க டீம் 3 வருஷமா ஈஷா கிராமோத்சவம் போட்டிகளில் கலந்துக்குறோம். போன ரெண்டு வருஷமா கிளஸ்டர்லயே தோத்துட்டோம். இந்த வருஷம், கிளஸ்டர்ல ஜெயிச்சு, டிவிஷ்னல் வரைக்கும் போயிருக்கோம். கிராமத்துல திறமை இருக்குற விளையாட்டு வீரர்களை ஈஷா கண்டெடுக்குது.

    கிளஸ்டர், மண்டலப் போட்டிகளில் ஜெயிச்சு, அப்படியே கோவை ஈஷா ஆதியோகி வளாகத்துல பைனல்ஸ் விளையாடனும்ன்னு ஆசை. இந்த வருஷம் நடக்கல. வரும் வருஷங்கள்ல தீவிரமா முயற்சி செய்வோம். விளையாட்டு ஆர்வம் குறையும்போது, பசங்க போதை, கஞ்சா போன்ற வழியில போயிடறாங்க. குரூப்பா சேர்ந்து விளையாடும்போது, அந்த எண்ணம் மாறிடுது. விளையாடிட்டே இருக்குறதால உடம்ப ஆரோக்கியமா வெச்சுக்க முடியுது" என்றார்.

    ஈஷா கிராமோத்சவம், கிராமத்து மண்ணில் இளைய மனங்களில் கனவுகளை விதைத்து, இளைஞர்களின் திறமையை வெளிக்கொணர்கிறது. மணி போன்ற இளைஞர்களுக்கு விளையாட்டின் மூலம் உற்சாகமும் நம்பிக்கையும் பரப்புகிறது இவ்விளையாட்டுத் திருவிழா.

    • அ.தி.மு.க ஆட்சியில் தான் சர்வதேச விளையாட்டு வீரர்களுக்கு விடுதிகள் கட்டி கொடுக்கப்பட்டது.
    • அ.தி.மு.க ஆட்சியில்தான் விளையாட்டு வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் உதவிதொகை வழங்கப்பட்டது.

    கோவை:

    கோவையில் உள்ள தனியார் ஓட்டலில், அ.தி.மு.க. விளையாட்டு அணி சார்பில் கிரிக்கெட் வீரர்களுக்கு கிரிக்கெட் உபரகணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    விழாவில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு கிரிக்கெட் வீரர்களுக்கு உபகரணங்களை வழங்கினார்.

    விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    தமிழ்நாட்டில் விளையாட்டு என்பது நமது வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருக்கின்றது. உடல் கட்டுடன் இருப்பதற்கும், மன கட்டுப்பாட்டிற்கும் விளையாட்டு முக்கியமானதாக உள்ளது. எனவே தான் அ.தி.மு.க ஆட்சியில் கிராமத்தில் இருந்து நகரம் வரை இளைஞர்களுக்காக விளையாட்டு மைதானங்களை அமைத்தோம். அதற்கு தேவையான விளையாட்டு உபகரணங்களையும் வழங்கினோம்.

    அ.தி.மு.க ஆட்சியில் தான் விளையாட்டு வீரர்களுக்கு அரசு துறை வேலைவாய்ப்பில் 3 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அ.தி.மு.க ஆட்சியில் தான் முதல் முதலில், முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.

    இதனை ஆங்காங்கே உள்ள இளைஞர்களும், விளையாட்டு வீரர், வீராங்கனைகளும் பயன்படுத்தி கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது. விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு முதல்வர் கோப்பை வழங்கப்பட்டது. இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் மற்றும் ஊக்கத்தொகைகளும் வழங்கப்பட்டன. சர்வதேச அளவில் வீரர்களை உருவாக்குவதற்காக அ.தி.மு.க ஆட்சியில் தான் சர்வதேச விளையாட்டு வீரர்களுக்கு விடுதிகள் கட்டி கொடுக்கப்பட்டது.

    அ.தி.மு.க ஆட்சியில்தான் விளையாட்டு வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் உதவிதொகை வழங்கப்பட்டது. நகரங்கள், முதல் கிராமங்கள் வரை அந்தந்த பகுதியை சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினோம்.

    தொடர்ந்து அ.தி.மு.க.வில் விளையாட்டு பிரிவு அணி உருவாக்கப்பட்டுள்ளது. இளம் வீரர்கள் அனைவரும் இணைந்து தங்களது திறமையை வெளிப்படுத்தி வெற்றிபெற வாழ்த்துகள். அ.தி.மு.க.வில் உள்ள விளையாட்டு அணியிலும் வீரர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளது. இதனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×