என் மலர்
சென்னை
- இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 21-ன் கீழ், குடிமக்கள் தங்கள் அந்தரங்க ரகசியங்களை பாதுகாக்க உரிமை வழங்கப்பட்டுள்ளது.
- தன்னாட்சி பெற்ற அமைப்புகளை தன்னுடைய ஏவல்துறையாக மாற்றியுள்ளது பா.ஜ.க.அரசு.
புதிய வருமான வரிச் சட்டம் 2025-க்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
புதிய வருமான வரிச் சட்டம் 2025 வரும் ஏப்ரல் மாதம் அமலுக்கு வருகிறது. இந்தச் சட்டத்தின் மூலம் வரி செலுத்துவோரின் வர்த்தக கணக்குகள், ஆன்லைன் வங்கி கணக்குகள், இணைய முதலீட்டு கணக்குகள் உள்ளிட்ட அனைத்திலும் வருமான வரி அதிகாரிகள் உள்ளே நுழைந்து சோதனையிடும் அதிகாரம் வழங்கப்பட்டிருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.
வங்கி, முதலீட்டு கணக்குகள், கம்ப்யூட்டர்களில் உள்ள விவரங்கள் அனைத்தையும் பாஸ்வேர்டு எதுவும் தேவைப்படாமல் உடைத்து உள்ளே சென்று சோதனையிடும் அதிகாரம் புதிய வருமான வரிச் சட்டம் பிரிவு 247-ன் கீழ் வழங்கப்பட்டுள்ளது.
மக்களின் சமூக வலைதள கணக்குகள், இமெயில்களில் அவர்களின் பல அந்தரங்கமான விஷயங்கள், வருமான வரி அதிகாரிகளுக்கு தேவையில்லாத பல தகவல்கள் இருக்கும்.
மேலும், சிலர் தொழில் ரகசியம், தொழில் யுக்திகள் தொடர்பான தகவல்கள் அனைத்தையும் கம்ப்யூட்டர்கள், இமெயில்கள் வைத்திருப்பார்கள். அவை அனைத்திலும், வருமானவரி அதிகாரிகள், அவர்களது அனுமதியின்றி, அத்துமீறி நுழைந்து தகவல்களை சேகரிக்கும் வாய்ப்புள்ளது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 21-ன் கீழ், குடிமக்கள் தங்கள் அந்தரங்க ரகசியங்களை பாதுகாக்க உரிமை வழங்கப்பட்டுள்ளது. பிரிவு 19(1) (ஏ)-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள கருத்து சுதந்திரத்துக்குள் தலையிடும் அதிகாரமாகவும் இது பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே, தன்னாட்சி பெற்ற அமைப்புகளை தன்னுடைய ஏவல்துறையாக மாற்றியுள்ளது பா.ஜ.க.அரசு. அரசியலில் தனக்கு வேண்டாதவர்களை பழிவாங்குவதற்கு ஆளும் ஒன்றிய அரசு இதுபோன்று அதிகாரத்தை அளித்துள்ளதோ என சந்தேகமாகவுள்ளது.
தேவைக்கு அதிகமான அதிகாரமாகவே கருதப்படுவதால் இந்த மாற்றங்களை ஒன்றிய அரசு விலக்கிக் கொண்டு, புதிய வருமான வரிச் சட்டம் 2025 சட்டத்தை அமல்படுத்தவேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மிகச் சிறந்த பத்திரிகையாளரான நக்கீரன் கோபாலுக்கு பொருத்தமாக இவ்விருது வழங்கப்பட்டிருக்கிறது.
- நெறியாளர்களுக்கு அன்றாட அரசியல் புரிதலும், அரசியல் பின்னணியும் இருந்தால் தான் விவாதங்களை சுவைபட நடத்த முடியும்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு அரசின் கலைஞர் எழுதுகோல் விருது பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் அவர்களுக்கும், தொலைக்காட்சி நெறியாளர் சுகிதா சாரங்கராஜ் அவர்களுக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கி பெருமைப்படுத்தியிருப்பது பாராட்டத்தக்கதாகும். விருது பெற்ற அவர்களை மனதார வாழ்த்துகிறேன்.
பத்திரிகை துறையில் புலனாய்வு செய்து செய்திகளை சேகரித்து துணிச்சலுடன் வெளியிடுவதில் சாதனைகளை புரிந்தவர் நக்கீரன் கோபால்.
பெயருக்கு ஏற்றாற்போல் யார் குற்றம் செய்தாலும் அதை கண்டிக்கின்ற வகையில் செய்திகளை வெளியிடுவதில் தனித்தன்மையுடன் செயல்படுபவர்.
கன்னட திரைப்பட நடிகர் ராஜ்குமார் அவர்களை சந்தனக் கடத்தல் வீரப்பன் கடத்திச் சென்ற போது, அவரை மீட்பதற்காக அன்றைய தமிழக முதலமைச்சர் கலைஞர், நக்கீரன் கோபால் அவர்களை காட்டிற்குள் அனுப்பித் தான் மீட்டார் என்பதை எவரும் மறக்க இயலாது.
அன்றைக்கு மிகுந்த துணிச்சலோடு காட்டிற்குள் சென்று வீரப்பனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி, நடிகர் ராஜ்குமாரை மீட்டததனால் தமிழக - கர்நாடக மக்களிடையே நிலவிய பதற்றத்தை தவிர்த்து நல்லிணக்கம் ஏற்பட தனது உயிரை பணயம் வைத்து செயல்பட்டவர் நக்கீரன் கோபால்.
மிகச் சிறந்த பத்திரிகையாளரான அவருக்கு பொருத்தமாக இவ்விருது வழங்கப்பட்டிருக்கிறது.
அதேபோல, தொலைக்காட்சி ஊடக நெறியாளராக செயல்பட்டு, விவாதங்களில் கருத்து மோதல்களை அனைவரையும் கவருகிற வகையில் நடத்துவதன் மூலம் பலரது பாராட்டுகளையும் பெற்றவர்.
நெறியாளர்களுக்கு அன்றாட அரசியல் புரிதலும், அரசியல் பின்னணியும் இருந்தால் தான் விவாதங்களை சுவைபட நடத்த முடியும். அந்த வகையில் சுகிதா சாரங்கராஜ் அவர்கள் நமது பாராட்டுக்குரியவராவார்.
நக்கீரன் கோபால் அவர்களுக்கும், சுகிதா சாரங்கராஜ் அவர்களுக்கும் கலைஞர் எழுதுகோல் விருது மூலம் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் வழங்கியிருக்கிற தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சிறந்த இதழியலாளருக்கான கலைஞர் எழுதுகோல் விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.
- 2023-ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் சிறந்த இதழியலாளருக்கான விருது.
முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி நினைவாக ஆண்டு தோறும் கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, தமிழ் இதழியல் துறை மூலம் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும் பங்காற்றிய சிறந்த இதழியலாளர்க்கு கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 2023-ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் சிறந்த இதழியலாளருக்கான கலைஞர் எழுதுகோல் விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.
அதன்படி, கலைஞர் நூற்றாண்டு விழாவினையொட்டி, பெண்மையைப் போற்றும் வகையில், 2023-ஆம் ஆண்டின் சிறந்த பெண் இதழியலாளருக்காக பிரபல நியூஸ் சேனலின் செய்தி ஆசிரியர் சுகிதா சாரங்கராஜ்-க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'கலைஞர் எழுதுகோல்' விருதினை வழங்கி கவுரவித்தார்.
தொடர்ந்து 'நக்கீரன்' கோபாலுக்கும் முதலமைச்சர் 'கலைஞர் எழுதுகோல்'விருது வழங்கி கவுரவித்தார்.
- விசாரணைக்கு சென்ற காவலர்களை தாக்கியது மற்றும் துப்பாக்கியை காட்டி மிரட்டியது ஆகிய வழக்கில் இருவரும் கைது.
- ஒரு வழக்கில் இரண்டு காவலாளிகளுக்கும் ஜாமின் வழங்கி சோழிங்கநல்லூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகை விஜயலட்சுமி விவகாரம் தொடர்பாக, விசாரணைக்கு ஆஜராகுமாறு சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டின் வெளிப்பக்க கதவில் போலீசார் சம்மன் நோட்டீஸ் ஒட்டினர். இந்த சம்மன் நோட்டீசை வளசரவாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் கோபி பகலில் ஒட்டி சென்றார்.
அந்த நோட்டீசில், 'நீங்கள் ஏற்கனவே அனுப்பிய சம்மன் பேரில் விசாரணைக்கு ஆஜராகவில்லை. எனவே இந்த சம்மனை ஏற்று 28-ந்தேதி (பிப்ரவரி) காலை 11 மணிக்கு நீங்கள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும். தவறினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
போலீசார் சம்மன் நோட்டீசை ஒட்டிவிட்டு சென்ற சிறிது நேரத்தில் அந்த சம்மனை சீமான் வீட்டு பணியாளர் ஒருவர் கிழித்தெறிந்தார். இந்த காட்சி தொலைக்காட்சிகளில் செய்தியாக ஒளிபரப்பானது. இதுகுறித்து நீலாங்கரை போலீசாருக்கு வளசரவாக்கம் போலீசார் தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் சம்மனை கிழித்த சீமான் வீட்டு பாதுகாவலர் உள்பட இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை தொடர்ந்து, வரும் 13ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் போலீசார் ஒட்டிய சம்மனை கிழித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட இரண்டு காவலாளிகளுக்கும் ஜாமின் வழங்கி சோழிங்கநல்லூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவலாளிகள் மீது சம்மனை கிழித்து பணி செய்யவிடாமல் தடுத்ததாக ஒரு வழக்கு, காவலர்களை தாக்கியதாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இதில், ஒரு வழக்கில் மட்டும் இரு காவலாளிகளுக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், மற்றொரு வழக்கில் சீமான் வீட்டு பாதுகாவலர்கள் அமல்ராஜ், சுபாகர் ஆகியோரின் ஜாமின் மனுக்களை செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
- சிம்பொனி இசைக் கோர்வைகளை விட சிறந்த இசையை அவர் ஏற்கனவே படைத்திருக்கிறார்.
- ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் பெருமை ஆகும்.
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வேலியண்ட் என்ற தலைப்பில் உருவாக்கியுள்ள சிம்பொனி இசைக்கோர்வையை அரங்கேற்றுவதற்காக இசையமைப்பாளர் இளையராஜா லண்டன் சென்றிருக்கிறார். நாளை மறு நாள் லண்டனில் அவர் தமது சிம்பொனி இசைக்கோர்வையை அரங்கேற்றம் செய்கிறார். வரலாற்று சிறப்பு மிக்க அந்த நிகழ்ச்சி வெற்றி பெறவும், சிறப்பாக அமையவும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிம்பொனி இசைக் கோர்வைகளை விட சிறந்த இசையை அவர் ஏற்கனவே படைத்திருக்கிறார். எனினும், சிம்பொனி இசையை ஆவணப்படுத்துவதற்காகவே அவர் வேலியண்ட் படைத்திருக்கிறார். இதன் மூலம் ஜோசப் ஹேடன், வூல்ப்காங் அமாடியஸ் மொசார்ட், லுட்விக் வான் பீத்தோவன், பிராண்ஸ் சூபேர்ட், பீலிக்ஸ் மெண்டல்சன் உள்ளிட்டோரின் வரிசையில் அவரும் இடம் பெறுவார். இது அவருக்கு மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் பெருமை ஆகும்.
உண்மையில் சிம்பொனி இசை மட்டுமல்ல. இசைக்கடவுள் இளையராஜாவே இந்தியாவுக்குப் பெருமை தான். அதை வேலியண்ட் நிரூபிக்கும். வாழ்த்துகள் ராஜா!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- வேளாண் விற்பனை குழுக்கள் மூலமாக 40-க்கும் மேற்பட்ட விவசாய உற்பத்திப்பொருட்களுக்கு 1 சதவீதம் செஸ் வரி ஏற்கனவே வசூலிக்கப்படுகிறது.
- மக்காச்சோளத்திற்கு 1 சதவீதம் செஸ் வரியை விதித்துள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வேளாண் விற்பனை குழுக்கள் மூலமாக 40-க்கும் மேற்பட்ட விவசாய உற்பத்திப்பொருட்களுக்கு 1 சதவீதம் செஸ் வரி ஏற்கனவே வசூலிக்கப்படுகிறது. மக்காச்சோளத்திற்கு ஏற்கனவே திருப்பூர், ஈரோடு, கோவை, நாகை மாவட்டங்களில் 1 சதவீதம் செஸ் வரி வசூலிக்கும் நடைமுறை உள்ளது.
தற்போது நாமக்கல், சேலம், விழுப்புரம், அரியலூர், திருவள்ளூர், விருதுநகர், கடலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், மதுரை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், தேனி, திருச்சி, திருவண்ணாமலை, வேலூர், செங்கல்பட்டு ஆகிய 18 மாவட்டங்களிலும் உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்படும் மக்காச்சோளத்திற்கு 1 சதவீதம் செஸ் வரியை விதித்துள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். எனவே இந்த வரி விதிப்பை திரும்ப பெற வேண்டும்.
தமிழக அரசு ஒரு குவிண்டால் மக்காச்சோளம் ரூ. 3,500 க்கு விற்றால் மட்டுமே விவசாயிகள் பயன் பெறக்கூடிய நிலையில், தற்போது ரூ. 2,800 க்கு விற்று வந்த மக்காச்சோளம், இப்போதைய செஸ் வரி விதிப்பால் ரூ. 2,300 க்கு விற்கப்படுகிறது. இதனால் ஒரு குவிண்டாலுக்கு ரூ. 500 நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.
எனவே வேளாண் விற்பனை வணிகத்துறையின் பட்டியலிடப்பட்டுள்ள 40 பொருட்களுக்கும், விவசாய நிலங்களில் விவசாயிகள், வியாபாரிகள் இடையே நேரடியாக நடைபெறும் விற்பனைக்கு முழுமையாக வரி விலக்களிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ஓரங்க நாடகம் நடந்தது போல்தான் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.
- அவசரப்பட்டு எதற்காக அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது?
தொகுதி மறுசீரமைப்பு விவாதம் தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் நடத்தப்பட்ட அனைத்துக்கட்சி கூட்டம் நாடகமாகவே தோன்றுகிறது" என்றார்.
மேலும் அவர், "ஓரங்க நாடகம் நடந்தது போல்தான் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.
அவசரப்பட்டு எதற்காக அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது?
தொகுதி மறுவரையறை குறித்து மத்திய அரசு இன்னும் எதுவும் சொல்லவில்லை. தமிழ்நாட்டை தி.மு.க. தான் காப்பாற்றுவது போல் தோற்றத்தை உருவாக்க நாடகம்" என்றார்.
இந்நிலையில், தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழ்நாடு அரசு நாடகம் போடுவதாக விமர்சித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி அளித்துள்ளார்.
இதுகுறித்து ரகுபதி கூறுகையில், " அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்காவிட்டால் தமிழ்நாட்டு மக்களிடம் அம்பலப்பட்டு விடுவோமோ? என்ற அச்சத்தில், கூட்டத்தில் பங்கேற்று நாடகத்தை நடத்தியுள்ளது அதிமுக.
பாஜகவுடன் நீங்கள் நடத்தும் கபட நாடகம் என்றைக்கும் வெற்றி பெறப் போவதில்லை" என்றார்.
- தமிழகம் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
- ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மது ஆலைகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருந்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜாமினில் வெளியே வந்தார்.
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அவரது உறவினர்கள் வீடு, ஆதரவாளர்கள் வீடுகளில் பலமுறை சோதனை நடத்தியுள்ளனர்.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று மீண்டும் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கரூர் மாவட்டத்தில் 3 இடங்களில் உள்ள ஆதரவாளர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலையில் இருந்தே சோதனை நடத்தி வருகிறார்கள்.
தமிழகம் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் உள்ள தமிழ்நாடு டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
சென்னை எழும்பூர் தாளமுத்து நடராசர் மாளிகையில் அமைந்துள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக செந்தில்பாலாஜி உள்ள நிலையில் அவர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மது ஆலைகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
- மகளிர் தினம் என்பது கொண்டாட்டம் மட்டுமல்ல பெண்களின் உரிமை பற்றியதாகும்.
- பெண்களுக்கு இன்னும் கூடுதலாக பாதுகாப்பு தேவையாக உள்ளது.
சென்னை:
சென்னை சேத்துப்பட்டில் உள்ள இந்திய உணவு கழக வளாகத்தில் இன்று மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கனிமொழி எம்.பி கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
இந்த விழாவில் உணவு கழக நிர்வாக இயக்குனர் ஜெசிந்தா லாசரஸ், பொது மேலாளர்கள் சைனி வில்சன், முத்துமாறன் மற்றும் அதிகாரிகள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-
இந்திய உணவுக் கழகத்தில் 30 சதவீத பெண்கள் பணியாற்றி வருகிறார்கள். இது அரசியல் சூழலில் இருப்பதை விட அதிகம் தான்.
மகளிர் தினம் என்பது கொண்டாட்டம் மட்டுமல்ல பெண்களின் உரிமை பற்றியதாகும். இந்த அரசாங்கம் பெண்களுக்காக எவ்வளவோ நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதுபோன்று இருக்கும்போது பெண்கள் படித்து முடித்துவிட்டு மீண்டும் சமையலறைக்கு சென்றால் அது இந்த நாட்டுக்கு செய்யும் துரோகம் இல்லையா? என்று அப்போதே கேட்டவர் தந்தை பெரியார். அவரைப் போன்று பெண்களின் உரிமைக்காக விடுதலைக்காக இதுவரை எந்த தலைவரும் குரல் கொடுத்தது இல்லை.
டெல்லியில் ஒரு பெண் முதலமைச்சராக நியமிக்கப்பட்டபோது அவருக்கு எதிராக பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டன. பல மாநிலங்களில் ஆண்கள் முதலமைச்சராக வந்தபோது எந்த கருத்தையும் சொல்லவில்லை. ஒரு பெண்ணுக்கு பொறுப்பு கொடுக்க வேண்டும் என்பதால் தான் அவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் அவர் முதல்வராக தகுதியற்றவர் என்று பேசினார்கள்.
இத்தனை மாநிலங்களில் ஆண்கள் முதலமைச்சராக வந்தபோது எந்த கேள்விகளும் எழவில்லை ஆனால் ஒரு பெண் தலைமையிடத்திற்கு வரும் பொழுது ஆயிரம் கேள்விகள் எழுப்பப்படுகிறது. நம்மால் இந்த செயலை செய்ய முடியுமா? என்று சிந்திக்காமல் அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னேறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.
பெண்களுக்கு இன்னும் கூடுதலாக பாதுகாப்பு தேவையாக உள்ளது. அவர்கள் எங்கு செல்ல நினைத்தாலும் சுதந்திரமாக செல்ல வேண்டும்.
இவ்வாறு கனிமொழி பேசினார்.
- இந்தியா கூட்டணியின் வெற்றியை உறுதியாக்குகிற வகையில் தமிழக பா.ஜ.க.வின் செயல்பாடுகள் அமைந்து வருகின்றன.
- தமிழ்நாட்டு மக்கள் சரியான பாடத்தை 2026 சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் புகட்டுவார்கள்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2006 முதல் 2014 வரை ரூபாய் 675.36 கோடி சமஸ்கிருதத்திற்கும், ரூபாய் 75.05 கோடி தமிழுக்கும் வழங்கப்பட்டிருப்பதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டை அண்ணாமலை கூறியிருக்கிறார்.
ஆனால், சமஸ்கிருதத்தை பரப்புவதற்கு தலைநகர் டெல்லியில் ராஷ்ட்ரிய சான்ஸ்கிரிட் சன்ஸ்தான் என்கிற அமைப்பு ஏற்படுத்தப்பட்டன. அந்த அமைப்பிற்கு ரூபாய் 643.84 கோடி மூன்றாண்டுகளில் மட்டும் சமஸ்கிருதத்திற்கு பா.ஜ.க. அரசு வழங்கியிருப்பதை ஆதாரத்துடன் குறிப்பிட விரும்புகிறோம். அண்ணாமலை கூற்றின்படி, சமஸ்கிருத மொழிக்கு ஒதுக்கப்பட்ட தொகை எந்த அடிப்படையில், எதற்காக வழங்கப்பட்டது என்று கூறாமல் பொத்தாம் பொதுவாக கூறுவது அப்பட்டமான அவதூறாகும்.
அதே காலகட்டத்தில் அந்த மூன்றாண்டுகளில் தமிழ் மொழிக்கு ஒதுக்கப்பட்ட தொகை 2017-18-ல் ரூபாய் 10.59 கோடி, 2018-19-ல் ரூ. 4.65 கோடி, 2019-20-ரூபாய் 7.7 கோடி என மொத்தம் ரூ. 22.24 கோடி சென்னையில் அமைந்துள்ள மத்திய செம்மொழி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு உள்ளது.
தமிழக பா.ஜ.க. இந்தி மொழிக்கு நடத்தும் கையெழுத்து இயக்கத்தின் மூலம் பெறப்படும் ஒவ்வொரு கையெழுத்தும் பா.ஜ.க.வின் எதிர்காலத்தின் மீது விழப்போகிற சம்மட்டி அடியாகவே அது அமையப்போகிறது. பா.ஜ.க.வினர் பெறுகிற கையெழுத்தின் மூலமே அவர்களது எதிர்காலம் சூனியமாகிற சூழல் இன்றைக்கு ஏற்படப் போகிறது.
தமிழ்நாட்டு நலன் சார்ந்து செயல்படுகிற தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான இந்தியா கூட்டணியின் வெற்றியை உறுதியாக்குகிற வகையில் தமிழக பா.ஜ.க.வின் செயல்பாடுகள் அமைந்து வருகின்றன. இத்தகைய நடவடிக்கைகளுக்கு தமிழ்நாட்டு மக்கள் சரியான பாடத்தை 2026 சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் புகட்டுவார்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- காலையில் சவரனுக்கு ரூ.360 குறைந்தது.
- சர்வதேச அளவில் பொருளாதரத்தில் நிலவும் நிலையற்ற தன்மை காரணமாக தங்கம் விலையில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று குறைந்து விற்பனையான நிலையில் தற்போது விலை உயர்ந்துள்ளது.
காலையில் சவரனுக்கு ரூ.360 குறைந்த நிலையில் தற்போது கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,060-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,480-க்கும் விற்பனையாகிறது.
சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் நிலவும் நிலையற்ற தன்மை காரணமாக தங்கம் விலையில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு, புதுச்சேரியில் வரும் 10, 11, 12 ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
- காலையில் லேசான பனிமூட்டம் இருக்கும்.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
* தமிழகத்தில் அநேக இடங்களில் இயல்பிலிருந்து 2-4 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகி உள்ளது.
* தமிழகத்தில் வெயில் கொளுத்த ஆரம்பித்துள்ள நிலையில் திருப்பத்தூரில் 39.1 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது. ஃபாரன்ஹீட்டில் 102 டிகிரியாக பதிவாகி உள்ளது.
* இன்று முதல் 9-ந்தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.
* தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் 2 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும். காலையில் லேசான பனிமூட்டம் இருக்கும்.
* தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக உயர்ந்து இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும்.
* தமிழ்நாடு, புதுச்சேரியில் வரும் 10, 11, 12 ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
* இன்று முதல் 9-ந்தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.
* சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






