என் மலர்tooltip icon

    சென்னை

    • பல்லடத்தில், “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” தி.மு.க. மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு மாபெரும் எழுச்சியோடு வெற்றிகரமாக நடைபெற்றது.
    • செங்கிப்பட்டியில் “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” தி.மு.க. டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு மாலை 4 மணி அளவில் நடைபெறும்.

    சென்னை:

    தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கடந்த மாதம் 29-ந் தேதி திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில், "வெல்லும் தமிழ்ப் பெண்கள்" தி.மு.க. மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு கறுப்பு சிகப்பு மகளிர் அணி படையின் மாபெரும் எழுச்சியோடு வெற்றிகரமாக நடைபெற்றதைத் தொடர்ந்து வருகிற 19-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் "வெல்லும் தமிழ்ப் பெண்கள்" தி.மு.க. டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு 26.01.2026 திங்கட்கிழமை அன்று மாலை 4 மணி அளவில் நடைபெறும்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றிட கழக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு முன்னிலையில், கழக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி, எம்.பி., தலைமையில் கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., துணைப் பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி, திருச்சி சிவா, எம்.பி., ஆ.ராசா, எம்.பி., அந்தியூர் ப.செல்வராஜ், எம்.பி., மு.பெ.சாமிநாதன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி- கழக மகளிர் அணித் தலைவர் விஜயா தாயன்பன், மகளிர் அணிச் செயலாளர் ஹெலன் டேவிட்சன், மகளிர் தொண்டர் அணிச் செயலாளர் நாமக்கல் ப.ராணி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களுக்கு மட்டும் ரூ.200 கோடி ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை.
    • ரூ.200 கோடி நிலுவைத் தொகையை உடனடியாக அரசு வழங்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஆவின் நிறுவனம் பசும் பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.35, எருமைப்பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.44 என்ற அளவில் ஆவின் நிறுவனத்தால் வழங்கப்பட்டு வந்த கொள்முதல் விலையுடன் சேர்த்து லிட்டருக்கு ரூ.3 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழக அரசு அறிவித்தது. ஆனால், இந்த ஊக்கத்தொகை சரியாக வழங்கப்படவில்லை.

    கடந்த செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களுக்கு மட்டும் ரூ.200 கோடி ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை. இதனால் ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்கும் 4 லட்சம் உழவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    உழவர்களை ஏமாற்றுவதையே தி.மு.க. அரசு கொள்கையாக வைத்துக் கொண்டிருக்கக்கூடாது. உழவர் பெருமக்கள் உழவர் திருநாளான பொங்கல் திருநாளை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.200 கோடி நிலுவைத் தொகையை உடனடியாக அரசு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.
    • வழக்கம்போல அனைத்து புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி வழங்கப்பட உள்ளது.

    தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI) நடத்தும் இந்த 49வது புத்தகக் கண்காட்சி, வரும்ஜனவரி 8 முதல் ஜனவரி 21 வரை நடைபெற உள்ளது.

    சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெறவுள்ள புத்தகக் கண்காட்சியை, வரும் 8ம் தேதி அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

    புத்தக கண்காட்சியில், அனைத்து நாட்களிலும் காலை 11:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர். இந்த ஆண்டு சாதனை அளவாக சுமார் 1,000 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.

    சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற நாடுகளின் தமிழ் பதிப்பகங்கள் மற்றும் பென்குயின் (Penguin), ஹார்ப்பர் காலின்ஸ் (HarperCollins) போன்ற சர்வதேச நிறுவனங்களும் பங்கேற்கின்றன.

    வழக்கம்போல அனைத்து புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. தினமும் மாலையில் அறிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் சிந்தனையாளர்களின் சொற்பொழிவுகள் நடைபெறும்.

    இந்த ஆண்டு முதன்முறையாக குழந்தைகளுக்காக தனி பூங்கா (Children's Park) மற்றும் திருநங்கைகளால் நடத்தப்படும் 'Queer' பதிப்பகத்திற்கு எனத் தனி அரங்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 

    மேலும், 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 49-வது சென்னை புத்தகக் கண்காட்சியில் வழங்கப்படவுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருதுகள் மற்றும் பபாசி (BAPASI) விருதுகளுக்கான வெற்றியாளர்கள் பட்டியலை தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சமீபத்தில் அறிவித்துள்ளது.

    அதன்படி,

    கவிதை - கவிஞர் நா. சுகுமாரன்

    சிறுகதை -எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா

    நாவல் -எழுத்தாளர் ரா.முருகன்

    உரைநடை -பேராசிரியர் பாரதிபுத்திரன் (ச.பாலுசாமி)

    நாடகம் - கே.எஸ். கருணா பிரசாத்

    மொழிபெயர்ப்பு- மொழிபெயர்ப்பாளர் வ.கீதா ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்படுகிறது.

    ஒவ்வொரு விருதும் தலா ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் கொண்டது குறிப்பிடத்தக்கது.

    • வாங்கிய லேப்டாப்புகளையே விநியோகம் செய்யாமல் வீணடித்த பழனிசாமி அறிவுடன்தான் பேசுகிறாரா?
    • தமிழ்நாட்டு மாணவர்கள் உலத்தோடு போட்டியிடும் வகையில் ஒவ்வொரு திட்டமாக வகுத்து வருகிறது திமுக அரசு.

    தமிழக போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    20 லட்சம் கல்லூரி மாணாக்கருக்கு லேப்டாப் வழங்கும் "உலகம் உங்கள் கையில்" திட்டத்தை முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்.

    தமிழ்நாட்டு மாணவர்கள் உலத்தோடு போட்டியிடும் வகையில் ஒவ்வொரு திட்டமாக வகுத்து திமுக அரசு வகுத்து வருவதை பார்த்து பொறாமையில் குமைகிறார் எடப்பாடி பழனிசாமி.

    'நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு அவன் பேர் மனிதனல்ல. நாவில் ஒன்று நினைவில் ஒன்று அதன் பேர் உள்ளமல்ல' என எம்.ஜி.ஆர் பாடிய பாடல் அப்படியே எடப்பாடி பழனிசாமிக்கு பொருந்தும்! சேலத்து மேடையில் அரசியல் நடிப்பை அரங்கேற்றியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

    ''திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி'' எனச் சொல்லும் பழனிசாமியின் அதிமுக, அடிமை கம்பெனியாக மாறி பல வருடங்கள் ஆகிவிட்டது.

    2016-ஆம் ஆண்டிலிருந்து 2024-ஆம் வரை தொடர்ந்து 10 தேர்தல்களில் தோற்ற பழனிசாமி 'வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சி அமைப்பதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது' என்று சொல்வதைக் கேட்டு சின்னக் குழந்தையும் கெக்க பெக்க என சிரிக்கும்.

    ''2021-ல் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 இடங்களில் 10 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றது. இது அதிமுகவின் கோட்டை'' என்று எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 39 தொகுதிகளை திமுக கூட்டணி கைப்பற்றியது. அந்த 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் அடங்கியிருக்கும் 234 சட்டமன்றத் தொகுதிகளில் 221 தொகுதிகளில் திமுக கூட்டணி முதலிடம் பெற்றது பழனிசாமிக்கு தெரியாதா? அதிமுகவின் கோட்டையான சேலத்திலேயே 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஓட்டை விழுந்ததை எல்லாம் மறந்துவிட்டாரா?

    எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் 2019-ஆம் ஆண்டிலேயே லேப்டாப் வழங்கும் திட்டத்தை நிறுத்திவிட்டு 'கல்விக்கான ஆயுதமாக மடிக்கணினியை, தொடர்ந்து வழங்கி வந்தது எனது அரசு' எனப் பச்சைப் பொய் சொல்கிறார் பழனிசாமி.

    அதிமுக ஆட்சியில் 68 கோடி ரூபாயில் வாங்கிய 55 ஆயிரம் லேப்டாப்கள் வீணடிக்கப்பட்டதை CAG என்ற இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கை அறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டியது. எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நடந்த லேப்டாப் முறைகேட்டை அம்பலப்படுத்திய CAG அறிக்கை 2023 ஏப்ரலில் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

    2017-2018-ஆம் ஆண்டு போட்டித் தேர்வுக்குத் தயாரான 12-ஆம் மாணவர்களுக்கு லேப்டாப்புகள் வழங்க எல்காட் நிறுவனம் மூலம் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லேப்டாப்புகள் கொள்முதல் செய்யப்பட்டன. அதில், 8 ஆயிரத்து 79 லேப்டாப்புகள் மட்டுமே மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. 55 ஆயிரம் லேப்டாப்புகளை தேவைப்படும் மாணவர்களுக்கு வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்காததால், அந்த லேப்டாப்புகளின் பேட்டரிகள் வாரண்டி காலாவதி ஆகிவிட்டது. இதனால், 68 கோடியே 71 லட்சம் ரூபாய் நட்டம் ஏற்பட்டது என CAG அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    'அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட லேப்டாப் திட்டம் மாணவர்களுக்கு அறிவுப்பூர்வமான கல்வி கிடைப்பதை உறுதி செய்த திட்டம்' எனச் சொல்கிறார் பழனிசாமி. வாங்கிய லேப்டாப்புகளையே விநியோகம் செய்யாமல் வீணடித்த பழனிசாமி அறிவுடன்தான் பேசுகிறாரா?

    CAG அறிக்கையில் 53-ஆம் பக்கத்தில் மடிக்கணினிகளின் தேவை, கொள்முதல் மற்றும் விநியோகம் தொடர்பாக அட்டவணை ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் 2017 -2018 முதல் 2020 – 2021 வரை 11 மற்றும் 12-ம் வகுப்பில் 18.60 லட்சம் தகுதியான மாணவர்கள் இருந்தார்கள். ஆனால், 20 சதவிகித மாணவர்களுக்கு வழங்காமல் புறக்கணித்தார்கள். 2017-2018 ஆம் ஆண்டில் 12 ஆம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 2.32 லட்சம் மாணவர்கள், பள்ளிப் படிப்பை முடிக்கும் வரை லேப்டாப்புகளை பெறவில்லை.

    55 ஆயிரம் மடிக்கணினிகளை மாணவர்களுக்கு வழங்காமல் வீணடித்த எடப்பாடி பழனிசாமி, லேப்டாப் பற்றி எல்லாம் பேசுவதற்கு அருகதை இருக்கிறதா?

    20 லட்சம் கல்லூரி மாணாக்கருக்கு லேப்டாப் வழங்கும் "உலகம் உங்கள் கையில்" திட்டத்தை முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார். தொழில்நுட்ப அறிவியலை வலுப்படுத்த Dell, Acer, HP போன்ற உலகத் தரமான நிறுவனங்களின் மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன. மாணவர்களுக்கு வழங்கப்படும். இந்த மடிக்கணினிகளில் Intel i3 / AMD Ryzen 3 Processor, 8 GB RAM, 256 GB SSD, Windows 11 Home Strategic மற்றும் BOSS Linux OS ஆகிய மென்பொருள்கள் முன்னதாக நிறுவப்பட்டுள்ள நிலையில், நடைமுறையில் உள்ள கல்வி மற்றும் திட்டப் பணிகளுக்காக MS Office 365, மேலும் செயற்கை நுண்ணறிவு மென்பொருளான Perplexity Pro-வின் ஆறு மாத சந்தாவும் கட்டணமில்லாமல் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டு மாணவர்கள் உலத்தோடு போட்டியிடும் வகையில் ஒவ்வொரு திட்டமாக வகுத்து வருகிறது திமுக அரசு.

    மகளிர், அரசு ஊழியர், மாணாக்கர் என ஒவ்வொரு பிரிவினரும் மாண்புமிகு முதலமைச்சரின் திட்டங்களால் பயன்பெறுவதைப் பார்த்து பொறுத்துக் கொள்ள முடியாமல் குமைகிறார் பழனிசாமி.

    டீ கடையில் காசு இல்லாமல், ''டேய் ஒரு டீ குடிக்க எவ்ளோ நடிக்க வேண்டியது இருக்கு உங்க முன்னாடி'' என வடிவேலு பேசும் காமெடிதான் பழனிசாமி பேசுவதைக் கேட்கும் போது நினைவுக்கு வருகிறது. டீ கடையில் இரண்டு பேப்பர் படிக்கும் போது அதில் உள்ள செய்திகளில் தனக்கு எல்லாம் தெரிந்தவர் போல வடிவேலு தலையிட்டு உதார் விடுவார். அப்படிதான் திராவிட மாடல் அரசின் திட்டங்கள் எல்லாம் தன்னால்தான் வந்தது என பழனிசாமி நடிக்க வேண்டியிருக்கிறது. மகளிர் உரிமத் தொகை, லேப்டாப், போன்றவற்றை அதிமுக குரல் கொடுத்ததால்தான் திமுக அரசு கொண்டு வந்தது என பழனிசாமி சொல்லிக் கொள்ளும் வரிசையில் இப்போது பொங்கல் பரிசுத் தொகுப்பிலும் பழனிசாமி தலையை நுழைத்திருக்கிறார். அடுத்து நாம் ஓர் திட்டம் கொண்டு வர முடிவு செய்தாலே, உடனே முந்திக் கொண்டு அதற்கு ஒரு கருத்தைச் சொல்லி, அது தன்னால்தான் வந்தது எனப் பெருமைப்பட்டு அரசியல் செய்வது எல்லாம் எதிர்க கட்சித் தலைவர் செய்யும் செயலா?

    "எல்லாமே என்னால்தான் நடந்தது" என்று ஒரு Mindsetஃபோபியா சிலருக்கு உண்டு. அதில், பழனிசாமியும் சேர்ந்து கொண்டார். "நான்தான் எல்லாம் செய்பவன்'' என்ற "God Complex" அதாவது கடவுள் மனப்பான்மையில் பழனிசாமி வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

    நம்முடைய திட்டங்கள் மக்களிடம் ஏற்பட்டிருக்கும் ஆதரவை எதிர்க் கட்சித் தலைவரே உணர்ந்ததால்தான் இப்படியெல்லாம் பேசி வருகிறார். பழனிசாமி அரசியல் செய்வதற்கும் நம்முடைய சாதனை திட்டங்கள் காரணமாக அமைந்திருக்கிறது. Election Eyewash-க்காக லேப்டாப் கொடுகிறார் என சொல்கிறார் பழனிசாமி. அவருடைய God Complex-ஐ என்ன சொல்ல?

    சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பேசிக் கொண்டிருந்த அதே நேரத்தில்தான் புதுக்கோட்டையில் உரையாற்றி கொண்டிருந்த ஒன்றிய அமைச்சர் அமித்ஷா, ''ஏப்ரலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மலரும். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் வளர்ச்சி பாதையில் பங்கேற்போம்'' என்றார். 'கூட்டணி ஆட்சி' என ஆட்சியில் பங்கு என்றதோடு பழனிசாமியின் பெயரைக்கூட அமித்ஷா உச்சரிக்கவில்லை.

    ''கூட்டணிக்கு தலைமை எடப்பாடி பழனிசாமிதான்'' என அடிமைகள் வீராவேசம் காட்டினாலும் எஜமானர் அமித்ஷா, பழனிசாமி பெயரைக்கூட சொல்ல மறுக்கிறார். . 'கூட்டணிக்கு தலைமை' என்ற பதவியிலேயே தடுமாறிக் கொண்டிருக்கும் பழனிசாமிதான் 'முதல்வர் பதவி'க்கு வரப் போகிறாரா? ''இந்த அவமானம் உனக்கு தேவையா?'' என்ற நடிகர் வடிவேலுவின் காமெடிக்கு பொருத்தமான கேரக்டர் பழனிசாமிதான்! அவமானங்களை தாங்கி கொள்வது ஆயக்கலைகளிலும் அடக்காத ஒன்றுதான் போல!

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் பாஸ்கரன் நீக்கம்.
    • உடன்பிறப்புகள் யாரும் பாஸ்கருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது.

    திருவள்ளூர் மாவட்ட அதிமுக துணை செயலாளர் பாஸ்கரன் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

    அதிமுகவின் கட்டுப்பாட்டை மீறி களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட பாஸ்கரன் நீக்கப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    அதிமுகவின் கொள்கை- குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திருவள்ளூர் மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் கமாண்டோ ஹ. பாஸ்கரன் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

    கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் கண்ணாயிரம் தவெகவில் இணைகிறார்.
    • தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்த ஜெகதீச பாண்டியனும் இன்று தாவெகவில் இணைகிறார்.

    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், நிர்வாகிகள் கட்ச தாவி வருகின்றனர்.

    அந்த வகையில் இன்று, திமுக மற்றும் அதிமுகவினர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைகின்றனர்.

    அதன்படி, தஞ்சை மத்திய மாவட்டம் திமுக வர்த்தக அணி அமைப்பாளர் சுந்தரபாண்டியன் இன்று தவெகவில் இணைகிறார்.

    விஜய் தலைமையில் நடக்கும் விழாவில் ஒட்டன்சத்திரம் திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் கண்ணாயிரம் தவெகவில் இணைகிறார்.

    புதுவை முன்னாள் ஐஜி ராமச்சந்திரன், அதிமுக முன்னாள் எம்எல்ஏ பெரியசாமி, காங்கிரஸ், தேமுதிக நிர்வாகிகளும் தவெகவில் இணைகின்றனர்.

    நாதகவில் இருந்து விலகி சமீபத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்த ஜெகதீச பாண்டியனும் இன்று தாவெகவில் இணைகிறார்.

    மேலும், சென்னை மாநகராட்ச 23வது வார்டு கவுன்சிலர் ராஜன் பர்னபாஸ் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • தமிழ்நாட்டில் கூட்டணியே அரசியல் உண்மை.
    • ஒவ்வொரு கட்சிக்கும் தங்களுக்கான வாக்கு ஆதரவு உள்ளது.

    தமிழ்நாட்டில் கூட்டணியே அரசியல் உண்மை, ஒவ்வொரு கட்சிக்கும் தங்களுக்கான வாக்கு ஆதரவு உள்ளது என ஐபிடிஎஸ் தகவலை மேற்கோள் காட்டி காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் குறிப்பிட்டுள்ளதாவது:-

    யாருக்கு வாக்கு?" – IPDS தரவு சொல்லும் தகவல்.

    தமிழ்நாட்டில் கூட்டணியே அரசியல் உண்மை.

    ஒவ்வொரு கட்சிக்கும் தங்களுக்கான வாக்கு ஆதரவு உள்ளது.

    இந்த தரவு காங்கிரஸ் மட்டுமல்ல, மற்ற கட்சிகளின் எண்ணிக்கைகளும் முழுமையாக பிரதிபலிக்கப்படவில்லை என நினைக்கிறேன்.

    ஆனால் கூட்டணி இல்லாமல் தமிழ்நாட்டில் யாரும் வெல்ல முடியாது.

    அதே நேரம், இப்போது அதிகாரம் மட்டும் அல்ல – அதிகாரப் பகிர்வும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது தானே !

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.



    • கனிமொழி அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • 2 நாட்கள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திருச்சி வந்துள்ளார்.

    தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி கனிமொழி, முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இந்நிலையில் தி.மு.க. எம்.பி. கனிமொழிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    2 நாட்கள் பயணமாக திருச்சிக்கு வந்துள்ள அமித்ஷா கனிமொழியிடம் தொலைபேசி வாயிலாக பிறந்தநாள் வாழ்த்து கூறினார்.

    • தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
    • தங்கத்தை போல வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது.

    தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. சென்னையில் நேற்று முன்தினம் தங்கம் விலை காலையில் குறைந்து மாலையில் அதிகரித்தது.

    நேற்று முன்தினம் காலையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.12,520-க்கும், சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.1,00,160-க்கும் விற்பனையானது. மாலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.1,00,800-க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.12,600-க்கு விற்பனையானது. நேற்று தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1,00,800-க்கும், ஒரு கிராம் ரூ.12,600க்கு விற்பனையானது.

    இந்நிலையில் தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,680-க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,01,440-க்கு விற்பனையாகிறது.

    தங்கத்தை போல வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.8 உயர்ந்து ஒரு கிராம் ரூ.265-க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    4-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,00,800

    3-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,00,800

    2-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,00,640

    1-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.99,520

    31-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.99,840

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    4-1-2026- ஒரு கிராம் ரூ.257

    3-1-2026- ஒரு கிராம் ரூ.257

    2-1-2026- ஒரு கிராம் ரூ.260

    1-1-2026- ஒரு கிராம் ரூ.256

    31-12-2025- ஒரு கிராம் ரூ.257

    • மருத்துவக் கருவிகளையும், மருந்துகளையும் கையாளும் உரிமையை தூய்மைப் பணியாளருக்கு வழங்கியது யார்?
    • நோயாளிகளின் நலனில் மருத்துவத்துறையினர் விருப்பம் போல விளையாடக் கூடாது.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    இராணிப்பேட்டை மாவட்டம் கலவை மருத்துவமனையில் , விபத்தில் சிக்கிய ஒருவரின் காயத்திற்கு தூய்மைப் பணியாளர் தையல் போட்டதாக வெளியாகியுள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகள் சீரழிவின் உச்சத்தை அடைந்து விட்டன என்பதற்கு இதை விட மோசமான சான்று இருக்க முடியாது.

    அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகளை மருத்துவர்களும், சிறிய காயங்களுக்கான சிகிச்சையை மருத்துவர்களின் வழிகாட்டுதலில் அதற்கான துணை மருத்துவப் பணியாளர்களும் தான் செய்ய வேண்டும் என்பது விதியாகும். அதை மீறி மருத்துவக் கருவிகளையும், மருந்துகளையும் கையாளும் உரிமையை தூய்மைப் பணியாளருக்கு வழங்கியது யார்?

    நோயாளிக்கு தூய்மைப் பணியாளர் தையல் போட்டதை விட கொடுமையானது இது தொடர்பாக மருத்துவத் துறையின் மாவட்ட நிர்வாகம் அளித்துள்ள பதில் தான். மருத்துவர்களின் கண்காணிப்பில் தான் தூய்மைப் பணியாளர் தையல் போட்டதாகவும், அவர் சிறப்பாக சிகிச்சை அளித்ததாகவும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. நோயாளிகளின் நலனில் மருத்துவத்துறையினர் விருப்பம் போல விளையாடக் கூடாது. இந்த நிகழ்வு தொடர்பாக விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் 4 நாட்கள் நடந்த முகாம் நிறைவடைந்துள்ளது.
    • இறந்துபோன, 13 ஆயிரத்து 457 பேரின் பெயர்களை நீக்குவதற்கு அவர்களின் குடும்பத்தினர் படிவம் 7-ம் அளித்தனர்.

    சென்னை:

    தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19-ந் தேதி வெளியிடப்பட்டது. அதில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 66 லட்சம் பேர் இடம் மாறி சென்றவர்களாக காட்டப்பட்டு உள்ளனர்.

    தற்போது வாக்காளராக சேர்வதற்கு ஒரு மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில், சென்னை மாவட்டத்திலுள்ள 16 சட்டசபை தொகுதிகளுக்கான 4 ஆயிரத்து 79 வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்வது தொடர்பான சிறப்பு தீவிர முகாம் கடந்த டிசம்பர் 27, 28 மற்றும் ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில் நடத்த தேர்தல் கமிஷன் அறிவிப்பு வெளியிட்டது.

    அதன்படி நேற்று வரை சிறப்பு முகாம்கள் நடந்து முடிந்துள்ளன. இதில் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாத 18 வயது நிரம்பிய தகுதியுடையவர்கள் படிவம் 6-ஐ உறுதிமொழி படிவத்துடனும், இறந்தவர்களின் பெயர்களை நீக்க படிவம் 7-ஐ, முகவரி மாற்றம், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளை திருத்தம் செய்ய, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை மாற்றம் செய்ய, மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் என குறிப்பது ஆகிய கோரிக்கைக்காக படிவம்-8ஐ ஆர்வமுடன் அளித்தனர்.

    புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பிப்பவர்கள் பிறப்பு சான்றிதழ் அல்லது கல்வி சான்று, ஆதார் அட்டை, 2005-ம் ஆண்டுக்கான பெற்றோர் வாக்காளர் அடையாள அட்டையின் விவரங்கள் சமர்ப்பித்தனர்.

    வீடுகளை மாற்றிக் கொண்டு இடமாறி சென்ற வாக்காளர்கள், அந்த இடத்திற்கான வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் தங்களை வாக்காளராக மீண்டும் சேர்த்துக் கொள்வதற்காக படிவம் எண் 6ஐ அளித்தனர். இந்தப் படிவங்களை வாங்கும் பணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு அரசியல் கட்சிகளின் தேர்தல் முகவர்கள் உதவி புரிந்தனர்.

    தமிழகத்தில் தி.மு.க.விற்கு 68 ஆயிரத்து 286, அ.தி.மு.க.விற்கு 67 ஆயிரத்து 286, பா.ஜ.க.விற்கு 61 ஆயிரத்து 438, காங்கிரசிற்கு 30 ஆயிரத்து 592 தேர்தல் முகவர்கள் உள்ளனர். அரசியல் கட்சிகளின் தேர்தல் முகவர்கள் சம்பந்தப்பட்ட வாக்காளர்களிடம் சென்று அவர்களிடம் படிவத்தை பூர்த்தி செய்து வாங்கி வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் சமர்ப்பித்து வருகின்றனர்.

    தமிழகத்தில் 4 நாட்கள் நடந்த முகாம் நிறைவடைந்துள்ளது. இதில் கடந்த மாதம் 19-ந்தேதியிலிருந்து கடந்த 3-ந்தேதி இரவு 8 மணி வரை 18 வயது நிரம்பிய தகுதியுடைய 9 லட்சத்து 14 ஆயிரத்து 931 பேர் படிவம் 6, 6 ஏ அளித்தனர். இதேபோல இறந்துபோன, 13 ஆயிரத்து 457 பேரின் பெயர்களை நீக்குவதற்கு அவர்களின் குடும்பத்தினர் படிவம் 7-ம் அளித்தனர்.

    தொடர்ந்து வருகிற 18-ந் தேதி வரை விண்ணப்பிக்க முடியும் என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.

    இந்த முகாமில் கலந்து கொள்ள இயலாதவர்களுக்காக சிறப்பு தீவிர முகாமை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் மீண்டும் ஒரு வாய்ப்பை அளிக்குமா? என்பது குறித்து தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்து அறிவிக்கும் என்று தேர்தல் அதிகாரிகள் கூறினர்.

    • வன்பொருள் ஒன்றில் தொழில்நுட்ப கோளாறு கடந்த சனிக்கிழமையன்று ஏற்பட்டுள்ளது.
    • கணினி மென்பொறியாளர்கள் சரி செய்து விட கடந்த இரு தினங்களாக முனைப்போடு செயல்பட்டு வருகின்றனர்.

    சென்னை:

    தமிழ்நாடு பத்திரப்பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    பத்திரப்பதிவுத்துறை தகவல்களை சேகரித்து வைக்கப்படும் வன்பொருள் ஒன்றில் (ஹார்டுவேர்) தொழில்நுட்ப கோளாறு கடந்த சனிக்கிழமையன்று ஏற்பட்டுள்ளது.

    இதனை கணினி மென்பொறியாளர்கள் சரி செய்து விட கடந்த இரு தினங்களாக முனைப்போடு செயல்பட்டு வருகின்றனர். இந்த வன்பொருளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு விரைவில் சரி செய்யப்பட்டு துறையின் மென்பொருள் முறையாக இயங்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் துரிதமாக எடுக்கப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் இதனை கருத்தில் கொண்டு பத்திரப்பதிவு தொடர்பான நடவடிக்கைகளை எடுத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ×