என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அ.தி.மு.க ஆட்சியில் தான் விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 3% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது - இ.பி.எஸ்.
- அ.தி.மு.க ஆட்சியில் தான் சர்வதேச விளையாட்டு வீரர்களுக்கு விடுதிகள் கட்டி கொடுக்கப்பட்டது.
- அ.தி.மு.க ஆட்சியில்தான் விளையாட்டு வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் உதவிதொகை வழங்கப்பட்டது.
கோவை:
கோவையில் உள்ள தனியார் ஓட்டலில், அ.தி.மு.க. விளையாட்டு அணி சார்பில் கிரிக்கெட் வீரர்களுக்கு கிரிக்கெட் உபரகணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
விழாவில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு கிரிக்கெட் வீரர்களுக்கு உபகரணங்களை வழங்கினார்.
விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
தமிழ்நாட்டில் விளையாட்டு என்பது நமது வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருக்கின்றது. உடல் கட்டுடன் இருப்பதற்கும், மன கட்டுப்பாட்டிற்கும் விளையாட்டு முக்கியமானதாக உள்ளது. எனவே தான் அ.தி.மு.க ஆட்சியில் கிராமத்தில் இருந்து நகரம் வரை இளைஞர்களுக்காக விளையாட்டு மைதானங்களை அமைத்தோம். அதற்கு தேவையான விளையாட்டு உபகரணங்களையும் வழங்கினோம்.
அ.தி.மு.க ஆட்சியில் தான் விளையாட்டு வீரர்களுக்கு அரசு துறை வேலைவாய்ப்பில் 3 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அ.தி.மு.க ஆட்சியில் தான் முதல் முதலில், முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
இதனை ஆங்காங்கே உள்ள இளைஞர்களும், விளையாட்டு வீரர், வீராங்கனைகளும் பயன்படுத்தி கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது. விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு முதல்வர் கோப்பை வழங்கப்பட்டது. இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் மற்றும் ஊக்கத்தொகைகளும் வழங்கப்பட்டன. சர்வதேச அளவில் வீரர்களை உருவாக்குவதற்காக அ.தி.மு.க ஆட்சியில் தான் சர்வதேச விளையாட்டு வீரர்களுக்கு விடுதிகள் கட்டி கொடுக்கப்பட்டது.
அ.தி.மு.க ஆட்சியில்தான் விளையாட்டு வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் உதவிதொகை வழங்கப்பட்டது. நகரங்கள், முதல் கிராமங்கள் வரை அந்தந்த பகுதியை சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினோம்.
தொடர்ந்து அ.தி.மு.க.வில் விளையாட்டு பிரிவு அணி உருவாக்கப்பட்டுள்ளது. இளம் வீரர்கள் அனைவரும் இணைந்து தங்களது திறமையை வெளிப்படுத்தி வெற்றிபெற வாழ்த்துகள். அ.தி.மு.க.வில் உள்ள விளையாட்டு அணியிலும் வீரர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளது. இதனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.






